112.
நாசச்ச ரீரத்தி ருக்குஞ்ச ரீரிதனை நால்வேத மாவாக்கியம்
நீசச்சி தாநந்த மென்றிடினு மாசிரியர் நீபிரம மாகுமெனினும்
மாசற்ற சச்சிதா நந்தநா னென்னவிவன் மன்னுமநு பவமெங்ஙனே
கோசப்பு ரங்களையி டித்துத்த கர்க்குமத குஞ்சரக் குரு நாதனே
நாசச் (நசிக்கும்) சரீரத்தில் இருக்கும் சரீரிதனை நால் வேத மாவாக்கியம் நீ சச்சிதானந்தம் என்றிடினும், ஆசிரியர் நீ பிரமமாகும் எனினும், மாசற்ற சச்சிதாநந்த நானென்று இவன் அநுபவம் எங்ஙன் மன்னும்?(எப்படி பொருந்தும்) (பஞ்ச) கோச புரங்களை (நகரங்களை) இடித்து தகர்க்கும் மத குஞ்சரக் குரு நாதனே.
--
இந்த உடம்பு அழியக்கூடியது. இதில் உள்ளவனை "நீ சச்சிதானந்தம்" என்று வேதங்கள் சொன்னாலும், குரு சொன்னாலும் நம்மிடத்தில் சச்சிதானந்த லக்ஷணம் இருக்கிறது என்று எந்த அனுபவத்தால உணர்வது? கேக்க நல்லா இருந்தாலும் அனுபவத்துக்கு வந்தாதானே ஸ்திரப்படும்?
113
சென்மாந்த ரஞ்செய்த வினைகளுட றருமெனிற் செல்கால மிவனுண்டலோ
கன்மாநு பவநரக சொர்க்கமெனில் வருகின்ற காலத்து மிவனுண்டலோ
உன்மாத யாதனா வுடல்கடவு ளுடன்மநுட வுடன்மாறி மாறியழியும்
தன்மாய வுடல்நெடினு மிவனிருப் பதுகொண்டு சத்தென்ப தொக்குமகனே
சென்மாந்தரம் செய்த வினைகள் உடல் தரும் எனில் செல் (சென்ற) காலம் இவன் உண்டலோ? கன்மாநுபவம் நரக சொர்க்கம் எனில் வருகின்ற காலத்தும் இவன் உண்டலோ? உன்மாத (உன்மத்தமான) யாதனா உடல் கடவுளுடல் மநுட வுடல் மாறி மாறி அழியும். தன் மாய உடல் நெடினும் இவன்(இத்தேகி) இருப்பது கொண்டு (இவனே) சத்து என்பது ஒக்கும் மகனே.
--
சீடன் சரியான கேள்வி கேட்டான். ஒவ்வொண்ணா குரு தீர்த்து வைக்கிறார்.
முன் ஜன்மத்தில் செய்த கர்ம பலனாக இந்த பிறவி எடுத்து இருக்கிறாய் அல்லவா? ஆகவே போன சன்மத்தில் இருந்தாய். இப்போது செய்யும் செய்கைகளால் நீ நரகமோ சொர்கமோ சென்று பலன் அனுபவிப்பாய். ஆகவே இனியும் நீ இருப்பாய். இப்படியாக மனித உடலையும் யாதனா சரீரத்தையும் நீ மாற்றி மாற்றி எடுத்தாலும் தேகங்கள் அழிகின்றன. நீயாகிய ஆன்மா அழிவதில்லை. ஆகவே நீ சத்தாகும்.
--
யாதனா சரீரம்: நரக வேதனையையோ அல்லது ஸ்வர்க சுகத்தையோ அனுபவிக்க தரப்படும் சரீரம். நம் சாதாரண சரீரம் தீயால் வெந்து கருகும். யாதனா சரீரம் தீயால் சுடப்பட்டு வேதனை அனுபவிக்குமே ஒழிய மாறாது. வேதனையை அனுபவிக்க அது இருக்கணும் இல்லையா?
No comments:
Post a Comment