Pages

Friday, August 5, 2022

காஶி யாத்திரை - 35 மீண்டும் ராமேஸ்வரம்.
 
மீண்டும் ராமேஸ்வரம் செல்லும் அந்த நாளும் வந்தது. இரவு பத்தரைக்கு ரயில். கடலூர் முது நகர் போய் ஏற வேண்டி இருந்தது. காத்திருந்தோம் காத்திருந்தோம் காத்திருந்தோம்… ஒரு வழியாக அரை மணி தாமதமாக வந்து சேர்ந்தது. ஏறிப்படுத்தோம். நல்ல வேளையாக ஆட்டம் அதிகமில்லை. காலை வழக்கம் போல நான்கு மணிக்கு விழிப்பு வந்துவிட்டது. பாம்பனில் புதியதாக கட்டிக்கொண்டு இருக்கும் பாலத்தை பார்க்க முடிந்தது.
 

 

 

பையர் பாடசாலை பசங்களுடன் முன்னேயே ராமேஸ்வரம் போயாச்சு. பாம்பன் தாண்டும் போது ‘நாங்க தனுஷ்கோடி போறோம்’ வாத்தியார் சிஷ்யன் வந்து ரயில்நிலையத்தில் அழைத்துக்கொள்வார் என்று போனில் சொன்னார். பிரச்சினை ஏதும் இல்லை என்றோம். அதே போல் சிஷ்யர் வந்துவிட்டார். ஆட்டோ பிடித்து முன்னே தங்கின அதே இடத்துக்குப்போய் சேர்ந்தோம். இம்முறை கீழேயே ஒழித்து கொடுத்துவிட்டார்கள். போகும் முன் மருமகள் டிபன் செய்து வைத்துவிட்டு போய்விட்டார்.
11 மணி போல பூஜை ஆரம்பித்தது. 11 பேர் ஶ்ரீருத்ரம் ஜபம் செய்து பின் பூஜை செய்து முடித்து சமாராதனை செய்தோம். உணவு ஏற்பாடு வேறு இடத்தில் இருந்தது. அதனால் பையர் போய் அதை கவனித்தார். வழக்கம் போல கோவில் போவதை அப்புறம் வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போயிற்று. 3 மணிக்கு போகலாம் என்றார்கள்.
பசங்களுக்கு ஃஜூம் இல் உணர்வு சார் நுண்ணறிவு பாடம் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். சரியாக மூச்சுப்பயிற்சி பாடம் அன்று அமைந்தது. நேரிலேயே அவர்களை செய்ய வைத்து புரிய வைக்க முடிந்தது.
வண்டி பிடித்து கோவிலுக்கு போனோம். சிஷ்யர் கூடவே வந்தார். நான் பாட்டுக்கு அனுமாரை பார்த்துக்கொண்டேதான் உள்ளே போனேன். அங்கே இருந்த கல்வெட்டு ஒன்றில் எழுத்துக்களை வெள்ளை பெயிண்டால் எழுதும் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அது என்ன என்று படிக்கப்போய் பெயிண்டர் எக்கச்சக்க எழுத்துப்பிழை செய்திருப்பதை பார்த்து பக்குவமாக சுட்டிக்காட்டி திருத்த வைத்தேன். அவரே குழப்பமாக இருந்த சிலதை இது என்ன என்று கேட்டுக்கொண்டார். இன்னும் 30% வேலை பாக்கி இருந்தது. திரும்பும் போது பார்க்க வேண்டுமென்று நினைத்து கடைசியில் மறந்து போயிற்று! இந்த காலத்தில் எழுத்தறிவு இல்லாமலா இருக்கிறார்கள் என்று ஆச்சரியம். எழுத்துக்கள் மறைந்து கொண்டிருந்தாலும் தமிழ் தெரிந்தால் கண்டுபிடித்துவிடும் அளவில்தான் இருந்தது. இப்போது எந்த அளவில் இருக்கிறதோ! யாரும் போனால் பார்த்துச்சொல்லுங்கள்.
100 ரூபாய் டிக்கட் வாங்க சிஷ்யர் போனார். நேரமாகிறதே என்று பதஞ்சலியை பார்க்கபோய்விட்டேன். பசங்களையும் கூப்பிட்டு காட்டினேன். அங்கேயே பக்கத்தில் ஜோதிர்லிங்கத்தையும் தரிசித்தோம்.
சிஷ்யர் வர வெகு நேரமாயிற்றூ. என்னடா என்று பார்த்தால் 100 க்கு பதில் 200 டிக்கட்டை டிக்கட் கொடுப்பவர் கிழித்துவிட்டு அதை யார் தலையில் கட்டலாம் என்று பார்த்துக்கொண்டிருந்தார் போலிருக்கிறது! யாரும் வாங்கவில்லை என்று எங்கள் தலையிலேயே கட்டிவிட்டார். நாராயணா என்று வாங்கிக்கொண்டு நகர்ந்தோம்.
நிதானமாக வெளியே பசங்களுக்கு சுற்றிக்காட்டிக்கொண்டு மீண்டும் சேது மாதவரையும் தரிசித்து சந்நிதிக்குப்போய் சேர்ந்தோம். அர்ச்சகர் கொஞ்சம் இருங்கள் கூட்டம் சற்று குறையட்டும் என்றார்.
பேரன் இந்த கங்கை நீர் பாத்திரம் மூடியிருக்கிறதே என்ன செய்வார்கள் என்று கேட்டான். சாதாரணமாக சூடு வைத்தால் ஈயம் உருகி மூடி கழன்றுவிடும். நாங்கள் வீட்டில் அனல் வைத்து பிரித்திருக்கிறோம். அனேகமாக இங்கே கொடு வாளால் மூடியை வெட்டி அபிஷேகம் செய்வார்கள் என்று பிசிக்ஸ் பாடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். அர்ச்சகர் வந்து சங்கல்பம் செய்துகொண்டு கங்கை சொம்பை வாங்கிக்கொண்டு போனார். போகும் வழியிலேயே இடது கையில் சொம்பை வைத்துக்கொண்டு வலது கையை தட்டையாக வைத்துக்கொண்டு ஓங்கி அறைந்தார். மூடி சுத்தமாக கழன்றுக்கொண்டு வந்துவிட்டது! அதே மூவ்மெண்டில் அதை பிடித்து எறிந்தார். மொத்தம் 2 வினாடி கூட ஆகவில்லை! அபிஷேகத்துக்குப்போய்விட்டார்! நான் புதிய பிசிக்ஸ் பாடம் கற்றுக்கொண்டேன்.
மனம் நிறைவாக தரிசனம் செய்து திரும்பினோம். அம்பாள் சந்நிதிக்குபோய் சுற்றும் முற்றும் தரிசனம் செய்தோம். பேத்தி அபிராமி அந்தாதி பாடினாள். திரும்பினோம். ஹனுமார் எதிரில் நின்றார்கள். நான் தரிசனம் பண்ணிவிட்டேன் என்றேன். இல்லை இவரை கடைசியாகத்தான் பார்க்க வேண்டும் என்றார்கள். அனுமார் 18 அடி ஒசரம். பத்தடி பூமிக்கு அடியிலே இருக்கார் என்று சிஷ்யர் சொன்னார். ஓஹோ என்று கேட்டுக்கொண்டு வெளியே வந்தோம். மற்றவர்கள் இன்னும் எங்கோ போக வேண்டும் என்று திட்டமிட நானும் மனைவியும் இருப்பிடத்துக்கு திரும்பலானோம்.
நான் தனுஷ்கோடியில் பல ஆண்டுகள் முன் வைத்து பூஜை செய்த அனுமாரை பார்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன். அதனால் ஆட்டோ ட்ரைவரிடம் சிஷ்யர் பேசி வைத்து இருந்தார். போகும் வழியில் இல்லத்தரசி தன் எல்லாம் கொள்ளும் மஹராஜன் கப்பலை துழாவிவிட்டு ஃபெப்ரக்ஸ் ப்ளஸ் வாங்கணும் என்றார். ட்ரைவரிடம் சொன்னேன். அவர் சரி என்று சொல்லிவிட்டு கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு நாற்சந்தியில் நிறுத்திவிட்டார். இந்த 30 அடி நேராக போய் இடது பக்கம் திரும்பினால் முதல் கடை மருந்துக்கடை என்றார். மனைவியிடம் 50 ரூபாய் நோட்டுதான் இருந்தது. நாலு மாத்திரை போறும் என்றார் மனைவி. சரி என்று போய் வாங்கினேன். கடைக்காரர் சில்லறை கேட்பார் என்று நினைத்தால் அவர் பாட்டுக்கு மீதி சில்லறை எடுத்துக்கொடுத்தார்! பில்லை பார்த்தால் 20 சொச்சம். தூக்கிவாரிப்போட்டது. ஹும்! இவ்வளவு நாளும் சொன்னால் மருந்து வந்துவிடுகிறது என்று நிலையில் விலைவாசியே தெரியாமல் இருக்கிறேன்!
வண்டி கிளம்பியது. ஆச்சரியமாக வெகு நாட்கள் கழித்து பசித்தது. வீட்டில் ஏதேனும் சாப்பிட இருக்கிறதா என்று மனைவியை விசாரித்தேன். இருக்கு. போனதும் கொடுக்கிறேன் என்றார். இந்த பசி அதுவைரை காத்திருக்குமா என்று யோசித்தேன்.
ஆட்டோ அனுமார் கோவில் போய் நின்றது. பூஜை சாமான்களை எல்லாம் வெளி முற்றத்தில் போட்டு ஒரு பெண்மணி தேய்த்துக்கொண்டு இருந்தார். இன்னொரு பெண்மணி பைப் ஹோசில் தண்ணீர் ஊற்றி மண்டபத்தை அலம்பி விட்டுக்கொண்டு இருந்தார். ‘ஸொல்பா அட்ஜஸ்ட் மாடி’ அனுமார்கிட்டே போய் தரிசித்தோம். ப்ரதக்‌ஷிணம் செய்து திரும்பும் வேளை அர்ச்சகர் வந்தார். கொஞ்சம் இருங்கோண்ணா என்று கற்பூரம் ஏற்றிக்காட்டினார். பூஜை சாமான் எல்லாம் தேய்ச்சுண்டு இருக்கா என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் சொன்னார். பரவாயில்லை என்றோம். அந்த சுஷ்கமான பூஜை முடிந்து திரும்பும் போது ‘அண்ணா ப்ரசாதம் சாப்பிடறேளா?” என்று அர்ச்சகர் கேட்டார். தலையாட்டியதும் தொன்னைகளில் (ம்ம்.. இல்லை ப்ளாஸ்டிக் கப்பா? நினைவில்லை) தயிர்சாதம் கொடுத்தார். ‘பகவானே என்னே உன் கருணை!’ என்று நினைத்துக்கொண்டு எடுத்துக்கொண்டேன்.
வீட்டுக்குத்திரும்பினோம். பையர் அண்ட் கோ அடுத்த நாள் ஆதி சேது, தேவிப்பட்டினம், திருப்புல்லாணி போவது என்று திட்டம். நாங்கள் இரவு வண்டியை பிடித்துவிட்டோம். போன முறை விழுப்புரம் போய் இறங்கினோம். கடலூர் வழியில் ரோடு நன்றாக இல்லை என்று சுற்றிப்போக வேண்டி இருந்தது. அதனால் விருத்தாசலத்தின் இறங்கலாம் என்று மனைவி முடிவெடுத்துவிட்டார். காலை 3 மணிக்கு போகும். திருப்பி தூக்கம் பணால். என்னத்த ஆட்சேபணை செய்து என்ன?
இரவு இரண்டரை அலாரம் வைத்து விழித்துப்பார்த்தால் விருத்தாசலம் அவுட்டரில் வண்டி நின்றுகொண்டு இருந்தது. அரை மணி நேரம் சீக்கிரமாக வந்தாச்சு. ஆனால் அங்கேயே மண்டகப்படி போட்டு அரை மணி கழித்துத்தான் ஜங்ஷனுள் விட்டார்கள். அழைத்துபோக வந்திருந்த ட்ரைவர் மானேஜர் இடம் லக்கேஜை கொடுத்து தள்ளாடி காரை அடைந்தோம். பின் கடலூர் வந்து சேர்ந்தோம். அப்பாடா! ஒரு வழியாக தூக்கம் கெட்டுப்போகும் நாட்கள் ஒரு வழியாக முடிவடைந்தன என்று தோன்றியது.
இவ்வாறாக காஶி யாத்திரை பூர்த்தி!
ஶுபம்!

No comments: