Pages

Sunday, August 5, 2012

பாபங்கள், ப்ராயச்சித்தங்கள் -10


பஞ்சகவ்யம்: பொதுவாக பல பாபங்களுக்கு, முக்கியமாக சாப்பிடக் கூடாததை சாப்பிட்டதற்கு பஞ்சகவ்யம் உயர்ந்த ப்ராயச்சித்தமாக விதிக்கப்படுகிறது. இதை செய்வதும் கொஞ்சம் சுலபமே. ஒரு அரை கட்டைவிரல் அளவு கோமியம் (நாட்டு மாட்டு பசுஞ் சாணம்), ஒன்றரை  பலம் கோ மூத்திரம், மூன்று பலம் தயிர், ஒரு பலம் நெய், ஏழு பலம் பால் ஒரு பலம் குச தர்ப்பையால் நீர் என்று ஒரு கணக்கு. கருப்பு பசுவிலிருந்து கோ மூத்ரம், வெள்ளை பசுவிலிருந்து கோமியம், தாம்ர வர்ண பசுவின் பால், சிவப்பு பசுவின் தயிர், காராம் பசுவின் நெய் இவற்றை பயன்படுத்த வேண்டும். அல்லது இதெல்லாமே ஒரே கருப்பு நாட்டு பசு மாட்டிலிருந்து பெற வேண்டும். அதாவது முன்னேயே திட்டமிட்டு பால் காய்ச்சி தயிராக்கி நெய் எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். 

இன்னொரு அளவு கணக்கை ப்ரஜாபதி சொல்கிறார்.கோமியம் ஒரு பங்கு, கோமூத்ரம் அதைப்போல இரண்டு பங்கு, நெய் அதைப்போல 4 மடங்கு, அதைப்போல எட்டு மடங்கு பால், அதைப்போல ஐந்து மடங்கு தயிர். (கடைசியில் தயிர் 320 மடங்காகும்!)

இவற்றை ஒன்று சேர்க்க மந்திரங்கள் உண்டு. கலக்கிய பின் ஜபிக்க மந்திரங்கள் உண்டு.
இப்படி செய்து எடுத்து பச்சை தர்பங்கள் ஏழால் அக்னி, சோமன், ஸவிதா இவர்களுக்கு ஹோமம் செய்து மீதி உள்ளதை பலாச (புரசு) இலையாலோ தாம்ர பாத்திரத்தாலோ அருந்த வேண்டும்.

இப்படி சதுர்தசியில் உபவாஸம் விரதம் இருந்து பௌர்ணமி அன்று செய்வது சிறப்பு.
பஞ்சகவ்யம் செய்த ஒரு சில மணிகளுக்குள்ளேயே சாப்பிட்டுவிட்டால் அதில் ஒரு தோஷமும் தெரியாது! அருவருப்பு அடைய வேண்டாம்!
முக்கிய அதிகாரி இலகுவை அனுஷ்டிக்கக்கூடாது. நம் புத்தி எப்பவுமே இப்படித்தானே வேலை செய்யணும்? செய்யறத்துக்கு சுலபமான விஷயமா பார்ப்போம்! இந்த கலி யுகத்துக்காக பரம கருணையோடு செய்ய சக்தி இல்லாதவர்களுக்காக இளக்கி கொடுத்த வழிகளை சக்தி உள்ளவர்கள் செய்ய முயற்சிக்கக்கூடாது.வேதத்துக்கு அதிகாரம் உண்டு என்றால் அந்த ரீதியிலான ப்ராயச்சித்தங்களைத்தான் செய்ய வேண்டும். இல்லயானால் மட்டுமே ப்ராஜாபத்ய க்ருச்சிரம் முதலானவற்றை அனுஷ்டிக்க வேண்டும்.

இப்படி இல்லாமல் லகு ப்ராயச்சித்தத்தை கைக்கொள்வது தோஷமாக சொல்லப்பட்டு இருக்கிறது. இதற்கு பலன் கிடைக்காதாம்! ஆகவே ஆத்ம வஞ்சனை செய்யாமல் தான் அசக்த அதிகாரிதானா என்று பரிட்சித்தே முடிவு செய்ய வேண்டும்.

சரி ப்ராயச்சித்தம் செய்தாச்சு. அது சரியா இருந்ததா, பாபம் நீங்கித்தான்னு எப்படி தெரியும்?

 

No comments: