Pages

Friday, August 28, 2009

விஷய சுகம் ....ஆத்ம சுகம்....



115.
அன்னபா னாதிசுக சாதனம தாகையா லார்க்கும் வெகு பிரியமாகும்
இன்னவா றான்மாவு மாநந்த சாதன மெனக்கருதல் பொருளல்லவே
சொன்னவான் மாவையொரு சுகசாத னங்களொடு சொல்லுவா யாகின் மகனே
உன்னதா நந்தம்வே றேதநுப விப்பதா ருபயவான் மாவு முளவோ

அன்ன பானம் ஆதி (முதலானவை) சுக சாதனம் அது, ஆகையால் ஆர்க்கும் (யாருக்கும்) வெகு பிரியமாகும். இன்னவாறு (இதே போல்) ஆன்மாவும் ஆநந்த சாதனம் என கருதல் பொருளல்லவே. (சரியல்ல). சொன்ன ஆன்மாவை ஒரு சுக சாதனங்களொடு சொல்லுவாயாகின் மகனே, உன்ன (உன்னுடைய) ஆநந்தம் வேறேது? அநுபவிப்பது யார்? உபய (இரண்டாம்) ஆன்மாவும் உளவோ? (இருக்கிறதோ?)
--
சாப்பிடும் குடிக்கும் பொருட்கள் சுகத்தை கொடுக்கிற சாதனங்கள். அதனால அதுகள் மேலே பலருக்கும் பிரியம் உண்டாகுது. இது போலவே ஆன்மா சுகத்தை தருகிற சாதனம்ன்னு நினைக்கக்கூடாது. ஆன்மா சுகத்தை தரும் சாதனம் அல்ல. அதுவேதான் ஆனந்தம். அப்படி இல்லைன்னா ஆன்மா வேற அதை அனுபவிக்கிறது வேறன்னு ஆகி அதை அனுபவிக்க இன்னொரு ஆன்மா இருக்கான்னு கேள்வி வரும்.

116.
விடயங்களில் பிரியமிருப்பது போல ஆத்மாவிலும் பிரியம் இருப்பதால் ஆத்மா ஆநந்த சொரூபர் என்பது எப்படி?

விடயசுக மதில்வருதல் பிரியமாத் திரமாகும் வெகு பிரிய மான்மாவி லாம்
விடயசுகம் வருபிரிய மாறிவரு மான்மாவில் வெகுபிரிய மாறாது காண்
விடயசுகம் விடலுமாங் கொளலுமா மான்மாவை விடுவதெவர் கொள்வதெவர் பார்
விடயசுக போகங்கள் விடுமவனை யவனால் விடப்படா தொருநாளுமே

விடய சுகமதில் வருதல் பிரியம் மாத்திரம் (அணு அளவு) ஆகும். வெகு பிரியம் ஆன்மாவிலாம். விடயசுகம்(த்தில்) வரும் பிரியம் மாறி வரும். ஆன்மாவில் வெகு பிரியம்; மாறாது காண். விடய சுகம் விடலுமாம் கொளலுமாம். (விடவும் பற்றவும் கூடும்.) ஆன்மாவை விடுவது எவர், கொள்வது எவர் பார். விடய சுக போகங்கள் விடும் (நீக்கும்) அவனை. அவனால் (ஆத்மாவால்) விடப்படாது ஒரு நாளுமே.
--
விஷய சுகத்தில் கிடைப்பது திருப்தி மட்டுமே. ஆன்மாவில் உள்ளது நிரதிசய பிரீதி. (அதாவது இதுக்கு மிஞ்சிய பிரீதி இல்லை) விஷய சுகத்தில் இருக்கும் விருப்பம் வேறு விஷயத்துக்கு மாறும். இன்னிக்கி கேசரி பிடிச்சதுன்னா நாளை ஐஸ்க்ரீம் பிடிக்கும். நாளன்னிக்கி இன்னும் வேற ஏதோ ஒண்ணு. ஆனா ஆன்மா மேலே உள்ள பிரியம் நிலையானது. விஷய சுகத்தை இஷ்டப்படி விட்டுடலாம். கொள்ளலாம். ஆன்மா மீது உள்ள பிரியத்தை யாரால் விட முடியும்? யாராலும் ஒரு போதும் முடியாது.

(தொடரும்...)

No comments: