Pages

Monday, August 31, 2009

சிலர் தற்கொலை கூட செய்து கொள்கிறாங்களே?



117.
ஆத்மா ஆநந்த சொரூபமாய் தள்ளக் கூட்டப்படாததாய் இருக்கின்ற தன்னை வெறுப்பினால் நீக்குவரோ?

வேகின்ற கோபங்க ளாலென்னை நான்கொன்று விடுகிறே னென்று சிலபேர்
சாகின்ற படியினாற் றன்னையே தான்கொன்று சாவனெனல் சங்கை யலவே
தேகந்த னைக்கொல்லு மவனால்வி டப்பட்ட தேகமவ னல்லன் மகனே
ஆகந்த னிற்கோ பமலதுதனை யொருநாளு மான்மாவெ றுப்பதிலையே.

வேகின்ற கோபங்களால் என்னை நான் கொன்று விடுகிறேன் என்று சிலபேர் சாகின்ற படியினால் தன்னையே தான் கொன்று சாவன் எனல் சங்கை அலவே. தேகந்தனைக் கொல்லும் அவனால் விடப்பட்ட தேகம் அவனல்லன் மகனே. ஆகம் தனில் கோபம் அலது (தேகத்தின் மீது கோபம் வந்தது அல்லாது) தன்னை ஒரு நாளும் ஆன்மா வெறுப்பதிலையே.
[ஆத்மா சுகத்துக்கு ஏதுவாய் உள்ளபோது தேகத்தை பேணி, சுகத்துக்கு ஏது அல்லாத போது அதன் மீது வெறிப்படைந்து அதை விடுகிறது. விட்ட தேகம் அவனல்ல. எப்போதும் ஆன்மா தன்னை வெறுக்கவில்லை. அது சுக ரூபமே.]

சீடன் கேட்கிறான், ஏன் ஸ்வாமி சில பேர் வெறுப்பில தற்கொலை கூட செய்து கொள்கிறாங்களே? நீங்க என்னடானா ஆன்மாவை வெறுக்க முடியாது என்கிறீங்க?
குரு சொல்கிறார், ஆமாம்பா உண்மைதான். சில சமயம் சிலர் கொடிய வியாதி, மன சஞ்சலம் இதெல்லாம் வரும்போது தற்கொலை செய்து கொள்கிறங்கதான். ஆனா உன் கேள்வி தப்பு. அவங்க ஆன்மாவை விடலை. அவங்க தேகத்தைதான் விடறாங்க. அந்த உடம்பு அவங்க இல்லை. ஆன்மாவே தானாக இருக்கிறதால யாருமே அதை விடவும் முடியாது. கொள்ளவும் தேவையில்லை.

118.
தாகப் படும்பொருளி லும்மகன் பிரியமாந் தனயனிலு முடல்பிரியமாம்
ஆகத்தி லும்பிரிய மிந்திரிய மாங்கரண மதனிலும் பிரியமுயிராம்
ஏகப்பி ராணனிலும் வெகுபிரிய மான்மாவி லிந்தவான் மாமுக்கியம்
ஊகத்தி னாற்கெவுண மித்தைகர்த் தாமூன்று மோரொன்றி லதிகமகனே

தாகப்படும் (பிரியமாக சம்பாதிக்கும்) பொருளிலும் (பொருளை விட) மகன் பிரியமாம். தனயனிலும் (மகனை விட) உடல் பிரியமாம். ஆகத்திலும் (உடலிலும்) பிரியம் இந்திரியமாம். (புலன்கள்). இந்திரியங்களிலும் கரணம் (அந்தக்கரணம்) பிரியமாம். அதனிலும் பிரியம் உயிராம். (ஜீவனாம்) ஏகப் பிராணனிலும் வெகு பிரியம் ஆன்மாவில். இந்த ஆன்மா முக்கியம். [அதை காட்டிலும் பிரியமானது இல்லை]. ஊகத்தினால் கெவுணம் [செல்வம் முதலான ஆறு பிரியங்கள்] மித்தை கர்த்தா மூன்றும் ஓரொன்றில் அதிகம் மகனே.
--
ஸ்வாமி, ஆன்மாவே பிரிய வஸ்துன்னா காசு மேலே எல்லாருக்கும் ஆசை இருக்கு. தன் பிள்ளைகள் மேலே எல்லாருக்கும் ஆசை இருக்கு. இதை என்ன சொல்லறீங்க?
சாதாரணமா யாருக்கும் காசு மேல ஆசை இருக்கு. ஆனா தன் மாகனுக்கு ஒரு உடம்புன்னா காசு செலவழிச்சு வைத்தியம் பாக்க தயாரா இருக்காங்க. ஆனா தன் மகனை விட தன் உடம்பு மீதே ப்ரியம் அதிகம்; பல காரணங்களுக்காக தன் பிள்ளை மேலே கோபம் இருக்கும். தன் உடம்பு மேலே கோபம் வராது. அதுக்கு குளிர்ச்சியா இருக்க ஏ.சி என்ன பஞ்சு மெத்தை என்ன இந்த ரீதியிலே நிறைய உண்டு. உடலைவிட மனசு மேலே பிரியம் அதிகம். உடம்பு கொஞ்சம் சிரமப்பட்டாலும் மனசு சந்தோஷமா இருக்கும்ன்னா அதுக்கும் நாம தயாரா இருக்கோம். மனசை விட உயிர் மேலேதான் ஆசை அதிகம்.
டாக்டர் இனிமே இன்ன இன்ன விஷயங்களை விட்டுடனும்; இல்லைன்னா உயிருக்கே ஆபத்துன்னு சொன்னா சரின்னு அப்படியே செய்கிறோம், அதெல்லாம் இது வரைக்கும் மனசுக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்ததா ஆனாலும்.


Friday, August 28, 2009

விஷய சுகம் ....ஆத்ம சுகம்....



115.
அன்னபா னாதிசுக சாதனம தாகையா லார்க்கும் வெகு பிரியமாகும்
இன்னவா றான்மாவு மாநந்த சாதன மெனக்கருதல் பொருளல்லவே
சொன்னவான் மாவையொரு சுகசாத னங்களொடு சொல்லுவா யாகின் மகனே
உன்னதா நந்தம்வே றேதநுப விப்பதா ருபயவான் மாவு முளவோ

அன்ன பானம் ஆதி (முதலானவை) சுக சாதனம் அது, ஆகையால் ஆர்க்கும் (யாருக்கும்) வெகு பிரியமாகும். இன்னவாறு (இதே போல்) ஆன்மாவும் ஆநந்த சாதனம் என கருதல் பொருளல்லவே. (சரியல்ல). சொன்ன ஆன்மாவை ஒரு சுக சாதனங்களொடு சொல்லுவாயாகின் மகனே, உன்ன (உன்னுடைய) ஆநந்தம் வேறேது? அநுபவிப்பது யார்? உபய (இரண்டாம்) ஆன்மாவும் உளவோ? (இருக்கிறதோ?)
--
சாப்பிடும் குடிக்கும் பொருட்கள் சுகத்தை கொடுக்கிற சாதனங்கள். அதனால அதுகள் மேலே பலருக்கும் பிரியம் உண்டாகுது. இது போலவே ஆன்மா சுகத்தை தருகிற சாதனம்ன்னு நினைக்கக்கூடாது. ஆன்மா சுகத்தை தரும் சாதனம் அல்ல. அதுவேதான் ஆனந்தம். அப்படி இல்லைன்னா ஆன்மா வேற அதை அனுபவிக்கிறது வேறன்னு ஆகி அதை அனுபவிக்க இன்னொரு ஆன்மா இருக்கான்னு கேள்வி வரும்.

116.
விடயங்களில் பிரியமிருப்பது போல ஆத்மாவிலும் பிரியம் இருப்பதால் ஆத்மா ஆநந்த சொரூபர் என்பது எப்படி?

விடயசுக மதில்வருதல் பிரியமாத் திரமாகும் வெகு பிரிய மான்மாவி லாம்
விடயசுகம் வருபிரிய மாறிவரு மான்மாவில் வெகுபிரிய மாறாது காண்
விடயசுகம் விடலுமாங் கொளலுமா மான்மாவை விடுவதெவர் கொள்வதெவர் பார்
விடயசுக போகங்கள் விடுமவனை யவனால் விடப்படா தொருநாளுமே

விடய சுகமதில் வருதல் பிரியம் மாத்திரம் (அணு அளவு) ஆகும். வெகு பிரியம் ஆன்மாவிலாம். விடயசுகம்(த்தில்) வரும் பிரியம் மாறி வரும். ஆன்மாவில் வெகு பிரியம்; மாறாது காண். விடய சுகம் விடலுமாம் கொளலுமாம். (விடவும் பற்றவும் கூடும்.) ஆன்மாவை விடுவது எவர், கொள்வது எவர் பார். விடய சுக போகங்கள் விடும் (நீக்கும்) அவனை. அவனால் (ஆத்மாவால்) விடப்படாது ஒரு நாளுமே.
--
விஷய சுகத்தில் கிடைப்பது திருப்தி மட்டுமே. ஆன்மாவில் உள்ளது நிரதிசய பிரீதி. (அதாவது இதுக்கு மிஞ்சிய பிரீதி இல்லை) விஷய சுகத்தில் இருக்கும் விருப்பம் வேறு விஷயத்துக்கு மாறும். இன்னிக்கி கேசரி பிடிச்சதுன்னா நாளை ஐஸ்க்ரீம் பிடிக்கும். நாளன்னிக்கி இன்னும் வேற ஏதோ ஒண்ணு. ஆனா ஆன்மா மேலே உள்ள பிரியம் நிலையானது. விஷய சுகத்தை இஷ்டப்படி விட்டுடலாம். கொள்ளலாம். ஆன்மா மீது உள்ள பிரியத்தை யாரால் விட முடியும்? யாராலும் ஒரு போதும் முடியாது.

(தொடரும்...)

Thursday, August 27, 2009

எல்லா நிலைகளிலேயும் அறிவு ..



114
இருளாக மூடுஞ்சு ழுத்தியி லிராத்திரியி லிரவிசுட ரற்றபொழுது
மருளாம லிருளையும் பொருளையுந் தெரிகின்ற வகைகொண்டு சித்தாகுமே
பெருவாழ்வு மிக்கதா னேதன்னிடத்தினிற் பேராத பிரியமதனால்
அருகாத பிரியஞ்சு கத்தில்வரு மாதலா லாநந்த மாமைந்தனே

இருளாக மூடும் சுழுத்தியில் இராத்திரியில் இரவி சுடரற்ற பொழுது மருளாமல் இருளையும் பொருளையும் தெரிகின்ற வகை கொண்டு (இவனே) சித்தாகுமே. பெருவாழ்வு மிக்க (பேராநந்தத்தால் நிர் அதிசயமாகிய) தானே தன்னிடத்தில் பேராத (நீங்காத) பிரியமதனால் அருகாத (குறையாத) பிரியம் சுகத்தில் வருமாதலால் (இவனே) ஆநந்தமாம் மைந்தனே.
--
இருட்டாக இருக்கும் சுசுப்தியில் எதுவும் தோன்றாமல் மறைந்து இருக்கும் போது அவித்தையாகிய இருளையும், ஆனந்தமாகிய பொருளையும் அறிகிறது. இரவில் சூரிய ஒளி இல்லாவிட்டாலும் சாமான்ய தொடுதலால் பொருட்களை அறிகிறது. கனவில் ஆன்மா வேறு ஒளியை வேண்டாமல் திரிபுடிகளான பார்ப்பவன், பார்த்தல், பார்க்கப்படும் பொருளை பிரகாசிப்பித்து அறிகிறது. ஆகவே இது சித்தாகும்.
--
சுசுப்தில ஒண்ணும் தெரியலை. ஆனா தூங்கி வெளியே வந்து ஆனந்தமா தூங்கினேன் ன்னு சொல்கிறப்போ ஏதோ ஒரு அறிவு இருக்கு. ஜாக்ரத்திலே பார்த்தோ, இல்லை வெளிச்சம் இல்லாட்டா தொட்டு நுகர்ந்தோ விஷயங்களை தெரிஞ்சு கொள்கிறது. சொப்ன நிலையிலே ஏதும் இல்லாமலே சில விஷயங்களை உருவாக்கி அறிகிறது. இப்படி எல்லா நிலைகளிலேயும் அறிவு இருக்கு.

