Pages

Wednesday, November 19, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 19ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்।
ஸ்வதர்மே நிதநம் ஷ்ரேய: பரதர்மோ பயாவஹ:॥ 3.35 ॥

குறைந்திடிலுந் தன்கருமங் குற்றமா மேலா
நிறைந்தியலு மற்றையதி னேரே - மறைந்திறந்து
தன்கருமத் தைசெயினுந் தானன்று வேறான
வன்கருமத் தச்சம் வரும்.

குறைந்திடிலும் தன் கருமம் குற்றமா மேலா நிறைந்தியலும் அற்றையது நேரே  மறைந்து இறந்து தன் கருமத்தை செயினும். தான் அன்று வேறானவன் கருமத்து அச்சம் வரும்.

(நன்கு கடைப்பிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் குணக்குறைவிருப்பினும் தன்னுடைய தர்மம் மிகவும் உயர்ந்தது. ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் இறப்பதும் மேன்மையே தரும். பிறருடைய தர்மம் பயத்தை விளைவிக்கும்.)

ஞானவழியிலே இருக்கிற கஷ்டங்களை கண்ணன் சொன்னான். இப்ப கர்ம யோகத்திலேயே இருக்கிற கஷ்டங்களை சொல்கிறான்.

 சாதாரணமா பார்க்கிறப்ப கெட்டதுன்னு தோணுவது கூட சுய தர்மத்தாலே சரியானதா ஆயிடும். இல்லைனா எப்படி சண்டை போடுவதும் கசாப்பு கடை வைக்கிறதும் சரியாகும்? இடத்துக்கும் காலத்துக்கும் தகுந்தாப்போல தர்மம் மாறும். அயோத்தியா காண்டத்திலே பாத்தோம்னா க்ஷத்திரிய தர்மத்திலே அது ராமன் கடமையானதாலே அதுல கருத்தா இருந்தார் என்பது புரியும். இத்தனைக்கும் அவர் கருணாமூர்த்தி!

யார் யார் எதை செய்யணும்ன்னு வேதத்திலேயும் சாஸ்திரங்களிலேயும் சொல்லி இருக்கோ அப்படி எல்லாம் கொஞ்சம் கூட குறையாம செய்யணும். என்ன என்ன செய்யணும்ன்னு பட்டியல் பாத்தாலே தலையை சுத்தும். ஆயிரத்து எட்டு இருக்கே! நாமோ ஒரு அவசர உலகத்திலே இருக்கோம். பத்து மணிக்கு உள்ளூர் அரசு அலுவலகத்துக்கு போன காலம் போச்சு. இப்ப பலருக்கு வேலை பாக்கிற இடத்துக்கு போகவே ரெண்டு மணி நேரம் ஆறது. இதிலே எங்கே அத்தனை கர்மாக்களையும் செய்கிறது? அப்படியே செய்தாலும் எங்கே குறைவில்லாமல் செய்கிறது? ஏதோ தப்புங்க நடக்க வாய்ப்பு எப்பவுமே இருக்கே?

கண்ணன் என்ன சொல்கிறான்? நீ செய்கிறது உனக்கு கொடுத்த வேலையா? அத செய்ய ஒழுங்கா முயற்சி செஞ்சயா? அப்படி செஞ்சும் முழுக்க முடியலையா? பரவாயில்லை. நல்லா முயற்சி பண்ணே. உனக்கு நல்ல மார்க் போட்டுடறேன்.

நீ செய்தது உனக்கு கொடுத்த வேலை இல்லையா? ரொம்ப நல்லாதான் பண்ணாயா? இருந்தாலும் உனக்கு கொடுத்த வேலை இது இல்லியே? ஏன் செஞ்சாய்? உனக்கு குறைவான மார்க்தான்.

அதனால நமக்கு விதிக்கப்பட்டதை செய்யாம மத்த வேலைகளை செய்கிறது சரியில்லைதான்.

பல வருஷங்கள் முன்னே என் தலைமுடியை சீர்திருத்திக்கிற வேலையை நானே பண்ணிக்கொண்டேன். அதுக்கு சில காரணங்கள் இருந்தன. முக்கியமா நேரம் இல்லாதது. இப்படி இருக்கும் போது ஒரு நாள் வேலை களத்திலேந்து வேலை முடித்து போகிற நேரத்திலே "சீக்கிரம் போகணும். தலை முடி வெட்டணும்" ன்னு சொன்னேன். கிட்ட இருந்த ஒரு உதவியாளர் "அப்படியா, எந்த சலூன் போறிங்க" ன்னார். "இல்லைப்பா, நானே செஞ்சுப்பேன்" ன்னேன். அப்ப இதையே தொழிலா வெச்சு இருக்கிறவங்க என்ன ஆறது? ன்னு கேட்டார். "என்ன செய்யறது? எனக்கு குறிப்பிட்ட நாள்லேதான் செஞ்சுக்கணும். அன்னைக்கு கிடைக்கிற நேரத்திலே சலூன்ல ஆளில்லாம இருக்கணும். இது சாத்தியமா இல்லையே" ன்னேன். "அப்படி பிரச்சினைனா சொல்லுங்க நானே வந்து வெட்டிவிடறேன். அதுக்காக இப்படி செய்யக்கூடாது" ன்னார்.  சொல்கிறது சரிதானேன்னு  நினைச்சுண்டேன்.

இதைதான் யார் யாருக்கு எந்த கர்மாவிலே அதிகாரம்ன்னு பெரியவங்க வகுத்து வெச்சாங்க. வேலைகள் மாறிட்டாலும் அடிப்படை விஷயம் ஒண்ணுதான். அவரவர் வேலையைதான் செய்யணும்.வக்கீலுக்கு படிச்சவர்தான் அந்த தொழிலை பண்ணலாம். டாக்டருக்கு படிச்சு வந்தவர்தான் வைத்தியம் பாக்கணும்.  இப்படி பல சட்ட திட்டங்கள் இப்பவும் இருக்கே! அதுவும் நாமே ஏதாவது மருந்து சாப்பிட்டுட்டு, பிறகு டாக்டர்கிட்டே போனா திட்ட வேற திட்டறாங்க!

Post a Comment