Pages

Friday, August 17, 2012

கோளாறான எண்ணங்கள் -6


ரைட், ஏறத்தாழ இந்த பதிவுகளின் கடைசிக்கு வந்துட்டோம். அதிகம் தொல்லை தர மாட்டேன்! ;-)

நானும் பாப காரியம் எல்லாம் செய்யாம இருக்கத்தான் பார்க்கிறேன். இந்த மனசு விட மாட்டேங்குது! மனசில இருக்கிற காமும் குரோதமும் படுத்துது. என்ன செய்யலாம்?
நானா ஒண்ணும் பண்னலை. இந்த ஆசாமி இன்ன காரியத்தை பண்ணித்தரேன்னு பணம் வாங்கிண்டு போய் ஏமாத்திட்டான். சும்மாவா இருக்க முடியும். மனசு அதையே சுத்தி சுத்தி வருது. அவனை திட்டிக்கொண்டே இருக்கிறேன். அவனை பாத்தா சட்டையை பிடிச்சு நாலு அறை விடத்தோணுது. நிஜமாவே அப்படி செய்துடுவேனோ ன்னு பயமா இருக்கு! என்ன என்னவோ செய்து பாத்தாச்சு. ஒண்ணும் சரிப்படலை. என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்ன்னா நிதானமா யோசிக்கலாம். தீதும் நன்றும் பிறர் தர வாரா ன்னு ஒரு பாட்டு நினைவு இருக்கா? (எதுக்கும் இருக்கட்டும்ன்னு கடைசியில் கொடுத்து இருக்கேன், எங்கிருந்து எடுத்தேன்னு நினைவு இல்லை. அந்த புண்ணியவான் வாழ்க!)

தண்ட செலவு ஆகணும்ன்னு நம் கர்மா நம்ம தலையில எழுதி இருந்தா அது ஆகியே தீரும். நாம் இருபது ரூபாக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தின்னு அதுல ரெண்டு ரூபா ஒத்தருக்கு லாபம் கிடைக்கணும்ன்னு இருந்தா அது நடந்தே தீரும். நாம் நஷ்டப்படணும்ன்னு இருந்தா நஷ்டப்பட்டே தீருவோம்.

பல வருஷங்கள் முன்னே சில ஊர்களுக்கு போய் போய் வருவேன். மோட்டார் பைக்கில்தான் பெரும்பாலும் பயணம். போகும் போது ஸ்லோகம் / மந்திரம் சொல்லிக்கொண்டே போவேன்.  நெய்வேலி போக வேண்டி இருந்தது. வெளியூர் ஆசாமிங்களுக்கு அது பாடாவதி ஊர்! நகரத்துக்குள்ள ஒரு போக்கு வரத்து வசதியும் கிடையாது. ஆட்டோவில போக வேண்டிய இடத்துக்கு போயிடலாம். திரும்பறது? அப்பல்லாம்  அலைபேசி எல்லாம் கிடையாது. ஒரு கல்யாண ரிசப்ஷன் அடெண்ட் பண்ண பஸ்ல போய் திரும்ப பட்ட பாட்டிலே இனிமே வாகனம் இல்லாம வரக்கூடாதுன்னு முடிவு செய்திருந்தோம்.

சரி.  அதனால் ஒரு விழாவுக்கு பைக்ல போயிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தேன். நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து போன காலம்; தீட்டு என்பதால் மந்திர ஜபம் செய்யவில்லை. திரும்பும் போது ஏறத்தாழ மணி எட்டாகிவிட்டது. மேல்பட்டாம் பாக்கம் என்னும் ஊரை தாண்டிக்கொண்டு இருந்த போது திடீரென்று நாய் ஒன்று குறுக்கே வந்தது. சடன் ப்ரேக் போட்டு வண்டி சரிந்து கீழே விழுந்தேன். ஜனங்கள் வந்து உதவி செய்தார்கள். நன்றி சொல்லிவிட்டு பைக்கை கையில் தாங்கிய போது இட்து க்லாவிகிள் உடைந்து போயிற்று என்று புரிந்துவிட்டது.

