Pages

Tuesday, May 31, 2016

கிறுக்கல்கள்! - 119



பணிவு என்பதை தன்னை மதிப்பிறக்கம் செய்து கொள்ளுவது இல்லை” என்றார் மாஸ்டர். ”நம் முயற்சி எல்லாவற்றாலும் நாம் சாதிப்பது நம் நடத்தையை மாற்றிக்கொள்ளுவது மட்டுமே, நம்மை இல்லை என்று புரிந்து கொள்ளுவதால் பணிவு வருகிறது.”

அப்படியானால் உண்மையான மாற்றம் முயற்சியால் வரவிலையா?”
ஆமாம், அதுவே சரி!”

பின்னே அது எப்படி வருகிறது?”
விழிப்புணர்வால்”

விழிப்புணர்வு பெற நாம் என்ன செய்ய வேண்டும்?”
தூக்கத்தில் இருந்து விழிக்க நாம் என்ன செய்கிறோம்?”

அப்போ யாரும் பெருமைப்பட ஒன்றுமே இல்லையா? ”
பதிலுக்கு தான் கேட்ட ஒரு உரையாடலை சொன்னார்.
நம்ம மாஸ்டர்-- என்ன ஒரு குரல், எவ்வளோ தெய்வீகமா அவர் ஓதுகிறார்!”
ஆஆஆமா! அவரோட குரல் எனக்கு இருந்தா நானும்தான் அப்படி ஓதுவேன்!”

Monday, May 30, 2016

கிறுக்கல்கள்! - 118


மாஸ்டர் கடவுள் மீது பொதுவாக இருக்கும் எல்லா நம்பிக்கைகளையும் உடைப்பதை கண்டு பதறிப்போன ஒரு சீடர் கூவினார்: இப்படியே போனால் எங்களுக்கு பிடிமானம் என்றே ஒன்று இருக்காது!
மாஸ்டர் சொன்னார்: பறவை தன் குஞ்சை கூட்டிலிருந்து தள்ளிவிடும் போது குஞ்சு இப்படித்தான் கூவுகிறது!
பின்னொரு சமயத்தில் சொன்னார்: பாதுகாப்பாக கூட்டிலேயே இருக்கும் பறவை போல உங்கள் நம்பிகையிலேயே மூழ்கி இருந்தால் எப்படி பறக்க முடியும்? அது பறப்பது ஆகாது! அது சிறகுகளை அசைப்பது மட்டுமே!

Friday, May 27, 2016

கிறுக்கல்கள்! - 117


ஒரு நாள் இரவு மாஸ்டர் சீடர்களை அழைத்துக்கொண்டு திறந்த வெளிக்கு போனார். நக்‌ஷத்திரங்களை காட்டியபடி சீடர்களைப்பார்த்து சொன்னார்: “எல்லாரும் என் சுட்டுவிரலையே பாருங்கள்!”
அப்புறம் அவர்களுக்கு புரிந்துவிட்டது!

Wednesday, May 25, 2016

கிறுக்கல்கள்! - 116


மாஸ்டர் விவாதங்களில் ஈடு படுவதில்லை; தவிர்த்து விடுவார். ஏன் என்று கேட்டால் விவாதங்கள் உண்மையை கண்டுபிடிக்க உதவுவதில்லை; தன் நம்பிக்கையை வலியுறுத்தவே நடக்கிறது என்பார்

உதாரணத்திற்கு கதை சொன்னார்:
வெண்ணை தடவிய ரொட்டித்துண்டை கீழே போட்டால் அது எந்தப்பக்கம் விழும்?
வெண்ணை தடவிய பக்கம் கீழே விழும்.
இல்லை. வெண்ணை தடவிய பக்கம் மேலே இருக்கும்.
பார்க்கலாமா?
பார்க்கலாம்.
வெண்ணை தடவி ரொட்டித்துண்டை கீழே போட்டார்கள். அது வெண்ணை தடவிய பக்கம் கீழே இருக்கும்படி விழுந்தது.
பாத்தியா? நா ஜெயிச்சேன்.
ஹும்! நா ஒரு தப்பு பண்ணதால நீ ஜெயிச்சே!
என்ன தப்பு?

தப்பான பக்கம் வெண்ணையை தடவிட்டேன்!

Tuesday, May 24, 2016

கிறுக்கல்கள்! - 115


மாஸ்டர் உழைத்தது ஏறத்தாழ எல்லா மக்களின் மனதிலும் இருக்கும் கோட்பாடுகள், நம்பிக்கைகள், தெய்வம் குறித்த கற்பனை எல்லாத்தையும் தகர்த்தெறிவதற்கு.
ஏன் என்று கேட்டால் அவை அனைத்தும் ஒரு விஷயத்தை காட்டவே பயனாக வேண்டும்; அதுவே முடிவல்ல என்பார்.
அவருக்கு பிடித்த கிழக்கத்திய சிந்தனை ஒன்று: “சாது சந்திரனை சுட்டிக்காட்டும் போது முட்டாள்கள் பார்ப்பதென்னவோ அவரது விரலைத்தான்!”

Monday, May 23, 2016

அத்வைதம் - 9



ரமண பகவான் இந்த த்வைத- விசிஷ்டாத்வைத, அத்வைத சர்ச்சையை வெகு எளிதா தீர்த்து வெச்சுட்டார். அதையேதான் நானும் சொல்ல விரும்பறேன்.
அது என்னவா இருந்தா என்ன? ஆன்மான்னு ஒண்ணு இருக்கறதையும் அதை உணர முடியணும் என்கறதையும் மூன்று பாதையிலும் இருக்கறவங்க ஒத்துக்கறாங்க. முதல்ல அந்த ஸ்டேஜுக்கு போவோம். அப்புறமா த்வைதமா, விசிஷ்டாத்வைதமா இல்லை அத்வைதமா என்கிறது தானா தெரிஞ்சுடும். இப்போ பிடிச்சு அதுக்கு சர்ச்சை செய்வானேன்? அது தெளிவானாதான் ஆன்ம சாதனை பண்ண முடியுமா?
ப்ரம்ம நிலை ஒரு உணர்வு. அத சொல்லாலே விவரிக்க முடியாது. தேன் எப்படி இருக்கும்? தித்திப்பா இருக்கும்னு சொல்லல்லாம். தித்திப்பு எப்படி இருக்கும்ன்னா என்ன சொல்லறது? கேக்கறவர் நாக்கில கொஞ்சம் தேனை தடவி ’இதான் தெரிஞ்சுக்கோ’ ந்னுதான் சொல்ல முடியும்.
சரி சரி, இதெல்லாம் வியவகாரத்துக்கு ஒண்ணும் லாயக்கு படாது. இவ்வளோ கஷ்டப்பட்டு ஏன் இதை தெரிஞ்சுக்கணும்?
இந்த வழியில முன்னேற முன்னேற இன்னும் சந்தோஷமா இருக்கலாம். வேற என்ன வேணும்? எல்லாரும் விரும்பறது சந்தோஷமா இருக்கணும்ன்னுதானே?
இந்த வழியில் இறங்க உலகத்தைப்பத்திய நம் பார்வையே மாறிப்போகிறது. நேரடியாக அனுபவிக்காவிட்டாலும் இது அத்தனையும் நானேதான்னு புத்தில பட்டாலும் போதும்; ஒரு பெரிய மாற்றம் வரும். நம்மை நாமே கோபித்துக்கொள்வதில்லை; பகைமை பாராட்டுவதில்லை; இகழ்வதில்லை. ஆகவே இது எல்லாம் நானேன்னு தோணும் போது சக மனிதர்களிடம் இந்த எதிர்மறை உணர்வுகள் ஏற்படுவதில்லை. அதுவே மற்ற உயிரினங்கள் பாலும் ஏற்படுகிறது. உண்மையில் மனிதனை விட மற்ற உயிரினங்களிடம் - தாவரங்களோ, புழு பூச்சி முதலான ஏனைய மிருகங்களோ- அப்படி ஒரு அன்பு பாராட்டுவது சுலபமாக இருக்கிறது. அன்பு பாராட்டுவது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது! எதிர் காலத்தைப்பற்றி ஒரு பயம் இருப்பதில்லை. கடந்த காலத்தைப்பற்றி ஒரு வருத்தமோ கோபமோ இருப்பதில்லை. சாந்தி மட்டுமே வாழ்வில் நிலவுகிறது.
இப்படி புத்திக்குப்பட்டாலும் பலரும் இதை விரும்புவதில்லை. நான் என்கிற அடையாளம் தொலைந்து போவது என்பது பலருக்கும் உகப்பா இல்லை. உண்மையில் பலர் இந்த கான்சப்ட் ஐ கேட்டாலே பயப்படுகிறார்கள்!
நமக்கு இது புத்தி பூர்வமா கொஞ்சம் இப்போதைக்கு தெரிஞ்சாலே போதும். பின்னால் தகுந்த காலம் வரும்போது திருவருளும் குருவருளும் கூடும்போது மேலே கொண்டு போய் அனுபவத்துக்கு கொண்டு விட்டுவிடுவாங்க என்பது திண்ணம்.
- நிறைந்தது-

