Pages

Thursday, November 6, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 10
கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய:।
லோகஸம்க்ரஹமேவாபி ஸம்பஷ்யந்கர்துமர்ஹஸி॥ 3.20 ॥

முன்னஞ் சனகாதி யோகியரு மூண்டியன்ற
வன்ன கருமத்தா லானபயந் மன்னினர்கா
ணிந்த வுலக மிசைவகையும் பார்த்தியலா
யந்த வுயர்கரும மாய்ந்து.

முன்னம் சனகாதி யோகியரும் ஊண்டு இயன்ற வன்ன கருமத்தால் ஆன பயன் மன்னினர் காண். இந்த உலகம் இசை வகையும் பார்த்து இயலாய் அந்த உயர் கருமம் மாய்ந்து.

(ஜனகர் முதலிய ஞானிகளும் பற்றின்றிக் கர்மங்களைச் செய்ததன் மூலமே சிறந்த பேற்றை அடைந்தனர். அவ்விதமே உலகத்திற்கு வழிகாட்டுவது என்பதை நன்கு மனதில் கொண்டு நீயும் கர்மங்களைச் செய்வதுதான் உனக்கு உரிய செயலாகும்.)

பெரியவங்க இப்படி கர்மாவை செஞ்சே உயர்வடைஞ்சாங்கன்னு உதாரணம் காட்டறான் கண்ணன். இவர்களுக்கு கஷ்டமான ஞான வழிக்கு அதிகாரம் இருந்தும் கூட சுலபமான கர்ம வழில ஈடுபட்டு உயர்வடைஞ்சாங்க. ஜனகர் சும்மா ராமனுக்கு மாமனார் என்று இல்லை. மிதிலா அரசர்கள் எல்லாருக்குமே அப்படி பேர்தான். சீதையோட வளப்பு தந்தை ஒரு ஜனகர். அவரைதான் இங்கே சொல்கிறான் கண்ணன். அஸ்வபதி என்றும் ஒருவர்.

யத்யதாசரதி ஷ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:।
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே॥ 3.21 ॥

மேலொருவன் செய்த மிகுகருமந் தானெதுவென்
றேலுமதின் மற்றிங் கியல்சனமுஞ்-சாலவவன்
யாதைத்தன் னங்க மெனவியலும் மிவ்வுலக
மாதைப்பின் செல்லு மமர்ந்து.

மேலொருவன் செய்த மிகு கருமம்தான் எதுவென்றேலும் அதில் மற்று இங்கு இயல் சனமும் சால. அவன் யாதைத் தன் அங்கமென இயலும் இவ்வுலக மாதைப்பின் செல்லும் அமர்ந்து.

(உயர்ந்த மனிதன் எதை எதைச் செய்கிறானோ ஏனையோரும் அதை அதையே செய்வர். அவன் எதை  எடுத்து நடந்துக்காட்டுகிறானோ மனித ஸமுதாயம் அனைத்தும் அதையே சான்றாக பின்பற்றி நடக்கிறனர்.)

நான் யாரோ ஊர் பேர் தெரியாத ஆசாமின்னு வெச்சுக்கலாம். அப்ப நான் என்ன செய்யறேன் செய்யலை என்கிறது ரொம்ப ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஏன்னா பாதிக்கப்படுகிறது நான் மட்டும்தானே? இன்னும் மேலே போனா என் குடும்பம் பாதிக்கப்படலாம். அதுக்கு மேலே பாதிப்பு வரது எப்போதாவதுதான் நடக்கும்.
அதுவே நான் ஏதோ சமுதாயத்தில ஒரு ஸ்தானத்துல இருக்கேன், நல்ல பேர் வாங்கினவன், பலர் மதிப்பு வைத்து இருக்காங்க அப்படின்னு - சும்மா ஒரு பேச்சுக்குத்தான்- வெச்சுப்போம். அப்ப நான் செய்கிறதை பாத்து அவர்களும் அப்படியே செய்வாங்கன்னா, எதை செய்கிறேன் என்பதில நான் ஜாக்கிரதையா இருக்கணும். அவங்களால என்ன முடியுமோ அதைதான் நான் வெளிப்படையா செய்யணும். இல்லாட்டா அவங்களால முடியாத விஷயத்தை ஆரம்பிச்சு கஷ்டப்படுவார்கள். அதே போல எனக்கு ஆசார அனுஷ்டானம் இல்லைனா "அட, இவரே இப்படி ஆசார அனுஷ்டானம் இல்லாம இருக்காரே, நமக்கு என்ன?” அப்படின்னு விட்டுடுவாங்க.

இந்த சமயத்திலே ஒரு விஷயத்தை பாக்கலாம். ஸ்ரீதர ஐயாவாளை நிறைய பேருக்கு தெரியும்.

சிராத்த தினத்திலே சண்டாளன் ஒத்தன் பசின்னு வர, இவர் பாட்டுக்கு சிராத்தத்துக்கு சமைச்சதை கொடுத்துட்டார். சிராத்தத்துக்கு வந்தவங்க இது மகா தப்புன்னு போயிட்டாங்க. இவரோ திருப்பி எல்லாத்தையும் தயார் பண்ணி சிராத்தத்துக்கு கூப்பிட்டா யாரும் வரத்தயாரா இல்லை. அதனால கூர்ச்சத்தை போட்டு மும்மூர்த்திகளையும் அழைச்சு வரிச்சு சிராத்தத்தை முடிச்சார். அதுக்கு அடுத்த சிராத்தத்துக்கு கூப்பிட்டப்பாதான் பிராமணர்கள் "வர முடியாது நீ பிராயச்சித்தம் செய்யணும்" ன்னு சொல்ல கங்கையை கிணத்திலே வர வெச்சது நடந்தது.

http://us.geocities.com/sri_ayyaval/history/sridhara6.htm

இதை மேற்கோள் காட்டி சிலர் விதண்டாவாதம் செய்யலாம். அவரே சிராத்த சமையலை சண்டாளனுக்கு கொடுத்தாரே நாம மத்தவங்களுக்கு கொடுத்தா என்ன? தாராளமா கொடேன்! அவரால மும்மூர்த்திகளை அழைச்சு சிராத்தம் செய்ய முடிஞ்சதே, கங்கையை கிணத்திலே வரவழைக்க முடிஞ்சதே - அப்படி உன்னால முடியுமானா நீயும் அவர மாதிரி செய்யலாம்.

இந்த மாதிரி வாதம் வரக்கூடாது என்கிறதாலதான் மத்தவங்க உன்னை பாத்து மாறுவாங்களா, அப்படின்னா என்ன செய்கிறாய் என்பதில ரொம்பவே கவனமா இரு என்கிறது.

அதனால உன்னை பாத்து பலர் கடைபிடிப்பாங்கன்னா அவ்வங்களுக்கு பொருத்தமா இருக்கிற கர்ம யோகத்தையே செய் என்கிறான் கண்ணன்.

இதிலே கவனிக்க வேண்டியது ஒரு சமாசாரம் இருக்கு. கண்ணன் எதை கடைபிடிக்கிறாங்களோன்னு சொன்னான்னே தவிர எதை சொல்கிறாங்களோன்னு சொல்லலை. உதாரணமா நடந்து காட்டுகிறது ஆயிரம் முறை சொல்கிறதைவிட நல்லது.Post a Comment