Pages

Friday, June 3, 2011

திட்டம்....



டெட்சுஜன் ஒரு ஜென் மாணவர். அவருக்கு ஒரு விசித்ர ஆசை ஏற்பட்டது. சீன மொழியில் இருந்த சூத்திரங்கள் அடங்கிய ஏழாயிரம் சுவடிகளை ஜப்பானிய மொழியில் பதிப்பிக்க வேண்டும். இதற்காக அவர் ஜப்பானின் குறுக்கும் நெடுக்கும் அலைந்தார். சில தனவான்கள் நூறு பொற்காசுகள் வரை கொடுத்தனர். பல ஏழைகளும் குடியானவர்களும் சிறு காசுகள் கொடுத்தனர். ஒரு வழியாக தேவையான பொருள் சேர்ந்துவிட்டது. அந்த சமயத்தில் யூஜி ஆறு பெருக்கெடுத்து வெள்ளத்தில் பல ஊர்கள் அழிந்தன. பலர் உணவு உறைவிடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. தன் பெரு மதிப்பு வாய்ந்த திட்டத்துக்கு சேர்த்த பொருள் அனைத்தையும் தயங்காமல் அவதி படும் மக்களுக்கு செலவழித்தார் டெட்சுஜன்.

பிறகு மீண்டும் அதே திட்டத்துக்கு பொருள் சேமிக்க துவங்கினார். பல வருடங்கள் கழித்து தெவையான பொருள் சேர்ந்த போது நாட்டில் கொள்ளை நோய் தோன்றி பல குடும்பங்களை துயரில் ஆழ்த்தியது. தயங்காமல் மீண்டும் நோய் நிவாரணத்துக்கு பொருளை செலவிட்டார்.

மூன்றாம் முறை முயற்சித்து இருபது வருடங்கள் கழித்து மீண்டும் பொருள் சேர்த்து தன் கனவான திட்டத்தை நிறைவேற்றினார்.
க்யோட்டோவில் ஒபாகு மடாலயத்தில் முதல் புத்தகத்தை அச்சடித்த பலகை இன்னும் இருக்கிறது. ஜப்பானியர் தம் குழந்தைகளுக்கு இதை கதையாக சொல்லுகிறார்கள்: டெட்சுஜன் மூன்று சூத்திர பதிப்புக்களை வெளியிட்டார், முதல் இரண்டும் கண்ணுக்கு தெரியாதவை. அவை மூன்றாம் பதிப்பைவிட மகத்துவம் வாய்ந்தவை!

1 comment:

Geetha Sambasivam said...

அவருடைய இந்தச் சேவை முடியும்வரையிலும் அவரை இருக்க வைத்த இறைவனுக்கு நன்றி.