Pages

Tuesday, August 2, 2022

காஶி யாத்திரை - 33 கயா- 4



அடுத்த நாள் அஷய்ய வட ஶ்ராத்தம்.
காலையில் நானும் பையரும் சீக்கிரமாகவே கிளம்பி போனோம் . பல்குனி தீர்த்தத்தை கிரகித்துக் கொண்டு அங்கே இருக்கிற கதாதரர் கோவிலை பார்க்க வேண்டுமென்று போனோம். பூ வாங்கிக்கொண்டு போகலாம் என்றேன். ஒரு சிலரே கடை வைத்திருந்தார்கள். ஒருவர் கொஞ்சம் பூ வைத்திருந்தார். அவரிடம் 50 ரூ. க்கு சில்லறை இல்லை. கோவிலுக்கானதை கொடுக்கவா என்று கேட்டார். சரி என்றோம். கொஞ்சம் பூ, சின்ன மாலை, கர்ப்பூரம், நிவேதனத்துக்கு ஒரு பேடா என்று சிலதை கட்டிக்கொடுத்து மீதி சில்லறை கொடுத்தார்!
நடை சார்த்தி இருந்தது. எங்களை பார்த்துவிட்டு எலும்பும் தோலுமாக வறுமை என்று எழுதி ஒட்டி இருந்த கிழவர் ஒருவர் வந்தார். கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு இடத்தை பெருக்கினார். வேலையாள் போலிருக்கிறது என்று நினைத்தேன். பெருக்கிவிட்டு கையலம்பி கதவருகே வந்தார். கதவை மெலிதாக தட்டினார். இரன்டு மூன்று முறை தட்டிவிட்டு அப்புறம் திறந்தார்! அப்புறம்தான் இவர்தான் இங்கே பண்டா என்று தெரிந்தது.
கிழவருக்கும் தெய்வத்துக்கும் இருந்த உறவு புரிந்தது. குழந்தைக்கு செய்வது போல அன்புடன் வாத்ஸல்யத்துடன் செய்தார். சின்ன பூஜை முடித்து பேடா, பூ ஆகியவற்றை பிரசாதமாக கொடுத்தார். கதாதரர் சின்ன மூர்த்தம். அவ்ளோ அழகு! பொதுவாக வட இந்திய கோவில்களில் இப்படி அழகான மூர்த்தங்களை பார்ப்பது அரிது!
 
கதாதரர்


நிறைவான மனத்துடன் திரும்பினோம். வந்த வழியே திரும்பாமல் இடது புறமாகவே போனதில் இன்னும் சில சன்னதிகள் எல்லாம் பார்த்துக்கொண்டு போனோம். கடைசியில் இந்த பாதை நேற்று பார்த்த கல்மண்டபத்தில் கொண்டு வந்து விட்டது. ஈசானாதி சதுர்தச பாதங்களை மீண்டும் மெதுவாக பார்த்துக்கொண்டு இருப்பிடத்துக்கு வந்தோம்.

போக்தாக்களை கொஞ்சம் சீக்கிரம் வர வாத்தியார் சொல்லி இருந்தார். 11 மணி போலவே வந்துவிட்டனர். உபசாரங்கள் முடிந்து ஹோமம் முடிந்து உணவிட்டு எல்லாருக்கும் நன்றி சொல்லி அனுப்பிவிட்டு பிண்டங்களை எடுத்துக்கொண்டு அக்‌ஷய்ய வடத்துக்கு இரண்டு ஆட்டோவில் போனோம். சாலைகள் படு மோசம். ஒரு முக்கியமான யாத்ரை ஸ்தலத்தை இப்படியா வைத்திருப்பது! தினசரி எவ்வளவு பேர் வந்துபோகிறார்கள்!
ஆட்டோ போய் நின்ற இடம் ஒரு வளாகம். அதில் சுட்டெரிக்கும் வெய்யிலில் முற்றத்தை கடந்து மாடிப்படி ஏறினோம். போன முறை இப்படி படியேறி போன நினைவு ஏனோ இல்லை. ஏறிப்போன பாதை அக்‌ஷய்ய வடத்தில் கொண்டு விட்டது. சரிதான் மேடு பள்ளம் இருந்ததால் ஏதோ சரி செய்து மாடி ஏறி போவதாக அமைத்து விட்டார்கள். நிறைய்ய மக்கள். கீழே தரையில் சலவைக்கல் பதித்திருக்கிறார்கள். ஆங்காங்கே பண்டாக்கள் மந்திரங்கள் சொல்லிகொடுத்து பிண்டங்களை ஆல மரத்தின் கீழ் போடசொன்னார்கள்.
நாங்கள் பத்தடி தள்ளி கிழக்கு பார்த்து உட்கார்ந்து கர்மாவை ஆரம்பித்தோம். அரவிந்தனை வாத்தியார் ஜலம் கொண்டுவரசொன்னார். ஒரு நிமிஷத்தில் வந்து விட்டான். என்னடா என்று பார்த்தால் இந்த ‘மாடி’யிலேயே கிணறு இருக்கிறது! இன்று மாத்ரு ஷோடசிக்கும் கூடுதலாக 24 (என்று நினைவு) ஜோடி (ஆண்-பெண்) மந்திரங்கள் சொல்லி பிண்டங்கள் வைத்தோம். நேற்று மறந்துபோன/ விட்டுப்போனவர்களுக்கும் வைத்தோம். இந்த கூடுதல் பிண்டங்கள் விஷ்ணுபாதத்திலேயே வைத்திருக்க வேண்டும் போலிருக்கிறது. நேரமாகிவிடும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று வாத்தியார் சொல்லிவிட்டதாக பையர் பின்னால் சொன்னார்.
பிண்டங்களை சேர்த்து ஆலமரத்தின் கீழ் இட்டோம். அங்கிருந்த பண்டா ஏதோ ஸ்லோகம் சொல்லி போடச்சொன்னார். வாத்தியார் வைதீகமாக செய்து வைத்திருந்தால் என்ன? இவர்கள் கடைசியில் சொல்லவே சொல்கிறார்கள். அவர்களைப்பொறுத்த வரை அது இல்லாமல் கர்மா பூர்த்தியாவது இல்லை. தக்‌ஷிணை கொடுத்தோம். அவரோ சீதையின் சாபத்தை மெய்ப்பித்தார். போகிறது என்று கூடுதலாக கொடுத்து ஆசீர்வாதம் பெற்று திரும்பினோம். கடைசி நாள், நேரமாகிவிடும், 5- 10 க்கு ப்ளேன் பிடிப்பது கஷ்டம் என்று வாத்தியார் சொன்னதை பொய்யாக்கும் விதமாக இன்று ஒன்னரை மணிக்கே கர்மா முடிந்து சாப்பிட்டோம்.
வாத்தியாருக்கு இவ்வளவு நாட்கள் கர்மாக்களை செய்து வைத்ததற்கு தக்‌ஷிணை கொடுத்து ஆசீர்வாதங்கள் பெற்றோம். அவர் அடுத்த வேலையை உத்தேசித்து 4 மணிக்கெல்லாம் காரில் கிளம்பிவிட்டார்.
தங்கின இடத்துக்கான விஷயங்களை செட்டில் செய்தோம். மானேஜர் இளைஞர் வந்து சில குறைபாடுகள் இருந்திருக்கும்; மன்னித்துகொள்ளுங்கள் என்றார். பரவாயில்லை; தவறுகள் நடக்க நடக்க அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள். மீண்டும் அது நடக்காமல் இருக்க முயற்சி செய் என்றேன்.
கொல்கொத்தா திரும்ப அதே ஜன் சதாப்திதான். எட்டு பத்துக்கு ட்ரெய்ன்.
இதற்குள் இன்னொரு குழப்பம் நடந்துவிட்டது. கொல்கொத்தா சென்னை புக் செய்த விமானம் சென்னைக்கு ஆறு மணி போல வர வேண்டும். எங்கேயும் போக வேண்டாம். ஏர்போர்டுக்கு காரை வரச்சொல்லிவிட்டு அதில் கடலூர் திரும்பி விடலாம் என்று திட்டம். இண்டிகோ ஆசாமி கொஞ்சம் விளையாடிவிட்டார். அந்த விமானம் கிளம்பும் நேரத்தை மாற்றி இருக்கிறோம். ராத்திரி 9 மணிக்குத்தான் கிளம்பும். சரி என்றால் சரி. இல்லையானால் கேன்சல் செய்துகொள் என்று பையருக்கு செய்தி அனுப்பிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் நண்பர் வீட்டில் தங்கியே போவது என்று முடிவாகிவிட்டது.
இரவு ட்ரெய்ன் பிடிப்பதில் சிக்கல் இல்லை. நிம்மதியாக தூங்கினோம்.

No comments: