Pages

Tuesday, July 31, 2012

பாபங்கள் - ப்ராயச்சித்தங்கள் -6



 பாபங்களை பார்த்தோம். பட்டியல் இன்னும் பெரியது. முழுமையாக எழுத சலிப்பு. அப்படியேத்தானே படிக்கவும் இருக்கும்? :-)

இப்போது ப்ராயச்சித்தங்களை பார்க்கலாம்.

ப்ராயச்சித்தத்துக்கு முக்கியமாக தேவையானது பச்சாதாபம். பச்சாத் தாபம். பின்னால் உண்டாகும் தவிப்பு. இப்படி செய்து விட்டோமே, தவறாயிற்றே என்ற நினைப்பு வர வேண்டும். மனம் நொந்து இனி இப்படி செய்வதில்லை என்ற உறுதியும் வர வேண்டும். இது இருந்தால்தான் முதலில் ப்ராயச்சித்தத்துக்கு அருகதையே வரும். அப்படி வந்தபின் ஊரில் பெரியோர் சபை கூடி ப்ராயச்சித்தத்தை முடிவு செய்ய வேண்டும். யாரும் இஷ்டத்துக்கு இதை செய்ய முடியாது. யாரெல்லாம் இந்த குழுவில் இருக்கலாம், எவ்வளவு பேர் இருக்கலாம், எங்கே கூட வேண்டும், என்ன விவாதிக்க வேண்டும் என்றெல்லாம் விதிகள் உண்டு. பல விஷயங்களுக்கு சாத்திரங்களில் இன்ன ப்ராயச்சித்தம் என்றும் விதித்து இருக்கிறது. அதில் இல்லாத குற்றம் என்றாலே சுயேச்சையாக முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

ப்ராயச்சித்தங்கள் விதிக்கப்பட்டபின் அவற்றை சிரத்தையுடன் அனுசரிக்க வேண்டும்.
மஹாபாதகங்களுக்கு ப்ராயச்சித்தம் இல்லை என்று பார்த்தோம். இது நகர வாசம் குறித்தது என்றூம் வியவகாரத்துக்கு ப்ராயச்சித்தம் உண்டு என்றும் சில மஹரிஷிகளின் அபிப்ராயம்.  கலியுகத்துக்கு இவற்றை இளக்கியும் கொடுத்து இருக்கிறது. இருந்தாலும் சிலவற்றுக்கு ப்ராயச்சித்தம் செய்தாலும் ஒதுக்கியே வைக்கச்சொல்லுகிறார்கள்.

பாலஹத்தி (சிறுவர் சிறுமியரை கொல்வது) க்ருதக்னன், சரணாகதனை கொன்றவன் பெண்களை கொன்றவன் இப்படி. மேலும் ஸன்யாசியோ நைஷ்டிகனோ ஸ்திரீகளுடன் கலந்தால் ப்ராயச்சித்தம் செய்தாலும் ஒதுக்கியே வைக்க வேண்டும். இப்படி இன்னும் பல.
ப்ராயச்சித்தங்களில் பல விதங்கள் உண்டு. ப்ராஜாபத்யம் முதலான க்ருச்சிரங்கள் என்பது ஒன்று; சாந்த்ராயணம், உபவாசம் (கடவுளையே நினைத்துக்கொண்டு பட்டினியாக இருத்தல்), பஞ்சகவ்யம் அருந்துதல், கூச்மாண்ட ஹோமம், வேத பாராயணம், ப்ராணாயாமம், காயத்ரீ ஜபம் போன்ற பலவும் ப்ராயச்சித்தங்கள் ஆகும். பாபங்களில் குரு, லகு என்று பாகுபாடும் செய்து வைத்திருக்கிறது. ப்ராயச்சித்தங்களை விதிக்க தேசம், காலம், வயது, சக்தி ஆகியவற்றை உத்தேசித்தும் செய்யச்சொல்லி இருக்கிறது. இவை – உதாரணமாக உடல் பலஹீனமானவர், வறுமை- பலமான காரணங்களாக இருப்பின் தண்டனையை இளக்கி அடுத்த மட்ட தண்டனையாக கொடுக்க வேண்டும். இதை சபையே முடிவு செய்யணும்.

 

No comments: