சங்கல்பத்தில் இந்த காலத்தில் யோகம் கரணம் சொல்லும் வழக்கம் விட்டுப் போயிருக்கிறது அவை ஒன்றும் கடினமான விஷயம் இல்லை ஆகவே சிரத்தை உள்ளவர்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்து யோகம் கரணம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பல வைதிகர்களும் இந்த காலத்தில் அவற்றை சொல்லுவது இல்லை. ஆகையால் நாமே அவற்றை பார்த்து வைத்து சொல்லிவிடலாம்.
இன்ன கோத்திரத்தில் பிறந்த இந்த பெயருள்ள அப்பா அல்லது அம்மா அவர்களுக்கு பார்வண விதிப்படி சிராத்தத்தை செய்கிறேன். முடிந்தவரை நியமத்துடன் பொருட்களுடன் உபசாரங்களுடன் தட்சணையுடன் சக்தியுடனும் அப்பாவுக்கு/ அம்மாவுக்கு முன் சொன்னபடி குறைவில்லாத திருப்தி உண்டாவதற்காக இந்த சிராத்தத்தை செய்கிறேன் என்று சொல்கிறோம். ஒருவர் இறந்த பின் மாதாமாதம் செய்யும் சிராத்தம் என்றால் அது மாசிகம். ஒவ்வொரு வருடமும் செய்யும் சிராத்தம் என்றால் அது ப்ரத்யாப்திக சிராத்தம்.
அடுத்து விஸ்வேதேவரையும் பித்ருக்களையும் வரிக்க வேண்டும். முன்பே பார்த்தபடி விஸ்வேதேவரை கிழக்கே பார்த்தபடி உட்கார வைக்க வேண்டும். பித்ருக்களை வடக்கே பார்த்தபடி உட்கார வைக்க வேண்டும். இப்படி பல விஷயங்கள் இருந்தாலும் பொதுவாக சிராத்தம் செய்யும் அறையின் விஸ்தீரணத்தை கணக்கில் கொண்டுதான் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. விஸ்வேதேவரிடம் அவரிடம் சென்று புரூரவ ஆர்த்ரவ என்ற பெயருடைய விஸ்வேதேவருக்கு இது ஆசனம் என்று சொல்லித் தர்ப்பையை அவர்களின் கால் கீழ் போட வேண்டும். இந்த காலத்தில் பலதும் கெட்டுப் போய் இருக்கிறது. கட்டை தர்பையை தற்போது இதற்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள். அது அவ்வளவு உசிதமல்ல. எப்போதும் தர்ப்பையை நுனி கிழக்கேயும் வடக்கேயும் தேவ காரியங்களுக்கு போட வேண்டும். பித்ரு காரியங்களில், பித்ரு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கல்பத்தில் சொல்லியிருக்கிறது போல சில இடங்களில் தெற்கு நோக்கி போடுவோம். ஆகவே விஸ்வேதேவருக்கு இந்த தர்பையை போடும்போது நுனி இருப்பதாக சம்பாதித்து வைத்து அதை போட வேண்டும். அதற்குப் பிறகு அவர் கையில் ஒரு உத்தரணி தீர்த்தம் விட வேண்டும். பிறகு அவரிடம் வேண்டுகோள் வைக்க வேண்டும். ‘புரூரவர் ஆர்த்ரவர் என்கிற விஸ்வேதேவர்களுக்காக நீங்கள் வரணத்தை ஏற்க வேண்டும். அந்த வடிவை அடைய வேண்டும்’ என்று கேட்டுக்கொள்கிறோம்.
பிறகு மீண்டும் அவர் கையில் தீர்த்தம் விட்டு பித்ருகளுக்காக வரணம் செய்ய இருக்கும் பிராமணரிடம் செல்ல வேண்டும் அவரிடம் செய்யும் காரியங்கள் எல்லாம் பூணூல் வலது தோளில் இருக்கும்படி செய்ய வேண்டும் என்பது நினைவிருக்கும். ஆகவே பூணூலை தோள் மாற்றிக்கொண்டு அவருக்கு ஆசனம் கொடுக்க வேண்டும். பித்ருக்களுக்கு ஆசனம் கொடுக்கும் போது நீண்ட நுனி உள்ள தர்ப்பையை இரண்டாக மடித்து முறுக்கி அவர் காலடியில் போட வேண்டும். முன்போலவே கையில் தீர்த்தம் இடவேண்டும். பிறகு வேண்டுகோள் வைக்க வேண்டும். இன்ன கோத்திரம் இன்ன பெயருள்ள வசு ருத்ர ஆதித்ய வடிவினர் ஆன பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹ (அப்பா, தாத்தா, தாத்தாவின் அப்பா) இவர்களுக்காக தாங்கள் வரணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த வடிவை நீங்கள் பெற வேண்டும். பிராமணர்கள் இருந்தால் அதாவது சதசாக இருந்தால் அவர்களிடம் தட்சிணை கொடுத்து ‘சிராத்தம் செய்வதற்கு யோக்கியதை எனக்கு உண்டாகட்டும் என்று ஆசிர்வாதம் செய்யுங்கள்’ என்று கேட்டுக் கொள்ளலாம். வழக்கமாக இது நடப்பதில்லை. ஏனெனில் என்பதற்கு மூன்று பிராமணர்கள் ஆவது இருக்க வேண்டும். நல்லது. இப்போது வரணம் மேலே தொடரும்.
No comments:
Post a Comment