Pages

Tuesday, August 18, 2009

கல்லைக்கண்டால்....
இருப்பது குடமும் மண்ணும், ஆனால் உண்மையில் 2 பொருட்கள் இல்லை. மண்ணே குடமாக தோன்றுகிறது. குடம் என்பது சொல் மட்டுமே. நாம் குடம் அழகாக இருக்கிறது; பெரிதாக இருக்கிறது, இலேசாக இருக்கிறது என்றெல்லாம் பேசும் போது மண் என்பதை மறந்து விடுகிறோம். மண் என்பதை கவனிக்கும் போது இது நல்ல மெழுகு போன்ற சிவப்பு மண், கற்கள் கலப்பில்லாதது என்கிறோம். அப்போது குடம் என்று நினைப்பதில்லை. ஒன்றே மற்று ஒன்றாய் தோன்றுவதால் எதை பார்க்கிறோமோ அது மட்டுமே தோன்ற மற்றது மறையும்.

உப மேயதிலும் உள்ளது பெயரும் சச்சிதானந்தமாகிய பிரம்மமும். உண்மையில் இரண்டு இல்லை. பிரம்ம சொரூபம் ஒன்று மட்டுமே உள்ளது. அதுவே பெயருடைய பிரபஞ்சமாக தோன்றுகிறது. பிரம்மமே மூன்று காலமும் இருக்கும் உண்மையாக பொருள். பிரபஞ்சம் குடம் போல பொய். பிரம்ம சொரூபமே பிரபஞ்ச சொரூபமாக தோன்றுவதால் ஒன்றை நாட மற்றது மறையும். பிரம்ம சொரூப நாட்டத்தை விட்டால் நாம சொரூபம் தெரியும். நாம் நாம சொரூப நாட்டத்தை விட்டால் பிரம்ம சொரூபம் தெரியும். பிரபஞ்ச தோற்றம் பழங்கனவாக மறையும்.

இந்த இரண்டு வழிகளிலே நமக்கு சரியானதை தேர்ந்து எடுத்து அதை பயிற்சி செய்யணும். அதுக்கு குருதான் வழி காட்ட முடியும். வேற யார் உதவுவாங்க?

இந்த வழிகளில் ஒண்ணு பிபீலிகா மார்க்கம். அதாவது எறும்பு வழி. அது எப்படி சுறு சுறுப்பா அலைஞ்சு இதுவா இதுவான்னு உணவை தேடுதோ அப்படி பிரம்மம் இதுவா இதுவா ன்னு ஒவ்வொண்ணா பாத்து நீக்குகிறது. மற்றது மேலே சொன்ன விகங்க மார்க்கம். அதாவது பறவை வழி. வானத்திலே கருடன் சும்மா மெதுவா க்ளைட் பண்ணிகிட்டே இருக்கும். அது பெரிசா ஒண்ணும் செய்கிறதா தோணாது. பட்டுன்னு கீழே பாய்ஞ்சு இரையை கொத்திக்கும். முடிஞ்சது வேலை. அது போல பிரம்ம நாட்டத்திலே பட்டுன்னு பிரவேசம் செஞ்சு அதிலேயே நிக்கிறது விகங்க மார்க்கம். இப்படி ஏக காலத்தில மாயையை நீக்கி அதிலேயே நிக்கிறது அதி தீவிர பக்குவிகளுக்கு மட்டுமே சாத்தியம்.

பிறப்பிறப்பாம் பெயருடைய விந்த மாயைப்
பெருமையினை முடிவுபெறப் பேசவொண்ணா
வறப்பெரிய தன்மனதை வென்றான்மாளு
மல்லதொரு வகையாலு மகற்றலாகா
-வாசிட்டம்
உன்னுறு மனத்தாலே யுலகமா மிந்திர சாலந்
துன்னுரும் பணிக ளென்னுஞ் சொற்பொருட் பொன்னையன்றி
யன்னிமில்லைப் பொன்னாற் பணியென வறைய வேண்டா
பன்னிய உலகாஞ் சொற்குப் பரமன்றிப் பொருள் வேறில்லை
-வாசிட்டம்

அதுவிதுநீ முதலாய்க் காண்பதெல்லா
மணுவுமிலை யணுவுமிலை யணுவுமில்லை
யெதுவெதுதான் திரிசியமா யெங்கே யெங்கே
யெவ்விதமாய்த் தோற்றினுமத் தோற்றமெல்லாந்
திதமருவுந் திருக்கான பிரமமயமாந்
திலமளவு மையமிலைச் சத்தியந்தா
னிதமனைய பரப்பிரம நானேயென்று
நிகழ்பிரம நிச்சயமே தருப்பணங்காண்
-ரிபுகீதை

104.
பூரிக் குங்கன சச்சிதா னந்தத்திற் பொய்சடந் துயர் மூன்றும்
தூரத் தாயினுந் தோன்றுபாழ் விபரிதந் துடைப் பதெப் படியென்றால்
நீரிற் றோன்றுந்தன் னிழறலை கீழதாய் நின்றலை யினுநேராய்ப்
பாரிற் றோன்றிய தன்னை நோக் கிடிலந்தப் பாழ்நிழல் பொய்யாமே

பூரிக்கும் கன சச்சிதானந்தத்தில் பொய், சடம், துயர் மூன்றும், (சத் சித் ஆநந்தத்தின் எதிர்மறைகள்) தூரத்தாயினும் (இல்லாவிடினும்) தோன்றும் பாழ்(வீணான) விபரீதம் துடைப்பது (நீக்குவது) எப்படி என்றால், நீரில் தோன்றும் தன் நிழல் தலை கீழது ஆகி நின்று அலையினும், நேராய்ப் பாரில் தோன்றிய தன்னை நோக்கிடில் அந்த பாழ் நிழல் பொய்யாமே.
--
சத் சித் ஆனந்த நிலைக்கு எதிரானது பொய், சட, துயர் நிலை. இது நாம் சாதாரணமாக இருக்கும் நிலை. ஞான விசாரம் செய்து முன்னேறி அந்த நிலையில் இல்லாவிட்டாலும் இன்னும் சத், சித், ஆனந்தம் வரவில்லை. விசாரத்தால் உடல், மனம், அந்தக்கரணம் ஆகியவற்றை நீக்கி பார்க்கும் போது அப்படி ஒரு நிலை வரக்கூடும். வெறும் பாழாக தோற்றம் இருக்கலாம். இதை முன்னேயே பாத்து இருக்கோம் இல்லையா?
---------------
பார்க்க முதல் பாகம்- தத்துவ விளக்கம்- 70:
ஆசாரியர் உபதேசித்தப்படி அநுஷ்டித்து அதற்கு பின் சீடன் வினாதலைக்கூறல்: பஞ்ச கோசமும் விட்டு அப்பாற் பார்க்கின்ற பொழுது பாழே (சூன்யமே) விஞ்சியது. (மீதியாக இருந்தது). அது அல்லாமல் வேறொன்றும் தெரியக் காணேன். அஞ்சன (மை போல கருத்த) இருளையோ நான் அகமென (நானென) அநுபவிப்பேன்? வஞ்சமில்[லாத] குருவே என்ற மகன் மதி தெளியச் சொல்வார்.
----------------
அப்போது என்ன செய்வது?
நாம் யார் ன்னு தெரிந்து கொள்ள நீரில் நம் தோற்றத்தை பார்க்கிறோம். அது அலைவதாக தோணுகிறது. இதை விசாரித்து தெரிந்து கொள்ள கரையில் நிற்கிற நம்மையே நாமே பார்க்க வேண்டும். உண்மையில நாம் அலையலை. அலைவு நீரோட சலனத்தினால் ஏற்பட்டதுன்னு புரியும். அப்போது நம் உண்மை சொரூபம் தெரியவரும்.
அதுபோல இருளை பார்க்காமல், பார்க்கிற நாம் யார்ன்னு பார்க்க வேண்டும். அப்ப நம்மை நாம் சரியாக பார்ப்போம்.

Post a Comment