Pages

Wednesday, February 10, 2010

கர்மா அடுத்த சுற்று - உட்காருவது எப்படி?




உட்காருவது எப்படி?
"அட என்னங்க இது உக்காரக்கூட தெரியாதா என்ன" என்கிறீங்களா?
நான் சொல்லுகிறது தரையில் உட்காருவதைப்பத்தி. பலருக்கும் உட்காரத்தெரியுது. ஆனால் சரியாக உட்காரத்தெரியலே. ஏன்னா...
பலருக்கும் தரையில் உட்கார்ந்து பழக்கமில்லாமல் போய்விட்டது. டேபிள் சேர் சோபா என்றாகிவிட்ட இந்த காலத்தில் இது எதிர்பார்க்கக்கூடியதே. திடுதிப்பென்று ஜபம் செய்யலாம் என்றோ, பெரியவர்களுடன் பேசவோ அமரும்போது கஷ்டப்படுகிறோம். அதனால் இதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
முதலில் தரையில் நேரடியாக உட்காரக்கூடாது என்பது சாஸ்திரம். செய்த புண்ணியங்கள் பூமிக்கு போய்விடும் என்கிறார்கள். போவதற்கு அப்படி ஒண்ணும் புண்ணியம் பண்ணவில்லை என்றாலும் அப்படி உட்காராமல் இருப்பது நல்லது.
உட்காருமிடம் சுத்தமாக இருக்கணும்.
கீழே ஆசனம் ஏதேனும் போட்டு அமர வேண்டும். மரப்பலகை (மணை), பாய், கைகுட்டை கூடப்போதும். இல்லை ஒரு துண்டைக்கூட பயன்படுத்தலாம். சிலர் ஒரு சில்க் கைக்குட்டை வைத்துகொள்கிறார்கள். (அரவிந்தர் ஆஸ்ரம கடைகளில் கிடைக்கும்) இது வெகு சின்னதாக மடியும். எடுத்துச்செல்ல சௌகரியம். கம்பளமும் நல்லது; ஆனால் சூடு.
அஜினம் (தோல்) இப்போது கிடைப்பதில்லை. மேலும் மான் தோலை சோம யாகம் செய்தவர் மட்டுமே பயன்படுத்த சாஸ்திரங்களனுமதிக்கின்றன.
தர்ப்பை ஆசனம் வெகு உன்னதமானது. புதிய தர்ப்பைகள் வேளா வேளைக்கு கிடைப்பது கஷ்டம். (பாருங்கப்பா! வெறும் புல் கூட இந்த காலத்திலே கிடைப்பது துர்லபம் ஆயிருச்சு!) அதனால் தர்பையால பாய் முடைஞ்சு விற்கிறாங்க. அதை பயன்படுத்தலாம். ஒரு 6 மாசம் வரும். காசி போன்ற இடங்களிலே சுலபமா கிடைக்கும்.

உட்காரும்போது நம் உடலை தசைகள் எல்லாம் பாலன்ஸ் செய்கின்றன. அப்படியே உட்காருகிறோம். அவை தளராமல் அப்படியே இறுக்கத்தில் இருந்துவிடுகின்றன. இதுதான் கொஞ்ச நேரத்துக்கு மேல் உட்காரமுடியாமல் இப்படியும் அப்படியுமாக அசைய வேண்டிய கட்டாயத்துக்கான காரணம்.

இதை எப்படி சரி செய்வது?
வழக்கம் போல உட்கார்ந்துவிடுங்கள். அப்புறம் முன் பக்கமாக இடுப்பில் இருந்து வளையுங்கள். உட்கார்ந்து கொண்டு நமஸ்காரம் செய்வது போல. இப்போது இடுப்பு அருகில் உள்ள தசைகள் எல்லாம் நெகிழ்ந்து கொடுக்கும். அப்படியே நிமிர்ந்து விடுங்கள். அவ்வளோதான்! எத்தனை சுலபம் பாத்தீங்களா?
இதே எஃபக்ட் கைகளை பக்கத்தில் ஊன்றிக்கொண்டு உடலை அவற்றின் பலத்தில் தூக்கி கீழே இறக்கினாலும் கிடைக்கும். வயதானவர்களுக்கு கடினமாயிற்றே என்று அதை முதலில் சொல்லவில்லை.
அடுத்து கவனிக்க வேண்டியது முதுகு எலும்பு நிமிர்ந்து நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான். இது பலருக்கும் கஷ்டமாக தோன்றும். ஆனால் முன்னே சொன்ன படி உட்கார்ந்த பிறகு இது சுலபமே என்று தெரியவரும். சரியாக உட்காராத போது தசைகள் இறுக்கத்தில் இருப்பதால் முதுகு வளைந்தால்தான் பாலன்ஸ் கிடைக்கும். அதனால் முதுகை வளைத்தே உட்காருக்கிறோம். அப்போது அதுதான் சௌகரியமாக இருக்கும். ஆனால் தசைகள் இதை தொடர்ந்து பராமரிக்க வேண்டி இருப்பதால் கொஞ்ச நேரத்தில் வலிக்க ஆரம்பித்து விடும். முதுகு எலும்பை நேராக வைத்துக்கொள்ள பழகிவிட்டால் இது தசைகளுக்கு அதிக வேலை கொடுக்காது. அதனால் வலிக்காது.

ஆரம்பத்தில் கொஞ்சம் பழக்கமில்லாமல் இருப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டி இருக்கும். இதெல்லாம் நாளடைவில் பழகிவிடும். இயல்பாகவே சரியாக உட்காருவோம்.
இப்படி செய்தும் நிமிர்ந்து உட்காரமுடியாமல் இருந்தால் வஜ்ராசன் பழக்கிக்கொள்ள வேண்டும். அதில் இயல்பாகவே நிமிர்ந்துதான் உட்கார முடியும். பாதங்கள் மடங்குவது பழகிவிட்டால் இதுவும் நன்றாகவே உட்கார உதவும்.

குருவின் கட்டளை வேறாக இல்லாத பட்சத்தில் ஜபம் செய்ய சுகாசனமோ (வழக்கமாக உட்காருவது) சித்தாசனமோ, பத்மாசனமோ சிறந்தது. பத்மாசனம் உடனடியாக முடியாது போனால் அர்த்த பத்மாசனத்தில் சில நாள் பழகலாம். அது ஒரு பக்கம் மட்டுமே பத்மாசனம் போல காலை வைத்துக்கொண்டு உட்காருவது.

3 comments:

KABEERANBAN :கபீரன்பன் said...

//போவதற்கு அப்படி ஒண்ணும் புண்ணியம் பண்ணவில்லை என்றாலும்//

:)))

ஆபீஸ்ல உக்காந்து படிக்கறது தப்பு. வீட்டுக்கு போனா கம்ப்யூடர் இல்ல :(

நான் அப்புறம் நிதானமா வர்றேன்.

திவாண்ணா said...

//ஆபீஸ்ல உக்காந்து படிக்கறது தப்பு. வீட்டுக்கு போனா கம்ப்யூடர் இல்ல :(

நான் அப்புறம் நிதானமா வர்றேன்.//

அப்புறமா வந்தீங்களா இல்லையா? :-))

KABEERANBAN :கபீரன்பன் said...

இதோ...இதோ, வந்து கொண்டே இருக்கிறேன் :))