114
இருளாக மூடுஞ்சு ழுத்தியி லிராத்திரியி லிரவிசுட ரற்றபொழுது
மருளாம லிருளையும் பொருளையுந் தெரிகின்ற வகைகொண்டு சித்தாகுமே
பெருவாழ்வு மிக்கதா னேதன்னிடத்தினிற் பேராத பிரியமதனால்
அருகாத பிரியஞ்சு கத்தில்வரு மாதலா லாநந்த மாமைந்தனே
இருளாக மூடும் சுழுத்தியில் இராத்திரியில் இரவி சுடரற்ற பொழுது மருளாமல் இருளையும் பொருளையும் தெரிகின்ற வகை கொண்டு (இவனே) சித்தாகுமே. பெருவாழ்வு மிக்க (பேராநந்தத்தால் நிர் அதிசயமாகிய) தானே தன்னிடத்தில் பேராத (நீங்காத) பிரியமதனால் அருகாத (குறையாத) பிரியம் சுகத்தில் வருமாதலால் (இவனே) ஆநந்தமாம் மைந்தனே.
--
இருட்டாக இருக்கும் சுசுப்தியில் எதுவும் தோன்றாமல் மறைந்து இருக்கும் போது அவித்தையாகிய இருளையும், ஆனந்தமாகிய பொருளையும் அறிகிறது. இரவில் சூரிய ஒளி இல்லாவிட்டாலும் சாமான்ய தொடுதலால் பொருட்களை அறிகிறது. கனவில் ஆன்மா வேறு ஒளியை வேண்டாமல் திரிபுடிகளான பார்ப்பவன், பார்த்தல், பார்க்கப்படும் பொருளை பிரகாசிப்பித்து அறிகிறது. ஆகவே இது சித்தாகும்.
--
சுசுப்தில ஒண்ணும் தெரியலை. ஆனா தூங்கி வெளியே வந்து ஆனந்தமா தூங்கினேன் ன்னு சொல்கிறப்போ ஏதோ ஒரு அறிவு இருக்கு. ஜாக்ரத்திலே பார்த்தோ, இல்லை வெளிச்சம் இல்லாட்டா தொட்டு நுகர்ந்தோ விஷயங்களை தெரிஞ்சு கொள்கிறது. சொப்ன நிலையிலே ஏதும் இல்லாமலே சில விஷயங்களை உருவாக்கி அறிகிறது. இப்படி எல்லா நிலைகளிலேயும் அறிவு இருக்கு.
எல்லாருக்கும் எல்லா பொருட்களைக்காட்டிலும் தன் மீதே பிரியம் அதிகம். அனைவருக்கும் சுகத்தில்தான் பிரியம்; துக்கத்தில் இல்லை. ஆகவே ஆன்மா ஆனந்தம் என்பது அனுபவம்.
நானே யென்று மெவ்விடத்து நன்றா யுண்டா யிருக்குகேன்
நானே யென்று மெவ்விடத்து நன்றாய்த் தோன்றி விளங்குகேன்
நானே யென்று மெவ்விடத்து நன்றாயின்ப மாய் நிகழ்கேன்
நானே யென்று மெவ்விடத்து நன்றாய் விளையா டாநிற்கேன்
-விஞ்ஞான சாரம்
No comments:
Post a Comment