அடுத்து பவித்ரத்தை போட்டுக்கொண்டு, பூணூலை இடம் மாற்றிக்கொண்டு முன்போல நெய் சந்தனம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பித்ருவிடம் வருகிறோம். ஷன்னோதேவி என்ற மந்திரத்தால் பாத்யம் கொடுக்கிறோம். பித்ரு காரியங்களில் அக்ஷதைக்கு பதில் எள் என்று சொல்லி இருக்கிறோம். ஆனால் எள் இங்கே பயன்படுவதில்லை. அது மிகவும் உயர்ந்த பொருள். அது காலில் படக் கூடாது என்பதால் அக்ஷதை உபயோகமாகிறது. முன்போலவே கோத்திரம் முதலியவற்றை சொல்லி பெற்று பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ என்று சொல்லி கால்களில் ஜலம் விட்டு கால்களை அலம்பிவிட்டு உபசரிக்க வேண்டும். ‘ஸமஸ்த ஸம்பது’ என்ற மந்திரம். பொதுவாக அந்த ஜலத்தை ப்ரோக்ஷணம் செய்து கொள்வது இல்லை. பிறகு பவித்ரத்தை மீண்டும் தரித்துக்கொண்டு விஷ்ணுவாக வரணம் செய்த பிராமணருக்கு விஸ்வேதேவர் போலவே தத் விஷ்ணோ என்ற மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். மந்த்ரார்த்தம்: வேதாந்தத்தின் கரை கண்ட வித்வான்கள் ஆகாசத்தில் பரவிய கண் எப்படி தடையின்றி பார்க்கிறதோ அப்படி விஷ்ணுவின் பரமபதத்தை காண்கின்றனர்.
இப்படி நெய்யும் சாணமும் தடவிச் செய்வதால் பித்ருக்கள் கல்பம் முடியும் வரை அம்ருதத்தால் அபிஷேகம் செய்யப்படுவர் என்று ஸ்ம்ருதி சொல்கிறது.
இந்த உபசாரங்கள் முடிந்தால் இந்த இடத்திற்கு ஈசான திசையில் கர்த்தா இரு முறை ஆசமனம் செய்ய வேண்டும். இதற்குப்பின் கிழக்கே விஸ்வேதேவர் விஷ்ணு ஆகியோர் ஆசமனம் செய்ய வேண்டும். வடக்கில் பித்ருவாக வரணம் செய்த பிராமணர் ஆசமனம் செய்ய வேண்டும். இப்போதெல்லாம் இதை கவனித்து செய்பவர்கள் மிகவும் அரிதாகிவிட்டனர்.
வீட்டுக்குள் வந்து மீண்டும் வரணம் செய்யப்படுகிறது. பயப்பட வேண்டாம் இதுவே கடைசி வரணம்! பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹர்களின் பெயரை சொல்வதால்தானே இவர்களுக்கும் தாம் யாராக ஆகிறோம் என்று மனதிலாகும்?. கையில் தீர்த்தம் விட்டு முன்போல் கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி … சிராத்தத்தில் விஸ்வேதேவர்களுக்கு ஆசனம் என்று சொல்லி கையில் தீர்த்தம் விட்டு, தர்ப்பை கொடுத்து; பிறகு பித்ருக்களுக்கும் அதே போல (பூணூல் இடமாக) செய்ய வேண்டும். விஷ்ணு இருந்தால் அவருக்கும் விஸ்வேதேவர் போல செய்கிறோம். அக்ஷதை எடுத்துக்கொண்டு விஸ்வேதேவர் பிராமணரை பார்த்து உங்களிடத்தில் விஸ்வேதேவர்களை ஆவாஹனம் செய்யப்போகிறேன் என்று கர்த்தா சொல்கிறார். அவர்கள் ஆவாஹனம் செய் என்று பதில் சொல்லுகிறார்கள். அப்போது சொல்லும் மந்திரத்தின் பொருள் “ஓ விஸ்வேதேவர்களே! நான் அழைப்பதை காது கொடுத்து கேளுங்கள். உங்களில் சிலர் அந்தரிக்ஷத்திலும், சிலர் பூமிக்கு அருகிலும், சிலர் தேவலோகத்திலும் இருக்கிறீர்கள். சிலர் அக்னியை நாக்காக கொண்டவர்கள். மற்றவர்களும் பூஜிக்கத் தகுந்தவர்கள். நீங்கள் எல்லோரும் இங்கு வந்து இருந்து கர்த்தாவுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள். மகா பாக்கியம் உள்ளவர்களும் பலசாலியுமான நீங்கள் வாருங்கள். இந்த பார்வண சிராத்தத்திற்கு அதிகாரிகளாக விதிக்கப்பட்டவர்கள் நீங்கள். இங்கே ஊக்கத்துடன் இருங்கள். இப்படியாக விஸ்வேதேவர்களை ஆவாகனம் செய்கிறேன் என்று கர்த்தா சொல்ல, நான் வரிக்கப்பட்டு விஸ்வேதேவர் ஆனேன் என்று பிராமணர் பதில் சொல்லவேண்டும்.
No comments:
Post a Comment