Pages

Thursday, October 2, 2008

கர்ம வழி பொது -4சுலோகங்கள் 42-43

காமத்தை யுன்னிக் கணிசித்து மேலுலகைச்
சேமத்தை யிட்டுச் செனித்துழலு - மீமத்
தியற்றிதரும் போகத்தி லின்பத்தை நோக்கி
முயற்றியுட னேயெழுவர் மூண்டு.


சிற்றறிவுடைய மாந்தர் வேதங்களின் மலர்ச் சொற்களால் கவரப்படுகிறார்கள். இவ்வாக்கியங்கள் உயர் கிரகங்களுக்கு ஏற்றம் பெறுதல், நற் பிறவி அடைதல், அதிகாரமடைதல் முதலான பலன் கருதிச் செய்யும் செயல்களைச் சிபாரிசு செய்கின்றன. புலன் நுகர்ச்சியையும், செல்வமிகு வாழ்வையும் விரும்புபவர் இதைவிட உயர்ந்ததேதுமில்லை என்று கூறுகின்றனர்.
--
"ஞானிகள் அல்லாதவர்கள் மலர் போல கவர்ச்சியா இருக்கிற இந்த சின்ன விஷயங்களின் பலன்ல ஆசை வைக்கிறாங்க.” இப்படி சின்னது / தாழ்ந்ததுன்னு சொன்னது என்ன? தாழ்ந்த பலன் கொடுப்பது எது? கண்ணன் எதை சொல்கிறான்?

யாக யக்ஞங்களைதான் சொல்கிறான்.

வேதங்கள் பலர் நினைக்கிற மாதிரி வெறும் பிலாஸபி இல்லை. இந்த உலகத்துல நாம் சாதாரணமா வேண்டியது எல்லாம் கிடைக்க என்ன செய்யணும்னும் சொல்லி இருக்கு. அதெல்லாம் கர்ம காண்டம் என்பாங்க.

கிருஷ்ண யஜுர்வேதத்திலே மந்திர பாகங்களும் கர்மாவை விவரிக்கிற ப்ராம்ஹணம் என்கிற பாகங்களும் தனியாக இல்லாமல் கலந்தே இருக்கு. மற்றதில் அப்படி இல்லை. தனித்தனியாவே இருக்கு. யாக யக்ஞங்களை விரிவா சொல்கிற கல்ப கிரந்தங்களுக்கு முக்கியத்துவம் வந்த பின் அதெல்லாம் மட்டுமே படிச்சு ப்ராம்ஹணத்தை படிக்கிற பழக்கம் விட்டுப்போச்சு. நாளாக ஆக அது வேதமே இல்லைன்னு தோண ஆரம்பிச்சது. உபநிஷத்துக்கள் வேதாந்தம் (வேத அந்தம்-கடைசி) ஆனதால பிராம்ஹணத்துக்கும் அப்புறம் வரதால இது வேதம் இல்லைன்னு தோணி போச்சு. (இப்ப தலை கீழா இருக்கு. வேதம்ன்னா உபநிஷத் தவிர மத்தது இருக்கிறது நிறைய பேருக்கு தெரியலை போல இருக்கு)

இதுக்காகதான் இங்க இப்படி க்ருஷ்ணன் சொல்கிறதுக்கு முக்கியத்துவம் வருது. வேதத்தில் கர்ம காண்டத்திலே சொல்கிறதை பாத்து மயங்கி அங்கேயே நிக்காதே. அத விட உசந்த விஷயம் வேதாந்த்தத்திலே இருக்கிறதை பாத்து அதிலே ஆசை வை.

மக்கள் போக விஷயங்கள் ஐச்வரியங்கள் எல்லாம் கிடைக்க கர்மங்களை செய்கிறாங்க. யாக யக்ஞங்கள் பலமானவை. ஸ்வர்கம் கிடைக்க செய்கிற ஜோதிஷ்டோமம் போன்றவை; புத்திர காமேஷ்டி செய்தால் குழந்தை பிறக்கும்; சேணயாகம் செய்தால் விரோதி ஒழிந்து போவான்; வாயவ்ய யாகம் செய்தால் செல்வம் பெருகும். இதெல்லாம் சரிதான், ஆனா இதில எல்லாம் ஆசை வைக்காதே.

ஸ்வர்கம் கிடைச்சாலும் அனுபவிச்சுட்டு திருப்பி பிறந்துதான் ஆகணும். ஒரு விரோதி ஒழிஞ்சா இன்னொருத்தன் வருவான். செல்வம் வந்தாலும் அத அனுபவிக்க கொடுத்து வெச்சு இருக்கணும். அதே நேரம் வர மாதிரியே அது போகவும் போயிடும். அதனால இதெல்லாம் நிலையானதில்லே! நிலையான இன்பம் மோக்ஷம்தான்.

ஓட்டப்பந்தயம் நடக்கிறது. பலர் ஓடறாங்க. குறி என்ன? ஓடிப்போய் கடைசி எல்லை கோட்டை தாண்டணும். வழியில் நிறைய பேர் உற்சாகப்படுத்த கை தட்டுவர்; தண்ணீர் கொடுப்பர்; பழ ரசம் கொடுப்பர். இவர்களை பார்த்து கொண்டே "ஆஹா! இவ்வளோ பேர் நம்ம பாராடறாங்களேன்னு குஷில நின்னா ஓட்டம் பூர்த்தி ஆகாது. கடேசில ஜெயிக்காட்டா நம்மள கண்டுக்க கூட மாட்டாங்க. சிலர் கேலி கூட செய்யலாம். யார் இவர்கள் கைதட்டறதையும் கேலி செய்யறதையும் பொருட்படுத்தாமல் இறுதி கோட்டை அடைய ஓடறாங்களோ அவங்களே நினைச்சதை சாதிப்பாங்க.

Post a Comment