எவ்வளவு அருமையான செட் அப்?! பஸ்ஸிலா போகிறாய்? இந்தா அதுக்கு ஒரு தடை. மந்திரமா சொல்லி தப்பிக்கிறாய? இந்தா அதுக்கும் ஒரு தடை. கீழே விழு; எலும்பை முறித்துக்கொள். அது உன் கர்ம வினை.

எல்லாம் சரி. இந்த எனக்கு அநியாயம் பண்ண ஆசாமியை என்ன செய்ய?
ஒண்ணும் செய்ய வேண்டாம். எப்ப நம்மால ஒண்ணும் செய்ய முடியலைன்னு தெரியறதோ அப்ப கருப்பு சாமிகிட்டே ப்ராது கொடுத்துட்டு மறந்துடலாம்.

இப்படி எனக்கு துரோகம் செஞ்ச ஒத்தர் பட்ட பாட்டை பார்க்கலாமா?

ஃப்லாட்கள் கட்டினேன். தாத்தா கட்டிய வீடு. பூர்வீக சொத்து. பல வருஷங்கள் ஆகி அதன் வாழ்நாள் முடிகிறது என்று தோன்றியதால் இடித்துவிட்டு கட்ட முடிவு செய்தோம். அது சரி யார் பூனைக்கு மணி கட்டுவது? வீட்டுக்கு பாத்யதை இருந்தவர்கள் எங்கெங்கோ இருந்தார்கள். என் அப்பா தவிர நான் ஒருத்தன்தான் லோக்கல். அப்பாவுக்கு கஷ்டம் வைக்க வேண்டாம் என்று தலையில் அக்‌ஷதை போட்டுக்கொண்டு இறங்கிவிட்டேன். அந்த அனுபவங்கள் ஒரு தனி தலையணை சைஸ் புத்தகம். நாம் பார்க்க வேண்டியது மிஸ்டர் எம் செய்ததை மட்டுமே! 

இரண்டு தொகுப்புகள் கட்டினோம். முதலில் லிப்ட் வேண்டாம் என்று நினைத்து பின் லிப்ட் அமைக்க நேரிட்டது. அதற்கு இயக்குவதற்கு தகுதி சான்று வாங்க வேண்டும். அதை நாமே போய் வாங்க முடியாது. அதற்கென்று சில சர்டிபைட் ஆசாமிகள் இருப்பார்கள். அவர்கள்தான் “சோதித்து விட்டு சர்டிபை செய்து சான்றிதழ் வாங்கி” தருவார்கள். ஹிஹிஹி அதாவது புரோக்கர்கள்! கம்பெனியில் இருந்து நம்முடன் பேச்சு வார்த்தை நடத்தும் ஆசாமியே அந்த ஆசாமியையும் பிடித்துக்கொடுத்து காரியத்தை முடிப்பார். முதல் கட்டிடம் ஒரு பிரச்சினையும் இல்லை. இரண்டாவது கட்டிடத்துக்கு பிரச்சினை ஆரம்பித்தது. காலா காலத்தில் வரவில்லை. இதோ அதோ என்று ஏமாற்றிக்கொண்டே இருந்தார். கம்பெனி ஆசாமியோ வேலையை மாற்றிக்கொண்டு துபாய் போய்விட்டார்.

 பெரிய கதையை சின்னதாக்கி விடலாம். அனுமார்கிட்டே முறையிட்டுவிட்டு என்ன ஆச்சு என்று மட்டும் விசாரித்துக்கொண்டு இருந்தேன். இவருக்கு அப்புறம் என்ன ஆச்சு? இவரது அம்மா கிட்னி பெய்லியர் என ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி மூன்று மாதம் போச்சு. பின் அவர் இறந்து போனார். சொத்து பிரிப்பதில் தகராறு வந்து குடும்பம் சிதைந்தது. மனைவி டைவோர்ஸ் செய்து விட்டு போய்விட்டார். இவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து படுத்தார். தேறி வந்த போது இன்னொரு  ஹார்ட் அட்டாக். அப்புறம் விசாரிப்பதை விட்டு விட்டேன். தண்டம் 15 ஆயிரம். இன்னொரு ஆசாமியை பிடித்து சான்றிதழ் வாங்கிக்கொண்டேன்.
இந்த பதிவு பெரிசாகப்போய் விட்டது. அதனால் தீதும் நன்றும் அடுத்த பதிவில்…

 
Post a Comment