Pages

Wednesday, November 26, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 24





ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா।
ஜஹி ஷத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம்॥ 3.43 ॥

புத்தியிலும் மேலாம் பொருளையறிந் திவ்வண்ணம்
சித்தமதை ஆன்மாவாற் றீதறவே - வைத்தடக்கிக்
காமமெனும் வெய்ய கடத்தற் கரும்பகையை
நாமநெடு வேலாய் நலி.

புத்தியிலும் மேலாம் பொருளை அறிந்து  இவ்வண்ணம் சித்தம் அதை ஆன்மாவால் தீது அறவே - வைத்தடக்கிக் காமமெனும் வெய்ய கடத்தற்கு அரும் பகையை நாம நெடு வேலாய் நலி.

(நீண்ட புஜங்களுடையவனே! இவ்விதம் புத்தியைக் காட்டிலும் ஆத்மா மிகவும் மேலானவன்; நுண்ணியவன்; பலம் உள்ளவன் என்று அறிந்து புத்தியினால் மனதை வசப்படுத்தி, காமம் என்ற வெற்றி கொள்ள முடியாத சத்ருவைக் கொன்றுவிடு.)

{இந்த பதிவு கொஞ்சம் அரைச்ச மாவை அரைக்கிறாப்போல இருக்கலாம். முன் பதிவு விஷயமே கொஞ்சம் வேற மாதிரி சொல்லி இருக்கு. கருத்து பலமா பதியணும்ன்னுதான்.}

காமம் என்கிறது ஒரு எதிரி. சீவன் ராஜா போல. சரீரம் என்கிறது தேசம் போல. மனசு, புத்தி இந்திரியங்கள் என அவன் கீழ் ஒத்தருக்கு ஒத்தர் கீழ் வேலைக்காரர்கள். இந்திரியங்கள் பிரதேசம் போல. மனசு மேலே உள்ள சேனாபதி. புத்தி அதுக்கு மேலே உள்ள மந்திரி. ராஜாவா சீவன்.   ஒரு தேசத்தை கைபத்தனும்மா மெள்ள உள்ளே வர இன்னொரு தேசம் போல,  காமம் கண் காது போன்ற இந்திரியங்களை சுவாதீனப்படுத்திக்கொண்டு ஒவ்வொவொன்னா ஆக்கிரமிக்கும். இந்திரியங்கள் வழியா மத்ததை ஆக்கிரமிக்கும். முதல்ல மந்திரியையோ சேனாதிபதியையோ கைல போட்டுக்கிற போது எல்லாரும் சேந்து அப்புறம் ராஜவை கவுக்கிறா மாதிரி, மந்திரி சேனாதிபதி போன்ற மனசையும் புத்தியையும் சுவாதீனப்படுத்தினா ராஜாவை கவுத்துடலாம். ராஜா எப்படி மந்திரி சேனாதிபதியை தன் பக்கம் வெச்சு இருக்கிற வரை தன் பிரதேசத்தை மத்தவங்க ஆக்கிரமிக்கவிடாம தடுக்க முடியுமோ அப்படி சீவன் மனசையும் புத்தியையும் தன் வசம் வைத்து இருந்தா, காமம் இந்திரியங்களை பிடிக்காம தடுத்துடலாம்.  ஆனா சாதாரணமா சீவன் அப்படி மனசையும் புத்தியையும் வெச்சுக்கலியே? அவங்க துரோகியா இல்ல இருக்காங்க! அப்ப ஒண்ணு தன் பலத்தை நினைத்து நம் தயவு இல்லாம இவை வேலை செய்ய முடியாதுன்னு புரிஞ்சு அவற்றை அடக்கணும். தன்னை அல்பமா நினைக்கக்கூடாது. முயற்சியை அதிகப்படுத்தி அவங்களை வசப்படுத்தணும் அல்லது தன்னைவிட கூடுதல் பலத்தை வேண்டணும். அது பகவான்தான்.

உறுதியா நிக்கிற புத்தி என்ன சொல்லுகிறதோ அப்படிதான் மனசும் கேக்கும். புத்தியைவிட வலுவா இருக்கிறது ஆத்மாதான். இதை புரிஞ்சு கொண்டு புத்தியால மனசை ஜெயிக்கணும். அப்படி செஞ்சா காமம் காணாமல் போயிடும்.

அனாதி காலமா செய்து வருகிறவை எல்லாம் வாசனைகள். இவை சின்ன விதை மாதிரி. அவை ரஜோ குணம் என்கிற தண்ணி ஊத்தறதால காமம் என்கிறதா முளைக்கும். காமம் இந்திரியங்கள், மனம், புத்தி மூணையும் வசப்படுத்துறதால ஆத்ம விஷயத்தை மறைக்கும். அதில ஈடுபடாமல் மனசுக்கும் புத்திக்கும் தப்பான வழியை காட்டும்.

இதை ஜெயிக்க காமத்தோட வேலையாளுங்களுக்கு வேற வேலை கொடுக்கணும். அதாவது இந்திரியங்கள், மனசு, புத்தி இவைகளுக்கு வேற வேலை தரணும். இதுதான் கர்ம வழி.

 உணவை கட்டுப்படுத்தி ரஜோ குணத்தை குறைக்கணும். விருப்பு வெறுப்பு குறையும். அப்ப காமத்துக்கு தண்ணி ஊத்த ஆள் இல்லாம போயிடும். அப்ப வாசனைகள் முளை விடறதை தடுக்கலாம்.

பகவானையும் வேண்டிக்கணும். அப்ப அவர் நம்மோட இருக்கிற காமத்தை தொலைப்பார். காமம் இல்லைனா பாவம் பண்ண மாட்டோம். பாவம் இல்லைனா வாசனை போயிடும். இப்படி 3-4 வழில ஜெயிச்சுடலாம்.

Tuesday, November 25, 2008

பரிட்சை!



பயப்படதீங்க ! பரிட்சை எனக்குத்தான்! :-)

நாளைய பதிவோட கர்ம வழி ஒரு வழியா நிறைவுக்கு வரும். ஆரம்பிச்சப்ப இவ்வளவு விரிவா எழுத நினைக்கவே இல்லை. அது பாட்டுக்கு இழுத்து கொண்டு போய்விட்டது. ம்ம்ம்ம்.. சரி, இவ்வளோ நாள் எழுதினோமே புரிகிறா மாதிரி எழுதினோமா என்ன ன்னு ஒரு சின்ன சந்தேகம். அதனால ஒரு பரிட்சை.
இந்த கர்ம வழி பதிவுகளை படிச்சதிலேயும் முன்னமே தெரிந்ததிலேயும் சுருக்கமா (ஒரு 500 வார்த்தை?) அதைப்பத்தி உங்க வார்த்தைகளிலேயே எழுதுங்க.  what is your take on karma yoga?) அதை படிச்சா நான் ஒழுங்கா வேலை செஞ்சேன்னான்னு தெரிஞ்சுடும்.
பின்னூட்டமாவும் இடலாம். தனி அஞ்சலாவும் அனுப்பலாம். இல்லை உங்க ப்ளாக்லேயும் எழுதலாம். எப்படி வேண்ணா பண்ணலாம். நேரமில்லைன்னு கட் அடிக்கப்படாது அம்பி, சொல்லிட்டேன்!
அனுப்ப கடைசி நாள் வருகிற ஞாயிறு இரவு (இந்திய நேரப்படி).
மின்னஞ்சல் அனுப்பறவங்க  எழுதறதை வெளியிடலாமா கூடாதான்னும் அவங்க குறிப்பு எழுதணும். வேண்டாம்ன்னு எழுதாட்டா அதில இருக்கறது வெளீயிட்டாலும் வெளியிடுவேன்.
திங்கள் கர்ம யோகம் பத்தி என்னோட ஸம்மிங்க் அப் இருக்கும். செவ்வாய் பரிட்சை ரிசல்ட்! (பிள்ளையாரே, உனக்கு ஒரு தேங்காய் உடைக்கிறேன், நான் பரிட்சைலே பாசாகணும்!)
:-))

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 23


தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப।
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஷநம்॥ 3.41 ॥

ஆகையினால் ஐம்பொறியும் ஆர்த்தடக்கி ஆரமரில்
வாகைபெரு பாரதர்க்கு மாணரசே - மோகமுற
ஞானவிஞ்ஞா னத்தை நலிந்துபவத் திற்கேது
ஆனவிதை விட்டொழிவாய் ஆங்கு.

ஆகையினால் ஐம்பொறியும் ஆர்த்து அடக்கி ஆரமரில் வாகை பெரு பாரதர்க்கு மாணரசே  மோகமுற ஞான விஞ்ஞானத்தை நலிந்து பவத்திற்று ஏது ஆன விதை விட்டொழிவாய் ஆங்கு.

(ஆகவே அர்ஜூன! நீ முதலில் புலன்களை வசப்படுத்தி ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் அழிக்கின்ற இந்தப் பெரும் பாவியான காமத்தை நிச்சயமாக வீறுடன் ஒழித்துவிடு.)
.
இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:।
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:॥ 3.42 ॥

இந்தியங்கள் மேலனவாம் என்றுறைப்ப இந்தியத்திற்
சிந்தைமிக மேலதனிற் சீருடைத்துப்-புந்திதான்
மன்னியவப் புந்தியினும் மாண்புடையான் அன்னானே
கன்னவிலும் தோளாய்நீ காண்

இந்தியங்கள் மேலனவாம் என்றுறைப்பர். இந்தியத்தில் சிந்தை மிக மேல். அதனிற் சீருடைத்துப்-புந்திதான் மன்னி, அவப் புந்தியினும் மாண்புடையான் அன்னானே கன்னவிலும் தோளாய் நீ காண்.

(புலன்கள் உடலைக் காட்டிலும் மேலானவை என்று கூறுகிறார்கள். அவை உயர்ந்தவை; பலமுள்ளவை; நுண்ணியவை. இந்தப் புலன்களைக் காட்டிலும் மனம் மேலானது. மனதைக் காட்டிலும் புத்தி மேலானது. மேலும் எது புத்தியைக் காட்டிலும் மிகவும் மேலானதோ அதுவே ஆத்மா.)

காமம் மட்டுமே திருடனா? வேற இருக்காங்களா? திருடங்க 4 பேர். இந்திரியங்கள், மனசு, புத்தி, காமம். முக்கியமானது காமம்.  மத்தவங்க கொஞ்சம் வலிவு குறைஞ்ச உதவியாளர்கள். இந்த்திரியங்களை விட மனசு வலிவானது. அதைவிட புத்தி வலுவானது. எல்லாத்தையும் விட காமம் வலியது.

 முன் காலத்திலே ஒரு ராஜா இன்னொரு ராஜாவோட சண்டை போடுவார். அப்ப நேரிடையா மத்த ராஜாவை தாக்கமுடியாது. அவரை சுத்தி பல பேர் இருப்பாங்க. அவர்களை முதல்ல ஓரங்கட்டிதான் ராஜாகிட்டே போக முடியும். அப்புறம் அவரோட தேர்பாகனை தீத்து, தேரை உடைச்சு அப்புறமா ராஜா மேலே அம்பு போடுவாங்க. அது போலதான் இதுவும். நேரிடையா காமத்தை ஒழிக்கறது கஷ்டம். அதனால முதல்ல இந்திரியங்களை வசப்படுத்தி, மனசை புத்தியாலே ஜெயித்து அப்புறம்தான் காமத்தை ஜெயிக்கலாம்.

அப்ப காமத்தை ஜெயிக்க முதல்ல அதோட உதவியாளர்களை ஒழிக்கிறது போல இந்திரியங்கள், மனசு, புத்தியை கட்டுப்படுத்தணும்.  காலம், இடம் முதலியனவும் தடையா இருக்கலாம். ஆனா அவை ரொம்ப சின்ன தடைகள்.

 ஏன் இந்திரியங்களை விரோதி என்கிறோம்?
 கை கால் வலுவா இருந்தாதான் நல்ல விஷயங்களை செய்ய முடியும். காது நல்லதையே கேட்கணும். கண் நல்லதை பாக்கணும். ஆனா இவை எல்லாம் எப்பவுமே கெட்டதை நோக்கி போகப்பாக்கும். கெட்டதுக்குதான் இயல்பா ஈர்ப்பு அதிகம்.

ஆனாலும் இதை எல்லாம் ஓரளவு கட்டுப்படுத்தலாம். கெட்டதை கேட்கிற காதை மூடிக்கலாம். கெட்டதை பேசற வாயை மூடிக்கலாம். இப்படி கர்மேந்த்ரியங்களை ஓரளவு  கொஞ்ச திடமா இருந்தாலே கட்டுக்கு கொண்டு வரலாம். ஆனா மனசை எதால மூட முடியும்? அதை ஒரு வழியா தூங்க வெச்சாலும் உள்ளுக்குள்ளே சில விஷயங்களை அனுபவிக்கணும் என்கிற உறுதி இருக்கும்.

 தூங்கறோம். அப்ப மனசு ஓய்வெடுக்க போயிடுத்து. எழுந்திருக்கிறோம். அப்ப சரி நல்ல விஷயங்கள்லே ஈடு படுவோம்ன்னு மனசுக்கு தோணுமா? பழைய படி பல பழக்கமான விஷயங்கள்லேதான் மனசு போகும். ஏன்னா இதைதான் வேணும்ன்னு நாம உறுதியா உள்ளே நினைக்கிறோம். உறுதியா இருக்கிற இதுதான் புத்தி. இந்த உறுதி எங்கேந்து வந்தது? ஜன்ம ஜன்மமா பின்னாடியே வருது. இதைதான் வாசனை என்கிறோம்.

ஒரு வேளை பல விஷயங்களை யோசிச்சு புத்தியை திடப்படுத்திக் கொண்டோம்னாலும் காமம் தடையா இப்ப இருக்கு. அதையும் கட்டுப்படுத்தணும்.

இப்படி எல்லாத்தையும் கட்டுப்படுத்தணும்ன்னு சொல்லியாச்சு சரி, ஆனா எப்படி செய்கிறது,?

இந்திரியங்கள், மனசு, புத்தி இவற்றை கர்ம யோகத்திலே ஈடுபடுத்தி வேலை கொடுக்கணும். இந்திரியங்களை கர்ம யோகத்திலே ஈடுபடுத்தி திசை திருப்பி விடலாம். வேலை இல்லாத ஆசாமிதானே ஏதாவது போட்டு உழப்பிண்டு பிரச்சினைகளை உண்டு பண்ணுவான்? வேலையிலே ஈடு படுகிற ஆசாமிக்கு மத்ததைப்பத்தி யோசிக்க நேரம் இல்லை. ஏதாவது பாக்கணுமா பகவானை பார். கேட்கணுமா, பகவான் நாமத்தை கேளு - இப்படி அதை எல்லாம் திசை திருப்பி கட்டுப்படுத்தலாம்.

ரஜோ குணத்தை சாப்பாட்டை கட்டுப்படுத்தி அதனால கொஞ்சம் மாத்தலாம். அப்ப மனசு சத்துவத்திலே நிக்கும். புத்தியும் நல்லதாகிடும். இப்படி எல்லாம் செய்ய காமத்துக்கு துணையா இருக்கிற கருவிகள் இல்லாம போயிடும். இருக்க இடமே இல்லாம காமமும் ஒழிஞ்சுபோகும்.


Monday, November 24, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 22




ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா।
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச॥ 3.39 ॥


கொள்ள நிரம் பாத கொடுந்தழலாய் ஞானியர்க்குத்
தள்ளரிய வெம்பகையாய்ச் சார்ந்திடுமிவ் - எள்ளரிய
ஆசையினால் ஞானம் அறப்பொதியப் பட்டிடுமே
தேசழிய நீயிதனைத் தேர்

கொள்ள நிரம்பாத கொடுந்தழலாய், ஞானியர்க்குத் தள்ள அரிய வெம்பகையாய்ச் சார்ந்திடும். இவ் - எள்ளரிய ஆசையினால் ஞானம் அறப்பொதியப் பட்டிடுமே. தேசு அழிய, நீ இதனைத் தேர்.

(மேலும் அர்ஜூன! த்ருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும் காமம் என்ற வடிவத்தில் உள்ளதும் ஞானிகளுக்கு என்றுமே பகைவனுமாகிய இந்தக் காமத்தினால் மனிதனுடைய ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.)


அதனால் அது போன போக்குக்கு விடக்கூடாது. அக்னி எவ்வளவு போட்டாலும் எரிகிற மாதிரி காமம் நிறைவே அடையாது. மேலும் மேலும் கிளம்பும். அனுபவிக்க அனுபவிக்க தீர்க்கவே முடியாது.  "சீ இவ்வளவோதானா!" ன்னு தோணாது. அரிதாதான் அப்படி தோணும். இது அடுத்த ஜன்மாவிலேயும் தொடரும். கோடி ஜன்மத்திலேயும் போகாது. வளந்து கொண்டேதான் இருக்கும்.
ஞான வழியிலே கரை தேறிவிட்டவரை இங்கே சொல்லலை. அவர் காமத்தை ஜெயிச்சவர். ஞான வழில இருக்கிற நபருக்கு இந்த காமம்தான் என்னிக்குமே பகைவனா இருக்கு. அது ஆத்மா பத்திய அறிவை மறைக்குது. ஆனா உலக அறிவை மறைக்கலை. ஏன்னா அப்பதான் அவன் உலக விஷயத்திலே போய் சலனப்படுவான்? அததான் காமம் உத்தேசிக்கிறது.

இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே।
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தேஹிநம்॥ 3.40 ॥


 இந்தியங்களோடு மனம் புத்தி என்னுமிவை
சந்ததமும் காமம் தனக்கிடமாம் - முந்துமது
மற்றவற்றால் வாலறிவை மாய மறைத்துயிரை
முற்ற மயக்கிடுமே முன்

 இந்தியங்களோடு மனம் புத்தி என்னும் இவை சந்ததமும் காமம் தனக்கு இடமாம் - முந்தும் அது மற்றவற்றால் வாலறிவை மாய மறைத்து உயிரை முற்ற மயக்கிடுமே முன்.

(புலன்கள், மனம், புத்தி இவையெல்லாம் இந்தக் காமத்தின் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காமம்தான் மனம், புத்தி, புலன்களைக் கொண்டு ஞானத்தை மறைத்து ஜீவாத்மாவை மோகத்திற்கு உட்படுத்துகிறது.)

நம்மோட கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இதை எல்லாம் காமம் வசப்படுத்திக்கும். அதற்கு மேல் அது மனசை பிடிச்சுக்கும். சலனம் உள்ளது மனசு. சலனம் இல்லாதது புத்தி. மனசு ஏன் இவ்வளவு அலை பாயுதுன்னு கேக்கிறோம். சலனம்தான் அதோட முக்கிய குணம். புத்தி நல்லதாக இருக்கலாம். அல்லது கெட்டதாகவும் இருக்கலாம். “ஏண்டா புத்திகெட்டு அலையிற?” ன்னு கேட்கிறது உண்டு இல்லையா? அதே போல "அவனுக்கு ரொம்ப நல்ல புத்தி" ன்னு சொல்கிறோம். "அவனுக்கு ரொம்ப நல்ல மனசு" ன்னு சொல்கிறோம். இரண்டும் ஒண்ணு இல்லே. நல்ல புத்திசாலியா இருக்கிற ஆசாமியும் மனசு கொஞ்ச நேரம் கெட்டு போய் தப்பு செய்கிறது உண்டு. அடிக்கடி இப்படி ஆச்சுன்னா புத்தியே கெட்டு போயிடும். காமத்துக்கு நல்ல புத்தியை கெட்ட புத்தியாக்கிட சக்தி இருக்கு.
குறைந்த பட்சம் உடம்பைதான் நான் ன்னு நினைக்க வைக்குது. பல அனர்த்தங்களுக்கு அது போதாதா!

Friday, November 21, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 21




தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்ஷோ மலேந ச।
யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேநேதமாவ்ருதம்॥ 3.38


தூமத்தாற் றீயும் துகளாற் றருப்பணமும்
சேமக் கருப்பையா லேசிசுவும்- மாமை
அறப்பொதியப் பட்டதுபோல் ஆசையால் ஞானம்
உறப்பொதியப் பட்டிடுமென் றோர்

தூமத்தால் தீயும் துகளால் தருப்பணமும் (=கண்ணாடியும்) சேமக்கருப்பையாலே சிசுவும்- மாமை அறப்பொதியப் பட்டதுபோல் ஆசையால் ஞானம் உறப் பொதியப் பட்டிடும் என்று ஓர். (மாமை= அழகு)

(எவ்விதம் புகையால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும் மறைக்கப்படுகின்றனவோ மேலும் எவ்விதம் கருப்பையினால் - தசைமூட்டத்தினால் கரு மறைக்கப்படுகிறதோ, அவ்விதமே அந்தக் காமத்தினால் இந்த ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.)

வேற ஜன்மம் எடுத்தாலும் உடலோடேயே எப்பவும் குணங்களும் வந்து கொண்டு இருக்கும். அதில இருக்கிற ரஜோ குணம்தான் இந்த காமத்தை தூண்டுகிறது. இந்த ரஜோ குணத்துக்கு வலிமை மத்த குணங்களைவிட அதிகம். இதனாலதான் காமும் அதிலேந்து வர குரோதமும் ரொம்பவே வலிவா இருக்கு.

அக்னியை புகை மூடினது போல – கொஞ்சம்தான் மறைப்பு, ஊதினா போயிடும்.
கண்ணாடியை அழுக்கு மூடினது போல. கொஞ்சம் அதிக மறைப்பு துடைச்சா போயிடும்.
கர்ப்பபை மூடி இருக்கிற சிசு. சிரமப்பட்டுதான் விலக்கணும். ஆபரேஷன் செஞ்சு குழந்தையை எடுக்கிறாப்போல.

நெருப்பு புகையால மூடப்பட்டு இருக்கு. இது ரெண்டும் ஒண்ணா கூடவேதான் வரும். புகை இருக்கிற இடத்திலே நெருப்பு இருக்கும். நெருப்பு இருக்கும் இடத்திலே புகை இருக்கும். அது போல ஆத்மாவோடயே காமமும் கூடவே வரும். அப்பதான் அது ஆத்ம உணர்வை மறைக்க முடியும். அதுதான் இயற்கை நியதி. அப்பதான் உலகம் என்று ஒன்றுக்கு வாய்ப்பு இருக்கும்.

ஞான வழியில இதை ஆவரண சக்தி என்கிறாங்க. அதை அப்புறம் பாக்கலாம்.

கண்ணடி அழுக்கால மூடப்படும். அதை துடைச்சுட்டா தெளிவா தெரியும். ஆனா தொடர்ந்து துடைச்சுகொண்டே இருக்காட்டா அது திருப்பியும் அழுக்காயிடும். அது போல திருப்பி திருப்பி ரஜோகுணத்தை அழிச்சு காமத்தை தொலைக்க, காமம் திருப்பி திருப்பி வந்து கொண்டேதான் இருக்கும்.

கர்ப்பம் கர்ப்பப்பையை உடைச்சு கொண்டு வெளியே வர வேண்டி இருக்கு. அது தானே அப்படி பண்ண முடியாது. தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டு கர்ப்பப்பை சுருங்கி விரிய ஆரம்பிச்சுதான் அது வெளியே வரணும். அது போல காமத்தை விட்டு வெளியே வந்து ஆத்மாவை தெரிஞ்சுக்க வெளிலேந்து பகவானோட அனுகிரஹம் என்கிற ஒரு சக்தி வேணும்.


Thursday, November 20, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 20



அர்ஜுந உவாச।
அத கேந ப்ரயுக்தோ அயம் பாபம் சரதி பூருஷ:।
அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:॥ 3.36 ॥
தீவினைதான் ஓர் புருடன் செய்ய விருப்பிலனாய்
மேவினுமென் அவ்வினையை வெவ்வலியால் - ஏவப்
படுத்தகையன் போலியற்றல் பாரளந்து கொண்ட
நெடுந்தகையாய் ஈது நிகழ்த்து


 தீவினைதான் ஓர் புருடன் செய்ய விருப்பிலனாய் மேவினும் என், அவ்வினையை வெவ்வலியால் - ஏவப் படுத்தகையன் போல் இயற்றல் பார் அளந்து கொண்ட நெடுந்தகையாய் ஈது நிகழ்த்து.

(அர்ஜூனன் கூறினார்: 'க்ருஷ்ண! பின் இந்த மனிதன் தான் விரும்பாவிட்டாலும் பலவந்தமாகத் தூண்டப்பட்டவன்போல எதனால் ஏவப்பட்டுப் பாவத்தைச் செய்கிறான்?)

என்னை முக்கிய கர்த்தான்னு நினைன்னுதானே சொன்னே? எல்லாரும் நீயே தூண்டி செயல் செய்வதானா பாவ காரியங்கள் நடக்காதே? ஆனாலும் ஏன் மனுஷன் பாவம் செய்யறான்? அப்படி யாரும் பாவம் வேணும்னு ஆசையோட பாவத்தை செய்கிற மாதிரியும் தெரியலையே? அப்ப ஏதோ ஒண்ணு வலுக்கட்டாயமா அவனை இப்படி செய்ய வைக்குதே? அது என்ன?

 இப்படி கேட்கிறான் அர்ஜுனன்.

அக்ரூரர் கேட்க்கிறாராம் "ஏம்பா திருதராஷ்ட்ரா, உனக்கு 105 பிள்ளைகள் ன்னு ஏன் நினைக்கக்கூடாது?” பதில் வந்தது "உன்னை அனுப்பினவன்தான் இப்படிப்பட்ட புத்தியும் கொடுத்தான்.” :-)

 ஏன் கொலை செய்கிறான்? கோபத்தால. ஏன் திருடினான்? காமத்தாலே? காரணம் உடனே தெரியறதே?

ஸ்ரீபகவாநுவாச।
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:।
மஹாஷநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்॥ 3.37 ॥

ஏதுவினைச் செப்பின் இராசத்தால் உற்றதொரு
தீதறுவெங் காமம் சினமுமது - யாதினையும்
உண்மடுப்ப தைய ஒழியாத பாவமுமாம்
எண்மதியீ தைப்பகையென் றீங்கு


ஏதுவினைச் செப்பின் இராசத்தால் உற்றதொரு தீது அறு வெங்காமம் சினமும் அது - யாதினையும் உண் மடுப்பதைய ஒழியாத பாவமுமாம் எண்மதி ஈதைப் பகை என்று ஈங்கு.



(ஸ்ரீ பகவான் கூறினார்: ரஜோ குணத்திலிருந்து உண்டாகிய இந்த காமம்தான் கோபமாகும். இது பெருந்தீனிக்காரன். போகங்களில் 'போதும்' என்ற எண்ணமில்லாதவன். மேலும் பெரிய பாவி. இதையே இந்த விஷயத்தில் பகைவனாக அறிந்து கொள்.)

மனுஷனுக்கு இருக்கிற காமமும் அதிலேந்து வருகிற கோபமும்தான் இதுக்கு காரணம்.

இப்படி சிலர் சொல்லலாம். ஆசையை முழுக்க ஒழிக்க முடியாது. கொஞ்சம் அதுக்கும் தீனி போடணும்தான்.

ஆசையை முழுக்க உடனே ஒழிக்க முடியாதுதான். ஆனால் அதுக்கு தீனி போட்டு அடக்கிடலாம் ன்னு நினைக்கிறது தப்பு. ஒத்தர் 5000 ரூபாய் சம்பாதிக்கிறார். இன்னும் ஒரு 1000 கூட சம்பாதிச்சா நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறார். அப்படியே ஏதோ ஒரு வழில கொஞ்சம் கூடுதலா வருமானம் வந்து அந்த ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதுன்னு வெச்சுக்கலாம். அப்ப அவருக்கு திருப்தி வரணும் இல்லையா? அப்படி சாதாரணமா நடக்கிறது இல்லை. இன்னும் ஒரு 2000 கிடைச்சால் பரவாயில்லையேன்னு தோணும். இதுக்கு ஒரு எல்லையே கிடையாது. நெருப்பிலே தீனி போடப்போட அது வளந்துகொண்டே போகிற மாதிரி காமம் வளந்து கொண்டேதான் போகும்.

இந்த காமத்திலேந்து பிடித்தது விலகிடுமோ இல்லை பிடிக்காதது நடந்துவிடுமோ என்கிற பயமே கோபமாக வெளிப்படும். அதாவது காமமேதான் இன்னொரு வேஷம் போட்டுக்கொண்டு கோபமா வருது.

Wednesday, November 19, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 19



ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்।
ஸ்வதர்மே நிதநம் ஷ்ரேய: பரதர்மோ பயாவஹ:॥ 3.35 ॥

குறைந்திடிலுந் தன்கருமங் குற்றமா மேலா
நிறைந்தியலு மற்றையதி னேரே - மறைந்திறந்து
தன்கருமத் தைசெயினுந் தானன்று வேறான
வன்கருமத் தச்சம் வரும்.

குறைந்திடிலும் தன் கருமம் குற்றமா மேலா நிறைந்தியலும் அற்றையது நேரே  மறைந்து இறந்து தன் கருமத்தை செயினும். தான் அன்று வேறானவன் கருமத்து அச்சம் வரும்.

(நன்கு கடைப்பிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் குணக்குறைவிருப்பினும் தன்னுடைய தர்மம் மிகவும் உயர்ந்தது. ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் இறப்பதும் மேன்மையே தரும். பிறருடைய தர்மம் பயத்தை விளைவிக்கும்.)

ஞானவழியிலே இருக்கிற கஷ்டங்களை கண்ணன் சொன்னான். இப்ப கர்ம யோகத்திலேயே இருக்கிற கஷ்டங்களை சொல்கிறான்.

 சாதாரணமா பார்க்கிறப்ப கெட்டதுன்னு தோணுவது கூட சுய தர்மத்தாலே சரியானதா ஆயிடும். இல்லைனா எப்படி சண்டை போடுவதும் கசாப்பு கடை வைக்கிறதும் சரியாகும்? இடத்துக்கும் காலத்துக்கும் தகுந்தாப்போல தர்மம் மாறும். அயோத்தியா காண்டத்திலே பாத்தோம்னா க்ஷத்திரிய தர்மத்திலே அது ராமன் கடமையானதாலே அதுல கருத்தா இருந்தார் என்பது புரியும். இத்தனைக்கும் அவர் கருணாமூர்த்தி!

யார் யார் எதை செய்யணும்ன்னு வேதத்திலேயும் சாஸ்திரங்களிலேயும் சொல்லி இருக்கோ அப்படி எல்லாம் கொஞ்சம் கூட குறையாம செய்யணும். என்ன என்ன செய்யணும்ன்னு பட்டியல் பாத்தாலே தலையை சுத்தும். ஆயிரத்து எட்டு இருக்கே! நாமோ ஒரு அவசர உலகத்திலே இருக்கோம். பத்து மணிக்கு உள்ளூர் அரசு அலுவலகத்துக்கு போன காலம் போச்சு. இப்ப பலருக்கு வேலை பாக்கிற இடத்துக்கு போகவே ரெண்டு மணி நேரம் ஆறது. இதிலே எங்கே அத்தனை கர்மாக்களையும் செய்கிறது? அப்படியே செய்தாலும் எங்கே குறைவில்லாமல் செய்கிறது? ஏதோ தப்புங்க நடக்க வாய்ப்பு எப்பவுமே இருக்கே?

கண்ணன் என்ன சொல்கிறான்? நீ செய்கிறது உனக்கு கொடுத்த வேலையா? அத செய்ய ஒழுங்கா முயற்சி செஞ்சயா? அப்படி செஞ்சும் முழுக்க முடியலையா? பரவாயில்லை. நல்லா முயற்சி பண்ணே. உனக்கு நல்ல மார்க் போட்டுடறேன்.

நீ செய்தது உனக்கு கொடுத்த வேலை இல்லையா? ரொம்ப நல்லாதான் பண்ணாயா? இருந்தாலும் உனக்கு கொடுத்த வேலை இது இல்லியே? ஏன் செஞ்சாய்? உனக்கு குறைவான மார்க்தான்.

அதனால நமக்கு விதிக்கப்பட்டதை செய்யாம மத்த வேலைகளை செய்கிறது சரியில்லைதான்.

பல வருஷங்கள் முன்னே என் தலைமுடியை சீர்திருத்திக்கிற வேலையை நானே பண்ணிக்கொண்டேன். அதுக்கு சில காரணங்கள் இருந்தன. முக்கியமா நேரம் இல்லாதது. இப்படி இருக்கும் போது ஒரு நாள் வேலை களத்திலேந்து வேலை முடித்து போகிற நேரத்திலே "சீக்கிரம் போகணும். தலை முடி வெட்டணும்" ன்னு சொன்னேன். கிட்ட இருந்த ஒரு உதவியாளர் "அப்படியா, எந்த சலூன் போறிங்க" ன்னார். "இல்லைப்பா, நானே செஞ்சுப்பேன்" ன்னேன். அப்ப இதையே தொழிலா வெச்சு இருக்கிறவங்க என்ன ஆறது? ன்னு கேட்டார். "என்ன செய்யறது? எனக்கு குறிப்பிட்ட நாள்லேதான் செஞ்சுக்கணும். அன்னைக்கு கிடைக்கிற நேரத்திலே சலூன்ல ஆளில்லாம இருக்கணும். இது சாத்தியமா இல்லையே" ன்னேன். "அப்படி பிரச்சினைனா சொல்லுங்க நானே வந்து வெட்டிவிடறேன். அதுக்காக இப்படி செய்யக்கூடாது" ன்னார்.  சொல்கிறது சரிதானேன்னு  நினைச்சுண்டேன்.

இதைதான் யார் யாருக்கு எந்த கர்மாவிலே அதிகாரம்ன்னு பெரியவங்க வகுத்து வெச்சாங்க. வேலைகள் மாறிட்டாலும் அடிப்படை விஷயம் ஒண்ணுதான். அவரவர் வேலையைதான் செய்யணும்.வக்கீலுக்கு படிச்சவர்தான் அந்த தொழிலை பண்ணலாம். டாக்டருக்கு படிச்சு வந்தவர்தான் வைத்தியம் பாக்கணும்.  இப்படி பல சட்ட திட்டங்கள் இப்பவும் இருக்கே! அதுவும் நாமே ஏதாவது மருந்து சாப்பிட்டுட்டு, பிறகு டாக்டர்கிட்டே போனா திட்ட வேற திட்டறாங்க!

Tuesday, November 18, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 18


இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ।
தயோர்ந வஷமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ॥ 3.34 ॥

இந்தியங் களின்விடயத் தென்றும் இயல்விருப்பும்
புந்திவிழை யாவெறுப்பும் புக்குளவால்-சிந்தித்
தவைக்குவசம் ஆகாமல் ஆர்ந்திடுக அன்னாரும்
தவிர்க்கரிய சத்துருவென்றாய்ந்து.

இந்தியங்களின் விடயத்து என்றும் இயல் விருப்பும் புந்தி விழையா வெறுப்பும் புக்கு உளவால் சிந்தித்து அவைக்கு வசம் ஆகாமல் ஆர்ந்திடுக அன்னாரும் தவிர்க்கரிய சத்துரு என்று ஆய்ந்து.

(ஒவ்வொரு புலனுக்குரிய நுகர்ச்சிப் பொருளிலும் விருப்பு-வெறுப்புகள் மறைந்து இருக்கின்றன. மனிதன் அவ்விரண்டின் பிடியிலும் அகப்படக் கூடாது. ஏனெனில் அவ்விரண்டும்தான் இவனுடய மேன்மைப் பாதையில் இடையூறு விளைவிக்கும் பெரும் எதிரிகள்.)

ராகத்வேஷங்கள் (விருப்பு வெறுப்புகள்) உள்ளேயே இருக்கிற எதிரிகள்.

ரொம்ப காலமா கூடவே இருக்கிறதை எல்லாம் சட்டுன்னு விட முடியாது. வேதங்களிலேயும் சாஸ்திரங்கள்லேயும் சொல்லப்பட்ட படி உடனடியா திருந்த முடியாது. அனாதி காலமா வாசனைகள் பின்னாலேயே போய் கொண்டு இருக்கிறதால அது கஷ்டம். கொஞ்சம் கொஞ்சமாதானே திருத்திக்க முடியும். இந்த புலன்கள்தான் விருப்பு வெறுப்புக்கு காரணமா ரொம்ப நாளா ஆட்டி வைச்சு கொண்டு இருக்கு. இதுக்கு அடிமைப்பட்டோம்னா பற்று இருக்கிற செயல்களை துவக்கும். அதோட பலன், அதை அனுபவிக்கிறது, மேலே பற்று என்று ஆரம்பிச்சுடும். பற்று வச்சது கிடைச்சதுன்னா காமம் மேலிடும். கிடைக்கலேனா கோபம் - குரோதம் வரும். இது ஞான வழில இருக்கிற பிரச்சினைகள்.


Monday, November 17, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 17


ஸத்ருஷம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி।
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி॥ 3.33 ॥

அறிவுடையோ னேனும் அவனியற்கைக் கொத்த
நெறியே நடந்திடுவன் நீடும்-திறலுடையாய்
பல்லுயிரும் அவ்வவற்றின் பண்பினையே பற்றியுறும்
வெல்லும்வகை யிற்றடுத்தல் வீண்.

அறிவுடையோனேனும் அவன் இயற்கைக்கு ஒத்த நெறியே நடந்திடுவன் நீடும்-திறலுடையாய் பல்லுயிரும் அவ்வவற்றின் பண்பினையே பற்றியுறும் வெல்லும் வகை இற்றடுத்தல் வீண்.


(எல்லா உயிரினங்களும் இயல்பை அடைகின்றன - அதாவது தம் இயல்புக்கேற்றவாறு தம்வசம் இன்றிச் செயல் புரிகின்றன. ஞானியும் தமது இயல்புக்கு ஏற்றுவாறு செயல் புரிகிறார் என்றால் இதில் ஒருவரை பலவந்தமான பிடிவாதம் என்ன செய்யும்?)

அடுத்த சில பாடல்கள்லே ஞான வழில இருக்கிற சில பிரச்சினைகளை சொல்கிறான் கண்ணன்.

பூர்வ வாசனையால் வரும் சுபாவம் விவேகிகளைக்கூட சமயத்துல கவுத்துடும். வாசனை அவ்வளோ பலம் உள்ளது. முயற்சியை விட வாசனை பலமானா முயற்சியை தோக்கடிக்கும். மாறாகவும் இருக்கலாம். இதை ஜாக்கிரதை படுத்ததான் இதை சொல்லறது. உற்சாகத்தை குறைக்க இல்லை. ஈசனை நாடிதான் இதை ஜெயிக்கணும். வாசனா பலத்தால அஜாமிளன் கெட்டு போனாலும் பகவானை நாடியதால கடை தேர்ந்தான்.

ஒவ்வொரு உயிரினத்துக்குமே ஒரு அடிப்படை உணர்வு உண்டு. இன்ஸ்டிங்ட் என்கிறார்களே, அது. அதை ஒட்டிதான் எல்லா பிராணிகளுமே செயல்படுகின்றன. மனுஷன் ஒத்தன்தான் இதுக்கு மாறா செயல்படுகிறவன்னு நினைச்சாலும் அப்படி உறுதியா கிடையாது. ஞானியே வெகு காலமா கூட வர இயல்பு படி நடந்துக்கிறான் அப்படின்னா மத்தவங்க எந்த மாத்திரம்? அடக்குமுறையால லாபம் கிடையாது.

ஒரு கூடையிலே ஒரு மணி நேரம் பூக்களை வெச்சு இருந்தாலே அதன் வாசனை கொஞ்ச நேரம் இருக்கே. கெட்ட வாசனைனா இன்னும் அதிக நேரம் இருக்கும். இப்படி இருக்கிறப்ப ஜன்ம ஜன்மமா வருகிற இந்த இயல்பு எங்கே போகும்?

ஒவ்வொத்தருக்கு ஒரு விஷயம் சிறப்பா இருக்கும். இதுதான் அவங்களோட இயல்பு. ஆனா நாம் யார் இந்த சிறப்புத்தன்மை என்னன்னு பாத்து அதோட போய் பலனடைகிறோம்? குறிப்பா இப்ப எல்லா குழந்தைகளையும் ஐடி எஞ்சினீர் ஆக்கணும், டாக்டர் ஆக்கணும்ன்னு முயற்சி செய்யறோம். அவங்களுக்கு என்ன பிடிக்கும், அவங்க திறமை எதுல இருக்குன்னு யார் யோசனை செய்யறோம்?

(அதனால அர்ஜுனா, க்ஷத்திரியனான நீ உன் இயல்புக்கு மாறா ஞானயோகத்திலே போக முயற்சி செய்யாதே என்கிறான் கண்ணன்.)


Friday, November 14, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 16


யே மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா:।
ஷ்ரத்தாவந்தோ அநஸூயந்தோ முச்யந்தே தே அபி கர்மபி:॥ 3.31 ॥


யான்புகலிக் கொள்கைதனை என்னார் சிரத்தையொடு
பான்மையினால் உள்ளழுக்கம் பற்றாது-மேன்மையுற
எப்பொழுதும் கொண்டொழுகும் எண்ணுடையார் அன்னாரும்
தப்புவர்காண் கன்மத்திற் றாம்

யான் புகல் இக் கொள்கைதனை என்னார் சிரத்தையொடு பான்மையினால் உள்ளழுக்கம் பற்றாது-மேன்மையுற எப்பொழுதும் கொண்டொழுகும் எண்ணுடையார் அன்னாரும் தப்புவர் காண் கன்மத்திற்றாம்.

(எந்த மனிதர்கள் குற்றங்குறை காணாதவர்களாக, ச்ரத்தை உடையவர்களாக, என்னுடைய இக்கொள்கையை எப்பொழுதும் பின்பற்றுகிறார்களோ அவர்களும் அனைத்துக் கர்மங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.)

இங்கே என் மதம்ன்னு சொல்லுகிறது கர்ம யோகத்தைதான்.  முதல்ல கடைப்பிடிக்கிறார்களோன்னு சொன்னான். ஆனா மக்கள் "அட கண்ணன் சொல்கிறது நல்லாதான் இருக்கு. ஆனா யார் செய்கிறது? முடியற காரியமா?" ன்னு நினைக்கலாம். அதுக்காக யார் சிரத்தை வைக்கிறாங்களோன்னு அடுத்து ஒரு சலுகை கொடுக்கிறான். அப்பவும் போதாதோன்னு சந்தேகம். அதுக்காக யாருக்கு இதில் குற்றம் குறை பாக்கலையோன்னு இன்னும் ஒரு சலுகை.

இப்படி சலுகையா கொடுத்தா என்ன அர்த்தம்ன்னு நினைக்கலாம். முதல்ல குற்றம் குறை பாக்கலைனா அப்புறம் பகவான் அனுக்கிரகத்தால சிரத்தை - ஆர்வம் வந்துடும். ஆர்வம் வந்தா அப்புறம் கடைபிடிக்க ஆரம்பிச்சுடுவோம்! ஆக அதெல்லாம் வேற படிகள், அவ்ளோதான்.

கர்மம் செய்யறதாலதான் ஈஸ்வரன். இல்லாட்டா அதுக்கு தேவையே இல்லாம பிரம்மமாவே  இருக்கும். லோகத்தை சிருட்டி செய்யறதுல ஈஸ்வரனுக்கு என்ன பலன்? ஒண்ணுமில்லை.  பலன் பாக்காத செய்யறதால்தான் அவன் சிறந்த கர்ம யோகி. நல்லவங்களா இருப்போம் என்கிற நம்பிகைலதான் அவன் நம்மை இந்த உலகத்துக்கு அனுப்பறான். நாம அப்படியா இருக்கோம்? இல்லாம போனா அவனுக்கு என்ன நஷ்டம்? இருந்தா அவனுக்கு என்ன லாபம்? அதனால அவனே அப்படி பலனை இப்படிதான் இருக்கணும்ன்னு பாக்காம  இருக்கிறப்ப நாமும் இருக்க வேணாமா?


யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்।
ஸர்வஜ்ஞாநவிமூடாம்ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ:॥ 3.32 ॥


கூறியவிக் கொள்கைதனைக் கூடும் பொறாமையினால்
பேறுபெறப் பின்பற்றிப் பேணாதார்- வீறுதரும்
நல்லறிவி னெல்லாம் மயங்கினராய் நாசமுறற்
கொல்லைவிரை வாருணர்வின் றூங்கு.

கூறிய இக் கொள்கைதனைக் கூடும் பொறாமையினால் பேறு பெறப் பின்பற்றிப் பேணாதார்- வீறு தரும் நல்லறிவின் எல்லாம் மயங்கினராய் நாசம் உற கொல்லை  விரைவார் உணர்வின்று ஊங்கு.

(ஆனால் எந்த மனிதர்கள் என்னிடம் குறை காண்பவர்களாக என்னுடய இந்தக் கருத்தை ஏற்று நடப்பதில்லையோ, அந்த மூடர்களை முழுமையான ஞானத்தில் அறிவு மயக்கம் அடைந்தவர்கள் என்றும், சீரழிந்து போனவர்கள் என்றும் அறிந்து கொள்.)

பகவான் வார்த்தையிலேயே நம்பிக்கை இல்லைன்னா அப்புறம் என்ன இருக்கு? அப்படி இருக்கிறவங்க எந்த அறிவு இருந்தாலும் இல்லாதவனாக ஆகிறாங்களாம். வாழ்க்கையே போயிடுமாம். மனசு இருந்தும் இல்லாம போனவங்களாம். இப்படி கண்ணன் சொல்கிறான்.

இங்கே கர்மா தியரியை நாம கொஞ்சம் புரிஞ்சுக்கணும்.

நாம செய்கிற புண்ணிய காரியங்கள் பாபங்கள் நம்மை தொடர்ந்தே வரும். உப்பை தின்னா எப்படி தாகம் எடுத்து தண்ணியை குடிக்க வேண்டி இருக்கோ அத போல செய்கிற செயல்கள் எல்லாத்துக்கும் ஒரு விளைவு இருக்கும். அதை நாம அனுபவிச்சே ஆகணும். நம்ம நாட்டு பிலாசபி படி இந்த விளைவுகள் ஒரு பிறவில அனுபவிச்சு முடிக்கலைனா அடுத்த பிறவிக்கும்கூட வரும்.

இந்த புண்ணிய பாவம் பட்டியல்லே செய்ததும் அதுக்கு அனுபவிக்கிரதும்  பாலன்ஸ் பூஜ்யத்துக்கு வர வரை இதெல்லாம் தொடர்ந்துண்டேதான் இருக்கும். எப்ப இது பூஜ்யம் ஆகிறதோ அப்பதான் பிறவி என்கிறது ஒழியும். சரி நான் பத்து புண்ணியம் பண்ணேன். நான் செய்யற பத்து பாவத்துக்கு ஈடா வெச்சுக்க ன்னு சொன்னா, அப்படி நடக்காது. செய்த பாவத்துக்கும் அனுபவிச்சுதான் தீரணும்; புண்ணியத்துக்கும் அனுபவிச்சுதான் தீர்க்கணும்.

சரி, சரி, அதான் புண்ணியத்துக்கு சொர்கம் போய் அனுபவிப்போம், பாவத்துக்கு நரகத்துக்கு போய் கஷ்டப்படுவோம்ன்னு சொல்லறாங்களே? அப்ப திருப்பியும் ஏன் கஷ்டப்படணும்?

 நல்ல கேள்வி. அப்படி சொர்க்க/  நகரத்திலே அனுபவிச்சாலும் முழுக்க காலி ஆகிறதில்லை. கொஞ்சம் மீதி இருந்து பிறவி எடுத்தே அதையும் தீர்க்க வேணும்.

சரிய்யா. இது அநியாயமா இருக்கே? என்ன செஞ்சாலும் அது புண்ணியமோ பாவமோவாதானே இருந்து தீரும். அப்ப எப்பதான் கரை சேருகிறது?

அதுக்குத்தான் கண்ணன் இங்கே வழியை சொல்றான். பலனை கருதாதே; நீ செய்யலை; என்னால தூண்டப்பட்டு குணங்களாலேதான் செய்கிறாய். இப்படியே நினைச்சு வேலை செய்து வந்தா அந்த கர்மம் உன்னை ஒட்டாது; என்னைதான் ஒட்டும்.
 
இப்படி புரிஞ்சு கொண்டு வேலை செய்யலைனா மேலே மேலே கர்ம மூட்டை சேர்ந்து சீரழிஞ்சுதான் போவாய்.



Thursday, November 13, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 15



மயி ஸர்வாணி கர்மாணி ஸம்ந்யஸ்யாத்யாத்மசேதஸா।

நிராஷீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர:॥ 3.30 ॥

கன்மமெல்லாம் என்பாற் கருதிச் சமர்ப்பித்து
நின்மலமாம் ஆன்மாவில் நெஞ்சிருத்தி- என்னதெனும்
பற்றகற்றி ஆசை பறித்துப் படரொழித்திங்
குற்றதொரு போர் புரிவாய் ஊங்கு.

கன்மமெல்லாம் என்பாற் கருதிச் சமர்ப்பித்து நின்மலமாம் ஆன்மாவில் நெஞ்சிருத்தி என்னதெனும் பற்றகற்றி ஆசை பறித்துப் படரொழித்திங்கு உற்றதொரு போர் புரிவாய் ஊங்கு.


(அந்தர்யாமியான பரமாத்மாவாகிய என்னிடம் ஒன்றிய மனத்துடன் எல்லா கர்மங்களையும் என்னிடம் அர்ப்பணம் செய்துவிட்டு ஆசையற்றவனாக மமகாரமற்றவனாக மேலும் தாபமற்றவனாக ஆகி யுத்தம் செய்.)

ஆத்மாவை பற்றிய உண்மையான அறிவு கொண்டவன் யாரோ அவன் பகவான்தான் நம்மை தூண்டி செய்கிறான், தான் தானாக செய்கிறவன் இல்லைன்னு புரிஞ்சு கொண்டு வேலை செய்வான். இது "நான் செய்யறேன்" என்ற நினைப்பை விடுவது.

