Saturday, February 11, 2012

பஞ்சதஶீ, -1 -21

 
ரஜோம்°'ஶை​: பஞ்சபி⁴ஸ்தேஷாம்° க்ரமாத்கர்மேந்த்³ரியாணி து | வாக்பாணிபாத³பாயூபஸ்தா²பி⁴தா⁴நாநி ஜஜ்ஞிரே || 21||

இந்த ஐந்து சூக்ஷ்ம இந்திரியங்களின் ரஜஸ் பாகங்களின் சேர்கையால் கர்ம இந்திரியங்கள் தோன்றின. வாய், கைகள், கால்கள், பாயுரு, உபஸ்தம் ஆகியன.
 

Friday, February 10, 2012

உரத்த சிந்தனை - வைராக்யம் 3


என் நண்பரின் அப்பா பத்தி சொல்லப்போறேன்.

இரண்டு வாரங்கள் முன் என் மருத்துவ நண்பர் ஒருவரின் அப்பா இறந்து போனார். வயசு 86. என் மனைவி டாக்டரை பார்த்து அவசியம் விசாரிக்கணும்ன்னு வற்புறுத்தியதால நானும் போனேன். டாக்டர் எங்களை பார்த்து ஆச்சரியப்பட்டார். என்ன விஷயம் ன்னு கேட்டார். அப்புறம் அவரே புரிஞ்சு கொண்டு "என்ன? பார்த்து விசாரிக்க வந்தீங்களா"ன்னு சொல்லி அடுத்த ரூமுக்கு அழைத்துப்போனார்.
அடுத்த பத்து நிமிடங்கள் தன் தந்தையைப்பத்தி கதையா சொன்னார். அவர் பல வருஷங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தார்ன்னு தெரியுமே தவிர நண்பர் சொன்ன விவரங்கள் புதுசு.
நண்பரின் அப்பா பூர்வீகம்  எங்கள் நகரத்துப்பக்கம் ஒரு கிராமம். நகரத்துக்கு வந்து தொழில் ஆரம்பித்தார். கைலி ஏற்றுமதிதான் வியாபாரம்.  முக்கியமாக சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வார். தொழிலின் நெளிவு சுளிவுகள் நன்றாக தெரிந்து திறமையாக வியாபாரம் செய்தார். பிள்ளைக்குட்டிகள் அந்த காலத்துக்கு ஏற்றாற்போல நிறைய. எல்லா பெண்களையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார். நண்பர் தவிர மற்ற பிள்ளைகள் படித்து பின் தந்தையின் வியாபாரத்திலேயே இறங்கிவிட்டனர். நண்பர் மருத்துவ படிப்பு முடித்து மேலே எம்டி யும் முடித்து வரும்போது ப்ராக்டீஸ் ஆரம்பிக்க ஆஸ்பத்திரி தயாராக இருந்தது. நண்பரும் சீக்கிரமே செட்டில் ஆகிவிட்டார்.

முதுமையுடன் டயபெடிஸ் முதலிய நண்பர்களும் வந்து சேர்ந்துகொண்டார்கள்.
இவர் வியாபாரத்தை மகன்களிடமே விட்டுவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டார். அவரது மனைவியும் நோய்வாய்ப்பட்டு பரலோகம் போனார்.
இவரது நண்பர் ஒருவர் மிகவும் 'சீரியஸா'க ஆஸ்பத்திரியில் இருப்பதாக கேள்விப்பட்டு போய் பார்த்தார். மூக்கில் குழாய் சொருகி திரவ உணவு உள்ளே போய் கொண்டு இருந்தது. மூச்சு விட வென்டிலேடர் மெஷின். பிழைக்க என்ன சான்ஸ் என்று டாக்டரை கேட்டார். டாக்டரோ உதட்டை பிதுக்கினார். நண்பரின் பிள்ளைகளை கூப்பிட்டு இவர் சொன்னார், "உங்க அப்பாவை எனக்கு 60 வருஷமா பழக்கம். இப்படி ஒரு அவஸ்தையை அவர் விரும்ப மாட்டார். பேசாம அவரை வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு போற வழியை பாருங்க.”
இவர் உடல் மெதுவாக சீர் கெட்டது. இனி படுக்கைதான் என்பது போன்ற சூழ்நிலை வந்தது.
தன் பினான்சியல் சமாசாரம் எல்லாவற்றையும் நேர் செய்து வைத்தார்.
மருத்துவ பிள்ளையை கூப்பிட்டு "ஆஸ்பத்திரியில் எனக்கு ஒரு பெட் போடு" என்றார்.
ஏம்பா வீட்டிலேயே இருக்கலாமே?”
" வேண்டாண்டா. அப்படி செய்தா நீ எப்பவாவது வெளியே போகணும் என்கிற போது போகவும் முடியாம, இருக்கவும் முடியாம கஷ்டப்படுவாய். என்ன இப்ப? நீயும் முக்காவாசி நேரம் இங்கேதான் இருக்கே. பாத்துக்க முடியும். இங்கே நர்ஸ்கள் இருக்காங்க. உனக்கும் நிறைய டாக்டர் நண்பர்கள் இருக்காங்க. அவங்களும் பாத்துப்பாங்க. நீ பாட்டுக்கு கான்ப்ரன்ஸ் போகிறதெல்லாம் போய்க்கொண்டு இரு.”

ஆஸ்பத்திரி போன பின் கண்டிஷன்கள் போட்டார்.
இதோ பார், நீ என்ன மருந்து கொடுப்பியோ வைத்தியம் செய்வாயோ செய். வேறே எங்கேயும் கூப்பிட்டுகிட்டு போகக்கூடாது. நரம்பு வழியா சாப்பாடு போகக்கூடாது. மருந்து போட்டா பரவாயில்லை. வெண்டிலேட்டர் போடக்கூடாது. நான் நிம்மதியா போகணும். எது நடந்தாலும் இங்கேயே நடக்கட்டும்.

நடுவில் ஒரு முறை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் அடிபட்டது. டாக்டர் நண்பர் வேறு இடத்துக்கு அழைத்துப்போய் ஸ்கான் செய்ய விரும்பினார். இவர் மறுத்துவிட்டார்.  "ஸ்கான் செய்து என்ன கண்டுபிடிக்கப்போகிறாய்? சரி இன்ன பிரச்சினைன்னு தெரிஞ்சு அப்புறம் என்ன செய்யப்போகிறாய்? என்ன நடக்கும். போவதானால் போகிறேன். எப்படியும் போகப்போகிற உயிர் எப்போ போனால் என்ன?”
தலைக்காயம் மெதுவாக ஆறிப்போனது.

பார்க்க வருகிற உறவினர்களை தயார் செய்தார்.
பிறக்கும்போதே சாவது நிச்சயம். முடிந்த வரை குடும்பத்துக்கும் ஜனங்களுக்கும் நல்லது செய்துவிட்டு போகணும். நிறைவான வாழ்கை வாழ்ந்துவிட்டேன். நான் இறந்துபோனால் அழாதீர்கள். அதில் அர்த்தம் இல்லை.
அதே போல அவர் படுக்கையில் விழுந்து ஆறு வருடங்கள் பின் இறந்து போனபோது யாரும் அழவில்லை.
 

Thursday, February 9, 2012

உரத்த சிந்தனை - வைராக்யம் 2



    ராஜா அரசியல் சிக்கல்களில மாட்டிக்கொண்டு இந்தப்பக்கம் கவனம் செலுத்த நேரமே இல்லாமல் போனான்.

    இந்தக் கூத்து ஜனங்கள் மத்தில விமர்சனம் இல்லாம இருக்குமா? ராஜா ஒரு சாமியாரை அழைச்சுக்கொண்டு வந்து அரண்மனையில வெச்சு இருக்கான். அவரோ வேளா வேளைக்கு நல்லா விருந்து சாப்பிட்டு ஆட்டம் பாட்டம்ன்னு பொழுதைக் கழிக்கிறார் ன்னு பேச்சு அடிபட்டது. இது மெதுவா ராஜா காதுக்கும் எட்டினது. ராஜா ஷாக் ஆயிட்டான். விசாரிச்சா அது உண்மைதான்னு தெரிஞ்சது. நேரா போய்ப் பார்த்து உறுதி செய்துகிட்டான்.

    தானேதான் இவரை இங்கே கொண்டு வந்து வெச்சது. என்ன செய்யறது?

    ஒரு வாரம் பத்து நாள் போச்சு. அதே ரொடீன்தான் தொடர்ந்தது.
    ராஜா முகம் உம்முன்னு இருக்கிறதைப் பார்த்துத் துறவியும் என்ன விஷயம்ன்னு ஊகிச்சுக் கொண்டார்.
    ஒரு நாள் மாலை ராஜாகிட்ட நாம் தேர்ல ஏறி ஊரைச் சுத்திப் பார்க்கலாமான்னு கேட்டார். போகலாமே ன்னு ராஜா சொன்னார்.
    ஊருக்கு  வெளியே தேரை விடச்சொன்னார் துறவி. காட்டுக்குப் போகிற பாதை வந்தது. துறவி தேரை நிறுத்தச்சொல்லிக் கீழே இறங்கினார். ராஜாவைப் பார்த்துச் சொன்னார். "இதோ பார்! நான் அரண்மனைக்குத் திரும்பலை; காட்டுக்குத் திரும்பிப்போறேன். உனக்கு வேதாந்தத்துல அவ்வளவு ஆர்வம் இருந்தா என்னோட வா. இல்லையானா திரும்பி போ!”

    ராஜா சொன்னான் "சாமி, என்னை நம்பி இவ்வளவு ஜனங்க இருக்காங்களே! அவங்களை விட்டுவிட்டு எப்படி வருவேன்?”
    துறவி சொன்னார். "இந்த ஜனங்களை எல்லாம் நீ காப்பாத்தறதாத்தானே நினைக்கிறாய்? உனக்கு வேதாந்த விசாரணை செய்ய நேரம் வரலை. திரும்பிப்போய் ராஜ்யத்தைக் கவனி.”
    திரும்பிக்கூடப் பார்க்காமக் காட்டை நோக்கிக் கிளம்பிட்டார் துறவி.

    இப்படி ராஜ போகத்தை பட்டுன்னு உதற முடிஞ்சது ஏன்னா வைராக்யத்தால்.

    பக்குவம் வந்தவங்களால இப்படித் தாமரை இலைத் தண்ணீர் போலப் பட்டும் படாமலும் இருக்க முடியும். இதுவே உண்மையான பற்றின்மை.
    இது வேணும் அது வேணும்ன்னு அலையாம, தேடிப்போகாம, தானாக என்ன கிடைக்குதோ அதை வைத்துக்கொண்டு இயல்பாக வாழ்க்கை நடத்துவதே இந்தப் பற்றின்மையின் அடையாளம்.

    எது கிடைக்குதோ அதை உள்ளபடி பார்க்கணும். இது நமக்கு எந்த விதத்தில பிரயோஜனம் ன்னு யோசிக்கணும். பிரயோஜனம் இல்லைன்னா அதை அப்படியே விட்டுடணும். சும்மா பார்க்கிறதெல்லாம் கைவசப்படணும், கைவசப்படறதெல்லாம் அனுபவிக்கணும்ன்னு ஒண்ணுமில்லை.
    இப்படி இருக்கிறவங்க  தான் என்ன செய்யணுமோ அதை ஒழுங்கா செய்து கொண்டு போவாங்க. தனக்கு என்ன கிடைக்கிறதுன்னு ஒரு கவலையும் பட மாட்டாங்க.
    நீங்க சும்மா ராஜா ராணி கதையெல்லாம் சொன்னா அது ஒண்ணும் ஒத்துக்கிற மாதிரி இல்லைன்னு சொன்னா....
    என் நண்பரின் அப்பா பத்தி சொல்லப்போறேன்.


Tuesday, February 7, 2012

உரத்த சிந்தனை -வைராக்யம்



உரத்த சிந்தனை:
காமம் பத்திப் பார்த்தோம். இந்த காமத்தைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்து சாதிக்கணும்ன்னு பார்த்தோம். அதுக்குத் துணையா நிற்பது வைராக்கியம். 
வைராக்கியம் என்கிற வார்த்தை அர்த்தம் மாறிப்போய் புழங்குகிற வார்த்தைகளில ஒண்ணு. பலரும் இதை திடச்சித்தம்-  டிடர்மினேஷன் என்கிற ஆங்கில வார்த்தை- பொருளில பயன்படுத்தறாங்க.  உண்மையில் பொருள் அப்படி இல்லை. வைராக்யம் என்கிற சம்ஸ்க்ருத சொல்லுக்கு அர்த்தம் பற்றின்மை.
பின்ன ஏன் இப்படி அர்த்தம் மாறிப்போச்சுன்னா..
பற்றில்லாம இருக்க திடச்சித்தம் நிறையவே வேணும். எனக்கு இனிமே இனிப்பே வேணாம் ன்னு முடிவு செய்தா யாராவது அருமையான இனிப்பைக் கொண்டு வந்து இந்தான்னு கொடுப்பாங்க. மனைவி மக்கள் கிட்டே பற்று இருக்கக்கூடாதுன்னு நினைச்சா பேத்தியோ பேரனோ - ஒரு குழந்தை வந்து கட்டிக்கொண்டு சிரிக்கும். மனசு நெகிழ்ந்து போயிடும்!
என்ன இது பற்றில்லாம இருக்க முடியுமா?
முடியும்.
அதுக்கு ஒரு மனப் பக்குவம் வரணும்.
காமம் போச்சுன்னா இந்தப் பக்குவம் வர வாய்ப்பு அதிகமாகவே இருக்கு.
காமம் ன்னு கூட சொல்ல வேண்டாம். ராகம் போனாலும் கூடப் போதும்.
சங்கீத ரசிகர்கள் அடிக்க வராதீங்க!
சாதாரண ஆசைக்கு அடுத்த படி ராகம். இது எனக்கு வேணவே வேணும். அது இல்லாம இருக்க முடியாது என்கிறது. 
இந்த ராகத்துக்கு ஆப்போஸிட் விராகம்.
விராகத்தோட இருக்கிற தன்மைதான் வைராக்யம். 
அப்ப வைராக்கியம் வந்த ஆசாமி நாட்டை விட்டுக் காட்டுக்குப் போயிடணுமா? அவனால இந்த உலகத்துக்கு என்ன ப்ரயோஜனம்? அவன் இருந்தா என்ன இல்லாட்டா என்ன?

அப்படி இல்லை. வைராக்யம் வந்த ஆசாமி இதே உலகில் இருக்கலாம். வாழலாம். மத்தவங்களுக்கு ப்ரயோஜனமாகவே.

ஒரு காட்டில துறவி ஒத்தர் ஒரு சின்னக் குடிசையைப் போட்டுக்கொண்டு துறவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தார். தலை நகரத்துலேந்து வெகு தூரம் வேட்டையாட வந்த ராஜா இவரைப் பார்த்தான். அவரை அணுகி வணங்கி உபதேசம் செய்யக்கேட்டான். ராஜாவாச்சே! சரின்னு துறவியும் பல விஷயங்கள் பத்தி பேசினார்.
ராஜாவுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு.
அடிக்கடி வந்து உபதேசம் கேட்டான். ராஜ்யம் நடத்துகிற விஷயம் மட்டும் இல்லாம அத்வைதமும் விசாரணை விஷயமாச்சு. இப்படியே போய்கிட்டு இருக்கிறப்ப மந்திரிகள் முதலானவர்கள் ஆக்ஷேபணை தெரிவிச்சாங்க. நீங்க பாட்டுக்கு நாள் கணக்கா காட்டுக்குப் போயிட்டா எப்படி நிர்வாகம் நடக்கிறது ன்னு கேட்டாங்க. அதுவும் சரிதான். ஆனா அத்வைத விசாரணையோ காலம் பிடிக்கற சமாசாரம். என்ன செய்யலாம்?
ராஜா யோசிச்சு துறவிகிட்டே போய் உங்ககிட்ட  பாடம் கேட்ட ஆசையா இருந்தாலும் நடைமுறைச் சிக்கல் இருக்கு. நீங்க பேசாம என் கூட அரண்மனைக்கு வந்துடுங்களேன் ன்னு கேட்டான். துறவி "அப்பா நீ ஒண்ணு ராஜ்யத்தைப்பத்திக் கவலைப்படணும். இல்லை அத்வைத விசாரணையை முழு நேரமா எடுத்துக்கணும். ரெண்டும் இல்லாம அவஸ்தைப் படாதே. என்னை மாதிரி துறவிங்களுக்கு அரண்மனை வாழ்க்கை எல்லாம் சரிப்படாது" ன்னு சொன்னார். ராஜாவோ அதைக் கேட்கலை. திருப்பித் திருப்பி வற்புறுத்தினான்.
சரின்னு துறவியும் ராஜாவோட அரண்மனைக்கு வந்துட்டார்.
ராஜா வேலைக்காரர்களைக் கூப்பிட்டு இவரை நல்லா கவனிச்சுக்குங்கன்னு உத்திரவு போட்டு விட்டு அரசியலைக் கவனிக்கப் போயிட்டான்.- தொடரும்

Thursday, February 2, 2012

பஞ்சதஶீ 1 - 20


தைரந்த​:கரணம்° ஸர்வைர்வ்ரு«த்திபே⁴தே³ந தத்³த்³விதா⁴ |
மநோவிமர்ஶரூபம்° ஸ்யாத்³பு³த்³தி⁴​: ஸ்யாந்நிஶ்சயாத்மிகா || 20||

இந்த ஐந்து சூக்ஷ்ம இந்திரியங்களின் சத்வ பாகங்களின் சேர்கையால் அந்தக்கரணம் தோன்றியது. செயலால் இது இரண்டானது. மனம் என்பதாக அதன் சந்தேகிக்கும் ரூபம். நிச்சயமாக இருப்பது அதன் புத்தி என்ற வடிவம்.