Pages

Thursday, December 22, 2011

உரத்த சிந்தனைகள் - மன்யு -4


சில சமயம் சாய்ஸ் இருக்கறதில்லை. இருந்தாலும் கூடிய வரை கோபம் வரும் போது கொஞ்சம் கொயட்டா இருந்துட்டு அப்புறம் எதிர் வினையை பாத்துக்கலாம். புத்தியால விஷயங்களை விசாரிச்சுத்தான் கோபங்கள் மறையும். ஆசை படுவது பின்னால நிறைவேறாம போய் கோபம் வரக்கூடும்ன்னு முன்னாலேயே விசாரிச்சு வெச்சுட்டா, கோபம் வராம போயிடலாம். இப்படி நடக்காம போகலாம்ன்னு முன்னேயே எதிர்பார்த்ததுதானேன்னு விட்டுட்டு போயிடுவோம்.

நாம் எதிர் பார்க்கிற மாதிரி மத்தவங்க நடந்துக்கலையா? என்ன செய்யறது? நமக்கு கொடுத்து வெச்சது அவ்வளோதான். எல்லாராலேயும் எல்லாம் செய்ய முடியாது. கோபம் வரக்கூடாதுன்னு நமக்கே தெரியுது. ஆனா கோபப்படாமலா இருக்கோம்? அப்ப நம்மால சில விஷயங்கள் முடியலைன்னு ஒத்துக்க வேண்டி இருக்கு! நம்மால முடியாததை மத்தவங்க மட்டும் செய்யணும்ன்னு ஏன் எதிர்பார்க்கறோம்? இப்படி முன்னாலேயே யோசிச்சு வெச்சுட்டா நாம் கோபப்படுவது கொஞ்சம் கொஞ்சமா குறையும்.

கோபம் வராம இருக்கிறதும் பிரச்சினைல முடிஞ்சுடலாம் ன்னு சிலர் கவலைப்படுறாங்க. கோபப்படாம சாதுவா இருக்கறவங்களை மத்தவங்க தூக்கிப்போட்டு மிதிச்சுடுவாங்கன்னு ஒரு பயம்!

தயானந்த ஸ்வாமிகளை ஒரு அன்னிய நாட்டவர் கேட்டாராம். "ஸ்வாமி சாதுன்னா என்ன?”
இவரும் விளக்கம் சொன்னார்.
"அப்ப சாதுக்களுக்கு கோபமே வராதா?”
"ஆமாம், வரக்கூடாது.”
"நீங்க ஒரு சாதுவா? அப்ப நான் உங்களை அடிக்கலாமா?”
"அடித்தால் கோபம் வரும் என்று இல்லை. ஆனால் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவேன்!”
இதான் அத்து மீறுகிறது என்கிறது!

ஒரு சன்யாஸி ஒரு நாள் ஒரு கிராமத்தில் தங்கினார். மூன்று நாட்கள் தங்கி மக்களுக்கு உபதேசங்கள் செய்தார். நாலாம் நாள் சன்யாஸ தர்மப்படி கிராமத்தை விட்டு கிளம்பிட்டார். கிளம்பும்போது சாமி எந்த ஊருக்கு அடுத்து போறீங்க? ன்னு கேட்டாங்க. இவரும் சொன்னார். சாமி அதுக்கு காட்டு வழி குறுக்கு வழியானாலும் அந்த பக்கமா போகாதீங்க! அங்க வழில ஒரு பாம்பு இருக்கு. அது போற வரவங்களை எல்லாம் கடிக்குது. ஆடு மாடு மேய்க்க போற பசங்கள் எல்லாரும் கஷ்டப்படுறாங்க ன்னு சொன்னாங்க. அடப்பாவமே! அப்படியா? சரின்னு சொல்லிட்டு சன்யாஸி காட்டு வழியாவே போனார். வழியில பாம்பையும் பார்த்தார். நீ ஏன் இப்படி எல்லாரையும் கடிச்சு துன்புறுத்தறே? உன் இரையை நீ தேடிக்கோ. இரை அல்லாததை சும்மா கடிக்கக்கூடாது ன்னு சொன்னார். சரி சாமி அப்படியே ஆகட்டும் ன்னு அதுவும் சொல்லித்து.
கொஞ்ச நாள் கழிச்சு ஆடு மாடு மேக்கிற பசங்க அங்கே போனப்ப பாம்பு தொல்லை காணலையேன்னு ஆச்சரியப்பட்டாங்க. அதோட நிக்கலை. ரெண்டு நாள் கழிச்சு அது எங்கேன்னு தேடி கண்டு பிடிச்சாங்க. கடிக்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சு கொடுத்த பாம்பு இப்ப ஓடி ஒளிய திண்டாட வேண்டி இருந்தது! ஓடர நாயை கண்டா என்ற ரீதியில பசங்க துரத்தி துரத்தி கல்லால அடிச்சு ஒரே கலாட்டா. இதனால பகல்ல பாம்பு வெளியே வரவே வராம ஒளிஞ்சு இரை தேடக்கூட முடியாம கஷ்டப்பட்டது.
சில வாரங்கள் கழிச்சு அதே சன்னியாசி திரும்பும் வழியில அதே காட்டு வழியா வந்தார். பாம்பு இருக்கிற இடம் வந்ததும் அதை நினைவு கொண்டு நண்பனே எங்கே இருக்கிறாய் ன்னு கூப்பிட்டார். பாம்பும் சன்னியாசி குரலை கேட்டு மறைவிடத்துலேந்து வெளியே வந்து வணங்கியது.
"என்னப்பா இப்படி ஏதோ குத்துயிரும் குலையுயிருமா இருக்கே? இளைச்சு போயிட்டயே!" ன்னு கரிசனத்தோட கேட்டார். பாம்பும் கடிக்கறதை விட்ட பிறகு மக்கள் தன்னை தேடித்தேடி அடிக்கறதை சொல்லித்து. சன்னியாசி சொன்னார், "பாம்பே! நீ நான் சொன்னதை கொஞ்சம் தவறா புரிஞ்சு கொண்டே! நான் கடிக்காதேன்னுதானே சொன்னேன்? சீறாதேன்னு சொன்னேனா?"
அப்புறம் பாம்பு சீற ஆரம்பிச்சது. ஜனங்களும் பழைய படி அதுக்கு பயந்து அதை சீண்டறதை விட்டுட்டாங்க.
  

No comments: