Pages

Sunday, December 26, 2021

ஶ்ராத்தம் - 11




 

இப்படி வேண்டிக் கொள்ளுவதற்காக கர்த்தா இரண்டு கைகளிலும் நுனியுள்ள தர்பங்களை பிடித்துக்கொண்டு போக்தாவின் வலது உள்ளங்கை, முழங்கைகளை தர்ப்பத்தின் நுனியால் தொடவேண்டும். சாதாரணமாக இவர்களுக்கு பழக்கப்பட்டு இருப்பது என்னவென்றால் இரண்டு கைகளையும் மறித்து நீட்டுவார்கள். அப்படி செய்ய தேவை இல்லை. நாம் செய்ய வேண்டியது வலது உள்ளங்கையில் வலது கையில் தர்ப்பையின் நுனியையும் இடது கையில் தர்ப்பையின் அடிப்பாகத்தையும் பிடித்துக்கொண்டு பிராமணரின் வலது உள்ளங்கையில் தர்பையின்  அடிபாகம் படும்படியாக வைத்துக் கொண்டு, வலது கையால் தர்பையை வளைத்து  நுனியை அவரது முழங்கையை தொடும்படி செய்ய வேண்டும். இதுவே சரியான முறை என்று சொல்கிறார்கள்

உண்மையில் இப்போதுதான் அவர்களுக்கு மனது சுத்தமாக இருக்க எள்ளுருண்டை, வாய் சுத்தமாக தாம்பூலம், உடல் சுத்திக்காக எண்ணை மற்றும் எண்ணை தேய்த்து கொள்ள மற்றவற்றையும் கொடுக்க வேண்டும்இக்காலத்தில் அதை முன்னேயே செய்து விடுகிறார்கள். அதே போல எண்ணை தவிர மற்றவையும் இல்லை. எள்ளுருண்டை செய்து உணவுடன் போட்டுவிடுகிறார்கள்! செய்கிறதுதான் நிச்சயம் நடக்கிறதே. சரியான காலத்திலேயே ஒன்றாவது கொடுத்துவிடலாம்.

சிராத்தத்தின் அங்கமாக தானும் வேட்டி உத்தரீயத்துடன் குளிக்க வேண்டும். அவற்றை அப்போது பிழியக்கூடாது. சிராத்தம் முடிந்தபின் மந்திரம் சொல்லி பிழிய வேண்டும்அநேகமாக நடப்பதில்லை.

இவர்கள் குளிக்க போய் இருக்கும் போது விட்டுப்போயிருந்தால் ஔபாஸனத்தை துவங்கிக்கொள்ளலாம். செய்யாமல் விட்டுப்போனதற்கு பிராயச்சித்தமும் அத்தனை காலம் செய்திருக்க வேண்டிய ஔபாசனங்களுக்கும் ஸ்தாலீபாகங்களுக்கும் பயன்படுத்தி இருக்கக்கூடிய அரிசியையும் தக்‌ஷிணையும் வாத்தியாருக்கு கொடுக்கிறோம்அது கொஞ்சம் விரிவானது, சூத்திரங்களுக்கு இடையில் மாறக்கூடும் என்பதால் அதனுள் இப்போது பிரவேசிக்கவில்லை. வேறு தகுந்த நபரிடம் இருந்து தெரிந்து கொள்க.

குளித்து வந்த ப்ராம்ஹணர்களிடம் சிராத்தம் செய்ய யோக்யதை இருக்க வேண்டும் என வேண்டி அனுக்ஞை வாங்கிக்கொண்டு, அவர்களையும் அக்னியையும் தீர்த்த பாத்திரத்துடன் வலம் வந்து மேலே கர்மா செய்ய வேண்டும். ப்ராம்ஹணர்களுக்கு வணக்கம் சொல்லி அக்‌ஷதை/ எள் போட வேண்டும். நமஸ்காரம் செய்து முன்போல தேவதாப்யோ என்று துவங்கி சொல்லி பின் பூணூலை இடம் மாற்றிக்கொண்டு பிராமணர்களை நோக்கி இந்த நாளில் என்ன கோத்திரம் இன்ன சர்மா உள்ள என் தந்தை ( இந்த இடத்தில் மற்றவர்களுக்கு சிராத்தம் ஆனால் அந்தந்த பெயரை சொல்ல வேண்டும்பார்வண விதிப்படி சிரார்த்தம் செய்ய முயற்சிக்கிறேன். அதனால் என்னால் சம்பாதிக்க பட்ட பக்குவம் ஆனதும் ஆகப்போவதுமான பொருட்களும் தேசம். காலம். பாத்திரம் முதலியவையும் சிரார்த்தத்துக்கு ஏற்றவை ஆகட்டும் என்று தாங்கள் அருள்புரிய வேண்டும் என்று வேண்டுகிறோம். அவர்கள் அப்படியே சிரார்த்தத்துக்கு அருகதை ஆகட்டும் என்று சொல்வார்கள். உபவீதியாக வடக்கு முகமாக நின்று சிராத்த காலத்தில் சிராத்த பூமியை கயையாக நினைத்து ஜனார்தன தேவனையும் நினைத்து; பின்னே தெற்கே திரும்பி பிராசீனாவீதியாக வசு முதலிய பித்ருக்களை தியானம் செய்து சிராத்தத்தை ஆரம்பிக்கிறேன் (ப்ரவர்த்தயே) என்று சொல்ல பிராமணர்கள் ப்ரவர்த்தய - ஆரம்பி என்று சொல்வார்கள்.


 

No comments: