Pages

Tuesday, December 14, 2021

ஶ்ராத்தம் – 6 முன்னேற்பாடுகள், ஆரம்பம்




வரிக்கப்படும் பிராமணர்கள் வந்து சேரும் போது இன் முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு (சரீர சுத்திக்கு) நல்லெண்ணெய் அரப்புப் பொடி குளிக்க வென்னீர்  பல் தேய்க்க குச்சி ஆகியவற்றை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். வாய் சுத்தமாக இருக்க தாம்பூலம், ம்னது சுத்தமாக இருக்க (கிருசரம்) எள்ளுருண்டை  முதலியவற்றை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதில் எண்ணை தேய்த்து குளிப்பது மிகவும் அவசியமானதாகும். சில நாட்கள் எண்ணை தேய்த்துக் குளிக்க தோஷம் உள்ளவை. சிராத்தம் பொருத்த வரை த்வாதசி அன்று எண்ணை தேய்த்துக் குளிக்க தோஷம் உள்ளது. அந்த திதிகளில் அமாவாசை இல்லை என்றால் அவர்களுக்கு நெல்லிக்காயை அரிந்து கசக்கி தண்ணீரில் சேர்த்து கொடுக்க வேண்டும். அல்லது பாலில் மிளகு, நெல்லிமுள்ளி ஆகியவற்றை சேர்த்து தரலாம். இதை யாரும் செய்வதாக தெரியவில்லை. வஸ்திரங்கள் கொடுப்பதற்கு இது சரியான நேரம் இல்லை என்றாலும் நடைமுறையில் அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்து அணிவதற்கு புது வஸ்திரங்களை கொடுத்துவிடுகிறார்கள். பிறகு அதற்கான நேரம் வரும் போது அவர்களுக்கு மந்திரங்கள் சொல்லி கொடுப்பதாக பாவனை செய்து விடுகிறார்கள்.

 

அடுத்து எதெல்லாம் தயாராக வைக்க வேண்டும் என்று பார்க்கலாம். ஒரே தடவை அரியப்பட்ட தர்பங்கள்ஆசனங்கள், வெண்கல பாத்திரம், சுத்தமானவர்கள் கொண்டுவரப்பட்ட ஜலம், இலை, வெள்ளி தாமிரம் இவற்றால் ஆன பாத்திரங்கள்; சமித்துக்கள், தேன், புஷ்பம், தூபம், நல்ல சந்தனம் முதலியவை. அதாவது பூஜைக்கான திரவியங்கள். வெண்பட்டு, கயிறு, மரக்கரண்டி. ஜர்தில திலம் என்று சொல்லப்பட்ட காட்டில் உண்டாகிய கருப்பு நிறமுள்ள எள். உழப்படாத பூமியில் விளைவிக்கப்பட்டவை என்றும் சொல்கிறார்கள். இது கிடைக்கவில்லை என்றால் கிராமத்தில் கிடைக்கும் எள் என்கிறார்கள். இதெல்லாம் நாம் இப்போது பார்க்க முடியவில்லை. கடையில் கிடைக்கும் எள்தான் வேலைக்கு வருகிறது.

 பாபத்தை குத்ஸிதம் என்கிறார்கள். அதை தபிக்க செய்வன குதபங்கள். இவை யாவை என்றால் மத்தியாஹ்ன காலம், கட்க மிருகத்தின் கொம்பால் செய்த பாத்திரம், நேபாள கம்பளம், வெள்ளி, தர்ப்பங்கள், எள், பசுமாடு, தௌஹித்ரம் என்ற எட்டு என்கிறார்கள். இந்த நேபாள கம்பளம் கேள்விப்பட்டதே இல்லை. இது இல்லையென்றால் ஆட்டு மயிர் முதலியவற்றால் செய்யப்பட்ட கம்பளம் - இதை ஆசனமாக போடுவதற்கு சொல்லியிருக்கிறார். அதேபோல் இந்த தௌஹித்ரம் என்பது சிலர் நினைப்பது போல பேரன் இல்லை. அமாவாசையில் எந்த பசு புல் மேய்கிறதோ இந்தப் பசுவின் பாலில் இருந்து உண்டாக்கிய நெய்தான் தௌஹித்ரம் என்று யாக்ஞவல்கியர் சொல்கிறார்




No comments: