Pages

Thursday, December 16, 2021

ஶ்ராத்தம் – 7 காலம், நெற்றிக்கு இட்டுக்கொள்வது




 
இப்போது சிராத்தத்தை ஆரம்பிக்கிறோம். இங்கே புத்தகத்தில் இருக்கும் விவரங்களை பார்க்கவில்லை. முக்கியமானதை பார்த்துக் கொண்டு போகிறோம். போன பதிவில் யார் யாரை எப்படி வரணம் செய்கிறோம் என்றெல்லாம் பார்த்தோம். அதன் மேல்படி அதிக விவரங்களை இப்போதைக்கு பார்க்கவில்லை. 
 
சரி எந்த காலத்தில் இந்த சிராத்தம் செய்ய வேண்டும் என்றால் குதப காலத்தில் செய்ய வேண்டும் என்கிறார்கள். சூரிய உதயம் காலை 6 மணிக்கு இருக்குமானால், மாத்யான்ஹிக காலமான 10 மணி 48 நிமிடத்தில் 11 மணி 36 நிமிடம் முதல் 11 மணி 36 நிமிடம் வரை கந்தர்வ காலம்; 12 மணி 24 நிமிடம் வரை குதப காலம்; மேலே 1 மணி 12 நிமிடம் வரை ரௌஹிண காலம் என்கிறார்கள்.
 
மாத்யான்ஹிக காலம் வந்ததும் மாத்யான்ஹிக ஸ்நாநம் செய்ய வேண்டும். அதன்பிறகு மாத்யான்ஹிக சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். ப்ரம்ஹ யக்ஞம் செய்யும் பழக்கம் இருப்பவர்கள் இந்த நேரத்தில் செய்யக்கூடாது. சிராத்தம் முடித்தே செய்ய வேண்டும். அதன் பின் சிராத்தத்தின் அங்கமாக ஸ்நானம் செய்யச் சொல்லியிருக்கிறது. பலரும் இதை தவிர்த்து விடுகிறார்கள். நல்ல வெயில் காலத்திலாவது தண்ணீர் இருப்பின் நாம் அவசியம் செய்ய வேண்டும்.
 
இப்போது நெற்றிக்கு இட்டுக்கொண்டு செய்வதா இல்லையா என்று ஒரு பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. தர்ம சாஸ்திரத்தை பார்த்தோமானால் நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமல் செய்யும் எந்த கர்மாவும் பலனில்லை; சிராத்தத்தில் கூட நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்ய வேண்டும் என்றுதான் இருக்கும். ஆனால் அது பழக்கத்தில் இல்லை. ஏனென்றால் தேவகாரியத்துக்குத்தான் நெற்றிக்கு இட்டுக் கொள்வது என்று சில ரிஷிகள் சொல்லியிருக்கிறார்கள். இப்படி இரண்டு விதமாகவும் இருப்பதால் எப்படி இருந்தாலும் அது தவறு இல்லை என்று கொள்ள வேண்டி இருக்கிறது. மாத்யான்ஹிகம் செய்யும்போது இட்டுக் கொள்கிறோம் அல்லவா? அதை அப்படியே விட்டு விடலாம். ஒரு வேளை சிராத்தாங்க ஸ்நாநம் செய்யப்போகிறோம் என்றால் திருப்பி இட்டுக் கொள்ள வேண்டாம். அதை தவிர்த்து விட்டு அப்படியே உட்கார்ந்து சிராத்தத்தை முடித்து, பிறகு நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ப்ரம்ஹ யக்ஞம் செய்து முடிக்கலாம் இப்படியாக சிலருடன் ஆலோசனைகள் செய்து முடிவு செய்த விஷயமாக இது இருக்கிறது.
 
முதலில் எந்த கர்மாவாக இருந்தாலும் விக்னேஸ்வரரை பிரார்த்திக்காமல் நாம் எந்த காரியத்தையும் செய்வதில்லை. எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டு விக்னேஸ்வரனை ஞாபகப்படுத்திக் கொண்டு குட்டிக்கொண்டு பிராணாயாமம் செய்கிறோம். சங்கல்பத்துக்கு வெள்ளை அக்‌ஷதை எடுத்துக்கொள்கிறோம். சங்கல்பத்தில் வழக்கமாக சொல்லும் சுபதிதௌ என்று சொல்லாமல் புண்ய திதௌ என்று சொல்ல வேண்டும். சங்கல்பம் முடிந்து தர்பையையும் அக்‌ஷதையும் வடக்கே போடாமல் தெற்கே போட வேண்டும்.
 

No comments: