Pages

Tuesday, December 20, 2011

உரத்த சிந்தனை -மன்யு - 2


கோபம் நல்லதா கெட்டதா என்பதை அதன் விளைவுதான் தீர்மானிக்கணும். கோபம் நம்மோட அறிவை மறைக்கும்ன்னா அது நிச்சயம் கெட்டதே. அதன் விளைவு அனேகமாக நல்லதாய் இராது.

கோபத்தை தூண்டுகிற செயலுக்கு அறிவோட எதிர்வினை இருக்குமானால் அது சரியாகவே இருக்கும். அதுக்காக சில அடிதடி காரியங்களில இறங்கினாக்கூட அதை நல்லது கெட்டது சொல்ல முடியாது. அந்த மாதிரி செயல்களும் உலகத்தில சில சமயம் வேண்டி இருக்கு.

சிலதை அடைய நினைக்கிறோம். சிலது இப்படி இப்படி இருக்கணும்ன்னு நினைக்கிறோம். அது காமம். அது அப்படி நடக்காம போனால் நமக்கு 'ப்ரஸ்ட்ரேஷன்' - நிராசை - உண்டாகிறது. அதற்கு காரணமா இருந்த நபர் மேலே கோபம் வருகிறது. ஆரம்பநிலையிலேயே காமம் இல்லைன்னா நடக்காத விஷயத்தால மன பாதிப்பும் வராது; கோபமும் வராது. அதனால ஆசையே கோபத்துக்கு காரணம் என்கிறது உறுதி. நம்மை கோபப்பட வைக்கிறதே சிலருக்கு பொழுது போக்கு. சென்சிடிவ்வா இருக்கிற நபரை வேணும்ன்னு கிளப்பி விட்டுக்கொண்டு இருப்பாங்க. எது அவரை தூண்டிவிடும்ன்னு அவங்களுக்கு நல்லாத்தெரியும். 'ட்ரிகர் பாய்ன்ட்' என்பாங்க. கொளுத்திவிட்டு அவங்க பாட்டுக்கு போயிட்டே இருப்பாங்க. இவரோ நாள் முழுக்க பொங்கிகிட்டு இருப்பாரு. கோபப்பட வைக்கிறவங்களை என்ன செய்யறது? நாம கோபப்படாம இருக்கிறதுதான் அவங்களுக்கு நல்ல தண்டனை! அவங்களோட எதிர்பார்ப்பை முறிக்கிறோம் இல்லையா?

ம்ம்ம்ம் ..... சமீபத்திய உதாரணம் ஒண்னு சொல்லறேன். ஒரு குழுவிலே ஒத்தர் தவறுதலா மத்தவங்களுக்கு அனுப்பற அஞ்சல் ஒண்ணை காபி போட்டுடறார். இங்கே தமிழ் வாசல்லே அங்கே போய் நான் எழுதின கட்டுரையை படிங்கன்னு இங்கே இலவச விளம்பரம் ..... பாத்தீங்களா இப்பதானே கோபப்படறது தப்புன்னு பேசிகிட்டு இருக்கோம்?.... போடறோமே அப்படிக்கூட இல்லை.
அதுக்கு லூசுத்தனமா இன்னொருத்தர் பொதுவா மட்டுறுத்தருக்கு புகார் மடல் அனுப்பறார். சம்பந்தமில்லாம குழு மடல் போடறாங்க பாருங்க, கண்டிங்க ன்னு. என்னோட போதாத நேரம் சும்மா இருக்காம, "ஏன்யா, மாடரேடருக்குன்னு குறிச்சு மடல் எழுதினா அதை மாடரேட்டருக்கு அனுப்ப வேண்டியதுதானே? இங்கே பொதுவா ஏன் போடறீங்க? தப்பா போட்டுட்டீங்கன்னா அதேதான் அவரும் செஞ்சு இருக்காரு" ன்னு எழுதிட்டேன். கோபம் பொத்துகிட்டு வந்துச்சு போல! கட்ட பொம்மன் ஸ்டைலிலே அர்ச்சனை செய்து தனி மடல் அனுப்பினார். அதிலே எழுதி இருந்த ஒரே பதில் சொல்லக்கூடிய விஷயம் மாடரேட்டருக்கு மெய்ல் ஐடி இருக்கா என்கிறதுதான். "யாரு மாடரேட்டர்ன்னு கூட தெரியாம ஒரு குழுவிலே இருக்கீங்களா?" ன்னு பதில் எழுதினேன். மத்த விஷயங்களை கண்டுக்கலை.