பலன் என்ன கிடைக்கும் என்கிறதுல ஆசையை விட்டுவிடுவான். "கண்ட கண்ட தாழ்ந்த விஷயத்துக்காக நான் ஏதும் செய்யலை; உயர்ந்த மோக்ஷம் வேணும் என்கிறதுக்கு அவன் தூண்டறான், செய்யறேன்" என்று பண்ணுவான். இது தாழ்ந்த பலன்ல ஆசை விடுவது.

 தான் ஆசை பட்ட பலனை வாங்கித்தருது என்கிறதால் "இந்த கர்மா என்னோடது" என்கிற ஒரு நினைப்பு இருக்கு இல்லையா? இதுவும் (மமகாரம்) போயிடும். இப்படி நான் செய்யறேன் என்கிற எண்ணமும், ஆசையும், அகங்காரமும் இல்லாத காரியங்களை செய்து கொண்டு போகணும்.

இப்படி நான் செய்கிறேன் என்கிற கர்த்ருத்வம், தாழ்ந்த பலனில் ஆசை, என் கர்மா என்கிற மமகாரம் மூன்றும் விடணும்.

இப்படி இருந்தால் மேலே ஒரு தாபமும் இருக்காது.

கிழக்கே போகிறதை நிறுத்த மேற்கே போகணும். அதனால "நான் கர்த்தா" என்கிறதை தொலைக்க "நீதான் கர்த்தா"ன்னு நினைச்சாதான் நடக்கும். "நான் செய்யறேன்தான்.  இருந்தாலும் நீதானே செய்விக்கிறாய்!” என்று நினைக்கணும். அம்மா குழந்தைக்கு அனா ஆவன்னா சொல்லிக்கொடுக்கிறா. சிலேட்டுல அ ன்னு எழுதி, இது மேலே எழுது பாக்கலாம் என்பாள். அது உடனே அப்படி எழுதுமா? அதன் கையை பிடிச்சு சிலேட்டுல எழுதுவா. எழுதின அப்புறம் "அட நல்லா எழுதி இருக்கியே" ன்னு மார்க்கும் போடுகிறாப்போல;

பகவான் நம்மை கர்மா செய்யத்தூண்டறான். செய்யவும் வைக்கிறான். அப்புறம் அதுக்கு ஒரு பலனையும் தரான். இதை புரிஞ்சுக்கணும்.

அம்மா கையை பிடிச்சு எழுதும் போது எந்த குழந்தை கையை வேற திசைல இழுத்து கொண்டு போகாம இருக்கோ அது நல்லா எழுதும்.

இப்ப ப்ளாக் எழுதறோம். "ஏதோ பகவான் தூண்டறான் எழுதறோம்" என்கிறதாக தோன்றினால் "எவ்வளோ பேர் படிக்கிறாங்க, இவங்க இப்படி நினைப்பாங்களோ, அவங்க அப்படி நினைப்பங்களோ, இன்னிக்கு எழுதியே ஆகணுமே - நேரம் இல்லையே!” இப்படி எல்லாம் அவஸ்தை படாம எழுதுவோம். நான் செய்யறேன் என்கிற நினைப்பு இருந்தா இதெல்லாமும் வரும் இன்னமும் வரும்! "பின்னூட்டம் 100 தாண்டணுமே; 200 தாண்டணுமே; தமிழ்மணம் சூடான பதிவுகள்ல பேர் வரணுமே; என்னை இப்படி திட்டி எழுதிட்டாங்களே!” ன்னும் இன்னும் ஏதேதோவும் தோணும். :-))


Wednesday, November 12, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 14



தத்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ:।
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே॥ 3.28 ॥


சொற்ற குணத்தின் தொழிலின் பிரிவதனைப்
பற்றியநல் உண்மையினைப் பாங்கறிவான் - மற்றவைதாம்
இந்தியங்கள் தம்விடயத் தேயியங்கல் என்றுணர்ந்து
மைந்துதரும் பற்றடையான் மற்று.

சொற்ற குணத்தின் தொழிலின் பிரிவு அதனைப் பற்றிய நல் உண்மையினைப் பாங்கு (நன்கு) அறிவான் - மற்றவை தாம் இந்தியங்கள் தம் விடயத்தே இயங்கல் என்று உணர்ந்து மைந்து (மயக்கம்) தரும் பற்றடையான் மற்று.

(ஆனால் நீண்ட புஜங்கள் உடையவனே! குணங்களின் பிரிவு, கர்மங்களின் பிரிவு - இவற்றின் தத்வம் அறிந்த ஞானி -யோகி குணங்கள் அனைத்தும் குணங்களில் செயல்படுகின்றன என்று அறிந்து அவற்றில் பற்றுக் கொள்ளாதிருக்கிறான்.)

நல்ல விஷயங்களை படிக்கிறது, பளிச்சுன்னு புரிஞ்சுகிறது, மேலே மேலே சாஸ்திரங்கள் சொன்ன நல்ல காரியங்கள்ள ஈடுபடறது, மற்றவங்களுக்கு உதவறது, அமைதியா இருக்கிறது. இப்படிப்பட்டது எல்லாம் சத்வ குணத்தால வருது. இதில வர தெளிவு, ஊக்கம், முயற்சி, அமைதி எல்லாம்தான் அந்த குணத்தோட கர்ம வெளிப்பாடு.

ரஜோ குணம் கோபம், ஆசை, மேலே மேலே தேவைகளை பெருக்கிவிடறது. இந்த கோப தாப உணர்ச்சிகள் கொப்பளிப்பு உள்ள காரியங்கள் ரஜோ குண கர்ம வெளிப்பாடு.

தமோ குணம் ஊக்கமில்லாம இருக்கிறது, தூக்கம், சோம்பல், மயக்கம், குழப்பம் இதெல்லாம் தருது. இந்த குணத்தோட வெளிப்பாடு எப்படி இருக்கும்ன்னு ஊகிக்கமுடியுது இல்ல?

இதில மூன்று வித மனிதர்கள், மூணு குணங்கள்ன்னு கிடையாது. ஒத்தருக்கே இந்த மூணும் இருக்கும். ஏன் நாம எல்லாருமே இந்த மூணு குணங்களும் இருக்கிறவங்கதான். என்ன ஒவ்வொத்தருக்கு ஒவ்வொண்ணு அதிகமா இருக்கும்; குறைச்சலா இருக்கும். இன்னும் சொல்லப்போனா ஒத்தருக்கே எல்லா நேரமும் ஒரே மாதிரி குணம் இருக்கிறது இல்லை. அப்பப்ப கோபப்படுகிறோம்; அமைதியா இருக்கிறோம்; தூங்கி வழிகிறோம். "என்னடா ஆச்சு இவனுக்கு இன்னிக்கு ஒரேயடியா தூங்கி வழியறானே/ கோபப்படறானே!" இப்படி எல்லாம் நாமே சொல்கிறது உண்டு இல்லியா?

இந்த குணங்கள்தான் ஒரு குறிப்பிட்ட நேரத்திலே நாம எப்படி செயல்படுவோம் ன்னு நிர்ணயம் செய்யும். நமது வேலை அதன்படி அமையும். "அந்த நேரத்திலே நான் கோபப்பட்டு இருக்கக்கூடாது. நிதானமா பதில் சொல்லி இருக்கணும்; பயந்து இருக்ககூடாது, வீரத்தோட எதிர்த்து இருக்கணும்; ஏன் அப்படி செஞ்சேன்னு புரியலே” இப்படி எல்லாம் நாமே யோசிக்கிறது உண்டு இல்லையா?

ஆக குணங்களாலே தூண்டப்பட்டுதான் பல விஷயங்களை செய்யறோம். இதை புரிஞ்சு கொண்டே வேலைகளை செய்யணும். அப்படி செய்ய செய்ய கர்மத்திலே பற்று விட்டுப்போகும். பற்றில்லாத கர்மா நம்மை முன்னேற்றும்.

ப்ரக்ருதேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு।
தாநக்ருத்ஸ்நவிதோ மந்தாந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத்॥ 3.29 ॥


பகுதிக் குணத்தாலே பற்றிமயக் குற்றார்
புகலக் குணத்தொழிலில் புந்தி- மிகவுறுவர்
எல்லாம் உணர்ந்திடுவான் அவ்வுணர்ச்சி இல்லாரை
ஒல்லாது காண்கலக்கல் உற்று

பகுதிக் குணத்தாலே பற்றி மயக்குற்றார் புகலக் குணத்தொழிலில் புந்தி மிகவுறுவர் எல்லாம் உணர்ந்திடுவான் அவ்வுணர்ச்சி இல்லாரை ஒல்லாது காண் கலக்கல் உற்று.

(ப்ரக்ருதியில் உண்டான குணங்களால் மிக்க மயக்கம் அடைந்துள்ள மனிதர்கள் குணங்களிலும் கர்மங்களிலும் ஈடுபடுகிறார்கள். முற்றும் அறிந்திராத குறைமதியுடைய அந்த அஞ்ஞானிகளை முழுமையான அறிவு பெற்றுள்ள ஞானி தடுமாறச் செய்யலாகாது.)

குணங்களாலே தூண்டப்பட்டுதான் வேலை செய்கிறேன்ன்னு புரிஞ்சுக்காதவங்களைதான் இங்கே அஞ்ஞானி என்கிறான் கண்ணன். இவர்களுக்கு அந்த வேலைகளால இன்ப துன்பங்கள் உண்டாகும். யார் அதை புரிஞ்சு கொண்டாங்களோ அவர்களுக்கு இன்ப துன்பங்கள் உண்டாகாது. அவர்கள் ஞான வழில முன்னேறுவாங்க.

அறிவு இருக்கிற ஞானி ஒவ்வொத்தருக்கும் தகுந்தபடி உபதேசம் செய்யணும்.

"இதெல்லாம் நல்ல காரியம் செய்யணும்பா" ன்னோ, "வேலை செய்கிறதுதான் செய்யறே, பற்றில்லாம பண்ணுப்பா" ன்னோ, புரிஞ்சுக்ககூடியவங்களுக்கு இதையும் சொல்லி ஏன் அப்படின்னும் சொல்லாம். எல்லாருக்கும் ஒரே விஷயத்தை சொல்லி அவங்களை குழப்பக்கூடாது. இல்லைனா "ஞான மார்க்கம் எவ்வளோ உசத்தி தெரியுமா?"ன்னு சொல்லி குழப்பக்கூடாது.

Tuesday, November 11, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 13


ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஷ:।
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே॥ 3.27 ॥


எண்ணும் பகுதிக் குணங்களினால் எவ்வகையும்
பண்ணும் கருமத்தைப் பாவிப்பன் -நண்ணும்
அகங்காரத் தால்மனதில் ஆர்மயக்கங் கொண்டோன்
மகிழ்ந்திதுநான் செய்வன் என மற்று.

எண்ணும் பகுதிக் குணங்களினால் எவ்வகையும் பண்ணும் கருமத்தைப் பாவிப்பன் -நண்ணும் அகங்காரத்தால் மனதில் ஆர்மயக்கங் கொண்டோன் மகிழ்ந்து இது நான் செய்வன் என மற்று.

(எல்லாச் செயல்களும் எல்லா விதங்களிலும் ப்ரக்ருதியின் குணங்களால் செய்யப்படுகின்றன. ஆயினும் அஹங்காரத்தால் மழுங்கிய அறிவை உடைய அஞ்ஞானி நான் கர்த்தா என்று நினத்துக் கொள்கிறான்.)

நம்ம வாழ்க்கையிலே இயற்கையா பல விஷயங்கள் நடக்குது.. கண் தானா பாக்கும், காது தானா கேட்கும். அரிச்சா தானா சொறிஞ்சுக்கிறோம். இதுல எல்லாம் செய்யணும்ன்னு ஒரு சங்கல்பம் -நினைப்பு- தேவை இல்லை. நாமோ ஓடுகிற ஒரு ரயில் வண்டிலே சும்மா உட்கார்ந்தபடி இருக்கலாம். போல இந்திரியங்கள் தானா அவற்றோட வேலைகளை செய்யும். அதுகளுக்கு என்ன செய்யணும்ன்னு அநாதிகாலமா வர வாசனைகளாலே - உணர்வுகளாலே தெரியும்.

நாலு குழந்தைகள் இருக்கும் குடும்பத்திலே எல்லாமே ஹைபர் ஆக்டிவா போயிட்டா நாலும் நாலு வேலைகளை செய்யும். சண்டை போட்டுக்கும். அடிச்சுக்கும், கடுச்சுக்கும், குலாவிக்கும். இன்னொண்ணு அது பாட்டுக்கு அதோட காரியத்தை கவனிச்சு கொண்டு இருக்கும். இதுகளை கட்டுப்படுத்தப்பாத்தா நாளுக்கு 48 மணி நேரம் போதாது! இப்படி பல விதமா குழந்தைகள் நடந்து கொண்டாலும் அவற்றோட அம்மா வெறும் சாட்சி மாத்திரமா இதுகள் இப்படித்தான் இருக்கும்ன்னு பார்க்கிறாப்போலே இந்திரியங்கள் பாட்டுக்கு அதததோட வேலையை செய்யும் போது விலகி பாக்கணும்.