Friday, May 20, 2016

அத்வைதம் - 8



இப்படி இல்லாததை இல்லை இல்லைன்னு தள்ளி கடைசியில மிஞ்சறது எதுவோ அதுவே நானா இருக்க முடியும். அதுவே ஆன்ம தரிசனம்.
இப்படி விசாரிச்சு தெரிஞ்சுக்கறதை ஞான மார்க்கம்ன்னு சொல்கிறாங்க. பக்தி மார்க்கமோ கர்ம மார்க்கமோ ஓரளவுக்கு ஆசாமியை உயர்த்திவிடும். இதனால் சித்தம் சுத்தமாகும். கண்ட கண்ட விஷயங்களில மனசு அலை பாயாது. நம்மை நாம் சரியா உணராம ஏமாத்தறது இந்த பாழும் மனசுதான். உள்ளே குவிக்கப்பாத்தா பிச்சுண்டு வெளி விஷயங்களில இழுத்து போறது இதுதான். அலை பாயற மனசு சாந்தமாயிட்டா மனம் குவியும். இந்த சாத்வீகமான மனசால நான்யார் ந்னு விசாரிக்க விசாரிக்க முன்னேற்றம் உண்டாகும். மனசு/ புத்தி ஒரு ஸ்டேஜுல செயலிழக்கும். அப்ப ஆன்மா என்கிறது மட்டுமே தானே பிரகாசிக்கும். இந்த நான் யார் பத்தி பத்தி பத்தியாபதிவு எழுதி இருக்கேன். அதனால இங்கே விவரிக்கலை.
இறுதி கட்டத்தில எப்படி இருக்கும்?
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!
முழுக்க ப்ரம்மத்தோட ஐக்கியப்படுத்திக்கொண்டவங்க இந்த லோகத்துக்கு வரதில்லை. உடம்போட கர்மா தீரும் வரை மோனத்தில இருந்து போய் சேந்துடுவாங்க.
அப்படின்னா அது பத்தி எப்படித்தான் தெரியுமாம்?
மேலே சொன்ன நிலைக்கு போகும் முன்னே அந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் ஆழ்வதும், வாசனைகள் திருப்பி பிடிச்சு இழுத்துக்கொண்டு வருவதுமா சடு குடு நடக்கும். அப்ப சகஜ நிலையில இருக்கறவங்க அனுபவிச்சதோட ஒரு துளியை பகிர்ந்து கொண்டு இருக்காங்க. அவரவர் பார்த்தபடி அதை பகிர்ந்து கொண்டு இருக்காங்க. ஆதி சங்கர பகவத்பாதாள் பார்த்தது அத்வைதம். அதனாலத்தான் இந்த சங்கர ஜயந்தியை ஒட்டி அத்வைதம் என்கிற தலைப்பில எழுத ஆரம்பிச்சேன்.
மற்ற ஆசாரியார்களுக்கு கிடைத்த தரிசனம் வேறு. அதனால அவங்க சொன்னது வேறு.
இந்த ஆன்மாவை உணர்ந்த பிறகு அங்கே இருக்கிறது ஆன்மா, கடவுள்ன்னு ரெண்டா இல்லை என்கிற அத்வைதமா? கடவுள், ஆன்மான்னு ரெண்டா த்வைதமா? ஆன்மா, உள்ளே உறைகிற கடவுள்ந்னு விசிஷ்டாத்வைதமா ந்னு கேட்டா….
ரமண பகவான் இந்த த்வைத- விசிஷ்டாத்வைத, அத்வைத சர்ச்சையை வெகு எளிதா தீர்த்து வெச்சுட்டார். அதையேதான் நானும் சொல்ல விரும்பறேன்.

Thursday, May 19, 2016

அத்வைதம் - 7


இததான் அஞ்ஞானம் என்கிறாங்க.
இந்த அஞ்ஞானம் எவ்வளோ சக்தி வாய்ஞ்சதுன்னா, இப்ப அத்வைதம் படிச்சு புரிஞ்சுக்கிறோம். அது புத்திக்கு புரிஞ்சாக்கூட செயலுக்கு வரது கஷ்டம்!
ஒரு சன்யாசி ஶிவோஹம் ஶிவோஹம் ந்னு (நான் ஶிவன்) சொல்லிண்டே இமய மலை மேலே ஏறிண்டு இருந்தாராம். ஓர் அளவுக்கு மேலே குளிர் தாங்கலை! தேஹோஹம் தேஹோஹம் ந்னு (நான் உடம்பு) சொல்லிண்டு இறங்க ஆரம்பிச்சுட்டாராம்!
நான் உடம்பு/ மனசு/ புத்தி ந்னு ஏதோ ஒண்ணை கற்பனை செய்து வைச்சிருக்கும் வரை நம்மால நம்மை உணர முடியாது. அதனால முதல்ல புத்தி பூர்வமா ஆராய்ச்சி செஞ்சு இதெல்லாம் நான் இல்லைன்னு புரிஞ்சுக்கணும்.
பொதுவா எல்லாரையும் கேட்டா நானா? தோ இருக்கேன் ந்னு தன்னை - தன் மார்பை- காட்டுவாங்க! சொல்லுப்பா நீ யாரு?
நான் வாசுதேவன்/.
அது உன் பேரு. நீ யாரு?
நான் ஒரு டாக்டர்.
அது நீ பார்க்கிற வேலை. நீ யாரு?
இந்த ரீதியில் கேள்வி வந்துகிட்டு இருந்தா பதிலுக்கு திணறுவோம், இல்லையா?
இந்த உடம்பு கூட நீ இல்லை. உன் உடம்புன்னு சொல்லறப்பவே நீ வேற இந்த உடம்பு வேறன்னு தெரியறதே?
ஐ திங். தேர்போர் ஐ ஆம் (Cogito ergo sum ) அப்படின்னு ஒரு சிந்தனையாளர் சொன்னார். நான் சிந்திக்கிறேன். அதனால நான் இருக்கிறேன். அதாவது சிந்தனை இல்லைன்னா நான் இல்லை.
தூக்கத்தில் இரு வகை. ஒண்ணு கனவு காண்கிற தூக்கம். அந்த நேரத்தில தூங்கறவரை பாத்தா கண்கள் வேகமா அசையறது தெரியும். இரண்டாவது இப்படி கண்கள் அசையாம தூங்கறது. இதை ஆழ்ந்த தூக்கம்ன்னு சொல்லலாம்.
கனவு காண்கிறபோது மனசு/ சிந்தனை கண்ட்ரோல்ல இல்லைன்னாலும் அது இருக்கு. ஆனா ஆழ்ந்த தூக்கத்தில அது இல்லையே? அப்ப நாம இல்லாம போயிடறோமா? எங்கே போறோம்? திருப்பி எழுந்துக்கும் போது எங்கேந்து வரோம்? சுகமா தூங்கினேன் ந்னு சொல்றோமே? அதை அனுபவிச்சது யாரு?
அப்ப மனசு நாம் இல்லை.
நான் மூச்சு விடறேன். அதனால நான் இருக்கேன். இந்த ப்ராணந்தான் நான்னு சிலர் நினைக்கலாம். அப்படின்னா சாகிறவங்களை வெண்டிலேட்டர்ல போட்டுட்டா சாகமலே இருக்கணுமே? அப்படி இல்லையே?
உயிர் என்கிறதை நவீன மருத்துவம் அறுதியிட்டு சொல்ல முடியலை. அதனாலத்தான் விஞ்ஞானிகள் அதுல இப்ப ஆராய்ச்சி செய்யறாங்க.
அப்ப உடம்பு நான் இல்லை. மனசு நான் இல்லை. உள்ளேவும் வெளியேவும் போய் வர காத்து நான் இல்லை.
ஆனா நான்னு ஒண்ணு இருக்கறதில யாருக்கும் சந்தேகம் இல்லை. அதை உணர ஒரு புலனும் தேவையில்லே.
இப்படி இல்லாததை இல்லை இல்லைன்னு தள்ளி கடைசியில மிஞ்சறது எதுவோ அதுவே நானா இருக்க முடியும். அதுவே ஆன்ம தரிசனம்.

Wednesday, May 18, 2016

அத்வைதம் - 6


அப்ப நிரந்தரம் எது?
எல்லாமே ஏதோ ஆட்டம் (atom) களால ஆனதுதான். ஆட்டமோ பொருளாவும் அதே சமயம் சக்தியாவும் இருக்கிறது. இந்த சக்தியே நிரந்தரமா தோணுகிறது. அணுவை பிளக்கிறப்ப சக்தி வெளியாகிற மாதிரி sகதியை ரொம்ப அழுத்தினா பொருளா ஆகிடுமோ? கிடைக்கட்டும். எல்லாத்திலேயும் நிறைஞ்சு இருக்கிற இந்த சக்தியையே ப்ரம்மம் என்கிறாங்க. வெளியிலே பார்க்க இது தனித்தனியா தோணினாலும் ஒரே சக்திதான் பரவலா எங்கும் இருக்கு.
மொத்தத்திலே இந்த சக்தியே நித்தியம். தற்காலிகமான உலகம் எல்லாமே மித்யா!
அதாவது ப்ரம்மம் சத்யம்; ஜகன் மித்யா!
நாம பார்க்கிற எல்லா விஷயங்களும்- ஐம்புலன்களால அறிகிற எதுவும் தற்காலிகம் என்கிறதால வியவகார சத்தியம்; உண்மையான உண்மை இல்லை!
உண்மையான உண்மை எல்லாத்துக்கும் உள்ளே இருக்கிற சக்திதான்!

எல்லாம் கெடக்கட்டும்.இந்த சக்திக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?
யோவ்! எல்லாமே இந்த சக்திதான் என்கிறபோது என்ன சம்பந்தம்ன்னு கேட்டா என்ன சொல்லறது?
சரி சரி, ஏன் இந்த சக்தி எனக்கு தெரிய மாட்டேங்குது?
ஏன்னா ஆரம்பத்திலேந்து வேற விதமா சொல்லிக்கொடுத்துதான் நம்மை வளத்து இருக்காங்க.
பிறந்த குழந்தைக்கு தான்னு ஒண்ணு கிடையாது. நாலஞ்சு குழந்தைகளை ஒண்ணா விட்டு இருந்தா, ஒண்ணு அழும்போது மத்ததும் அழும்! ஒண்ணு சிரிச்சா எல்லாம் சிரிக்கும். கொஞ்சம் கொஞ்சமா வளர வளர நாம்தான் அதுக்கு சொல்லிக்கொடுக்கிறோம்(?கெடுக்கிறோம்?) ஹரி ஆரு? ஹரி ஆரு? நான்னு காட்ட வைச்சுடுவோம். நாந்தான் ஹரின்னு காட்டும்போது அவ்வளவு ஆனந்தம் அடையறோம்! இல்லாவிட்டாலும் வாசனைன்னு ஒண்ணு இருக்கில்லையா? காலங்காலமா வரும் பழக்கம், - ரத்தத்தில ஊறிப்போனதுன்னு சொல்வாங்களே, அது- நாளடைவில் நான்னு ஒரு உணர்ச்சியை மேலெழசெஞ்சுடும். இததான் அஞ்ஞானம் என்கிறாங்க.

Friday, May 13, 2016

அத்வைதம் - 5


நம் உடம்பு இருக்கிற வரை இருக்கோம். சந்தேகமில்லை. இறந்து போனாலும் நம்ம உடம்பு அங்கேயேத்தானே இருக்கு? இருந்தாலும் அதை பிணம் என்கிறாங்க. இது வரை பிரச்சினை இல்லாம இருந்த உடம்பு இப்ப அழுக ஆரம்பிக்கிறது. அதனால அத சீக்கிரமா எரிச்சுடு அல்லது புதைச்சுடு என்கிறாங்க.
அப்ப உடம்பு நாம இல்லை. என் பேனா என் பென்சில் என்கிறது போல என் உடம்பு ந்னு சொல்லிக்கொண்டு இருக்கோம். அவ்ளோதான். தோன்றி மறைகிற இந்த உடம்பு மித்யை, தற்காலிகம்.
இதுல என்ன ஆச்சரியம்? உயிர் இருக்கிற வரை உடம்பு நல்லா இருக்கும். உயிர் போயிட்டா உடம்பும் அழுக ஆரம்பிக்கும் ன்னு சொல்லலாம். அந்த உயிர் என்கிறது என்ன? திடீர்ன்னு எங்கேயோ இருந்து வந்து திடீர்ன்னு போகிற இது என்ன?
இதை ஜீவன்…. சரி சரி, தூய தமிழ்னா சீவன்னு சொல்லலாம். ப்ரபஞ்சத்திலேந்து வந்தது ப்ரபஞ்சத்திலேயே லயமாகிறது. திருப்பி வேற உடம்பிலே புகுந்துக்குது. இதை நான் சொல்ல வேணாம். விஞ்ஞானிகளே இந்த பக்கம் திரும்பி ஆராய்ச்சி செய்யறாங்க. க்வாண்டம் மெகானிக்ஸ் வளர வளர இந்த ஆராய்ச்சி எல்லாம் இன்னும் சுவையா போய்கிட்டு இருக்கு!

ஆக இந்த உடம்பு அநித்தியம். ஜீவன் நித்தியம். அநித்தியமான உடம்பு மித்யா.
அநித்தியத்தை மித்யான்னு ஏன் சொல்லணும்? எவ்ளோ நாள் இந்த உடம்பு இருந்தது? இதைப்போய் மித்யான்னு சொல்லலாமா?
சொல்லலாம். இவ்ளோ நாள் - காலம்- என்கிறது ஒரு ஒப்பீட்டு சமாசாரம்தானே?
மின்னல் தோன்றி க்‌ஷண நேரத்தில மறையுது.
லாப்ல ஒரு ஐசோடோப் உருவாக்கி சில மில்லி செகண்ட் கூட இருக்கறதில்லே.
குழந்தை ஊதி விடற சோப் குமிழ் சில வினாடிகளில இல்லாம போகும்.
சாயும் சூரியன் அள்ளித்தெளிக்கிற வண்ணக்கோலம் ஒரு நிமிஷத்தில மாறிடும்.
குடிக்கிற தண்ணீர் 15 நிமிஷத்தில வயத்திலேந்து காணாமப்போகும்.
சாப்பிடுகிற சாப்பாடு இரண்டு மணி நேரத்தில வயத்திலேந்து நகந்துடும்.
மே ஃப்ளை என்கிற பூச்சி ஒரு நாளிலே தம் முழு வாழ்க்கையையே வாழ்ந்து முடிச்சுடும்.
சர்வ சாதாரணமா நாம பார்க்கிற ஈக்கு வாழ்நாள் ஒரு மாசம். எலிக்கு ஒரு வருஷம். முயலுக்கு பத்து வருஷம். மனுஷனுக்கு நூறுன்னு வெச்சுக்கலாம்.
மனுஷன் நிரந்தரம்ன்னு நினைக்கிறது எல்லாம் கூட அப்படி இல்லை. மலை கூட சில நூறு வருஷங்கள்…. – மலைகளை வெட்டி எடுக்கிற மனுஷனோட வேகத்தை பாத்தா சில பத்தாண்டுகளே போதும் போல இருக்கு! :(
பல உள்நாட்டு கடல்களே வத்திப்போயாச்சு! பாலை நிலங்களே காணாமப்போயாச்சு! பல விளை நிலங்களே இன்னும் சில பல வருஷங்களிலே பாலையாயிடும்ன்னு யாரும் சொன்னா அதை மறுக்க முடியாது! ஏன், இந்த உலகமே ஒரு நாள் சிதைந்து போகும்.
மனுஷனோட வாழ்க்கை நூறு வருஷம்ன்னாலும் பிரபஞ்சத்தோட வயசோட ஒப்பிட்டா அது என்ன? தூசு கூட இல்லை. ஒரு பெரிய காட்டில இருக்கற மரம் ஒண்ணுத்தோட ஒரு இலை உதிர்ந்து போனா எவ்வளவு முக்கியமோ அவ்ளோதான் நம் வாழ்கையும் இறப்பும்!
எல்லாமே உரு மாறிக்கொண்டே இருக்கு. இதுல எதையும் நிரந்தரம்ன்னு சொல்ல முடியலை.

அப்ப நிரந்தரம் எது?

Thursday, May 12, 2016

அத்வைதம் - 4


இந்த நாம பார்க்கிற உலகமும் வியவகார சத்யம்தான்.
தோன்றுகிற எல்லாத்துக்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்கு.
எனர்ஜியை உருவாக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது என்கிறது விஞ்ஞான கோட்பாடு.
அப்ப இந்த தோன்றுகிற சமாசாரம் என்ன? இப்ப இருக்கிறது முன்னே என்னவா இருந்தது, அப்புறம் என்னவா இருக்கும்?
ஏன்ப்பா? எனர்ஜி பத்தி பேசறே? நாம மேட்டர் பத்தி பேசறோம் என்கிறதுதானே மேட்டரே ந்னா….
விஞ்ஞானிகள் எல்லாம் மேட்டரா, எனர்ஜியா, ரெண்டும் ஒண்ணான்னு இன்னும் விவாதிச்சுகிட்டு இருக்காங்க. ஒரு பக்கம் பாத்தா மேட்டர் மாதிரியும் இன்னொரு பக்கம் பாத்தா எனர்ஜி மாதிரியும் இருக்கு. உலகம் போற்றும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அப்படித்தான் சொல்லி இருக்கார்.
எப்படியும் மேட்டரும் அப்படியேத்தானே? ஒண்ணுத்திலேந்து இன்னொன்னு வர முடியுமே தவிர புதுசா ஒண்ணுமில்லாததுலேந்து எதுவும் வர முடியுமா? தங்க நகையை அழிச்சுட்டு புது டிசைன்ல பண்ணிக்கலாமே தவிர தங்கத்தயே உருவாக்க முடியுமா என்ன? தங்கம் ஒண்ணே. அதுவே வேற வேற மாதிரி உருவெடுக்குது. அப்ப இது செய்ன் ந்னு சொன்னாலும் சரிதான்; மோதிரம்ன்னு சொன்னாலும் சரிதான்; ஒட்டியாணம்ன்னு சொன்னாலும் சரிதான். இல்லை இது தங்கம்ன்னு சொன்னாலும் சரிதானே? எல்லாம் பார்வையிலே இருக்கு.

அதே போலத்தான் ப்ரம்மம் என்கிறது பார்வையிலே இருக்கு. நகைன்னு சொல்கிறதை மித்யான்னு சொல்றாங்க. வளையலோ மோதிரமோ தற்காலிகம்தானே? தங்கம்ன்னு சொல்லறதே சரி என்கிறது போல உலகம் என்கிறது மாறிகிட்டே இருக்கு; ப்ரம்மம் மட்டுமே சத்தியம் என்கிறாங்க.

Wednesday, May 11, 2016

அத்வைதம் - 3


இந்த ஜகன் மித்யாவை பார்த்து நகர்த்திடலாம்.....

மித்யா என்கிறதுக்கு பலரும் மாயை, பொய் என்றே பொருள் எடுத்துக்கறாங்க. அப்படி எடுத்துக்கறதாலேயே நேரடியா பார்த்து அனுபவிக்கிற விஷயம் எப்படி பொய்யாப்போகும் என்கிற வாதம் சரியாத்தோணுது.
மித்யா என்கிறதுக்கு சரியான பொருள் தற்காலிகமானது; அதனால அது உண்மையான உண்மை இல்லை.
அதென்ன உண்மையான உண்மை? அப்ப பொய்யான உண்மையும் இருக்கா?
ஆமாம்! பொய்யான உண்மையும் இருக்கு, பொதுவான உண்மையும் இருக்கு!
உதாரணம் பார்க்கலாம். சூரியன் கிழக்கே உதிக்குது.
பொதுவா இதை உண்மைன்னுதானே யாரும் சொல்லுவாங்க.
ஆனா அறிவியல் படிச்ச எல்லாருக்கும் தெரியும். சூரியன் உதிக்கறதில்லை; அது இருக்கற இடத்திலேயேத்தான் இருக்கு. உலகத்தில நாம இருக்கிற பகுதிதான் சூரியன் இருக்கற பக்கமா திரும்பி இருக்கு!
இருந்தாலும் இதை யாரும் பொய்ன்னு சொல்லறதில்லை!
ஏன்னா இது வியவகாரத்தில இப்படி நினைக்கறது தோதா இருக்கு. அதனால பொதுவா இது உண்மை; பொதுவான உண்மை.
உலகத்தில நாலுல மூணு பகுதி தண்ணீரா இருக்கு. இது எப்படி? உம்ம்ம்ம்? மேல் பரப்பில பாத்தா அது உண்மை போலத்தான் இருக்கு. ஆனா கடலுக்குள்ள போங்களேன். போய் போய் ஆழத்தில என்ன வருது? பூமி! அப்ப பூமியின் மேல தண்ணீர் இருக்குன்னு சொல்லறதே சரி. இருந்தாலும் இதையும் உண்மைன்னுதான் நாம ஒத்துக்கறோம். இது பொய்யான உண்மை.
பொதுவான உண்மையும் பொய்யான உண்மையும் பொய்தான்னாலும் இப்படி நினைக்கிறது நமக்கு பல விதங்களிலே வசதியா இருக்கறதால இதை உண்மைன்னே வெச்சுக்கறோம். இதை வியவகார சத்யம் என்பாங்க.
இந்த நாம பார்க்கிற உலகமும் வியவகார சத்யம்தான்.

தோன்றுகிற எல்லாத்துக்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்கு.

Tuesday, May 10, 2016

அத்வைதம் - 2



முதல்ல சில விஷயங்களை உள்வாங்கிப்போம். அப்புறம் இதெல்லாம் புரியறது கொஞ்சம் சுலபமா இருக்கலாம்.
முதல்ல புரிய வேண்டியது இறைத்தன்மையை புரிஞ்சுக்கறதுல பல மட்டங்கள் - லெவல்ஸ்- இருக்கு என்கிறது. அடி மட்டத்தில பலரும் புரிஞ்சு கொண்டு இருக்கறது - கடவுள்ன்னு ஒத்தர் இருக்கார்; நாம வேண்டிக்கிட்டா அவர் நமக்கு பலதும் செஞ்சுத்தருவார். இதை பய பக்தி, மூட பக்தின்னு சொல்றாங்க. இது சரியா தப்பா? அவங்க லெவல்ல சரிதான்.
வித்தியாசமா ”தேவர்கள் இருக்காங்க; அவங்களுக்கு இயற்கைச்சக்திகள் மேல ஆளுமை இருக்கு. அவங்களை திருப்தி செஞ்சா அவங்க நமக்கு வேண்டியதை செய்வாங்க”ன்னு ஒரு கண்ணோட்டம் இருக்கு. இதுவும் அந்த லெவல்ல சரியே.
இதுக்கெல்லாம் என்ன ஆதாரம் ஐயா? நீர் பாட்டுக்கு சொல்லிண்டே போறீரே? ந்னு கேட்டா,,,, அனுபவமே ஆதாரம். வேண்டுகோள் நிறைவேறாம இத்தனை வருஷங்களா இறை நம்பிக்கை பிழைச்சு இருக்க இயலாது. உலவிகிட்டு இருக்கிற எக்கச்சக்க அனெக்டோட் களுக்குள்ள நாம் போக வேண்டாம்.
இதுக்கும் மேல ஒரு புரிதல் சிவன் சக்தி விஷ்ணு - சில பேர் ப்ரம்மா, விஷ்ணு, சக்தின்னு பிரிக்கிறாங்க- ந்னு ஒரு ட்ரினிடி. அவங்க எல்லாத்தையும் நடத்தறாங்க. தேவர்கள்ன்னு சொல்லுகிறது எல்லாம் இவங்களோட ஒரு அம்சமாகவோ அல்லது எவால்வ் ஆன மனிதனாகவே இருப்பார்கள்.
இதுவும் அந்த லெவல்ல சரிதான்.
பேரும் வடிவமும் எப்படி வேணா இருக்கட்டும். இர்க்கிற ஒரே வஸ்துதான் என்று ஒரு கருத்து. இதுவும் அந்த லெவல்…. சரி சரி!
சரிதான், சரிதான் ந்னு சொல்லிண்டே போனா எப்படி? ஏதோ ஒண்ணுதானே சரியா இருக்க முடியும்?
சின்ன க்ளாஸ் படிக்கிறப்ப ஆட்டம் -அணு- பத்தி பாடம் எடுத்தாங்க. ஆட்டம்ன்னாலே பிளக்க முடியாததுன்னு சொல்லித்தந்தாங்க. அடுத்த க்ளாஸ் போன பிறகு ஒரு காலத்துல அணுவை பிளக்க முடியாததுன்னு நினைச்சாங்க. அப்பறமா அதை பிளக்க முடிஞ்சது; அதுல ந்யூட்ரான், ப்ரோட்டான், எலக்ட்ரான் ந்னு மூணு வகை துகள் இருக்குன்னு சொன்னாங்க. அது நான் காலேஜ் போற வரை இருந்தது. அப்புறமா ஹிஹிஹி புரோட்டான், ந்யூட்ரான் ரெண்டு வேற வேறதான். இருந்தாலும் அதை கட்டுமானம் பண்ணி இருக்கறது க்வார்க் என்கிற ஒரே வஸ்துவாலன்னாங்க.
ஒவ்வொரு கால கட்டத்திலேயும் அந்த அந்த ஸ்டேஜுக்கு இருக்கிற புரிதலை வெச்சுக்கொண்டுதான் சரி தப்புன்னு சொல்லறது. உண்மையில சரி எதுன்னு யாருக்குத்தெரியும்?
ரைட்! அடுத்து பார்க்க வேண்டியது எப்படி எல்லாம் ஒண்ணு என்கிறது. ஆனாலும் இப்போதைக்கு அதை கொஞ்சம் தள்ளி வெச்சுட்டு இந்த ஜகன் மித்யாவை பார்த்து நகர்த்திடலாம்.