Pages

Friday, August 21, 2009

ஆத்மாவின் ஆனந்த சொரூபம் வெளிப்படும் விதம் தெரிய..




107.
ஆத்மாவின் ஆனந்த சொரூபம் வெளிப்படும் விதம் தெரிய வினா:
தானன்றி வேறொன்று மில்லாத பூரணச் சச்சிதானந்த குணமாய்
ஊனின்ற வுயிர்தோறு மொன்றாகு மென்றாலஃ தொக்கின்ற படி கண்டிலேன்
நானென்ற சீவன்கள் சத்தான வகையொக்கு ஞானங்கள் வெளிகண்டதால்
ஆனந்த மிதுபோல வெளியாக வுதியாத வடைவேது குருநாதனே

தானன்றி வேறொன்றும் இல்லாத பூரணச் சச்சிதானந்த குணமாய், ஊன் (தேகத்தில்) நின்ற உயிர்தோறும் ஒன்றாகும் என்றால் அஃது ஒக்கின்றபடி கண்டிலேன் (ஆத்மா அப்படி ஒத்து இருப்பதை அறிந்திலேன்). நான் என்ற சீவன்கள் சத்தான வகை ஒக்கும் (தன்மை கூடும்). ஞானங்கள் வெளிகண்டதால் (சித்தும் விளங்குகிறது). ஆனந்தம் இது போல (எல்லா விருத்திகளிலும்) வெளியாக உதியாத அடைவேது (கிரமம் ஏது) குருநாதனே.
[சத்தும் சித்தும் போல ஏன் ஆனந்தம் வெளியாக காணப்படவில்லை?]

சத் = இருப்பு. சித் =அறிவு இரண்டும் சீவன்களில் காணப்படுகிறது. ஆனால் அதுபோல ஆனந்தம் எல்லா சந்தர்பங்களிலும் காணப்படவில்லையே?

தனக்கு அன்னியமா இல்லாத ஆன்மா பூரண சத், சித், ஆனந்தமா எப்பவும் இருக்கிறதா சொல்கிறீங்க. தான் எதுன்னு ஒரு கேள்வி இருந்தாலும், தான் இருக்கிறோம் ன்னு எப்பவும் எல்லா சீவர்களுக்கும் தெரியுது. என்னதான் இருட்டு இருந்து நம்மை நாமே பார்க்க முடியாம போனாலும் நாம் இருக்கோமான்னு தொட்டு பார்க்கவா வேண்டி இருக்கு? சின்ன குழந்தைக்குக்கூட தான் இருக்கிறது தெரியுது. அதாவது தன் இருப்பு தெரியுது. அதே மாதிரி அறிவு - அது எவ்வளவு அல்பமா இருந்தாலும் எப்பவும் அதுவும் இருக்கு. ஆனால் அதே போல எப்பவும் ஆனந்தம் இருக்கிறதில்லையே? சில சமயம் ரொம்பவே குஷியா இருக்கோம். சில சமயம் துக்கம். பல சமயம் ரெண்டும் இல்லாம இருக்கோம். அப்பல்லாம் ஆனந்தம் எங்கே போச்சு?

108.
உருவங்க ளிரதங்கள் பரிசங்க ளொருபூவி லொன்றாகு மென்றாலுமே
கரணங்க ளோரொன்றி லோரொன்று தெரியுன்க ணக்கன்றி வாராதுகாண்
அருமந்த சச்சிதா னந்தச் சுபாவங்க ளான்மா வின்வடிவாகிலும்
பிரபஞ்ச மயமாம்வி ருத்திபே தத்தினாற் பேதங்களா மைந்தனே

உருவங்கள் இரதங்கள் (ரஸங்கள்) [ஸ்]பரிசங்கள் ஒரு பூவில் ஒன்றாகும் என்றாலுமே, கரணங்கள் (இந்திரியங்கள்) ஓர் ஒன்றில் (விஷயம்) ஓர் ஒன்று தெரியும் கணக்கு அன்றி வாராது காண். அருமந்த சச்சிதானந்த சுபாவங்கள் ஆன்மாவின் வடிவாகிலும், பிரபஞ்ச மயமாம் விருத்தி பேதத்தினால் பேதங்களாம் (வேறுபடும்) மைந்தனே.
--
ஒரு மலரில் நிறம், சுவை, மணம் மூன்றும் இருந்தாலும் ஒவ்வொரு புலனால்தான் அவை தெரியவரும். ஒரே புலனால் மூன்றும் தெரியவரா. அதுபோல சத், சித், ஆனந்தம் ஆன்ம சொரூபமானாலும் பிரபஞ்ச மயமான விருத்திகளின் வேறுபாட்டால் அவை வேறாக உணரப்படும்.
(டீத்தூள் விளம்பரம் நினைவுக்கு வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லே! உசாத் துணை பொத்தகத்திலேயே அப்படித்தான் இருக்கு :)

மூக்கால பாக்க முடியாது. நாக்கால பாக்கமுடியாது. கண்ணால நுகர முடியாது. எந்த கரணத்தோட- புலனோட- உதவியால கவனிக்கிறோமோ அதுக்கு தகுந்த படித்தான் கவனிக்கப்பட்டது தோன்றும்.

சினிமா பாக்க ரெண்டு நண்பர்கள் போறாங்க. ஒத்தர் திரும்பும் போது அடாடா என்ன அருமையான பாட்டு... ட்யூன்... ங்கிறார். இன்னொருத்தர் அட போப்பா! என்ன அருமையா இயற்கை காட்சிகளை படமாக்கி இருக்காங்க என்கிறார். ரெண்டு பேரும் பாத்தது ஒரே சினிமாதான். எதுக்கு ஃபோகஸ் இருக்கோ அதுபடி....


4 comments:

Geetha Sambasivam said...

//எப்பவும் ஆனந்தம் இருக்கிறதில்லையே? சில சமயம் ரொம்பவே குஷியா இருக்கோம். சில சமயம் துக்கம். பல சமயம் ரெண்டும் இல்லாம இருக்கோம். அப்பல்லாம் ஆனந்தம் எங்கே போச்சு?//

ம்ம்ம்ம்ம்??இந்த ஆநந்தமும், சச்சிதாநந்தமும் வேறே இல்லையோ?? இல்லை நான் குழப்பிக்கிறேனோ? :(

திவாண்ணா said...

சத், சித், ஆனந்தம்தான் சச்சிதானந்தம். ஆனந்தம் பல வகை. பின்னால் வரும்.

Geetha Sambasivam said...

//அப்பல்லாம் ஆனந்தம் எங்கே போச்சு?//

தெளிவாக் கேட்கலையோனு நினைக்கிறேன். இதிலே சொல்லி இருக்கும் ஆநந்தம் சச்சிதாநந்தம் இல்லை அல்லவா?? ஏனெனில் சாதாரண மனிதனின் சந்தோஷத்தைத் தானே இது சொல்கிறது? ஞானியின் ஆனந்தத்தைச் சொல்லலை போலிருக்கே? ஞானிக்கும் இப்படி உணர்வுகள் ஏற்படுமா? ஒரு சமயம் துக்கம், ஒரு சமயம் ஆநந்தம் அப்படினு???

திவாண்ணா said...

சரிதான். *ஏதோ ஒரு வகை*யிலே ஆனந்தம் *எப்பவுமே* இருக்கணுமே என்பதே விஷயம். அது சச்சிதானந்தமா இல்லாட்டாலும்...