நாம் செய்கிற எல்லா செயல்களையும் நானே செய்கிறேன் ன்னு நினைக்கக்கூடாது. அப்ப யார் செய்கிறாங்க? செய்கிறது நாம்தான்; ஆனாலும் தூண்டுகிறது முக்குணங்கள்தான். சத்வம், ரஜஸ், தமஸ் என்கிற இவை நம்மோட பிறந்தவை. இவற்றை கொஞ்சம் கொஞ்சம் மாத்த முடியும் ஆனாலும் அனேகமா அவை அப்படியேதான் இருக்கும்.

செய்தி பத்திரிகையிலே ஒரு விஷயம் படிக்கிறோம். இன்னார் இந்த போட்டியிலே இப்படி சாதனை செய்தார் ன்னு படிக்கிறோம். அட அப்படியான்னுட்டு அடுத்த செய்திக்கு போயிடுவோம். இதுவே நாம் லீக் கிரிக்கெட்டிலே பிசாத்து 25 ரன் அடிச்சு பேப்பர்லே செய்தி வந்தா அதை கட்டிங் எடுத்து ஆல்பத்திலே ஒட்டி வைப்போம். ஏன்? முன்னே படிச்ச சாதனை ரொம்பவே பெரிசானாலும் அதை நாம் செய்யலே.

நாமும் "நானா இதை செய்யலை, இந்த முக்குணங்களால தூண்டப்பட்டு செய்கிறேன்" என்கிற நினைப்போட செய்யணும். அப்ப கர்மாவிலே பலனை எதிர்பாக்கிறதிலே கொஞ்சம் கொஞ்சமா பற்றுவிட்டு போகும். கர்மா முக்குணங்களாலே செய்யப்பட்டதுன்னு தோணறப்ப அதை ஆல்பத்திலே ஒட்டி வைக்க மாட்டோம்.

அப்ப இப்படி செய்யலாமா? யாரையான நாலு சாத்து சாத்திட்டு அட! நானா அடிச்சேன்? உள்ளே இருக்கிற பகவான்தான் முக்குணங்களாலே தூண்டினான். அடிச்சது மட்டும்தான் இந்த உடம்பு என்கலாமா?

செய்யலாம். ஆனா ஒரு நிபந்தனை இருக்கு! இதை கேட்டுட்டு "நீ சொல்கிறது சரிதான். செஞ்சது மட்டும்தானே இந்த உடம்பு. அதனால இந்த உடம்பை மட்டுமே திருப்பி அடிக்கிறேன்" னு அடிச்சா அதை எதிர்ப்பில்லாம வாங்கிக்க முடியும்னா அப்படி செய்யலாம்!

ஒரு சாது மேல்நாட்டிலே வேதாந்த பாடம் எடுத்தார். கேட்டுகிட்டு இருந்த ஒத்தர் இப்படி கேள்வி கேட்டார்.
" அப்ப நீங்க இந்த உடம்பில்லையே?”
" இல்லை. “
"அப்ப இந்த உடம்பை நான் அடி அடின்னு அடிச்சா நீங்க வேடிக்கை பாத்துக்கொண்டு சும்மா இருப்பீங்களா? “
"இருப்பேன். அது மட்டுமில்லே அதை பாத்துட்டு இங்கே இருக்கிற மத்த உடம்புங்க உன் உடம்பை அடி அடின்னு அடிச்சாலும் வேடிக்கை பாத்துகொண்டு சும்மா இருப்பேன்.”


Monday, November 10, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 12


இந்த பதிவை ஆரம்பிச்சபோது தமிழ்லேந்து ஏதாவது கோட் பண்ணனும்னு தோணி பகவத் கீதை வெண்பான்னு சமீபத்திலே பாத்து போட்டோ எடுத்ததை போட ஆரம்பிச்சேன். அப்புறம் பாத்த அது கடின தமிழ்லே இருந்தது மட்டும் இல்லாம வார்த்தைகளை முன்பின் மாத்தினாதான் அர்த்தம் புரியும்ன்னு இருக்கிறது தெரியவந்தது. முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மாதிரி எல்லத்தையும் தட்டச்சி பிரிச்சு - அப்பவும் திருப்தி ஏற்படாம ஒரு குழு அறிஞர்கிட்டே கொடுத்து திருத்தி வாங்கி...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா!

உதவி செய்தவர் ரொம்ப சுலபமா ஒரு வாக்கியம் சொன்னார். "அப்பா, பகவத் கீதை பத்தி எழுதறதானா என் இப்படி கடும் தமிழ் வெண்பாவை எழுதறாய்? எல்லாருக்கும் புரியறமாதிரி மொழில எழுதேன்?”

சரிதானே! அனேகமா எல்லாரும் (ஜீவாவை தவிர) அதை விட்டுட்டு அடுத்த பாரவை படிச்சு இருப்பீங்கன்னு தோணுது! அதனால ஸ்ரீ அழகிய மணவாள ஜீயருக்கு ஒரு நமஸ்காரம் பண்ணி அனுப்பிட்டு,
வாங்க முத்து ஐயர், கொஞ்சம் புரியற மாதிரி வெண்பா சொல்லுங்க.
அட எனக்கே புரியுதே!
ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத
குர்யாத்வித்வாம்ஸ்ததா அஸக்தஷ்சிகீர்ஷுர்லோகஸம்க்ரஹம்॥ 3.25 ॥

ஆசையினாற் பாமரர்கள் ஆற்றுதல்போல ஆர்பயனில்
ஆசைதனை கைவிட் டறிவுடையோர்- ஆசகலும்
கன்மங்க ளைப்புவியின் நன்மை கருதினராய்த்
தின்மையறச் செய்தல்கடன் தேர்.


ஆசையினாற் பாமரர்கள் ஆற்றுதல் போல ஆர்பயனில் ஆசைதனை கைவிட்டு அறிவுடையோர்- ஆசகலும் கன்மங்களைப் புவியின் நன்மை கருதினராய்த் தின்மையறச் செய்தல் கடன் தேர்.

(பரதகுலத் தோன்றலே! கர்மங்களில் பற்றுக் கொண்ட அஞ்ஞானிகள் எவ்விதம் கர்மங்களைச் செய்கிறார்களோ பற்றில்லாத தத்வஞானியும் உலகத்திற்கு வழிகாட்டுதலைச் செய்ய விரும்பி அவ்விதமே கர்மங்கள் செய்யவேண்டும்.)

கிராமங்கள்லே நெல் உலர்த்துவது வழக்கம். ஒரு கிராமத்திலே ஒத்தர் அந்த மாதிரி உலர்த்தி இருந்தார். அப்ப ஒரு அதிதி வந்தார். அவரை சந்தோஷமா வரவேத்து உபசாரம் பண்ணி கொஞ்ச நேரத்திலே உணவு தயாராயிடும் சாப்பிட்டு போகலாம். நான் போய் வாழை இலை வாங்கி வரேன்னு சொல்லிட்டு போகிறார். அப்ப நெல்லை ஒரு மாடு வந்து மேயறது. அதிதி அதை பாத்துட்டு விரட்டறார். இதுல அப்படி செய்யறது ஒரு பற்று இல்லாம அது நம்ம கடமை ன்னு நினைக்கறாதாலதான். கிருஹஸ்தர் விரட்டினா நம்ம நெல்லுன்னு ஒரு அபிமானம். காரியம் என்னவோ நடந்தது. ஆனா ரெண்டு பேர் மனப்பான்மையும் வித்தியாசம். ஒத்தருக்கு அது கடமை. ஒத்தருக்கு அது அபிமானம். இப்படியே ஞானியா இருந்தாலும் பற்று இல்லாம கடமை என்கிறதுக்காக செய்யணும்.

புத்திபேதம் ஜநயேதஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வாந்யுக்த: ஸமாசரந்॥ 3.26 ॥

ஆசையினாற் கன்மஞ்செய் அஞ்ஞானி யர்க்குளத்திற்
பேசுமொரு பேதம் பிறப்பித்தல்- மாசதனால்
நல்லறிஞன் செய்கருமம் நாள்தோறும் தான் செய்து
மல்லலுறச் செய்வித்தல் மாண்பு.


ஆசையினால் கன்மஞ் செய் அஞ்ஞானியர்க்கு உளத்தில் பேசும் ஒரு பேதம் பிறப்பித்தல் மாசதனால் நல் அறிஞன் செய் கருமம் நாள் தோறும் தான் செய்தும் அல்லலுறச் செய்வித்தல் மாண்பு.

(பரமாத்ம ஸ்வரூபத்தில் நிலைத்து நிற்கின்ற ஞானி சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைப் பற்றோடு செய்யும் அஞ்ஞானிகளின் புத்தியில் குழப்பத்தை அதாவது கர்மங்களையாற்றுவதில் ச்ரத்தையின்மையை உண்டாக்கக் கூடாது. மாறாகத் தானும் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செவ்வனே ஆற்றி அவர்களையும் செய்யச் செய்யவேண்டும்.)

தத்வ ஞானிக்கு ஒரு வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனாலும் அவன் காட்டிலே தனியா இல்லாம சமுதாயத்திலேயே இருந்தா தகுந்த கர்மாவை செய்யணும். தீபாவளி வரதா? தன் பங்கா மக்களை வாழ்த்தி சில நல்ல விஷயங்களை சொல்லி கடை பிடிக்க சொல்ல வேண்டும்.

ரமணர்கிட்டே ஒத்தர் வந்து "நான் தினசரி ஜபம் செய்யறேன்" என்பார். அவரும் "ஆஹா! ரொம்ப நல்லது. அப்படியே செய்" என்பார். இன்னொருத்தர் வந்து "நான் தினசரி சிவ பூஜை செய்யறேன்" என்பார். ரமணரும் "ஆகா, ரொம்ப நல்ல காரியம். அப்படியே செய்" என்பார். இப்படி மகா பெரியா ஞானியா இருந்தவர் கூட சாதாரண ஜனங்களை போலவே அவங்களோட பழகி அவரவர் அவங்களோட வழில முன்னேற தூண்டினார்.

எப்பேர்பட்ட ஞானியானாலும் நல்லது கெட்டது என்பதை எல்லாம் வேறுபடுத்தி பார்த்து ஜனங்களை நல்ல சமாசாரத்திலே தூண்டணும். அப்படி இல்லாம "நல்லதா? கெட்டதா? அதெல்லாம் மாயை!” ன்னு சொல்லக்கூடாது.

இது மற்றவர்களுக்காக. தான் தன் ஆத்ம முன்னேற்றத்துக்கு என்ன செய்யணுமோ அதை செய்து கொண்டேதான் இருக்கணும். அப்ப ரெண்டு வேலையாச்சேன்னா, ஆமாம், அதனாலதான் இப்படி செய்ய முடியாதுன்னா சமுதாயத்திலேந்து விலகியே தன் ஆத்ம முன்னேற்றத்தை கவனிக்கணும்.

முழுக்க ஞானம் வராம அந்த பாதையிலே பயணிக்கிறவங்களுக்கும் கர்மா முழுக்க விடாது. ஆகையால் அதை செஞ்சு கொண்டேதான் ஞானத்தை தேடணும்.

கர்மாவை செய்து முன்னேறிடலாம்ன்னு நினைக்கிற சாதாரண மக்களை "இல்லை, ஞானம் இல்லாமல் ஆத்ம தரிசனம் கிடைக்காதுன்னு ஏதாவது சொல்லி குழப்பக்கூடாது.” மாறாக ஞானிகள் கொஞ்சம் கூட குறையாத உற்சாகத்தோட வேலை செய்து காண்பிப்பாங்க. எப்படி?

ஞானியா ஆனதால பலன்ல ஆசை இருக்காது என்பதால குறையாத உற்சாகத்தோட செய்து காண்பிக்க முடியும்.

சிலர் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிறப்ப திடீர்ன்னு ஆன்மிகத்திலே நாட்டம் வந்து அதிலே சன்னியாச ஈர்ப்பு வந்து "குடும்பம் எப்படியோ போகட்டும். சம்பாதிச்சு போட்டுட்டா அதோட என் கடன் முடிஞ்சது. ஆள விடுங்க, நான் ஜபம், தவம்ன்னு செய்யணும்" என்று பொறுப்ப விட்டுடக்கூடாது.

குடும்பம் இரட்டை மாட்டு வண்டியானதாலே தானும் இழுக்கிற வேலையை செய்தே ஆகணும். வேலையை செய்து கொண்டேதான் ஞானத்தையும் தேடணும். சன்னியாசம் மனசிலேதான் முக்கியமா இருக்கு. குடும்ப பாரத்தை இழுத்துக்கொண்டே மனசில சன்னியாசத்தோட இருக்கிறதுல முரண்பாடு இல்லை.

Friday, November 7, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 11


ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிம்சந। நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி॥ 3.22 ॥

மூவுலகுந் தன்னுள்ளு முன்பெய்த தாய்ப்பின்பு மேவுமியல் பாலெய்த வேண்டுவதொன் - றாவதெனக் கில்லையா யேயிருக்க வெல்லாக்கருமத்து மொல்லையா னின்றியல்ல னோர்ந்து.

மூவுலகும் தன் உள்ளுமுன் பெய்ததாய், பின்பும் ஏவும் இயல்பால் எய்த வேண்டுவதொன்று ஆவது எனக்கில்லையாயே இருக்க, எல்லாக் கருமத்தும் ஒல்லை யான் இன்றி அல்லன் ஓர்ந்து.

(அர்ஜுன! எனக்கு மூவுலகங்களிலும் செய்ய வேண்டிய கடமை ஒன்றுமில்லை. அடைய வேண்டிய எதுவும் அடையப்படாமலுமில்லை. ஆயினுங்கூட நான் கர்மத்திலேயேதான் ஈடுபட்டுள்ளேன்.)

யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித:। மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஷ:॥ 3.23 ॥ உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்। ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா:॥ 3.24 ॥

யானியலாதிங் கொழியி லென்வழியைப் பின்செல்வர் மானிடர்மற் றிவ்வுலக மாயுமாற்-றானிலைசேர் நன்மரபு தான்கலக்கிநானே யிவர்தம்மைப் புன்மையினி லுய்தேனாய்ப் போம்.

யான் இயலாது இங்கு ஒழியில், என் வழியைப் பின்செல்வர் மானிடர். மற்று இவ்வுலக மாயுமால் தானிலை சேர் நன்மரபுதான் கலக்கி, நானே இவர் தம்மைப் புன்மையினில் உய்தேனாய்ப் போம்.

(நான் கர்மங்களைச் செய்யாமல்விட்டால் இம்மனிதர்கள் அனவரும் சீர்குலைந்து போவார்கள். மேலும் நான் சீர்குலைவு செய்கிறவனாகவும் இம்மாந்தர் அனைவரையும் அழிப்பவனாகவும் ஆவேன். ஏனெனில் பார்த்த! ஒருகால் நான் கவனத்துடன் கர்மங்களில் ஈடுபடாமல் இருந்தால் பெரிய தீங்கு விளயும். ஏனெனில் மனிதர்கள் எல்லாவிதங்களிலும் என்னுடைய வழியையே பின்பற்றுகிறார்கள்.)

சாதாரணமா முன் காலத்து உதாரணங்களைவிட தற்கால உதாரணம் நல்லா எடுபடும். அதுக்காக கண்ணன் அந்த நிகழ் காலத்து உதாரணத்தையே சொல்கிறான்.
ஜனகாதின்னு ஏன் யாரையோ சொல்லணும். என்னையே பாரேன். நான் எந்த கர்மாவ பண்ணி எனக்கு என்ன ஆகப்போறது?

நாரதரே சாட்சி. வீடு வீடா போய் பார்த்தார். 10108 மனைவிகள். எப்படி ஒருத்தன் சரியா அத்தனை குடும்பங்கள் நடத்த முடியும்? மெதுவா போய் எட்டிப்பார்த்தார். ஒரு வீட்டிலே குளிச்சுகொண்டு இருக்கான். அடுத்த வீட்டிலே பாத்தா அங்க ஒரு கண்ணன் சந்தியாவந்தனம் செய்கிறான். அடுத்த வீட்டிலே எட்டிப்பாத்தா பூஜை செய்கிறான். அடுத்த வீட்டுக்கு போனா வரவேத்து அதிதி உபசாரம் செய்கிறான். அடுத்த வீடு போனா அங்கேயும் ஒரு கண்ணன் வரவேற்கறான். இப்பதானே பாத்தேன்ன்னு சொல்லலை! இப்படி ஒவ்வொரு வீட்டிலேயும் சரியா க்ஹஸ்த தர்மத்தை அனுசரிக்கிறானாம். இப்படி பாகவதம் சொல்கிறது.

சட்ட திட்டங்கள் எல்லாம் பகவானுக்கும் அப்ளை ஆகுமா? அதையெல்லாம் உருவாக்கினவனே அவன்தானே? அவன் எதை செய்கிறானோ அதுவே சரியா இருக்கும். நல்லதாவே இருக்கும். அவனுக்கு மேலே அப்பீலே இல்லையே? இருந்தாலும் அவன் இந்த சட்ட திட்டங்களை மீறுகிறது இல்லை. அவனே மதிக்கலைனா மத்தவங்க எப்படி மதிப்பாங்க? அதனாலதான் - ஹிரண்யனை கொல்லனுமா? சரி, அவன் பிரம்மாகிட்ட வாங்கி இருக்கிற வரங்களுக்கு உட்பட்டே அவனை கொல்கிறான்.

அவன் கீதையை சொல்லனும், அர்ஜுனனை தூண்டி போர் செய்யணும்; அவதாரம் எடுத்த வேலையான பூமி பாரத்தை குறைக்கிறதை செய்ய அவன் இவ்வளோ கஷ்டப்பட வேண்டாமே! நினைச்ச மாத்திரத்திலேயே செஞ்சுடலாமே? ஆனா அவன் அப்படி செய்யலே. மத்தவங்க மாதிரியே செயல் பட்டுதான் வேலையை முடிக்கிறான். தன்னை பின்பற்றுகிறவங்க இருக்காங்கன்னா எப்படி நடந்துக்கணும் என்கிறதுக்கு கண்ணனே நல்ல உதாரணம்.

இதுக்கு லோக சங்கிரஹம் என்கிறாங்க.


Thursday, November 6, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 10




கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய:।
லோகஸம்க்ரஹமேவாபி ஸம்பஷ்யந்கர்துமர்ஹஸி॥ 3.20 ॥

முன்னஞ் சனகாதி யோகியரு மூண்டியன்ற
வன்ன கருமத்தா லானபயந் மன்னினர்கா
ணிந்த வுலக மிசைவகையும் பார்த்தியலா
யந்த வுயர்கரும மாய்ந்து.

முன்னம் சனகாதி யோகியரும் ஊண்டு இயன்ற வன்ன கருமத்தால் ஆன பயன் மன்னினர் காண். இந்த உலகம் இசை வகையும் பார்த்து இயலாய் அந்த உயர் கருமம் மாய்ந்து.

(ஜனகர் முதலிய ஞானிகளும் பற்றின்றிக் கர்மங்களைச் செய்ததன் மூலமே சிறந்த பேற்றை அடைந்தனர். அவ்விதமே உலகத்திற்கு வழிகாட்டுவது என்பதை நன்கு மனதில் கொண்டு நீயும் கர்மங்களைச் செய்வதுதான் உனக்கு உரிய செயலாகும்.)

பெரியவங்க இப்படி கர்மாவை செஞ்சே உயர்வடைஞ்சாங்கன்னு உதாரணம் காட்டறான் கண்ணன். இவர்களுக்கு கஷ்டமான ஞான வழிக்கு அதிகாரம் இருந்தும் கூட சுலபமான கர்ம வழில ஈடுபட்டு உயர்வடைஞ்சாங்க. ஜனகர் சும்மா ராமனுக்கு மாமனார் என்று இல்லை. மிதிலா அரசர்கள் எல்லாருக்குமே அப்படி பேர்தான். சீதையோட வளப்பு தந்தை ஒரு ஜனகர். அவரைதான் இங்கே சொல்கிறான் கண்ணன். அஸ்வபதி என்றும் ஒருவர்.

யத்யதாசரதி ஷ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:।
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே॥ 3.21 ॥

மேலொருவன் செய்த மிகுகருமந் தானெதுவென்
றேலுமதின் மற்றிங் கியல்சனமுஞ்-சாலவவன்
யாதைத்தன் னங்க மெனவியலும் மிவ்வுலக
மாதைப்பின் செல்லு மமர்ந்து.

மேலொருவன் செய்த மிகு கருமம்தான் எதுவென்றேலும் அதில் மற்று இங்கு இயல் சனமும் சால. அவன் யாதைத் தன் அங்கமென இயலும் இவ்வுலக மாதைப்பின் செல்லும் அமர்ந்து.

(உயர்ந்த மனிதன் எதை எதைச் செய்கிறானோ ஏனையோரும் அதை அதையே செய்வர். அவன் எதை  எடுத்து நடந்துக்காட்டுகிறானோ மனித ஸமுதாயம் அனைத்தும் அதையே சான்றாக பின்பற்றி நடக்கிறனர்.)

நான் யாரோ ஊர் பேர் தெரியாத ஆசாமின்னு வெச்சுக்கலாம். அப்ப நான் என்ன செய்யறேன் செய்யலை என்கிறது ரொம்ப ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஏன்னா பாதிக்கப்படுகிறது நான் மட்டும்தானே? இன்னும் மேலே போனா என் குடும்பம் பாதிக்கப்படலாம். அதுக்கு மேலே பாதிப்பு வரது எப்போதாவதுதான் நடக்கும்.
அதுவே நான் ஏதோ சமுதாயத்தில ஒரு ஸ்தானத்துல இருக்கேன், நல்ல பேர் வாங்கினவன், பலர் மதிப்பு வைத்து இருக்காங்க அப்படின்னு - சும்மா ஒரு பேச்சுக்குத்தான்- வெச்சுப்போம். அப்ப நான் செய்கிறதை பாத்து அவர்களும் அப்படியே செய்வாங்கன்னா, எதை செய்கிறேன் என்பதில நான் ஜாக்கிரதையா இருக்கணும். அவங்களால என்ன முடியுமோ அதைதான் நான் வெளிப்படையா செய்யணும். இல்லாட்டா அவங்களால முடியாத விஷயத்தை ஆரம்பிச்சு கஷ்டப்படுவார்கள். அதே போல எனக்கு ஆசார அனுஷ்டானம் இல்லைனா "அட, இவரே இப்படி ஆசார அனுஷ்டானம் இல்லாம இருக்காரே, நமக்கு என்ன?” அப்படின்னு விட்டுடுவாங்க.

இந்த சமயத்திலே ஒரு விஷயத்தை பாக்கலாம். ஸ்ரீதர ஐயாவாளை நிறைய பேருக்கு தெரியும்.

சிராத்த தினத்திலே சண்டாளன் ஒத்தன் பசின்னு வர, இவர் பாட்டுக்கு சிராத்தத்துக்கு சமைச்சதை கொடுத்துட்டார். சிராத்தத்துக்கு வந்தவங்க இது மகா தப்புன்னு போயிட்டாங்க. இவரோ திருப்பி எல்லாத்தையும் தயார் பண்ணி சிராத்தத்துக்கு கூப்பிட்டா யாரும் வரத்தயாரா இல்லை. அதனால கூர்ச்சத்தை போட்டு மும்மூர்த்திகளையும் அழைச்சு வரிச்சு சிராத்தத்தை முடிச்சார். அதுக்கு அடுத்த சிராத்தத்துக்கு கூப்பிட்டப்பாதான் பிராமணர்கள் "வர முடியாது நீ பிராயச்சித்தம் செய்யணும்" ன்னு சொல்ல கங்கையை கிணத்திலே வர வெச்சது நடந்தது.

http://us.geocities.com/sri_ayyaval/history/sridhara6.htm

இதை மேற்கோள் காட்டி சிலர் விதண்டாவாதம் செய்யலாம். அவரே சிராத்த சமையலை சண்டாளனுக்கு கொடுத்தாரே நாம மத்தவங்களுக்கு கொடுத்தா என்ன? தாராளமா கொடேன்! அவரால மும்மூர்த்திகளை அழைச்சு சிராத்தம் செய்ய முடிஞ்சதே, கங்கையை கிணத்திலே வரவழைக்க முடிஞ்சதே - அப்படி உன்னால முடியுமானா நீயும் அவர மாதிரி செய்யலாம்.

இந்த மாதிரி வாதம் வரக்கூடாது என்கிறதாலதான் மத்தவங்க உன்னை பாத்து மாறுவாங்களா, அப்படின்னா என்ன செய்கிறாய் என்பதில ரொம்பவே கவனமா இரு என்கிறது.

அதனால உன்னை பாத்து பலர் கடைபிடிப்பாங்கன்னா அவ்வங்களுக்கு பொருத்தமா இருக்கிற கர்ம யோகத்தையே செய் என்கிறான் கண்ணன்.