என்னைப்பத்திய விவரங்களை வலையிலே நல்லா தேடி இருப்பாரு போல இருக்கு. "நீ போலி. என் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேங்கிற" ன்னு இன்னொரு தாக்குதல்! "உங்களை மாதிரி பெரியவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல நேரம் இல்லை. என்ன வேணா நினைச்சுக்குங்க, எனக்கு பிரச்சினை இல்லை" ன்னு பதில் போட்டேன். அத்தோட சமாசாரம் க்ளோஸ்! அந்த மகானுபாவன் செஞ்ச ஒரே நல்ல விஷயம் என்னை திட்டி தனிமடலா அனுப்பினது! அதையே பொதுவா அனுப்பி இருந்தா எனக்கு "வேண்டியவங்களோ" அவருக்கு "எதிரிகளோ" நாலு பேர் இந்த பக்கம் வாதாட, நாலு பேர் அந்தப்பக்கம் வாதாட டிஎன்ஏ பத்திய ஆராய்ச்சி எல்லாம் நடந்திருக்கும்! சூழ் நிலையே இன்னும் கெட்டுப்போயிருக்கும்!

விடுங்க! கவனிக்க வேண்டியது என்ன ப்ரொவொகேஷன் -தூண்டுதல் - வந்தாலும் எதிர்வினையை சரியாக கையாளுவது என்கிறதுதான். நடக்கிற விவாதங்களில -குறிப்பா வலையில - எனக்குத் தெரிஞ்சு என்னிக்கும் யாரும் எதையும் "ஆமாய்யா, நீ சொல்லறது கரெக்டு" ன்னு தன் நிலைப்பட்டை மாத்திண்டதா தெரியலை. வாதம் எல்லாம் பிடிவாதம்தான். தன்னோட புத்திசாலித்தனத்தை காட்டத்தான் பலரும் விரும்புகிறாங்க. தான் சொல்கிற தப்புன்னு தெரிஞ்சாலும், ஒண்ணு அதை கண்டுக்காம அடுத்த சண்டை பாய்ண்டுக்கு போயிடுவாங்க, இல்லை புதுசா ஆரம்பிச்சுடுவாங்க! அப்படி இல்லாம இருக்கிறவங்க அபூர்வமாகத்தான் தென்படுறாங்க!

அப்படி ஒத்தர் சமீபத்தில தென்பட்டார். அவர் ஏதோ தப்பா எழுதிட இன்னொருத்தர் அதை கண்ணியமா சுட்டிக்காட்டினார். இவரும் "ஆமாம், நான் தப்பா எழுதிட்டேன்" ன்னு ஒத்துகொண்டார். மேலே விவாதம் தொடர்ந்தது. எனக்கு ஆச்சரியம். இவருக்கு பாராட்டி தனிமடல் போட்டேன்! "ஆமாம், ஒரு தப்பை பண்ணிட்டு சரி செய்யாம அதோட என் மீதி வாழ்கையை எப்படி வாழுவேன்?” ன்னு பதில் போட்டார். இவங்க மனுஷங்க! இந்த லெவலுக்கு நாம் போயிட்டா பிரச்சினையே இராது. அப்படி நாம போகலியே? என்ன செய்யிறது?
(தொடரும்)

No comments: