Pages

Thursday, August 4, 2022

காஶி யாத்திரை - 34 மீண்டும் கொல்கொத்தா


முதல்முறையாக அகாலத்தில் போய் சேராத ஒரு வண்டியில் பயணித்தேன் பயணித்தோம். கொல்கொத்தா போய் சேரும் போது மணி ஆறு. ஒரு அரை மணி தாமதமாக போகின்றது என்று நினைக்கிறேன்.
இங்கே கூடவந்த உதவியாளர் அஷ்டாவக்கிரன் விடை பெற்றுக் கொண்டார். அவருடைய சகோதரி வீட்டுக்கு போய்விட்டு தான் திரும்பிக் கொள்வதாக முன்னாலேயே சொல்லியிருந்தார். அதற்காக முந்தின நாளே அவருக்கான சம்பாவனையை கொடுத்துவிட்டோம்.
நாங்கள் எல்லோரும் ஏற்பாடாகியிருந்த ஒரு பெரிய வண்டியில் கிளம்பி கொல்கத்தா நண்பர் வீட்டுக்குப் போனோம். குளித்து டிபன் சாப்பிட்டு விட்டு நல்ல அசதியில் தூங்கினேன். மதிய உணவு முடித்து மீண்டும் ஓய்வு எடுத்தோம். அரவிந்தனை நண்பரின் சகோதரர் ரயில் ஏற்றிவிட்டார். மாலை ஏழரை மணிக்கு விமானம். ஒரு மணி நேரம் முன்னால் போகவேண்டுமென்று நான்கு மணி போல விமான நிலையத்துக்கு கிளம்பினோம். வாடகை வண்டிக்காரர் ஏசி போடவில்லை. ஏனென்று கேட்டால் அரசு அதை தடைசெய்து இருக்கிறது; இன்னும் கோவிட் முடிந்து அனுமதி கிடைக்கவில்லை என்று பதில் வந்தது. ஆனால் இந்த பிரச்சனை முதல் முறை கல்கத்தா வந்து போனபோதும் இன்று காலை நண்பர் வீட்டுக்கு வந்த போதும் எழவில்லை. கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான்.
மாலை நேர கல்கத்தா போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டுக் கொண்டோம். நான் முன்பக்கம் டிரைவர் இருக்கை பக்கத்தில் உட்கார்ந்து இருந்தேன். அவருடைய அலைபேசியில் முன்னே ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சு என்றெல்லாம் இல்லாமல் அரை மணி நேரம் தொடர்ந்து 19 கிலோமீட்டர் போகவேண்டிய தூரம் என்று காட்டிக்கொண்டிருந்தது. எட்டு கிலோமீட்டர் வந்தாலும் அதே தான் காட்டிக் கொண்டிருக்கிறது. என்னப்பா இது என்று கேட்டால் அவர் பார்த்துவிட்டு ஓ, தொலைதொடர்பு பிரச்சனை என்று சுலபமாக முடித்தார். நேரம் ஆக ஆக கொஞ்சம் பதட்டம் அடைவோமோ என்று தோன்றிக் கொண்டிருந்தது. நேரம் பாட்டுக்கு போய்க்கொண்டிருந்தது. ஆனால் போக வேண்டிய தூரமோ குறையவே இல்லை. என்னுடைய அலைபேசியில் கூகுள் படத்தை கிளப்பி பார்த்துக்கொண்டிருந்தேன். அதிக நேர அவகாசம் இல்லாமல் போய் சேருவோம் என்று தோன்றியது. அதேபோல நாங்கள் போய் சேர்ந்த போது உத்தேசித்த நேரத்துக்கு 10 நிமிடம் தான் இருந்தது. அவசரம் அவசரமாக உள்ளே போனோம். போன பிறகுதான் அவசரப்பட்டு இருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை என்று தெரிந்தது. விமானம் தாமதமாக கிளம்பும் என்று அறிவிப்பு பார்த்தேன். காத்திருந்து காத்திருந்து கடைசியில் இரண்டு மணி நேரம் தாமதமாக ஒன்பதரைக்கு கிளம்பியது.
கொரோனாவில் அடிவாங்கிய விமான கம்பெனிகள் எங்கே காசு பார்க்கலாம் என்று தேடுகிறார்கள். இந்த இருக்கை வேண்டும் என்றால் கூடுதலாக கட்டணம் என்கிறார்கள். பொதுவாக ஜன்னல் ஓரம் அல்லது நடைவழி ஓரம் விரும்புகிறார்கள் என்பதால் காசு கூடுதலாக கட்டாதவர்களுக்கு நடு இருக்கைகளையே கொடுத்து விடுகிறார்கள். இதனால் வழக்கம்போல் ஆளுக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தோம்.
ஒருவழியாக எங்களை அழைக்க விமானத்தில் ஏறுவதற்காக கிளம்பினோம். பின்னால் பார்த்தால் ஒரு நடுத்தர வயது இளைஞரும் இரண்டு சிறுவர்களும் பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். பேச்சு சம்ஸ்கிருதம் பற்றியும் வேதம் பற்றியும் இருந்ததால் ஆச்சரியப்பட்டுக் கொண்டு யார் என்ன என்று விசாரித்தேன். அவர் சென்னையில் பாடசாலையில் நடத்திக்கொண்டிருக்கிறார். வக்கீல் தொழில் புரிகிறார் என்று தெரிந்தது.
பயணம் பற்றி குறிப்பாக சொல்ல ஒன்றுமில்லை. வழக்கம்போல் அகாலத்தில் சென்னை வந்து சேர்ந்தோம். அங்கே வந்திருந்த எங்கள் வண்டியில் எங்கள் உறவினர் வீட்டுக்குப் போய் சேர்ந்தோம். படுக்கையில் விழுந்தேன்.
அடுத்த நாள் காலை ஆறு மணி போல் எழுந்து காலைக்கடன்களை முடித்து சிற்றுண்டி முடித்து ஊருக்கு கிளம்பி விட்டோம். மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டோம். இப்படியாக காசி யாத்திரையின் இரண்டாவது கட்டம் பூர்த்தியாகிறது. அடுத்து கடைசி கட்டமாக ராமேஸ்வரம் செல்ல வேண்டும். இதுவரை பிரயாகையில் கிரஹித்த கங்கை நீருக்கு தினசரி கங்கா பூஜை செய்ய வேண்டும். முதலில் கையோடு கையாக இராமேஸ்வரத்தை முடித்துவிடலாம் என்று நினைத்திருந்தாலும் ராமேஸ்வரம் வாத்தியார் காலநிலை சரியாக இருக்காது என்று சொன்னதால் ஒரு மாதம் கழித்து போவதாக முடிவு செய்து ரயில் இருக்கைகள் பதிவு செய்து இருந்தன.
 

No comments: