Pages

Monday, December 19, 2011

உரத்த சிந்தனை - மன்யு

நமஸ்தே ருத்ர மன்யவ ... என்று ஆரம்பிக்கிறது ஸ்ரீருத்ரம். ருத்திரனுடைய கோபத்துக்கு நமஸ்காரமாம்! ருத்திரனுக்கு இல்லை! பலரும் மற்றவர்களுடைய கோபத்துக்குத்தான் பயப்படுகிறார்கள். என் தியேட்டர் உதவியாளர்களும் என் கோபத்துக்குத்தான் பயப்படுகிறார்கள். ஒரு வேலையை சரியாக செய்து விடுவோம் என்று தோன்றுவதில்லை. சரியா செய்துடுவோம்; இல்லைன்னா இவன் வந்து கத்துவான் என்றே வேலை செய்கிறார்கள். சரியாக ஒரு வேலையை செய்வது தன் கடமை, அல்லது இயல்பாக இருக்க வேண்டியது என்று தோன்றுவதில்லை. :-( மற்றவரின் கோபத்துக்குக்காக செய்கிறார்கள். கோபித்துக்கொள்ளும் நபர் இல்லை என்றால் சில நாட்களிலேயே வேதாளம் முருங்கை மரம் ஏறிடும்! கோபம் நல்லதா கெட்டதா? இது கெட்டது என்றே பலருடைய அபிப்ராயம்! ஆனால் இதுக்கு பயன் இருக்குன்னு சொல்கிறவர்களும் இருக்காங்க! பாருங்களேன், மேலே சொன்ன உதாரணத்தையே! நல்ல விதமாக சொல்லியும் பாத்தாச்சு. வேலை ஒழுங்காக நடக்கிறதில்லை. ஒரு கத்து கத்தினா அப்புறம் வேலை ஒழுங்காக நடக்கிறது. கோபப்படலாமா வேண்டாமா என்கிறது நம்ம சாய்ஸ்லேயா இருக்கு? மத்தவங்களே அதை நிர்ணயிக்கிற மாதிரி இருக்கு! கோபம் ஒரு ரிப்லக்ஸ்! அனிச்சை செயல். யாரும் கோபப்படணும்ன்னு கோபப்படறதில்லை. அது தானா வருது. அதை தூண்டுகிற விஷயங்கள் இருக்கு. நபர்கள், செய்கைகள், சூழ்நிலைகள்.... சிலரை பாத்தாலே கோபம் பொத்துகிட்டு வருது! அவரை பார்க்கிறப்ப வேற சில நினைவுகளும் தூண்டப்படறதே காரணம். சிலரோட செய்கைகள் கோபத்தை தூண்டுது. அதாவது அவரை சாதாரணமா பார்க்கிறப்ப நாம் சிரிச்சு பேசாட்டாலும் சும்மா இருப்போம். ஆனா அவரோட செய்கைகள் நமக்கு கோபத்தை வர வழைச்சுடும். இந்த கோபத்துக்கு காரணம் என்ன? இச்சை - காமம் என்பதே காரணம். நமக்கு இது இது இப்படி இப்படி நடக்கணும் என்று ஒரு இச்சை இருக்கும். அது சரியா தப்பா என்கிறது இப்ப முக்கியமில்லை. பலருக்கும் righteous anger என்பது உண்டு. ஒரு ஆசாமி தான் செய்ய வேண்டிய வேலையை செய்யவே இல்லை என்றாலோ அல்லது ஒழுங்கா செய்யாட்டாலோ மேலாளருக்கு கோபம் வருகிறது நியாயம்தானே? அந்த வேலையை செய்து வாங்க வேண்டியது அவருடைய பொறுப்பு இல்லையா? சிலருக்கு தர்மத்தின் மீது அலாதி பற்று இருக்கிறது. அதை மீறி நடப்பவரை கண்டால் கோபம் வருகிறது. நீ செய்யறது சரியில்லைன்னு அவங்ககிட்டே சண்டைக்கு போவாங்க. உனக்கு என்ன ன்னு அவங்க திருப்பி கேட்க சண்டை வளரும். ஸ்ரீ ராம க்ருஷ்ணரை பார்க்க அவரோட பல சீடர்களும் வருவாங்க. ஒரு நாள் கங்கையை கடக்கும் படகு ஒன்றில அடிதடி பிரச்சினை நடந்ததாக கேள்விப்பட்டார். அவரை பார்க்க வந்த சீடர் ஒத்தர்தான் அதிலே முக்கிய நபர். அவர் வந்து வணங்கிய பிறகு அவரை படகிலே ஏதோ அடிதடி நடந்ததாமே ன்னு கேட்டார். ஆமாம், சிலர் ஒரு பெண்ணை வம்புக்கு இழுத்தார்கள். அவர்களை போட்டு புரட்டி எடுத்துவிட்டேன் ன்னார். அவங்களை அடிக்க தண்டிக்க நீ யார்? அதற்காக அதிகாரிகள் இருக்கிறார்கள். அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவங்க கடமை. நீ ஏன் அதை செய்கிறாய்? என்று கடிந்து கொண்டார். அவர் போன பிறகு அதே படகில் பயணம் செய்த இன்னொருவர் வந்தார். அடிதடி பற்றி அவரிடம் விசாரித்தார். ஒரு பெண்ணிடம் சிலர் வம்பு செய்யப்போக ஒரே அடிதடி ரகளை ஆகிவிட்டது. இரண்டு கோஷ்டியாக பிரிந்து அடித்துக்கொண்டார்கள் என்றார். "நீ என்ன செய்தாய்?” "நான் என்ன செய்ய இயலும்? சும்மாயிருந்தேன்.” "அதெப்படி? கண் முன் ஒரு அநியாயம் நடக்கிறது; நீ பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாயா? நீயும் கண்டித்து இருக்க வேண்டாமா?” என்று கடிந்து கொண்டார். என்னய்யா இது? ஏறுக்கு மாறா இருக்கேன்னு ஆச்சரியப்பட்டா, ஆமாம், அன்னைக்கு அவர் கூட இருந்து இதை பார்த்தவங்களும் அப்படித்தான் நினைச்சு குழம்பினாங்க! விளக்கத்தை அப்புறம் பார்க்கலாம். கோபம் நல்லதா கெட்டதா என்பதை அதன் விளைவுதான் தீர்மானிக்கணும். (தொடரும்)
Post a Comment