எல்லாருக்கும் எல்லா பொருட்களைக்காட்டிலும் தன் மீதே பிரியம் அதிகம். அனைவருக்கும் சுகத்தில்தான் பிரியம்; துக்கத்தில் இல்லை. ஆகவே ஆன்மா ஆனந்தம் என்பது அனுபவம்.

நானே யென்று மெவ்விடத்து நன்றா யுண்டா யிருக்குகேன்
நானே யென்று மெவ்விடத்து நன்றாய்த் தோன்றி விளங்குகேன்
நானே யென்று மெவ்விடத்து நன்றாயின்ப மாய் நிகழ்கேன்
நானே யென்று மெவ்விடத்து நன்றாய் விளையா டாநிற்கேன்
-விஞ்ஞான சாரம்


Wednesday, August 26, 2009

நம்மிடத்தில் சச்சிதானந்த லக்ஷணத்தை எந்த அனுபவத்தால உணர்வது?



112.
நாசச்ச ரீரத்தி ருக்குஞ்ச ரீரிதனை நால்வேத மாவாக்கியம்
நீசச்சி தாநந்த மென்றிடினு மாசிரியர் நீபிரம மாகுமெனினும்
மாசற்ற சச்சிதா நந்தநா னென்னவிவன் மன்னுமநு பவமெங்ஙனே
கோசப்பு ரங்களையி டித்துத்த கர்க்குமத குஞ்சரக் குரு நாதனே

நாசச் (நசிக்கும்) சரீரத்தில் இருக்கும் சரீரிதனை நால் வேத மாவாக்கியம் நீ சச்சிதானந்தம் என்றிடினும், ஆசிரியர் நீ பிரமமாகும் எனினும், மாசற்ற சச்சிதாநந்த நானென்று இவன் அநுபவம் எங்ஙன் மன்னும்?(எப்படி பொருந்தும்) (பஞ்ச) கோச புரங்களை (நகரங்களை) இடித்து தகர்க்கும் மத குஞ்சரக் குரு நாதனே.
--
இந்த உடம்பு அழியக்கூடியது. இதில் உள்ளவனை "நீ சச்சிதானந்தம்" என்று வேதங்கள் சொன்னாலும், குரு சொன்னாலும் நம்மிடத்தில் சச்சிதானந்த லக்ஷணம் இருக்கிறது என்று எந்த அனுபவத்தால உணர்வது? கேக்க நல்லா இருந்தாலும் அனுபவத்துக்கு வந்தாதானே ஸ்திரப்படும்?

113
சென்மாந்த ரஞ்செய்த வினைகளுட றருமெனிற் செல்கால மிவனுண்டலோ
கன்மாநு பவநரக சொர்க்கமெனில் வருகின்ற காலத்து மிவனுண்டலோ
உன்மாத யாதனா வுடல்கடவு ளுடன்மநுட வுடன்மாறி மாறியழியும்
தன்மாய வுடல்நெடினு மிவனிருப் பதுகொண்டு சத்தென்ப தொக்குமகனே

சென்மாந்தரம் செய்த வினைகள் உடல் தரும் எனில் செல் (சென்ற) காலம் இவன் உண்டலோ? கன்மாநுபவம் நரக சொர்க்கம் எனில் வருகின்ற காலத்தும் இவன் உண்டலோ? உன்மாத (உன்மத்தமான) யாதனா உடல் கடவுளுடல் மநுட வுடல் மாறி மாறி அழியும். தன் மாய உடல் நெடினும் இவன்(இத்தேகி) இருப்பது கொண்டு (இவனே) சத்து என்பது ஒக்கும் மகனே.
--
சீடன் சரியான கேள்வி கேட்டான். ஒவ்வொண்ணா குரு தீர்த்து வைக்கிறார்.

முன் ஜன்மத்தில் செய்த கர்ம பலனாக இந்த பிறவி எடுத்து இருக்கிறாய் அல்லவா? ஆகவே போன சன்மத்தில் இருந்தாய். இப்போது செய்யும் செய்கைகளால் நீ நரகமோ சொர்கமோ சென்று பலன் அனுபவிப்பாய். ஆகவே இனியும் நீ இருப்பாய். இப்படியாக மனித உடலையும் யாதனா சரீரத்தையும் நீ மாற்றி மாற்றி எடுத்தாலும் தேகங்கள் அழிகின்றன. நீயாகிய ஆன்மா அழிவதில்லை. ஆகவே நீ சத்தாகும்.
--
யாதனா சரீரம்: நரக வேதனையையோ அல்லது ஸ்வர்க சுகத்தையோ அனுபவிக்க தரப்படும் சரீரம். நம் சாதாரண சரீரம் தீயால் வெந்து கருகும். யாதனா சரீரம் தீயால் சுடப்பட்டு வேதனை அனுபவிக்குமே ஒழிய மாறாது. வேதனையை அனுபவிக்க அது இருக்கணும் இல்லையா?


Tuesday, August 25, 2009

ஆனந்தம் ஆன்மாவில் தான் உள்ளது...



111.
இகமான குருநாத னேசச்சி தாநந்த மெனுமிலக் கணமறிகிலேன்
அகலாத சத்தாவ தேதுசித் தாவதே தாநந்த மேதென்றிடில்
மிகுகால மூன்றுங்கெ டாதிருப் பதுசத்து வேறுபா டறிதல்சித்தாம்
மகிழ்காம நுகர்போது சுகமாகு மநுபூதி வாழ்வென்ப தாநந்தமே

இகமான குருநாதனே, சச்சிதாநந்தம் எனும் இலக்கணம் அறிகிலேன். அகலாத சத்தாவது ஏது? சித்தாவது ஏது? ஆநந்தம் ஏது என்றிடில்; மிகு கால மூன்றுங் கெடாதிருப்பது (நசியாதிருப்பது) சத்து; வேறுபாடு (சிற் சட பேதங்கள்) அறிதல் சித்தாம். மகிழ் காமம் நுகர்போது சுகமாகும் அநுபூதி (அனுபவம்) வாழ்வென்பது ஆநந்தமே.

PG: விவகாரிக (practical) சத்தும், பிராதி பாசிக சத்தும் கூட உள்ளதால் அவை சத்தல்ல என நீக்க "அகலாத சத்து" என்றார். இந்திரியங்களும் அந்தக்கரணங்களும் கூட அறிவாக உள்ளதால் அவை சித்தல்ல என நீக்க "சித்தாவதேது" என்றார். விஷய ஆனந்தம், சுஷுப்தி ஆனந்தம், வாசனானந்தம், உதாசீன ஆனந்தம் (விளக்கங்கள் பின்னால் வரும்.) ஆகியன கூட உள்ளதால் அவை ஆனந்தம் அல்ல என நீக்க "ஆனந்தமேது" என்றார்.

தாத்பர்யம்: முக்காலத்திலும் கெடாமல் இருப்பதே சத்து. சகல விஷயங்களைகளிலும் வேறுபாடுகளை பிரித்து அறிவது சித்து. இஷ்டம் லபித்த (வேண்டியது கிட்டும்) போது உண்டாகும் சுகம் ஆனந்தம்.
 --
எளிமையா சொல்ல:
முக்காலத்திலும் கெடாமல் எது இருக்குமோ அதுவே சத்து.
விஷயங்களிலே வேறுபாடு அறியும் அறிவே சித். இது சுயமாக பிரகாசிக்கும். இதன் பிரகாசத்தாலேயே மற்றவையையும் பிரகாசிக்க செய்யும்.
இஷ்டப்பட்டது கிடைத்து அதை அனுபவிக்கிற போது கிடைக்கிற திருப்தியே ஆனந்தம்.

இந்திரியங்கள் (புலன்கள்) கரணங்கள் முதலானவற்றை பிரகாசிக்க செய்வது ஆன்மாவே. ஆன்மா தவிர யாதும் சடம். ஆன்மா ஞான சொரூபம். ஞானம் என்பதே பிரகாசம். ஞானம் ஆத்மாவை பிரிஞ்சு இருக்கிறதல்ல. தூங்கும் போது இந்திரியங்கள் செயலிலே இல்லைதான். ஆனாலும் விழித்தபின் "”சுகமாக தூங்கினேன்" என்கிறோம். அப்ப ஏதோ ஒண்ணு விழிப்போட இருந்து அதை அனுபவிச்சது இல்லையா?

அது சரிங்க, ஆன்மாவை விட்டு ஞானம் பிரிந்தது இல்லைன்னா ஏன் எல்லாரும் ஞானிகளாக இல்லை?

தீபம் பிரகாசமா இருக்குதான். ஆனாலும் மூடுபனியில் அது தெரியறதில்லை. அது போல அவித்தையில் மறைந்து ஞானம் மங்கி இருக்கு. அவித்தை நீங்கினால் அது பிரகாசிக்கிறது. நாம் "ஞானம் உதித்தது" ன்னு சொல்கிறோம் ன்னாலும் ஞானம் புதிசா உதிக்கலை. மறைவு நீங்கித்து, அவ்வளவே.

அவ்வாறே ஆன்மா ஆநந்த சொரூபமாம். சட பொருட்கள் எதிலும் ஆனந்தம் இல்லை. எப்படி எனில் ஒருவனுக்கு ஒரு பொருளில் உதிக்கும் ஆனந்தம் மற்றவருக்கு அதே போல் உதிப்பதில்லை; சில சமயம் வெறுப்பு கூட உண்டாகலாம். ஆனந்தம் அந்த பொருளில் இருந்தால் எல்லாருக்கும் அதில் ஆனந்தம் வரவேணுமே?

உதாரணமா ஒத்தருக்கு கேசரி பிடிக்குது. அதை நினைச்சாலே ஆனந்தம் வந்துடும். சாப்பிட்டா கேக்கவே வேணாம். அதுவே இன்னொருத்தர் நல்லா இருக்கு ன்னு சாப்பிடுவார். ரொம்ப ஒண்ணும் சந்தோஷப்பட மாட்டார். இன்னும் ஒத்தர் எனக்கு சக்கரை வியாதி; கேசரியே பிடிக்காதும்பார்.
ஆனந்தம் கேசரியிலே இல்லை. அப்படி இருந்தா எல்லாருக்கும் அதிலே ஆனந்தம் கிடைக்கணுமே?
ஆக ஆனந்தம் ஆன்மாவில் தான் உள்ளது என்பது ஸ்ருதி, யுக்தி, அனுபவ சம்மதம்.

(ஆனந்தம் தொடரும்)

Monday, August 24, 2009

குண விருத்திக்கு தகுந்தபடியே சத் சித் ஆனந்த அனுபவமும் ...




109.
தாமதமி ராசதஞ் சாத்துவித முக்குணத் தால்வரும்வி ருத்திமூன்றாம்
ஆமவைகண் மூடமுங் கோரமுஞ் சாந்தமு மபிதான மாகுமகனே
ஏமுறவி ருக்கின்ற சச்சிதா னந்தங்க ளென்றென்று மொன்றாகிலும்
நாமுரைக் கும்விருத் திப்பிரிவி னாற்சொரூப ஞானாதி பிரிவாகுமே

தாமஸம் இராசதம் சாத்துவிகம்[ஆகிய] முக்குணத்தால் வரும் விருத்தி மூன்றாம். ஆம் அவைகள் மூடமும் கோரமும் சாந்தமும் (என) அபிதானமாகும் (பெயர் பெறும்) மகனே. ஏமுறவிருக்கின்ற (இன்புறவிருக்கின்ற) சச்சிதானந்தங்கள் என்றென்றும் ஒன்றாகிலும், நாம் உரைக்கும் விருத்திப் பிரிவினால் சொரூப ஞானாதி (சித் முதலிய சதானந்த ஸ்வரூபங்கள்) பிரிவாகுமே (பேதமாகுமே)
--
சத்துவம், ராஜசம், தாமசம் என குணங்கள் மூன்று ஆகும். இந்த 3 குணங்களால் உண்டாகும் விருத்திகளும் மூன்று. அவை முறையே சாந்த, கோர, மூட விருத்திகள். இந்த வேறுபாட்டால் ஆத்ம குணங்கள் வேறு வேறாக தோன்றுகின்றன.

110.
சடமான மூடத்த ருக்கல்லு மண்களிற் சத்தொன்று மேதோன்றுமால்
விடமான காமாதி கோரத்தி லானந்தம் விளையாதுமற் றவைகளாம்
திடமான வொழிவாதி சாந்தத்தி லேசச்சி தானந்த மூன்றும் வெளியாம்
மடமான மூடங்கள் கோரங்கள் விடுசாந்த மனமாகி லானந்தமே

சடமான மூட தரு (மரம்), கல், மண்களில் சத்து ஒன்றுமே தோன்றுமால். விடமான காமாதி கோரத்தில் ஆனந்தம் விளையாது. மற்றவைகளாம் (சத் சித் ஆகிய மற்றவை தோன்றும்.) திடமான ஒழிவாதி (வைராக்யம் முதலான) சாந்தத்திலே சச்சிதானந்தம் மூன்றும் வெளியாம். மடமான (அறிவின்மையான) மூடங்கள் கோரங்கள் விடு[த்து] சாந்த மனமாகில் ஆனந்தமே.
--
ஜடமான மரம் கல், மண் ஆகியவற்றால சத் (இருப்பு) மட்டுமே வெளியாகும். அதாவது அதெல்லாம் இருக்குன்னு தெரியுமே ஒழிய அதுக்கு அறிவோ (சித்தும்) உணர்ச்சியோ (ஆனந்தமும்) வெளியாகா.
காம, குரோதம் முதலான குணங்களின் கோர விருத்தியிலும், மயக்கம் பயம் ஆகிய மூட விருத்திகளிலும் சத்தும் சித்தும் மட்டுமே வெளியாகும். ஆனந்தம் வெளியாகாது.

பொறுமை, கருணை முதலான சாந்த விருத்தியில் மூன்று குணங்களும் வெளியாகும்.

காமம், குரோதம், மோகம், பயம் ஆகிய கோர மூட விருத்திகளை விட்டு ஒழித்து வைராக்கியம் சாந்தம் பொருந்திய மனதுடன் உள்பார்வை கிட்டுமானால் ஆனந்தம் உண்டாகும்.
ஆக நம்மோட குண விருத்தி எப்படி இருக்கோ அதுக்கு தகுந்தபடியே நமக்கு சத் சித் ஆனந்த அனுபவமும் ஏற்படும்.

Friday, August 21, 2009

ஆத்மாவின் ஆனந்த சொரூபம் வெளிப்படும் விதம் தெரிய..




107.
ஆத்மாவின் ஆனந்த சொரூபம் வெளிப்படும் விதம் தெரிய வினா:
தானன்றி வேறொன்று மில்லாத பூரணச் சச்சிதானந்த குணமாய்
ஊனின்ற வுயிர்தோறு மொன்றாகு மென்றாலஃ தொக்கின்ற படி கண்டிலேன்
நானென்ற சீவன்கள் சத்தான வகையொக்கு ஞானங்கள் வெளிகண்டதால்
ஆனந்த மிதுபோல வெளியாக வுதியாத வடைவேது குருநாதனே

தானன்றி வேறொன்றும் இல்லாத பூரணச் சச்சிதானந்த குணமாய், ஊன் (தேகத்தில்) நின்ற உயிர்தோறும் ஒன்றாகும் என்றால் அஃது ஒக்கின்றபடி கண்டிலேன் (ஆத்மா அப்படி ஒத்து இருப்பதை அறிந்திலேன்). நான் என்ற சீவன்கள் சத்தான வகை ஒக்கும் (தன்மை கூடும்). ஞானங்கள் வெளிகண்டதால் (சித்தும் விளங்குகிறது). ஆனந்தம் இது போல (எல்லா விருத்திகளிலும்) வெளியாக உதியாத அடைவேது (கிரமம் ஏது) குருநாதனே.
[சத்தும் சித்தும் போல ஏன் ஆனந்தம் வெளியாக காணப்படவில்லை?]

சத் = இருப்பு. சித் =அறிவு இரண்டும் சீவன்களில் காணப்படுகிறது. ஆனால் அதுபோல ஆனந்தம் எல்லா சந்தர்பங்களிலும் காணப்படவில்லையே?

தனக்கு அன்னியமா இல்லாத ஆன்மா பூரண சத், சித், ஆனந்தமா எப்பவும் இருக்கிறதா சொல்கிறீங்க. தான் எதுன்னு ஒரு கேள்வி இருந்தாலும், தான் இருக்கிறோம் ன்னு எப்பவும் எல்லா சீவர்களுக்கும் தெரியுது. என்னதான் இருட்டு இருந்து நம்மை நாமே பார்க்க முடியாம போனாலும் நாம் இருக்கோமான்னு தொட்டு பார்க்கவா வேண்டி இருக்கு? சின்ன குழந்தைக்குக்கூட தான் இருக்கிறது தெரியுது. அதாவது தன் இருப்பு தெரியுது. அதே மாதிரி அறிவு - அது எவ்வளவு அல்பமா இருந்தாலும் எப்பவும் அதுவும் இருக்கு. ஆனால் அதே போல எப்பவும் ஆனந்தம் இருக்கிறதில்லையே? சில சமயம் ரொம்பவே குஷியா இருக்கோம். சில சமயம் துக்கம். பல சமயம் ரெண்டும் இல்லாம இருக்கோம். அப்பல்லாம் ஆனந்தம் எங்கே போச்சு?

108.
உருவங்க ளிரதங்கள் பரிசங்க ளொருபூவி லொன்றாகு மென்றாலுமே
கரணங்க ளோரொன்றி லோரொன்று தெரியுன்க ணக்கன்றி வாராதுகாண்
அருமந்த சச்சிதா னந்தச் சுபாவங்க ளான்மா வின்வடிவாகிலும்
பிரபஞ்ச மயமாம்வி ருத்திபே தத்தினாற் பேதங்களா மைந்தனே

உருவங்கள் இரதங்கள் (ரஸங்கள்) [ஸ்]பரிசங்கள் ஒரு பூவில் ஒன்றாகும் என்றாலுமே, கரணங்கள் (இந்திரியங்கள்) ஓர் ஒன்றில் (விஷயம்) ஓர் ஒன்று தெரியும் கணக்கு அன்றி வாராது காண். அருமந்த சச்சிதானந்த சுபாவங்கள் ஆன்மாவின் வடிவாகிலும், பிரபஞ்ச மயமாம் விருத்தி பேதத்தினால் பேதங்களாம் (வேறுபடும்) மைந்தனே.
--
ஒரு மலரில் நிறம், சுவை, மணம் மூன்றும் இருந்தாலும் ஒவ்வொரு புலனால்தான் அவை தெரியவரும். ஒரே புலனால் மூன்றும் தெரியவரா. அதுபோல சத், சித், ஆனந்தம் ஆன்ம சொரூபமானாலும் பிரபஞ்ச மயமான விருத்திகளின் வேறுபாட்டால் அவை வேறாக உணரப்படும்.
(டீத்தூள் விளம்பரம் நினைவுக்கு வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லே! உசாத் துணை பொத்தகத்திலேயே அப்படித்தான் இருக்கு :)

மூக்கால பாக்க முடியாது. நாக்கால பாக்கமுடியாது. கண்ணால நுகர முடியாது. எந்த கரணத்தோட- புலனோட- உதவியால கவனிக்கிறோமோ அதுக்கு தகுந்த படித்தான் கவனிக்கப்பட்டது தோன்றும்.

சினிமா பாக்க ரெண்டு நண்பர்கள் போறாங்க. ஒத்தர் திரும்பும் போது அடாடா என்ன அருமையான பாட்டு... ட்யூன்... ங்கிறார். இன்னொருத்தர் அட போப்பா! என்ன அருமையா இயற்கை காட்சிகளை படமாக்கி இருக்காங்க என்கிறார். ரெண்டு பேரும் பாத்தது ஒரே சினிமாதான். எதுக்கு ஃபோகஸ் இருக்கோ அதுபடி....


Wednesday, August 19, 2009

மாயை வந்த விதத்தை விசாரிப்பதில் என்ன பலன்?



105.
ஞானங் காரண மறிபொருள் காரிய நாமரூ பப்பேய்கள்
ஆன தெப்படி யழிந்ததெப் படியென வாய்குதல் பலனன்றே
மான மைந்தனே தீர்க்கசொப் பனசகம் வந்ததும் பாராமல்
போன தும்நினையாமலுன் போதமாய்ப் பூர்ணமாயிருப்பாயே

காரணம் ஆன ஞானம் அறி பொருள் (அறியப்படும்) நாம ரூப பேய்கள் (ஆன) காரியம் ஆனது எப்படி? அழிந்தது எப்படி என ஆய்குதல் (ஆராய்ச்சி செய்தல்) பலனன்றே. மான (பெருமையுள்ள) மைந்தனே, தீர்க்க சொப்பன சகம் வந்ததும் பாராமல், போனதும் நினையாமல் உன் போதமாய்ப் பூர்ணமாய் இருப்பாயே.
[அத்வைத அனுபவம் அடைய வேண்டுபவன் அத்வைத சொரூபமாக இருப்பது தவிர்த்து ஆத்மா அல்லாததின் உற்பத்தி நாசத்தை விசாரிப்பானேன் என்பதாம்.]
--
எல்லாத்தையும் அறிகிற அறிவோட சொரூபமே காரணம். காரணத்தால உண்டானது காரியம்.
அதாவது அறிவால அறியப்பட்டவை அனைத்தும் காரியம்.

இங்கே பலவிதமாக பிரபஞ்சம் தோன்றுகிறது, இல்லையா? அதுவே காரியம்.

பிரம்மத்தின் தோற்றம் போய் இந்த பிரபஞ்சத்தில் பலவிதமாக தோன்றும் நாம - ரூப பேய்கள் எப்படி வந்தன, அவை அழிவது, [மீண்டும் தோன்றுவது] எப்படின்னு விசாரிக்கிறதிலே பயனில்லை. விசாரிச்சு தெரிஞ்சு கொண்டு என்ன செய்யப்போறோம்? :-) எப்படியோ வந்தாச்சு! அவற்றை ஒரேயடியாக நீக்கும் விதம் சொல்லி இருக்காங்க. ஆகவே நீண்ட கனவு போன்ற இந்த பிரபஞ்சம் உண்டான வழியையும் ஒழிக்கும் வழியையும் விசாரிப்பதை விட்டுட்டு நம் ஆத்ம சொரூபத்தில் நிலைத்து நிக்கிற வழியை பாக்கலாம்.

106.
அசத்தி லெம்மட்டுண் டம்மட்டும் பராமுக மாகினா லம்மட்டும்
நிசத்தி லுள்விழிப் பார்வையா மிப்படி நிரந்தரப் பழக்கத்தால்
வசத்தி லுன்மன நின்றுசின் மாத்திர வடிவமா யிடின் மைந்தா
கசத்த தேகத்தி லிருக்கினு மானந்தக் கடல்வடி வாவாயே

அசத்தில் [சத்திய புத்தியுடன் பார்க்கும் ஆதரவு] எம்மட்டுண்டு (எவ்வளவு உண்டு) அம் மட்டும் (அவ்வளவும்) பரா முகமாகினால் (விடுத்தால்) அம் மட்டும் (அவ்வளவுக்கும்)
நிசத்தில் (ஆத்மாவான சத்தில்) உள் விழிப் பார்வையாம். இப்படி நிரந்தரப் பழக்கத்தால் வசத்தில் உன் மனம் நின்று சின் மாத்திர வடிவமாயிடின், மைந்தா, கசத்த (வெறுக்கப்பட்ட) தேகத்தில் இருக்கினும் ஆனந்தக் கடல் வடிவு ஆவாயே.
--
அசத்தாகிய நாமரூபங்களில் உள்ள பற்று (வெளி முக பார்வை) எவ்வளவுக்கு எவ்வளவு விடப்படுகிறதோ அந்த அளவு உள்முக பார்வை கிடைக்கும். இப்படி நீடிச்சு செய்கிற பயிற்சியால மனம் வசப்பட்டு ஆன்ம சொரூபத்தில் நிலைக்கும். அந்த நிலையை அடைந்தா இந்த ஸ்தூல உடம்பில் இருந்தாலும் ஆனந்தமாக இருப்போம். இதுவே தன்னை தான் அறிதல்.

தெரிபொருளுந் தரிசனமுஞ் சேரும் போதிற்
சேர்ந்தசுக வறிவுமிகச் சிறந்த தாகும்
தெரிபொருளால் வளைப்புண்டாற் பந்த மாகும்
தெரிபொருளை விட்டகன்றால் திடங்கொள் வீடாந்
தெரிபொருளுந் தரிசனமுஞ் சேரும் போதிற்
சேர்ந்தவநு பூதியிடர் தீர்த்த தாகுந்
தெரிவுறவாங் கதுபற்றி நிற்பாய் நீரின்
றிந்நிலையாஞ் சுழுத்திதனை சேருவாயே
-வாசிட்டம்.


Tuesday, August 18, 2009

கல்லைக்கண்டால்....




இருப்பது குடமும் மண்ணும், ஆனால் உண்மையில் 2 பொருட்கள் இல்லை. மண்ணே குடமாக தோன்றுகிறது. குடம் என்பது சொல் மட்டுமே. நாம் குடம் அழகாக இருக்கிறது; பெரிதாக இருக்கிறது, இலேசாக இருக்கிறது என்றெல்லாம் பேசும் போது மண் என்பதை மறந்து விடுகிறோம். மண் என்பதை கவனிக்கும் போது இது நல்ல மெழுகு போன்ற சிவப்பு மண், கற்கள் கலப்பில்லாதது என்கிறோம். அப்போது குடம் என்று நினைப்பதில்லை. ஒன்றே மற்று ஒன்றாய் தோன்றுவதால் எதை பார்க்கிறோமோ அது மட்டுமே தோன்ற மற்றது மறையும்.

உப மேயதிலும் உள்ளது பெயரும் சச்சிதானந்தமாகிய பிரம்மமும். உண்மையில் இரண்டு இல்லை. பிரம்ம சொரூபம் ஒன்று மட்டுமே உள்ளது. அதுவே பெயருடைய பிரபஞ்சமாக தோன்றுகிறது. பிரம்மமே மூன்று காலமும் இருக்கும் உண்மையாக பொருள். பிரபஞ்சம் குடம் போல பொய். பிரம்ம சொரூபமே பிரபஞ்ச சொரூபமாக தோன்றுவதால் ஒன்றை நாட மற்றது மறையும். பிரம்ம சொரூப நாட்டத்தை விட்டால் நாம சொரூபம் தெரியும். நாம் நாம சொரூப நாட்டத்தை விட்டால் பிரம்ம சொரூபம் தெரியும். பிரபஞ்ச தோற்றம் பழங்கனவாக மறையும்.

இந்த இரண்டு வழிகளிலே நமக்கு சரியானதை தேர்ந்து எடுத்து அதை பயிற்சி செய்யணும். அதுக்கு குருதான் வழி காட்ட முடியும். வேற யார் உதவுவாங்க?

இந்த வழிகளில் ஒண்ணு பிபீலிகா மார்க்கம். அதாவது எறும்பு வழி. அது எப்படி சுறு சுறுப்பா அலைஞ்சு இதுவா இதுவான்னு உணவை தேடுதோ அப்படி பிரம்மம் இதுவா இதுவா ன்னு ஒவ்வொண்ணா பாத்து நீக்குகிறது. மற்றது மேலே சொன்ன விகங்க மார்க்கம். அதாவது பறவை வழி. வானத்திலே கருடன் சும்மா மெதுவா க்ளைட் பண்ணிகிட்டே இருக்கும். அது பெரிசா ஒண்ணும் செய்கிறதா தோணாது. பட்டுன்னு கீழே பாய்ஞ்சு இரையை கொத்திக்கும். முடிஞ்சது வேலை. அது போல பிரம்ம நாட்டத்திலே பட்டுன்னு பிரவேசம் செஞ்சு அதிலேயே நிக்கிறது விகங்க மார்க்கம். இப்படி ஏக காலத்தில மாயையை நீக்கி அதிலேயே நிக்கிறது அதி தீவிர பக்குவிகளுக்கு மட்டுமே சாத்தியம்.

பிறப்பிறப்பாம் பெயருடைய விந்த மாயைப்
பெருமையினை முடிவுபெறப் பேசவொண்ணா
வறப்பெரிய தன்மனதை வென்றான்மாளு
மல்லதொரு வகையாலு மகற்றலாகா
-வாசிட்டம்
உன்னுறு மனத்தாலே யுலகமா மிந்திர சாலந்
துன்னுரும் பணிக ளென்னுஞ் சொற்பொருட் பொன்னையன்றி
யன்னிமில்லைப் பொன்னாற் பணியென வறைய வேண்டா
பன்னிய உலகாஞ் சொற்குப் பரமன்றிப் பொருள் வேறில்லை
-வாசிட்டம்

அதுவிதுநீ முதலாய்க் காண்பதெல்லா
மணுவுமிலை யணுவுமிலை யணுவுமில்லை
யெதுவெதுதான் திரிசியமா யெங்கே யெங்கே
யெவ்விதமாய்த் தோற்றினுமத் தோற்றமெல்லாந்
திதமருவுந் திருக்கான பிரமமயமாந்
திலமளவு மையமிலைச் சத்தியந்தா
னிதமனைய பரப்பிரம நானேயென்று
நிகழ்பிரம நிச்சயமே தருப்பணங்காண்
-ரிபுகீதை

104.
பூரிக் குங்கன சச்சிதா னந்தத்திற் பொய்சடந் துயர் மூன்றும்
தூரத் தாயினுந் தோன்றுபாழ் விபரிதந் துடைப் பதெப் படியென்றால்
நீரிற் றோன்றுந்தன் னிழறலை கீழதாய் நின்றலை யினுநேராய்ப்
பாரிற் றோன்றிய தன்னை நோக் கிடிலந்தப் பாழ்நிழல் பொய்யாமே

பூரிக்கும் கன சச்சிதானந்தத்தில் பொய், சடம், துயர் மூன்றும், (சத் சித் ஆநந்தத்தின் எதிர்மறைகள்) தூரத்தாயினும் (இல்லாவிடினும்) தோன்றும் பாழ்(வீணான) விபரீதம் துடைப்பது (நீக்குவது) எப்படி என்றால், நீரில் தோன்றும் தன் நிழல் தலை கீழது ஆகி நின்று அலையினும், நேராய்ப் பாரில் தோன்றிய தன்னை நோக்கிடில் அந்த பாழ் நிழல் பொய்யாமே.
--
சத் சித் ஆனந்த நிலைக்கு எதிரானது பொய், சட, துயர் நிலை. இது நாம் சாதாரணமாக இருக்கும் நிலை. ஞான விசாரம் செய்து முன்னேறி அந்த நிலையில் இல்லாவிட்டாலும் இன்னும் சத், சித், ஆனந்தம் வரவில்லை. விசாரத்தால் உடல், மனம், அந்தக்கரணம் ஆகியவற்றை நீக்கி பார்க்கும் போது அப்படி ஒரு நிலை வரக்கூடும். வெறும் பாழாக தோற்றம் இருக்கலாம். இதை முன்னேயே பாத்து இருக்கோம் இல்லையா?
---------------
பார்க்க முதல் பாகம்- தத்துவ விளக்கம்- 70:
ஆசாரியர் உபதேசித்தப்படி அநுஷ்டித்து அதற்கு பின் சீடன் வினாதலைக்கூறல்: பஞ்ச கோசமும் விட்டு அப்பாற் பார்க்கின்ற பொழுது பாழே (சூன்யமே) விஞ்சியது. (மீதியாக இருந்தது). அது அல்லாமல் வேறொன்றும் தெரியக் காணேன். அஞ்சன (மை போல கருத்த) இருளையோ நான் அகமென (நானென) அநுபவிப்பேன்? வஞ்சமில்[லாத] குருவே என்ற மகன் மதி தெளியச் சொல்வார்.
----------------
அப்போது என்ன செய்வது?
நாம் யார் ன்னு தெரிந்து கொள்ள நீரில் நம் தோற்றத்தை பார்க்கிறோம். அது அலைவதாக தோணுகிறது. இதை விசாரித்து தெரிந்து கொள்ள கரையில் நிற்கிற நம்மையே நாமே பார்க்க வேண்டும். உண்மையில நாம் அலையலை. அலைவு நீரோட சலனத்தினால் ஏற்பட்டதுன்னு புரியும். அப்போது நம் உண்மை சொரூபம் தெரியவரும்.
அதுபோல இருளை பார்க்காமல், பார்க்கிற நாம் யார்ன்னு பார்க்க வேண்டும். அப்ப நம்மை நாம் சரியாக பார்ப்போம்.

Monday, August 17, 2009

பிரமம் ஒன்றே எப்போதும் இருப்பது...



103.
மேவு மண்ணிலவ் வியத்தமே வியத்தமாம் விவகரித் திடவேண்டில்
நாவி னான்மண்ணைக் குடமென்ப ரக்குட நசிப்பது நாவாலே
பாவு நாமரூ பங்களை மறந்துமண் பார்ப்பதே பரமார்த்தம்
சீவ பேதகற் பிதங்களை மறந்துநீ சின்மய மாவாயே

மேவு மண்ணில் அவ்வியத்தமே (மறைந்திருந்த கட சக்தியே) வியத்தமாம். (குயவனின் செய்கைக்கு பின் கடமென வெளிப்படும்.) விவகரித்திட வேண்டில், நாவினால் மண்ணைக் குடமென்பர். அக் குடம் நசிப்பது (மண்ணாவது) நாவாலே. பாவும் (பாவனையான) நாம ரூபங்களை மறந்து மண் பார்ப்பதே பரமார்த்தம். [அது போல] சீவ பேத கற்பிதங்களை மறந்து நீ சின்மயமாவாயே.
--
சாதாரணமான மண்னை குயவன் எடுத்து சக்கரத்தில சுத்தி ஒரு குடம் செய்கிறான். அங்க இருப்பது மண்தான் ஆனாலும் அதற்கு ஒரு குறிப்பிட்ட உருவம் இருக்கு. அதனால அதை குடம் என்கிறோம். குயவனின் செயலுக்கு முன்னே மண்ணில் மறைந்து இருந்த சக்தியே கிரியைக்குப்பின் காரியமாக குடம் ன்னு வெளியானது. மண்ணை தவிர குடம் இல்லை. அந்த குடம் உடைந்து போனால் அதையே மீண்டும் மண் என்போம். ஆக குடம் என்பது வாய்சொல் மட்டுமே.

குடம் உண்டாகும் முன் மண் இருந்தது. உண்டான போது குடமாக தோன்றுவதும் மண்ணே. உடைந்த பின் இருப்பதும் மண்ணே. ஆக மூன்று காலத்திலும் இருப்பது மண்ணே. காரியம் ஆன குடம் என்பது நம் வாயால சொல்லப்பட்டு பின்னே அழிஞ்சு போச்சு. அதனால மண்ணே சத்தியம். குடம் என்கிறது நடுவில வந்து போன பொய்யே. நிலை இல்லாதது.

அது போல பிரமம் ஒன்றே எப்போதும் இருப்பது. இடையில் வந்து போகும் தோற்றங்களான நாம ரூப உலகம் பொய்யாகும்.

நாம ரூப நாட்டம் விடின் நமது சொரூபம் தோன்றிவிடும். -குமார தேவர்.

வெளிச்சமும் இருட்டும் முரணா இருக்கு. எங்க இருட்டு இருக்கோ அங்க வெளிச்சம் இல்லை. எங்க வெளிச்சம் இருக்கோ அங்க இருட்டு இல்லை.

அதப்போல எங்க பிரம்ம சொரூபம் தோணுதோ, அங்க நாம ரூபமா வஸ்துக்கள் தோணாது. அந்த நிலையிலேயே நின்னா நாம ரூப தோற்றங்கள் ஒழிஞ்சே போகும்.


Friday, August 14, 2009

மாயையை நீக்க வழி?



[பிரம்மத்தின் சித் சக்தி அவற்றில் இல்லாவிட்டால் இந்த ஒழுங்கு இருக்காது.].......

இந்த ஒழுங்கு எவ்வளோ தூரம் இருக்குன்னா சைன்ஸ் ன்னு சொல்லி விதிகள் எல்லாம் வரையறுக்க முடியுது. இன்ன இன்ன ரசாயனத்தை கலந்தா இது உருவாகும் ன்னு சொல்ல முடியுது. உப்பை தண்ணில கரைச்சு சர்க்கரை வரதில்லை.
இந்த ஒழுங்கைப்பாத்துட்டு இதுவே எல்லாம்ன்னு மயங்கிப்போறோம். அதுதான் தப்பு. சரிப்பா எல்லாம் ஒழுங்காதான் நடக்குது, ஏன் அப்படின்னு சொல்லுன்னு கேட்டா பதில் வராது. அது இயற்கை விதின்னா இயற்கை எங்கிருந்து வந்தது?

இந்த மாயா உலகத்தில இருந்து கொண்டு நாம எந்த மட்டத்திலே -ப்ளேன்ல- இருக்கோமோ அதுக்கு தகுந்த படி எல்லாத்தையும் பார்க்கலாம். பூலோகத்தில இருந்து கொண்டு விஞ்ஞான விதிகள் படியும் ஒழுங்கை பார்க்கலாம். தேவ உலக விதிகள் படி பூஜை ஹோமங்கள் பலன் தரதையும் பார்க்கலாம். பித்ரு லோக நியாயங்கள் படி செய்ய வேண்டியதை செய்யாததற்கு பலனாக பிரச்சினைகளும், செய்ய வேண்டியதை செய்து நிவர்த்திகள் கிடைக்கிறதையும் பார்க்கலாம். ஞானியா இருந்து கொண்டு இதைப்பத்தி எல்லாம் கவலைப்படாம, நடக்கிறதை வேடிக்கையும் பார்க்கலாம்.
--
என்னங்க இது? மாயையை யாராலும் அறிய முடியாது, இன்னதுன்னு சொல்ல முடியாது. இந்த பிரபஞ்சம் என்கிற பயிருக்கு இதுவே வித்து ன்னு நீங்க சொன்னா அதை நீக்குவது எப்படி? நீக்க முடியாதுன்னா எப்படி பிரமத்தை ஒரே ரூபமாக பார்க்க முடியும்? ஒரே ரூபமாக பார்த்தாதானே அது முத்தி ஆகும்?

101.
அத்வைத நிச்சயம் உண்டாகும் பொருட்டு வினா
ஆர்க்குங் காணவு மறியவும் படாதென்று மவாச்சிய வடிவென்றும்
சேர்க்கு நாம ரூபப்பயிர் வித்தென்றுஞ் செப்பிய சிற்சத்தி
பேர்க்கு மாறெங்ஙன் பிரித்திடப் படாதெனிற் பிரமபா வனையொன்றாப்
பார்க்கு மாறெங்ஙன் முத்தியா குவதெங்ஙன் பரமசற் குருமூர்த்தி

ஆர்க்கும் (யாருக்கும்) காணவும் அறியவும் படாது என்றும், அவாச்சிய (சொல்ல இயலாத) வடிவென்றும் சேர்க்கு நாம ரூப[மாகிய] பயிர்[களின்] வித்து என்றும் செப்பிய சிற்சத்தி (மாயையை), பேர்க்குமாறு எங்ஙன்? (நீக்கும் வழி எது?) பிரித்திடப் படாதெனில் பிரம பாவனை ஒன்றாக (ஸ்வரூப சமாதியில் அத்வைதமாக) பார்க்குமாறு எங்ஙன்? (பார்க்கும் விதம் எப்படி?) (அத்வைதமாக பார்க்க முடியாதானால்) முத்தியாகுவது எங்ஙன்? பரம சற்குரு மூர்த்தி.


102.
வாயுத் தம்பனஞ் சலத்தம்ப னம்மணிமந்திர மருந்தாலே
தேயுத் தம்பனஞ் செய்திடி லதிலதிற் சிறந்தசத் திகளெங்கே
நீயச் சச்சிதா நந்தமாய் வேறொன்று நினைந்திடா திருப்பாயேல்
மாயச் சத்திபோ மீதன்றி மந்திர மறைகளிற் காணோமே

வாயு தம்பனம், சல (நீர்) தம்பனம், தேயு (நெருப்பு) தம்பனம், [ஆகியவற்றை] மணி மந்திர மருந்தாலே செய்திடில் அதில் அதில் சிறந்த சத்திகள் எங்கே? நீ அச் சச்சிதாநந்தமாய் வேறு ஒன்று நினைந்திடாது இருப்பாயேல் மாயச் சத்தி போம். ஈது அன்றி மந்திரம் [ஏதும்] மறைகளில் காணோமே.
மனோ நாசம் செய்தலே மாய சக்தியை நீக்கும் விதம். அப்போது அத்வைதம் சித்திக்கும். இது அன்றி வேறு வழி ஏதும் இல்லை.
--
மணி, மந்திர, மருந்தாலே வாயு, நீர், அக்னி ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரும்போது அவற்றின் சிறப்பான சக்திகளான சலனம், திரவத்தன்மை, சூடு ஆகியன மறைந்து போச்சு இல்லையா? அது போல நீ ஒரே பிரமமான நிலையிலே வேற ஒண்ணும் நினைப்பு வராம நின்னா மாயை மீண்டும் வராம அழியும். இது தவிர வேறு வழி ஏதும் வேதங்களில சொல்லப்படலை.


Thursday, August 13, 2009

அசத்தான மாய சக்தி உளதென்பது எப்படி?



இறப்பும் பிறப்பும் பொருந்த- எனக்
கெவ்வணம் வந்ததென் றெண்ணிநான் பார்க்கில்
நினைப்பு மறப்புமாய் வந்த-வஞ்ச
மாயா மனத்தால் வளர்ந்தது தோழி-சங்கர
தாயுமானவர்

இங்கே கொஞ்சம் நின்னு சுதாரிச்சுக்கலாம்.
நாம் பார்க்கிற அனைத்தும் பிரம்மமே. அதன் பல்வேறு வெளிப்பாடுகளே. இது அத்வைத நோக்கிலே பாத்து பாத்து யோசிச்சு கொஞ்சம் கொஞ்சம் அனுபவமும் கிட்டி உறுதிப்படுத்திக்கொள்கிறது.
ஆனா நாம் அந்த இடத்துக்கு வரும் வரை கவனமாக இருக்கணூம். நம்ம கால்கள் எந்த பிரபஞ்சத்திலே ஊன்றி இருக்கோ அதுக்கான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடந்துக்கணும். யானைக்கதையை கிருஷ்ண மூர்த்தி சார் எழுதினது நல்ல பொருத்தம். ப்ரம்ம நிலைக்கு போகாம, அதோட டேஸ்ட் கூட கிடைக்காம நீயும் பிரம்மம் நானும் பிரம்மம் ன்னு பேசிகிட்டு திரியறது பிரச்சினையிலேதான் கொண்டுவிடும்!

அதுக்குன்னு நாம பாக்கிற இந்த லோகமே நிஜம்ன்னும் நினைச்சுடக்கூடாது. நாம் ஏதோ ஒரு நாடகத்திலே மாட்டிகிட்டு இருக்கோம். அதிலே நமக்கும் ஒரு ரோல் இருக்கு. அதை சரியாவே செய்துவிட்டு போவோம். அதே சமயம் நாம் நடிக்கிறது ஒரு நாடகம் என்கிற நினைப்பும் இருக்கட்டும்!

99.
அசத்தான மாய சக்தி உளதென்பது எப்படி?

இல்லை யாகிய சத்தியை யுண்டென்ப தெப்படி யெனக் கேட்கில்
புல்லை யாதியா மசேதனப் பொருளெலாம் பூத்துக்காய்ப் பனபாராய்
நல்லை யாமக னேயதிற் சிற்சத்தி நடந்திடா திருந்தக்கால்
தொல்லை யாய்வருஞ் சராசர வுயிர்க்கெலாஞ் சுபாவங்கள் வேறாமே

இல்லையாகிய சத்தியை உண்டென்பது எப்படி எனக் கேட்கில், புல் ஆதியாம் அசேதனப் பொருளெலாம் பூத்துக் காய்ப்பன பாராய். நல்லையாம் மகனே அதிற் சிற்சத்தி நடந்திடாது (செல்லாது) இருந்தக்கால்,(இருப்பின்) தொல்லையாய் (தொன்று தொட்டு) வரும் சராசர உயிர்க்கெல்லாம் சுபாவங்கள் வேறாமே.
--
இன்னது என சொல்ல முடியாத இந்த சக்தி இருக்கிறது என்று எப்படி சொல்வது? நகராத புல் பூண்டு, செடி முதலியவை வளர்வதும், பூக்கும் காலத்தில் பூப்பதும், காய்க்கும் காலத்தில் காய்ப்பதும் பழுத்து உதிரும் காலத்தில் பழுத்து உதிருவதும் பார்ப்பாயாக. பிரம்மத்தின் சித் சக்தி அவற்றில் இல்லாவிட்டால் இந்த ஒழுங்கு இருக்காது.

"மெதட் இன் தி மேட்னஸ் "ன்னு ஆங்கிலத்தில சொல்கிறது போல, பொய்யானாலும் இதில ஒரு ஒழுங்கு இருக்கே. இயற்கையை பாத்தா ஒவ்வொரு விஷயத்திலும் இதை பாக்க முடியுது. உண்மையில்லை சினிமாதான்னாலும் நல்ல சினிமாவா இருக்கு. தீ எப்பவுமே சுடுது. சூரியன் ஒரு ஒழுங்கிலேயே உதிச்சு மறையுது. இதுக்கெல்லாம் பின்னால ஒரு சக்தி இல்லைனன்னா இப்படி நடக்காது. சுபாவங்கள் எப்போ வேண்ணா எப்படி வேண்ணா மாறும்.

100.
கருப்பை முட்டையுட் பறவைகள் பலநிறங் கலந்தசித் திரம்பாராய்
அருப்ப மாம்சத்தி நியமமில் லாவிடி லரசிலா நகர்போலாம்
நெருப்பு நீரதாங் கசப்புமே மதுரமா நீசனு மறையோதும்
பொருப்பு மேகமாங் கடலெலா மண்களாம் புவனமிப் படிபோமே

கருப்பை முட்டையுள் பறவைகள் பல நிறம் கலந்த சித்திரம் பாராய். அருப்பமாம் (அருவமாம்) சத்தி நியமம் இல்லாவிடில் அரசிலா நகர் போலாம். நெருப்பு நீரதாம் (நீர் ஆகும்). கசப்பும் மதுரமாகும். நீசனும் மறையோதும். பொருப்பு (நகராத மலைகளும்) மேகமாம். கடல் எலாம் மண்களாம். புவனம் இப்படி போமே.
[பிரம்மத்தின் சித் சக்தி அவற்றில் இல்லாவிட்டால் இந்த ஒழுங்கு இருக்காது.]


Wednesday, August 12, 2009

நாம யார்ன்னு மறந்து போனதுதான் மாயை.




நாம யார்ன்னு மறந்து போனதுதான் மாயை. மறப்பு உள்ளவரை நினைப்பு உண்டு. இந்த மறப்பு நினைப்பு மனசோட தொழிலா இருக்கிறதால மனசே மாயை.
மனமன மெங்குண்டு மாயையு மங்குண்டு
மனமன மெங்கில்லை மாயையு மங்கில்லை
மனமாயை யன்றி மற்றொன்றுமில்லை
பினையாய வேண்டாம் பிதற்றவும் வேண்டாம்
தனையாயந் திருப்பது தத்துவம்தானே
-பாடுதுறை

இந்த மனசோட உருவ நாசம் சீவன் முத்தியிலும், அருவ நாசம் விதேக முத்தியிலும் சித்திக்கும். அதனால மாயை அழியக்கூடியதுதான்.

அதனால மாயை அநாதி, அநித்தியம்; பிரம்மம் அநாதி, ஆனா நித்தியம்.

பிரபஞ்சம் மாயா சொரூபம். பெயர் உருவம் இல்லாம பிரபஞ்சம் இல்லை. இந்த பெயர் உருவத்தில இருக்கிற நாட்டத்தை விட்டு விட்டா மாயையை ஒழிச்சதா ஆகும். (ம்ம்ம்ம்.... சுலபமா சொன்னாலும் இதை விட முடியலையே) மனமும் மாயை ஆனதாலும், மனசுக்கு நாம ரூபத்திலேயே பற்று இருக்கிற படியாலும், மனமும் ஒழிஞ்சதாகும். அப்ப ஆன்ம சொரூபம் தோன்றிடும்.
பிரபஞ்ச தோற்றமான மாயையால நமக்கு ஒரு கெடுதியும் இல்லை. :-)
என்ன, அதை நிஜம்ன்னு நினைக்கக்கூடாது.
:-))
அப்படி நினைக்கிற அஞ்ஞானமே அந்த பந்தத்தை உருவாக்கி இருக்கு.

சினிமாவில ஏதோ காட்சியை பாத்து மோகிக்கிறோம். எப்ப இது உண்மையில்லைன்னு திடமா மனசில உறைக்குமோ அப்ப அந்த மோகம் போயிடும். எப்ப போகும்? உண்மையை பாக்கிறப்ப போகும். அந்த காலத்தில சினிமா பாத்து கதாநாயகி படுகிற கஷ்டத்தைப்பாத்து பிழியப்பிழிய அழுவாங்க பாக்கிறவங்க. "ச்சே! என்ன இப்படி அழறோம்! இது முட்டாள்தனம்!” ன்னு சில சமயம் தோணும். அப்போ திரையை விட்டு பார்வையை விலக்கி வேற எங்கேயாவது பாத்தா, கொஞ்ச நேரத்தில மனசு சமநிலைக்கு வந்துடும்.
கயிறைப்பாத்து பாம்புன்னு நினைச்சு மயங்கிறப்ப, எப்ப அதிஷ்டானமான கயிறு தெரிய ஆரம்பிக்குமோ அப்ப ஆரோபமான பாம்பு காணாம போகும். அது போல எப்ப தன் நிஜ சொரூபத்தை பாக்க ஆரம்பிக்கிறோமோ அப்ப "ஹா! இதுதான் நாம்.” இது மாயை இல்லைன்னு இயல்பாகவே தோன்றிடும். அப்ப இந்த பிரபஞ்சமும் பொய்ன்னு விளங்கிடும்.



Tuesday, August 11, 2009

பிரபஞ்சத்தை தோற்றுவிக்கும் மாயாச் சக்தி பிரமத்தை தவிர வேறாக இருக்குமா?



98.
பிரபஞ்சத்தை தோற்றுவிக்கும் மாயாச் சக்தி பிரமத்தை தவிர வேறாக இருக்கும்.
சத்தி சத்தனைத் தவிரவே றன்றுகாண் சத்தனா மாயாவி
வித்தை காட்டிய விந்திர சாலம்பொய் வித்துவான் மெய்போலப்
புத்தி மைந்தனே சத்திமா னாகிய பூரண வான்மாவின்
வத்து நிண்ணயஞ் சொன்னதிட் டாந்தத்தின் வழிகண்டு தெளிவாயே

[இந்திர ஜால] சத்தி சத்தனைத் [இந்திர ஜாலக்காரனை] தவிர வேறன்று காண். சத்தனாம் (சக்தியுடைய) மாயாவி வித்தை காட்டிய இந்திர சாலம் பொய். வித்துவான் மெய் போல- புத்தி மைந்தனே, சத்திமானாகிய பூரண ஆன்மாவின் வத்து நிண்ணயம் சொன்ன திட்டாந்தத்தின் வழியாக கண்டு தெளிவாயே.
--
இந்திர ஜாலம் காட்டும் மாந்திரீகனை தவிர அவன் சக்தி வேறானதல்ல. அது அவனோட வெளிப்பாடேதான். அது போல மாயை பிரமத்துக்கு வேறானதல்ல. அதனால் வஸ்து ஒன்றே, இரண்டல்ல. மாந்திரீகன் செய்த காரியங்கள் பொய்யாகி அவன்மட்டும் மெய்யாக இருப்பது போல மாயையும் மாயா காரியங்களும் பொய்; பிரம்மம் மெய்.

மாயை, அவித்தை, ஆவரணம், விக்சேபம், அஞ்ஞானம், சத்தி, பிரகிருதி என்ற எல்லா சொற்களும் ஒன்றையே குறிக்கும். மாயையின் தொழில்கள் பல. ஆதலால் வேறு வேறு பெயர்கள் வந்தன. மாயைக்கு உற்பத்தின்னு ஒண்ணு இல்லை என்கிறதால அது அநாதி. அதுக்கு பல வெளிப்பாடுகள் இருந்தாலும் முக்கியமா இருக்கிறது ஆவரணமும் விட்சேபமும்தான்.

மாயை அநாதியானதால அதன் காரியமான பிரபஞ்சமும் அநாதி. எப்படி கானல் நீர் பொய்ன்னு உணர்ந்த பின்னாலும் அது தோன்றிகிட்டுதான் இருக்கோ அப்படி பிரபஞ்சம் மாயைன்னு தெரிஞ்ச பின்னும் அது தோன்றவே தோன்றும். கானல் நீர் சத்தியமில்லைன்னு எப்படி நமக்கு தெரியுமோ அதே போல பிரபஞ்சம் சத்தியமில்லைன்னு ஞானிக்கு தெரியுது.
இதனால பிரம்மம் மாதிரி மாயையும் நித்தியமேன்னு வாதிக்கிறவங்க உண்டு. ஏன்னா பிரம்மம் இருக்கிற வரை மாயையும் இருக்கும். ஆனால் ஒரு தனி சீவனைப்பொறுத்த அளவில இதை நீக்கிக்கொள்ளலாம். அந்த சீவனை பொறுத்த அளவில அது அநித்தியமே. ஞானியை பொறுத்த வரை மாயை இல்லை.

கொஞ்சம் யோசிச்சுப்பாத்தா அனுபவத்தில மாயை மனசைத்தவிர வேற ஒண்ணும் இல்லை.

மாயை யெனுமிவ் வுரைக்கருத்த
மதிக்கின் யாதொன் றிலாதததுவே
மாயை யெனலிப் படியிருக்க
மதிப்பரதனை இரு வகையாய்
மாயை மெய்யென் றுரைத்திடுவர்
மயக்கப்பட்டு தனைமறந்தோர்
மாயை பொய்யென் றுரைத்திடுவர்
மயக்க நீங்கி தனையறிந்தோர்
-அத்துவித உண்மை - குமாரத்தேவர்
மாயை யெனும் இவ்வுரைக் கருத்த மதிக்கின் யாது ஒன்று இலாதததுவே. மாயை எனல் இப் டியிருக்க, மதிப்பர் அதனை இரு வகையாய்.மாயை மெய் என்று உரைத்திடுவர் மயக்கப்பட்டு  தனை மறந்தோர். மாயை பொய் என்றுரைத்திடுவர் மயக்க நீங்கி  தனையறிந்தோர்.
-அத்துவித உண்மை - குமாரத்தேவர்

Monday, August 10, 2009

மித்தையான சகம் தோன்றுதலால் மித்தையான மாயா சக்தி உள்ளது .....



96.
அருவ மாகுமா யாவிவித் தைகள்விளை யாடுமுன் றெறியாவே
உருவ மாம்பல கந்தர்ப்ப சேனையா யுதித்தபின் வெளியாகும்
பிரம சத்திக ளநந்தமா மதைக்கண்டு பிடித்திடல் கூடாதே
பரவு பூதங்கள் கண்டநு மானத்தாற் பலருக்கும் வெளியாமே

அருவமாகும் மாயாவி வித்தைகள் விளையாடு முன் (யாருக்கும்) தெரியாவே. உருவமாம் பல கந்தர்ப்ப சேனையாய் உதித்த பின் வெளியாகும். (தெரியும்) பிரம சத்திகள் அநந்தமாம் அதைக்கண்டு பிடித்திடல் கூடாதே. பரவு பூதங்கள் கண்டு அநுமானத்தால் பலருக்கும் வெளியாமே (தெரிய வரும்)

97.
மித்தையான சகம் தோன்றுதலால் மித்தையான மாயா சக்தி உள்ளது என அறிக.
காரி யங்களுஞ் சத்தியா தாரமுங் காணுமற் றதுமாயம்
பாரி னின்றமா யாவியுஞ் சேனையும் பார்ப்பவர் கண்காணும்
வீரி யந்திகழ் வித்தையா யினசத்தி வெளிப்படாதது போலே
பேரி யற்பிர மத்துக்கு முலகுக்கும் பிறிதுசத் திகளுண்டே

[ஜீவேஸ்வர ஜகங்களான சக்தியின்] காரியங்களும் (மாயா) சத்தி ஆதாரமும் (ஆன பிரமமும்) காணும்.(காணப்படும்.) (ஆனால் அச் சக்தியான) மற்றது மாயம். பாரின் (பூமியில்) நின்ற மாயாவியும் சேனையும் பார்ப்பவர் கண் காணும். [ஆனால்] வீரியந் திகழ் (பராக்கிரமான இந்திர ஜால) வித்தையாயின சத்தி வெளிப்படாது. அது போலே, பேர் இயல் (மகத்துவமுள்ள) பிரமத்துக்கும் உலகுக்கும் பிறிது சத்திகள் உண்டே.
--
இந்த மாயை தோற்றம் இல்லாதது. ஒரு இந்திர ஜாலக்காரனுடைய மணிமந்திர ரூபமான சக்திக்கு உருவமில்லை. அதனால அது தோற்றுவிக்கப்படுவது இல்லை. ஆனால் அவன் விளையாடியபின் அதன் காரியமாக மாயா நகரங்கள், மக்கள், மிருகங்கள் ஆகியன எல்லாம் தோன்றுகின்றன. இந்த மாயா தோற்றத்தைக்கண்டு "ஓஹோ! ஒரு மாய சக்தி வேலை செய்கிறது" என்று உணர்கிறோம். இது போலவே பிரம்மத்தோட எண்ணிக்கை இல்லாத சக்திகள் இருக்கு. அவற்றை யாராலும் கண்டு அறிய இயலாது. அந்த சக்திகளோட விளைவாக இருக்கிற எங்கும் பரவி நிற்கும் இந்த மாய பிரபஞ்சத்தை பார்ப்பதாலேயே நாம் ஊகத்தால் அந்த சக்திகளை உணர்ந்து கொள்கிறோம்.


Saturday, August 8, 2009

மாயை என்கிறது எப்படிப்பட்டது?



மாயை என்கிறது எப்படிப்பட்டது? மாயை யார் யாருக்கு இருக்கு? அது எப்படி வந்தது? அது வருவானேன்? மாயை என்பது பிரமத்திலிருந்து வேறா?
அப்படியானால் வஸ்துவும் (பிரம்மமும்) ஒரு பொருள் இல்லாமல் இரண்டு ஆகுமே. எல்லாமே பிரம்மம் என்கிறதுக்கு இது ஒத்துப்போகலையே. மாயை என்பதும் பிரமமும் ஒண்ணுதான்னா மாயா வஸ்து போல் பிரம வஸ்துவும் பொய் ஆகுமே?
(இந்த பிரம்ம விசாரணையில இறங்கிய போது எனக்கு ரொம்ப புதிரா இருந்தது இது.)

94.
மாயை யென்பதே துடையரா ரெப்படி வந்தது வருவானேன்
மாயை யென்பது பிரமத்தின் வேறெனின் வஸ்துவு மிரண்டாமே
மாயை யென்பதும் பிரமமு மொன்றெனின் வஸ்துவும் பொய்யாமே
மாயை யென்றமே கங்களுக் கொருசண்ட மாருத குருமூர்த்தி

மாயை என்பது ஏது? உடையவர் யார்? எப்படி வந்தது? வருவானேன்? மாயை என்பது பிரமத்தின் (பிரமத்திலிருந்து) வேறு எனின் வஸ்துவும் இரண்டாமே. மாயை என்பதும் பிரமமும் ஒன்றெனின் வஸ்துவும் (மாயா வஸ்து போல் பிரம வஸ்துவும்) பொய்யாமே. மாயை என்ற மேகங்களுக்கு ஒரு சண்ட மாருதம் (போன்ற) குருமூர்த்தி.
--
95.
அதனை யின்னதென் றுரைத்திடப் படாமையா லவாச்சிய வடிவாகும்
இதுத னக்குள துடலியா னுலகுமெய் யெனுமவ ருடையோர்கள்
கதையி லாதபொய் வந்ததிப் படியென்று கண்டபே ரிலைமைந்தா
விதன மாயையேன் வந்ததென் றாற்புத்தி விசாரமற் றாதனாலே

அதனை இன்னதென்று உரைத்திடப் படாமையால் அவாச்சிய வடிவாகும். இது தனக்கு உளது, உடல் யான், உலகு மெய் எனும் அவர் (பேர்கள்) உடையோர்கள். கதை இல்லாத (இன்ன விதம் என சொல்ல முடியாத) பொய் வந்தது இப்படி என்று கண்ட பேர் இல்லை மைந்தா. விதன (துன்பமான) மாயை ஏன் வந்தது என்றால் புத்தி விசாரம் அற்றது அதனாலே.
--
மாயை இப்படிப்பட்டது ன்னு சொல்ல முடியாது. அதனால அது சொல்லால் சொல்லப்பட முடியாத வடிவானது (அநிர்வசனீயம்). யார் நான் எனது என்கிற பற்று உடையவராக இருக்கிறாங்களோ அவங்க மாயை உடையவர்கள். இப்படிப்பட்டதுன்னு சொல்ல முடியாத அதை இப்படி உருவாயிற்று என்று கண்டவரும் யாரும் இல்லை. ஏன் வந்தது என்றால் "நான் யார்? இந்த உலகம் என்கிறது என்ன? இது எப்படி வந்தது?” என்ற விசாரணை இல்லாததால் வந்தது.

Friday, August 7, 2009

கனவில பாத்ததை பொய்ன்னு சொல்கிறது தப்புன்னா...



குரு சொல்கிறார்: மகனே கனவில பாத்ததை பொய்ன்னு சொல்கிறது தப்புன்னா, அற்பமான மாயையில தோன்றிய சகத்தை பொய் என்கிறதும் தப்புதான். கனவில பாத்ததை பொய்ன்னு சொல்கிறது தப்பு இல்லைன்னா, மாயையால தோன்றிய சகத்தை பொய் என்கிறதும் தப்பு இல்லை.
வேதத்தோட ஞான காண்டத்தில பொய்ன்னு சொல்லப்பட்ட உருவங்கள் முதலானதை வழி பட்டவங்களை புண்ணியவான்கள்ன்னு புராணங்கள் சொல்லுதுங்க. அப்படி இருக்க வேதம் உண்மைன்னு சொன்னதை ஆமோதிக்கிற ஞானிக்கு குற்றம் யார் சொல்ல முடியும்? பெயர் உருவம் கொண்ட மாயா காரியங்கள் எப்பவுமே மித்தை. எங்கேயும் இருக்கிற சச்சிதானந்த சொரூபம் மட்டுமே சத்தியம்.

எப்படி நாம தூக்கத்திலேந்து முழிச்சதும் நாம் கண்டது கனவுன்னு ரொம்ப சுபாவமா தோணுதோ, அதே போல அவித்தை ஒழிஞ்ச ஞானிக்கு இந்த பிரபஞ்சம் பொய்ன்னு இயல்பா தோணுது. அதனால அவன் அப்படி சொல்கிறது குற்றம் இல்லை.

ஆனா இது அந்த பிரம்மஞானியைப்பத்தி சொல்கிறது மட்டுமே. நாம அப்படி இல்லையே! நான் சீவன் என்கிற நினைப்பு போகாமல், ஆத்ம தரிசனம் கிட்டாமல், அஞ்ஞானத்தில இருந்துகிட்டு, ஏதோ சிலதை படிச்சுட்டு, அதில ஆழ்ந்து போக பாக்காம; "எல்லாம் பொய்! கோவிலாவது, குளமாவது; அதில ஒண்ணும் இல்லை. எல்லாம் நமக்குள்ளே இருக்கு" ன்னு பிதற்றிக்கிட்டு திரியக்கூடாது. அப்படி செய்கிறது அவங்களையும் முன்னேற்றாது; மத்தவங்களையும் குழப்பும். இதனால அவங்களுக்கு நரக வேதனை கிடைக்குமாம்.

92.
சொற்ப னந்தனிற் கண்டதைப் பொய்யென்று சொல்வது பிழையானால்
அற்ப மாயையிற் றோன்றிய சகங்களை யசத்தெனல் பிழையாமே
சொற்ப னந்தனிற் கண்டதைப் பொய் யென்று சொல்லலாமெனிற் மைந்தா
அற்ப மாயையி றோன்றிய சகமெலா மசத்தியமெனலாமே

சொற்பனந்தனில் (கனவில்) கண்டதைப் பொய் என்று சொல்வது பிழையானால், அற்ப மாயையில் தோன்றிய சகங்களை அசத்து எனல் பிழையாமே. சொற்பனந்தனில் (கனவில்) கண்டதைப் பொய் என்று சொல்லலாம் எனில் மைந்தா, அற்ப மாயையில் தோன்றிய சகமெலாம் அசத்தியம் எனலாமே.

93.
பொய்யை மெய்யென்ற மூடர்புண்ணியரென்று புராணங் கூப்பிடுமானால்
மெய்யை மெய்யென்ற ஞானிக்குக் குற்றங்கள் விதித்தசாத் திரமுண்டோ
பொய்ய தேதெனி னாமரூ பங்களாம் பூதமா கியமாயை
மெய்ய தேதெனிற் சத்திதானா னந்தமாய் வியாபிக்கு மான்மாவே

பொய்யை மெய்யென்ற மூடர் புண்ணியர் என்று புராணம் கூப்பிடுமானால், மெய்யை மெய் என்ற ஞானிக்கு குற்றங்கள் விதித்த சாத்திரமுண்டோ? பொய்யது ஏது எனில் நாம ரூபங்களாம் பூதமாகிய மாயை. மெய்யது ஏது எனில் சச்சிதானானந்தமாய் வியாபிக்கும் ஆன்மாவே.
--
ஸ்ருதி முதலியவற்றால் ஞான காண்டத்தில் பொய் என்று தள்ளப்பட்ட சொரூபம் முதலியவற்றை சத்தியம் என்று வழி படுவோர்களை புண்ணியவான்கள் என புராணங்கள் கூறும். வேதம் சத்தியம் என்று கூறிய உண்மையை உண்மை என சாதிக்கும் ஞானிக்கு குற்றங்கள் விதிக்கும் சாத்திரம் ஏது? ஏதும் இல்லை. நாம ரூபங்கள் ஆகிய மாயா காரியங்கள் அனைத்தும் மித்தை. எங்கும் உள்ள சச்சிதானந்த சொரூபமே சத்தியம்.
--
உறங்கி விழித்தவன் கண்ட கனவு பொய் என உணர்வது போல பிரம்ம அனுபவம் கிடைக்கப்பெற்ற ஞானி எல்லாம் மித்தை என்கிறான். அது குற்றம் ஆகாது. ஆனால் அத்தகைய அனுபவம் இல்லாது புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு எல்லாம் பொய், கோவிலில் என்ன இருக்கிறது? எல்லாம் நமக்குள் இருக்கிறது என்று பேசி திரிபவர்கள் தானும் கெட்டு மற்றவரையும் கெடுப்பார்கள்.


Thursday, August 6, 2009

எல்லாம் பொய்ன்னு சொல்கிறது தப்பில்லையா?



90.
மாயை யென்பது பொய்யெனி லதுபெற்ற வகையெலாம் பொய்யாமே
தாயை யன்றிமக் களுக்கொரு பிறவியுஞ் சாதியும் வேறுண்டோ
சேயசொர்க்கமு நரகமு நன்மையுந் தீமையும் பாராமல்
தூய சத்துச்சித் தானந்த பூரண சொரூபமா யிருப்பாயே

மாயை என்பது [ஸ்ருதி சொல்வதாலும், விசாரித்ததில் 9 விதத்தினாலும் நிச்சயிக்கப்படாததாலும், ஞானிகளும் அப்படி சொல்வதாலும்] பொய்யெனில் அது பெற்ற (அதில் இருந்து உற்பத்தியான) வகை எல்லாம் பொய்யாமே. தாயை அன்றி மக்களுக்கு ஒரு பிறவியும் சாதியும் வேறு உண்டோ? [தாய் எப்படியோ அப்படியே மக்களும்). சேய (சொல்லப்பட்ட) சொர்க்கமும், நரகமும், நன்மையும், தீமையும் பாராமல், தூய சத்து சித்தானந்த பூரண சொரூபமாய் இருப்பாயே.

[நீரின் கரையில் நின்ற புருஷனின் நிழல் தலை கீழாய் தெரிவது பொய். அது ஆடி அசைவதும் பொய். அதை விசாரிப்பதில் பயனில்லை. ஆகவே அதை பகுத்து பாராது கரையில் நின்ற தன் உண்மை சொரூபத்தை பார்த்து சுகமாயிருப்பது போல; பிரமமாகிய தன்னிடத்து தோன்றும் சீவேஸ்வர ஜகத் பொய். அதில் துறக்கமென்றும், நிரயமென்றும், புண்ணிய- பாவம், பந்த- மோட்சம் என பார்ப்பதில் பயன் இல்லை. அனித்தியமான இவற்றை பாராது நிர்மலமாயும்; சிருட்டிக்கு முன்னேயும் பின்னேயும் இருப்பதால் சன் மாத்திரமாயும்; சிருஷ்டி ஸ்திதி சம்ஹார காலங்களையும் அதில் உள்ள காரியங்களையும் விளக்கி வைத்து அறிகிறதால் சின் மாத்திரமாயும்; துவைதமற்று இருப்பதால் சுகமாயும்; சராசரங்களாய் தோன்றும் பிரபஞ்சம் பிரமமாகிய தன்னைத் தவிர வேறில்லாது இருக்கிற படியால் அகண்டமாயும்; பிரம்ம சொரூபமாயும் இரு]

நீங்க சொல்கிறதை பாத்தா பிரம்மா முதலான தேவர்கள் பொய். ஊர்ல இருக்கிற பெரியவங்க பொய். அவங்க சொல்கிறது பொய். கங்கை முதலா இருக்கிற தீர்த்தங்கள் பொய். புண்ணிய ஸ்தலங்கள், வேதங்கள், மந்திரங்கள், விரதங்கள் எல்லாம் பொய். ஆனா நடைமுறையில பாத்தா, இதை எல்லாம் நம்பி நடந்து பாவமெல்லாம் ஒழிந்து மோக்ஷமடைகிறாங்க. இப்படி இருக்கிறதை எல்லாம் பொய்ன்னு சொல்கிறது தப்பில்லையா? அது பாபமாகாதா?

91.
மாயா காரியமான பிரம தேவர் முதலிய நன்மையான பிரபஞ்சத்தையும் மித்தை என தெளிதல்:
பங்கை யாசனன் முதற்பல தேவரும் பாருள பெரியோரும்
கங்கை யாதியாந் தீர்த்தமுந் தேசமுங் காலமு மறைநாலும்
அன்க மாறுமந் திரங்களுந் தவங்களு மசத்திய மெனச் சொன்னால்
எங்க ணாயக னேயத னாற்குற்ற மில்லையோ மொழியீரே

பங்கை (தாமரை) ஆசனன் (= பிரமன்) முதல் பல தேவரும், பாருள பெரியோரும் கங்கை ஆதியாம் முதலான [புண்ணிய] தீர்த்தமும் [புண்ணிய] தேசமும் [புண்ணிய] காலமும் மறை நாலும் [சந்தஸ் முதலான] அங்கம் ஆறும் [பிரணவம் முதலான மகா] மந்திரங்களும் தவங்களும் [சுருதியின் படி வழிபட்டு, பாவம் ஒழித்து மோக்ஷம் அடைய காரணமாக கொண்டு இருக்கிறார்களே. அவற்றை] அசத்தியமெனச் சொன்னால், எங்கள் நாயகனே அதனால் குற்றம் இல்லையோ? மொழியீரே.


Wednesday, August 5, 2009

பிரம்ம ஆன்ம ஐக்கிய நிலையில்...




பிரம்ம ஆன்ம ஐக்கிய நிலையில் சீவன் என்ற தன்மை போய்விட்டது. அப்போது அடைந்து இருக்கும் நிலையே நிரந்தரமான தன் நிலை என்று புரிந்து போயிற்று. மாயை முதல் யாவும் கனவாக பறந்து விட்டன. பந்தம் முத்தி காலம் இடம் வஸ்து என ஒன்றுமே அங்கு இல்லை.

இது சகச நிஷ்டை. அதாவது சதா -எப்போதும்- நிஷ்டையில் இருப்பது.
நிஷ்டை 3 வகைப்படும்.

1. சவிகற்ப நிஷ்டை: ஆன்மாவை அணு அணுவாக தரிசித்தல் . இதில் அறிபவன், அறிவது, அறியப்படும் பொருள் என திரிபுடி உண்டு.

2. நிருவிகற்ப நிஷ்டை: ஆன்மாவை அகண்ட ரூபமாக தரிசித்தல். இது ஒரே பிரம்ம சொரூபமாக விளங்கும் அனுபவம்.

இவை சத்துவ குணத் தொழில்கள். இவற்றில் ஒருவன் எவ்வளவு காலம் இருந்தாலும் மீண்டும் வெளியாக வேண்டியதே. ஆகவே இதில் ஆரம்பமும் முடிவும் உண்டு.

3. சகச நிஷ்டை: காலம், தேசம், வஸ்து, தநு, கரணங்கள் முதலியன, தேகம், இந்திரியம் முதலிய ஒரு தோற்றமும் அரவும் இல்லாமல் மாயை இல்லாமல். இரண்டற்று எல்லாம் ஒரே அகண்டாகாரமாக முடிவில்லாமல் பிரகாசித்து ஒரே நிலையில் நிற்பது.

89.
மலடி மைந்தனுந் தாணுவிற் புருடனும் வான்மலர் முடிசூடி
இலகு கந்தர்ப்ப நகரிலே சுத்திகை யிரசதம் விலை பேசிக்
கலக மாயினா ரிடையினிற் கயிற்றராக் கடித்திரு வருமாண்டார்
அலகை யாயினா ரெனும்விவ காரத்தை யறிந்தவன் மயங்கானே

மலடியின் மைந்தனும், தாணுவின் (கைம்பெண்ணின்) புருடனும் வான்மலர் (ஆகாயத்தாமரை) முடி[யில்] சூடி இலகு கந்தர்ப்ப நகரிலே, சுத்திகை (கிளிஞ்சல்) [இல் தோன்றும்] இரசதம் (வெள்ளி) ஐ விலை பேசிக் கலகமாயினார். (சண்டை இட்டு கொண்டனர்) இடையினில் கயிற்று அரா (பாம்பு) கடித்து இருவரும் மாண்டார்; அலகை (பேய்) ஆயினார் எனும் விவகாரத்தை (கதையில் நியாயத்தை) அறிந்தவன் மயங்கானே.
--
யாரேனும் குழந்தை பெறாதவளின் குழந்தையும், கணவனை இழந்தவளின் கணவனும் ஆகாயத்தாமரை [எனும் இல்லாத மலரை] சூடிக்கொண்டு கந்தர்ப்ப நகரிலே, கிளிஞ்சலில் தோன்றும் வெள்ளியை விலை பேசி சண்டையிட்டு இடையில் கயிற்று பாம்பு கடித்து இறந்தனர், பேய் ஆகினர் என்றால் எப்படி இது அத்தனையும் நிகழ முடியாதது என்று அறிவார்களோ, அது போல சகச நிஷ்டையில் இருப்பவர் அனைத்தையும் பொய் என்று அறிவார்.


Monday, August 3, 2009

அந்தக்கரண விருத்தி இருக்கையில் அகண்டாநுபவம் எப்படி ஏற்படும்?



87.
முன் கூறிய அந்தக்கரண விருத்தி இருக்கையில் அகண்டாநுபவம் எப்படி ஏற்படும்?

வீட தாம்பரி பூரண சொரூபத்தில் விருத்திஞா னமுங் கூடிச்
சேட மாகினா லகண்டமா மநுபவ சித்தியெப் படியென்றால்
சாடி நீர்மண்னைப் பிரித்ததேற் றாம்பொடி தானுமண் ணொடுமாயும்
ஊடி ஞானமு மறிவிலா மையைக்கெடுத் தொக்கவே கெடுந்தானே

வீடு (முத்தி) அதாம் பரிபூரண சொரூபத்தில் விருத்தி ஞானமுங் கூடிச் சேடம் (சேஷம்=மீதி) ஆகினால் அகண்டமாம் அநுபவ சித்தி எப்படி என்றால், சாடி நீர் மண்ணைப் பிரித்த தேற்றாம் பொடி தானும் மண்ணொடு மாயும். ஊடி (பகைத்து) ஞானமும் அறிவிலாமையைக் கெடுத்து (அழித்து) ஒக்கவே (கூடவே) கெடும் தானே.
--
முத்தி நிலையான பரி பூரண சொரூபத்தில் அந்தக்கரண சம்பந்தம் உள்ள விருத்தி ஞானமும் கூடினால் எப்படி இரன்டில்லாத அனுபவம் சித்திக்கும் எனில்: நீர் நிறைந்த ஜாடியில் உள்ள மண்ணை நீரில் இருந்து பிரிக்க அதில் தேற்றாம் கொட்டை பொடியை போடுவார்கள். அது மண்ணை பிரித்துவிட்டு தானும் அழியும். அது போல விருத்தி ஞானமும் அஞ்ஞானத்துடனே அழியும்.

விருத்தி ஞானம் என்பது சுத்த சத்துவமாக மீதி உள்ள மாயை. மனம் சத்துவமாக மட்டுமே நிற்கும் போது இதற்கு முன் பல இடங்களில் சிதறிக்கிடந்து அலைந்த
அதன் வல்லமை முழுதும் ஒரே இடத்தில் சேருகிறது. அதுவும் மாயையேதான். ஆனால் அது சத்துவ குணமான மாயை. இது ஆவரண சக்தியை அழிக்கும் சக்தி உடையது. இதையே முன்னால் நஞ்சை மருந்தாகிய மற்றொரு நஞ்சால் முறிப்பர்; துணியில் உள்ள அழுக்கை அழுக்கான உவர் மண்ணால் நீக்குவர்; அம்பை வேறொரு அம்பால் அழிப்பர்; அது போல் சத்துவ மாயையால் அசுத்த மாயையை கெடுப்பர், பின் "பிணம் சுடு தடி போல்" அதுவும் அழியும் என்று கூறினோம்.

ஓ! அப்ப பிரம்ம அனுபவத்தில கொண்டு விட்டதும் இந்த விருத்தி ஞானமும் காணாதுபோயிடும். சரிதான்.

இந்த பிரம்ம அனுபவம் எப்படி இருக்கும்?
அது அனுபவத்திலதான் தெரியும்னாலும்...

ஒரு சக்கிரவர்த்தி எப்படி ஒரு கவலையும் இல்லாம இருப்பாரோ, ஒரு சின்ன குழந்தை அம்மாகிட்ட பால் குடிச்சதும் எப்படி திருப்தியோட ஆனந்தமா இருக்குமோ- அப்படி பிரமானந்தத்தில மூழ்கி கொஞ்சமும் கவலை இல்லாம இருப்பாங்க. மோக்ஷம், நரகம், பிறப்புன்னு ஒண்ணுமே நினைவிராது. இதெல்லாம் உண்டுன்னு சொன்னா சாதாரணமா யார்கிட்டேயாவது கொசு ஒண்ணு ஆகாசத்தை விழுங்கினதா "கொசு ஒண்ணு ஆகாசத்தை விழுங்கிவிட்டது"ன்னு சொன்னா எப்படி சிரிப்பாங்களோ அப்படி இடி இடின்னு சிரிப்பாங்க.

88.
இந்த நிச்சய முத்தரு ளநுபவ மிருப்பதெப் படியென்றால்
சிந்தை யற்றபூ மண்டல விராசனுஞ் சிசுவைபோற் சுகமாவர்
பந்த முத்திகண் மறந்துபோ முண்டென்று பலர் சொலி னகையாவர்
அந்த ரத்தையுண் டுமிழ்ந்ததோர் கொசுகெனு மவர்களை நகையாரோ

இந்த நிச்சய [அகண்டானுபவம்] [சீவன்] முத்தருள் அநுபவமிருப்பது எப்படியென்றால், சிந்தையற்ற பூ மண்டல இராசனும் சிசுவை [யும்] போல் சுகமாவர். பந்தங்கள் முத்திகள் (ஆகிய பாவனா விகல்பங்கள்) மறந்து போம். [பந்த முத்திகள்] உண்டென்று பலர் சொலின் நகையாவர் (சிரிப்பர்). அந்தரத்தை (ஆகாயத்தை) உண்டு உமிழ்ந்ததோர் கொசு எனும் அவர்களை நகையாரோ.
--
அகண்டாநுபவம் பெற்ற சீவன் முத்தர்கள் ஒரு கவலையும் இல்லாத சக்கிரவர்த்தி போலவும்; தாயில் பாலை அருந்தி சுகமான அனுபத்தில் இருக்கும் குழந்தை போலவும் பரமானந்த அனுபவத்தில் முழுகி சற்றும் கவலை இல்லாது இருப்பர். மோக்ஷம், நரகம், பிறப்பு போன்ற நினைவுகளே ஒழிந்து போகும். அவை உண்டு என யாரேனும் சொன்னால் "ஒரு கொசு ஆகாயத்தை விழுங்கிவிட்டது" என்று ஒருவன் சொன்னால் மக்கள் எப்படி சிரிப்பார்களோ அதுபோல சிரிப்பார்.


Sunday, August 2, 2009

தியானத்துக்கு இந்த சக்தி இருக்க விசார ஞானம் எதற்கு?




86.
தியானத்துக்கு இந்த சக்தி இருக்க விசார ஞானம் எதற்கு?
பிரம ரூபத்தைத் தியானித்த பேர்களும் பிரமமா குவரென்றால்
நரச ரீரமாங் குரவனே விசாரமேன் ஞானமே னென்னாதே
பரம பாவனை பரோட்சமாம் பின்பந்தப் பரோட்சமே யபரோட்சம்
திரவி சாரமா ஞானமே முத்தியாந் தீர்வையீ தறிவாயே

பிரம ரூபத்தைத் தியானித்த பேர்களும் பிரமமாகுவர் என்றால், நர சரீரமாம் குரவனே, விசாரம் ஏன்? ஞானமேன்? என்னாதே. பரம பாவனை (பிரமத் தியானம்) பரோட்சமாம். (மறைவாயுள்ளது). (தியான பரிபாகத்தின்) பின்பு அந்தப் பரோட்சமே அபரோட்சம் (புலப்படும்) ஆகும். திர(திடமான) விசாரமாம் (விசாரத்தால் வரும்) ஞானமே முத்தியாம். [ஸ்ருதி ஸ்ம்ருதிகளின்] தீர்வை ஈது அறிவாயே.
--
முதலில் மறைவாக உள்ள பிரம்ம தியானம் பின்னால் திடமாகி புலப்பட்டும். அதுவே மோக்ஷமாகும். இது வேத வாக்கியம்.

போச்சுடா! குழம்புதே. அந்தக்கரணம் போனாதானே பிரம்மமாகலாம்? கூடஸ்தனை ஜீவனா ஆக்கறது அதுதானே. இந்த அந்தக்கரணம் சம்பந்தம் இருக்க எப்படி பிரம்ம அனுபவம் ஏற்படும்?
சொரூப ஞானம் அந்தக்கரண விருத்தி கூட சேர்ந்து ஞானமாகும்னா அந்தக்கரண விருத்தி இருக்கையில் அகண்டாநுபவம் எப்படி ஏற்படும்?
--
இரண்டு மூன்று பாடல்களாக சேர்த்து போட்டால் மிகவும் நீளமாகி விடுகிறது. சின்னதாக போட்டால் இப்படி மர்மக்கதை போல ஆகிவிடுகிறது! மன்னிக்கவும். எழுப்பப்படும் கேள்விகளுக்கு அடுத்த பதிவுகளில் விடை வந்து விடும்!