இதிலே கவனிக்க வேண்டியது ஒரு சமாசாரம் இருக்கு. கண்ணன் எதை கடைபிடிக்கிறாங்களோன்னு சொன்னான்னே தவிர எதை சொல்கிறாங்களோன்னு சொல்லலை. உதாரணமா நடந்து காட்டுகிறது ஆயிரம் முறை சொல்கிறதைவிட நல்லது.



Wednesday, November 5, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 9



தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர।
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:॥ 3.19 ॥

ஆதலினாற் பற்றற் றமரியற்பாய் நின்கரும
நீதகவு தன்னுடனே நின்றியல்வாய்- மீததனைப்
பற்றற் றியன்றாற் பரமா முயிரினையே
பெற்றத்தை நின்றுய்யும் பின்.

ஆதலினால் பற்றற்று அமர்(ரும்) இயல்பாய் நின் கருமம் நீ தகவு தன்னுடனே நின்று இயல்வாய். மீது அதனை பற்றற்று இயன்றால் பரமாம். உயிரினையே பெற்றத்தை நின்று உய்யும் பின்.

(ஆகவே பற்றின்றி எப்பொழும் ஆற்ற வேண்டிய கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிரு. ஏனெனில் பற்றின்றிக் கர்மங்களைச் செய்கின்ற மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.)

யாருக்கு அப்படி ஆத்ம தரிசனம் இன்னும் கிடைக்கலையோ அவங்க கர்ம யோகத்தை செய்ய வேண்டியதுதான். அதாவது தனக்கு விதிச்ச கர்மாவை பற்று இல்லாம செய்ய வேண்டியது.

இந்த விருப்பு வெறுப்பு இல்லாம செய்கிறது என்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். அது என்ன ஒரு தொப்பியா சட்டையா கழட்டி வைக்கிறத்துக்கு? ஏதோ ஒரு விஷயம் வேணும்ன்னுதான் நாம் வேலையே செய்யறோம். எடுத்த எடுப்பிலேயே இப்படி விருப்பு வெறுப்பு இல்லாம செய்ய முடியாது. விருப்பு வெறுப்புதான் நம்மளோட தனித்தன்மை- இன்டிவிஜுவாலிடி. அதை இழக்க யாரும் தயார் இல்லை. இந்த கருத்த கேட்கிற மேல் நாட்டு மக்களுக்கு இந்த விஷயம்தான் அதிர்ச்சியா இருக்கும், ஏன் என்னோட தனித்தன்மையை இழக்கணும்?

அதுக்குத்தான் கண்ணன் முன்னேயே சுலபமான வழியச் சொன்னான். பலன்ல ஆசை வைக்காதே. அதில் உனக்கு அதிகாரம் இல்லை.

சரி எதை செய்யணும் என்கிறதுல உன் தனித்தன்மைய காட்டு. ஆனா பலன்ல பற்று வைக்காதே. இப்படிதான் நடக்கணும்ன்னு எதிர்பாக்காதே.  நினைச்ச மாதிரி நடந்தா துள்ளி குதிச்சுண்டும் இல்லைனா மூஞ்சிய தூக்கி வெச்சிகிறதும் - இப்படி பலன் நம்ம இமேஜ பாதிக்க விடக்கூடாது. நினைச்சப்படி நடக்கிறதால நாம பெரிய ஆளும் இல்ல, நடக்காததால சின்ன ஆளும் இல்லை. எது கிடைக்கிறதோ அத எதிர்க்காம ஏத்துக்க. இப்படி செய்து கொண்டே வந்தா நாளடைவில கொஞ்சம் கொஞ்சமா விருப்பு வெறுப்பு தானா அடங்கிடும். இப்படி விருப்பு வெறுப்பு அடங்கினாதான் நாம இந்த உலகத்த உள்ள படியே பாக்க ஆரம்பிப்போம். இல்லைனா ஒரு கலர் கண்ணாடி வழியாதான் பாப்போம். அப்படி பாக்கிற வரை நமக்கு துன்பம்தான்.


Tuesday, November 4, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 8.


யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஷ்ச மாநவ:
ஆத்மந்யேவ ச ஸம்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே॥
3.17

தன் விரும்பித் தன்னுகந்து தன்னமைந்த ஞானிக்குப்
பின்விரும்பிச் செய்கருமம் பெற்றில்லை- முன்விரும்பிச்
செய்தத்தா லொன்றில்லை செய்யாத்தா தாலில்லை
வையத்தா தும்பயனின் மற்று.

தன் விரும்பித் தன் உகந்து தன் அமைந்த ஞானிக்கு பின் விரும்பி செய் கருமம் பெற்றில்லை
. முன்விரும்பி செய்தத்தால் ஒன்றில்லை. செய்யாத்ததால் இல்லை. வையத்தால் ஏதும் பயன் இன் மற்று.

(ஆனால் எந்த மனிதன் ஆத்மாவிலேயே இன்புற்றிருப்பவனாகவும் மேலும் ஆத்மாவிலேயே த்ருப்தி கொண்டவனாகவும் ஆத்மாவிலேயே மகிழ்பவனாகவும் இருக்கிறானோ, அவனுக்குச் செய்ய வேண்டிய செயல் எதுவும் இல்லை.)

நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஷ்சந।
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஷ்சிதர்தவ்யபாஷ்ரய:3.18

(அந்த மாமனிதன் இவ்வுலகில் கர்மங்களைச் செய்வதாலும் எந்தவிதமான பயனும் இல்ல. கர்மங்களைச் செய்யாவிட்டாலும் ஒரு பயனுமில்லை. அவ்வாறே உயிரினங்கள் அனைத்திலும் எதிலுமே அவனுக்குத் தனக்காக ஆக வேண்டிய என்ற தொடர்பு சிறிது கூட இல்ல.)

கர்மாவை செய்யணும் என்பதிலே சிலருக்குதான் எக்சப்ஷன் சொல்லி இருக்கு. யாருக்கு ஆத்ம தரிசனம் கிடச்சாச்சோ அவன் ஒண்ணுமே செய்ய வேண்டியது இல்லை. ஏன்? இதால எல்லாம் என்ன கிடைக்கணுமோ அதுதான் ஏற்கெனவே கிடைச்சாச்சே? வழிலே போய்கிட்டு இருகிறவங்களைதான் இப்படி போ, அப்படி போன்னு சொல்லலாம். போக வேண்டிய இடத்துக்கு போய்விட்டவனுக்கு அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே?

ஆத்மாவையே கண்டு கேட்டு முகர்ந்து இருக்கிறவன் இவன். அவன் ஆத்மாவிலேயே ரமிக்கிறான்.

உதாரணமா சுக பிரம்ம ரிஷி இருந்தாரே. அவர் என்ன கர்மா செய்தார்? என்ன அனுஷ்டானம் செய்தார்? அவருக்கு அதெல்லாம் தேவை இல்லை.

அவர மாதிரி நானும் இருக்கேன்; ஒரு ஆசாரமும் அனுஷ்டானமும் வேண்டாம்ன்னு நாம் சொல்ல முடியாது. ஏன்?

கர்மா ஏதும் செய்யாத அதே சமயம் அவருக்கு சாப்பாடுன்னு ஒண்ணு கிடச்சாலும் சரி கிடைக்கலேனாலும் சரி, பிரச்சினை இல்லை. அப்படி ஒரு நிலைக்கு போய்விட்டவர். நாம் அப்படி இல்லையே? உலகத்திலே ஒண்ணு வேணும் என்கிற நிலை இருக்கிற வரை நமக்கான வேலையை செய்துதான் ஆகணும். இது நன்றி, தர்மம் என்கிறதுக்காக செய்யணும். பயனுக்காக இல்லை.



Monday, November 3, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 7


யஜ்ஞஷிஷ்டாஷிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:।
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்॥ 3.13 ॥

வேள்வியினின் மிக்கதனை யுண்பார் விடப்படுவ
ரூழ்வினைக ளின்றொடர்ச்சி யுண்ணின்றுங்-கேள்வியிலாத்
தன்னுடம்புக் காகச் சமைத்துண்பார் பாவத்தை
முன்னுடனே யுண்பார் முயன்று.

வேள்வியினின் மிக்கது அதனை உண்பார் ஊழ் வினைகளின் தொடர்ச்சி விடப்படுவர். உண்ணின்றும் கேள்வியிலாத் தன் உடம்புக்காக சமைத்து உண்பார் பாவத்தை முன் உடனே உண்பார் முயன்று.

(வேள்வியில் எஞ்சிய உணவை உண்கின்ற சான்றோர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். ஆனால் எந்தப் பாவிகள் தம் உடலைப் பேணுவதற்காகவே உணவைச் சமைக்கிறார்களோ, அவர்கள் பாவத்தையே உண்கிறார்கள்.)

இந்த ஸ்லோகத்திலே கண்ணன் கொஞ்சம் ஓவரா போற மாதிரியே கூட தோணும்.

கணபதி ஹோமம் செய்கிறாங்க. மீதி இருக்கிற கொழுக்கட்டையை நமக்கு கொடுப்பாங்க. இஷ்டி பண்ணுகிறாங்க. புரோடாசம் என்கிற யக்ஞ மீதியை நமக்கு கொடுக்கிறாங்க. அது சாப்பிட ரொம்பவே உசந்தது.

பூஜை பண்ணுகிறோம். அவருக்கு சாத்தின ஒரு முழ பூவை எடுத்து நம்மகிட்டே கொடுக்கிறாங்க. கண்ணில ஒத்திகிட்டு அதை தலைல சூடிக்கிறாங்க. நிவேதனம் பண்ணி கேசரியை நம்மகிட்டே கொடுக்கிறாங்க. நாமும் பக்தியோட வாங்கி எல்லாருக்கும் விநியோகம் செய்துவிட்டு நாமும் சாப்பிடறோம். இப்படி எது நமக்கு கிடைத்தாலும் அதை முதல்ல பகவானுக்கு கை காட்டிட்டு (இந்த ப்ரேஸ் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு!வல்லி அக்காவுக்கு நன்னி.) நாம் எடுத்துக்கிறோம்.

நம்ம வீட்டில இருக்கிற தென்னை மரம் எவ்வளவு தேங்காய் நமக்கு கொடுத்தது? அதுக்கு என்னிக்காவது நன்னி சொல்லி இருக்கோமா? அவரை பந்தலுக்கு நன்னி சொன்னோமா? இப்படி எத்தனை நன்னி கெட்டவங்களா இருக்கோம்! சரி அதுகெல்லாம் நன்னி சொல்ல வேணாம். அதெல்லாத்தையுமே படைச்சு நமக்கு பயனாக்கின பகவானுக்காவது நன்னி சொல்லி சாப்பிடலாம்.

அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:।
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ:॥ 3.14 ॥

கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்॥ 3.15 ॥

அன்னத்தாற் பூதங்க ளுண்டாகு மன்னந்தான்
மின்னத்தாழ் மாரியான் மிக்கியலு-மன்னத்தான்
மாரியது வேள்வியால் வந்தியலு மவ்வேள்வி
காரியம் தாலாகுங் காண்

இக்கருமங் காய மெனச்சேர் பிரமத்தா
மக்கருமஞ் சீவனா லாங்கதுவாஞ்-சிக்கெனவே
யெங்கு நிகழ்வுடலா மிப்பிரமம் வேள்வியிலே
தங்கு நிலையமருந் தான்.

அன்னத்தால் பூதங்கள் உண்டாகும். அன்னம்தான் மின்னத்தாழ் மாரியால் மிக்கு இயலும். அன்னத் தான் மாரி -அது வேள்வியால் வந்தியலும். அவ்வேள்வி காரியத்தால் ஆகும் காண் .

இக்கருமம் காயம் பிரமத்தால், அக்கருமம் சீவனால் ஆங்கு அதுவாம் எனச்சேர். சிக்கெனவே எங்கு நிகழ் உடலாம் இப்பிரமம் வேள்வியிலே தங்கும். நிலைய மருந்தான். (??) (யாராச்சும் சரியா பிரிச்சு சொல்லுங்கப்பா) ஜீவா:நிலை அமரும் தான்?

(உயிரினங்களனைத்தும் உணவிலிருந்து உண்டாகின்றன. மழையிலிருந்து உணவின் உற்பத்தி ஏற்படுகிறது. மழை வேள்வியிலிருந்து உண்டாகிறது. வேள்வி விதிக்கப்பட்ட கர்மங்களிலிருந்து உண்டாகிறது. கர்மங்களின் தொகுப்பு வேதத்தில் உண்டானவை. மேலும் வேதம் அழிவற்ற பரமாத்மாவிடம் தோன்றியவை என்று தெரிந்து கொள். ஆகவே எங்கும் நிறைந்த அழிவற்ற பரப்ரம்ம பரமாத்மா எப்பொழும் வேள்வியில் நிலை பெற்றிருக்கிறார் (என்பது இதிலிருந்தே தெரிகிறது).)