Pages

Tuesday, August 25, 2009

ஆனந்தம் ஆன்மாவில் தான் உள்ளது...



111.
இகமான குருநாத னேசச்சி தாநந்த மெனுமிலக் கணமறிகிலேன்
அகலாத சத்தாவ தேதுசித் தாவதே தாநந்த மேதென்றிடில்
மிகுகால மூன்றுங்கெ டாதிருப் பதுசத்து வேறுபா டறிதல்சித்தாம்
மகிழ்காம நுகர்போது சுகமாகு மநுபூதி வாழ்வென்ப தாநந்தமே

இகமான குருநாதனே, சச்சிதாநந்தம் எனும் இலக்கணம் அறிகிலேன். அகலாத சத்தாவது ஏது? சித்தாவது ஏது? ஆநந்தம் ஏது என்றிடில்; மிகு கால மூன்றுங் கெடாதிருப்பது (நசியாதிருப்பது) சத்து; வேறுபாடு (சிற் சட பேதங்கள்) அறிதல் சித்தாம். மகிழ் காமம் நுகர்போது சுகமாகும் அநுபூதி (அனுபவம்) வாழ்வென்பது ஆநந்தமே.

PG: விவகாரிக (practical) சத்தும், பிராதி பாசிக சத்தும் கூட உள்ளதால் அவை சத்தல்ல என நீக்க "அகலாத சத்து" என்றார். இந்திரியங்களும் அந்தக்கரணங்களும் கூட அறிவாக உள்ளதால் அவை சித்தல்ல என நீக்க "சித்தாவதேது" என்றார். விஷய ஆனந்தம், சுஷுப்தி ஆனந்தம், வாசனானந்தம், உதாசீன ஆனந்தம் (விளக்கங்கள் பின்னால் வரும்.) ஆகியன கூட உள்ளதால் அவை ஆனந்தம் அல்ல என நீக்க "ஆனந்தமேது" என்றார்.

தாத்பர்யம்: முக்காலத்திலும் கெடாமல் இருப்பதே சத்து. சகல விஷயங்களைகளிலும் வேறுபாடுகளை பிரித்து அறிவது சித்து. இஷ்டம் லபித்த (வேண்டியது கிட்டும்) போது உண்டாகும் சுகம் ஆனந்தம்.
 --
எளிமையா சொல்ல:
முக்காலத்திலும் கெடாமல் எது இருக்குமோ அதுவே சத்து.
விஷயங்களிலே வேறுபாடு அறியும் அறிவே சித். இது சுயமாக பிரகாசிக்கும். இதன் பிரகாசத்தாலேயே மற்றவையையும் பிரகாசிக்க செய்யும்.
இஷ்டப்பட்டது கிடைத்து அதை அனுபவிக்கிற போது கிடைக்கிற திருப்தியே ஆனந்தம்.

இந்திரியங்கள் (புலன்கள்) கரணங்கள் முதலானவற்றை பிரகாசிக்க செய்வது ஆன்மாவே. ஆன்மா தவிர யாதும் சடம். ஆன்மா ஞான சொரூபம். ஞானம் என்பதே பிரகாசம். ஞானம் ஆத்மாவை பிரிஞ்சு இருக்கிறதல்ல. தூங்கும் போது இந்திரியங்கள் செயலிலே இல்லைதான். ஆனாலும் விழித்தபின் "”சுகமாக தூங்கினேன்" என்கிறோம். அப்ப ஏதோ ஒண்ணு விழிப்போட இருந்து அதை அனுபவிச்சது இல்லையா?

அது சரிங்க, ஆன்மாவை விட்டு ஞானம் பிரிந்தது இல்லைன்னா ஏன் எல்லாரும் ஞானிகளாக இல்லை?

தீபம் பிரகாசமா இருக்குதான். ஆனாலும் மூடுபனியில் அது தெரியறதில்லை. அது போல அவித்தையில் மறைந்து ஞானம் மங்கி இருக்கு. அவித்தை நீங்கினால் அது பிரகாசிக்கிறது. நாம் "ஞானம் உதித்தது" ன்னு சொல்கிறோம் ன்னாலும் ஞானம் புதிசா உதிக்கலை. மறைவு நீங்கித்து, அவ்வளவே.

அவ்வாறே ஆன்மா ஆநந்த சொரூபமாம். சட பொருட்கள் எதிலும் ஆனந்தம் இல்லை. எப்படி எனில் ஒருவனுக்கு ஒரு பொருளில் உதிக்கும் ஆனந்தம் மற்றவருக்கு அதே போல் உதிப்பதில்லை; சில சமயம் வெறுப்பு கூட உண்டாகலாம். ஆனந்தம் அந்த பொருளில் இருந்தால் எல்லாருக்கும் அதில் ஆனந்தம் வரவேணுமே?

உதாரணமா ஒத்தருக்கு கேசரி பிடிக்குது. அதை நினைச்சாலே ஆனந்தம் வந்துடும். சாப்பிட்டா கேக்கவே வேணாம். அதுவே இன்னொருத்தர் நல்லா இருக்கு ன்னு சாப்பிடுவார். ரொம்ப ஒண்ணும் சந்தோஷப்பட மாட்டார். இன்னும் ஒத்தர் எனக்கு சக்கரை வியாதி; கேசரியே பிடிக்காதும்பார்.
ஆனந்தம் கேசரியிலே இல்லை. அப்படி இருந்தா எல்லாருக்கும் அதிலே ஆனந்தம் கிடைக்கணுமே?
ஆக ஆனந்தம் ஆன்மாவில் தான் உள்ளது என்பது ஸ்ருதி, யுக்தி, அனுபவ சம்மதம்.

(ஆனந்தம் தொடரும்)

3 comments:

Geetha Sambasivam said...

ஆநந்தம் கேசரியிலே தான் இருக்கு??? ஓகே! :))))

கிருஷ்ண மூர்த்தி S said...

அட, ஆனந்தம் டீவீ சீரியல்லேயும், நல்லெண்ணெய் விளம்பரத்துல, அப்புறம் வூட்டுல கிண்டுற உப்புமாவிலுமில்ல இருக்கிறதா இத்தனை நாள் நெனச்சுகிட்டிருந்தேன்?

இடம் மாறினதைச் சொல்லவே இல்லை:-))

தமிழ்மரபு அறக்கட்டளை ஆண்டுவிழாவில் திவா ஐயா படம், பேச்சு, எல்லாம் பாத்த ஆனந்தத்துல எழுதினது!

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

திவாண்ணா said...

ஹிஹி!
இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி.....
:-))