Pages

Tuesday, June 3, 2008

பக்தி கதைஒரு அழகான பக்தி கதையோட இந்த பக்தி பகுதியை இப்போதைக்கு முடிக்கிறோம்.

கண்ணன் ஆறு வயசு பையன். அவன் அப்பா உயிரோட இல்லை. அம்மா ஏதோ அப்பப்ப கிடைச்ச வேலை செஞ்சு குடும்பத்தை சமாளிக்கிறாங்க. பையனை படிக்க அனுப்பணுமே. பக்கத்து பள்ளினா அடுத்த ஊர்தான் போகனும். அதுக்கு காட்டுப்பாதைலதான் போயாகனும். வேற வழி இல்லை. சரி, கஷ்டமோ நஷ்டமோ சேத்துதானே ஆகனும். பையனை பள்ளில சேத்தாச்சு. ஆனா அவனை தினமும் கொண்டு விட்டு அழைச்சு வர முடியுமா? அதுக்கே நேரம் போச்சுனா வேலை எங்க செய்யறது? சாப்பாட்டுக்கு என்ன செய்யறது? நீ நல்ல பையன்தானே? நீயே தனியா போயிட்டு வான்னு அம்மா சொன்னாள். "நீ சொன்னா சரிம்மா" ன்னு குழந்தையும் கிளம்பி போனான். சின்னப் பையன்தானே. காட்டு வழி போனதும் பயமா போச்சு. அழுதான். என்ன பிரயோசனம்? உதவ யாரும் அங்க இல்லை. அழுதுகிட்டே ஓடி போய் சேந்துட்டான். இவன் அழதுகிட்டே வந்ததை பாத்த குரு என்னன்னு விசாரிச்சு சமாதானப் படுத்தினார். அன்னைய பாடம் நடந்தது. சாயந்திரம் "குழந்தை, நாளை துணை இல்லாம வராதே" ன்னு சொல்லி ஒத்தர் துணையோட வீட்டுக்கு அனுப்பினார்.

அடுத்த நாள் குழந்தையை அம்மா பள்ளிக்கு போகச்சொல்ல அவனோ குரு சொன்னதை ஞாபகப்படுத்தினான். "அம்மா அந்த காட்டு வழில போக எனக்கு பயமா இருந்தாலும் நீ சொல்கிறதால போயிடுவேன். ஆனா குரு உத்தரவு போட்டுட்டாரே மீறலாமா?” ன்னு கேட்டான். அம்மாவுக்கு என்ன செய்யறதுன்னு புரியலை. இந்த குழந்தை பாவம் கஷ்டப்பட கூட தயாரா இருக்கான். இவன் படிக்காம இருக்கலாமா? ஆனா யாரை துணையா கூட அனுப்பறது? யாருமே நமக்கு இல்லையே. நமக்குன்னு இருக்கிறவன் பகவான் ஒத்தன்தான். அவனைதான் அனுப்பணும். யோசனை பண்ணிட்டு குழந்தையை பாத்து சொன்னாள். "நான் அம்மா சொல்றேன். நீ பள்ளிக்கூடம் போ. காட்டு வழில பயமா இருந்தா உன் அண்ணாவை கூப்பிடு. அவன் துணை வருவான்.” பையனுக்கு ஒரே சந்தோஷம். "அட! எனக்கு ஒரு அண்ணா இருக்கான்னு தெரியவே தெரியாதே. அவன் பேரு என்ன?”
"அவன் பேர் கோபாலன்.”

சந்தோஷமா கிளம்பினான் பையன். காட்டுப்பாதைல கொஞ்ச தூரம் தைரியமா போனாலும் அப்புறம் பயம் வந்தாச்சு. "அண்ணா! அண்ணா!" ன்னு கூவினான். என்னடான்னு கேட்க யாரும் யாரும் அங்க இல்லை. இவனுக்கோ ரொம்ப பயமா போச்சு "அம்மா சொன்னாளே, நீ இருக்கே நிச்சயமா வருவாய்ன்னு. வரமாட்டியா? என் மேல என்ன கோபம்?" ன்னு புலம்ப ஆரம்பிச்சான். கொஞ்ச நேரத்துலேயே புல்லாங்குழல் சத்தம் கேட்டது. ஒரு இளைஞன் கன்னுக்குட்டி ஒன்னு பின்னால வர வந்து சேந்தான். "மன்னிச்சுக்கப்பா! நான் காட்டுல அந்த பக்கம் இருந்துட்டேன். என்ன வேணும்?" ன்னு கேட்டான். "நான் தினமும் பள்ளிக்கூடம் இந்த வழியா போகணும். நீதான் துணைக்கு வரணும்" னு பையன் சொன்னான். "ஓ! அதுக்கென்ன நிச்சயம் வரேன்" னு இளைஞன் ஒத்துக்கிட்டான்.

அன்னிலிருந்து குழந்தைக்கு ஒரே குஷிதான். தினசரி இரண்டு பேரும் ஆடறதும் பாடறதும் கன்னுக்குட்டயோட கூத்தடிக்கிறதும்.... கோபாலன் குழந்தைக்கு நிறைய விஷயங்கள் கத்துக்கொடுத்தான்.

இப்படியே நாள் ஓட குரு பூர்ணிமா வந்தது. அன்றைக்கு மாணவர்கள் தங்களால முடிந்த தக்ஷிணையை குருவிடம் சமர்ப்பணம் செய்வாங்க.. மத்தவங்க எல்லாம் எங்க அப்பா அத கொடுப்பார் இத கொடுப்பார்னு கதை அளக்க இவனுக்கோ ஒரே வருத்தம். அம்மாகிட்ட கேட்டதுக்கு "ஒண்ணுமே இல்லையேப்பா கொடுக்க" ன்னு சொல்லிட்டாங்க. கவலையோட பள்ளிக்கூடம் போற குழந்தையை கோபாலன் "ஏன்டா வருத்தமா இருக்க?" ன்னு கேட்டான். விஷயம் தெரிஞ்சதும் "கொஞ்சம் இரு" ன்னு சொல்லி கொஞ்ச நேரத்துலேயே திரும்பி வந்தான். ஒரு சின்ன மண் சட்டில ரொம்ப கொஞ்சமா வெண்ணை இருந்தது. இத குருகிட்ட கொடு. அவர் வாங்கிப்பார்னு சொல்லி அனுப்பினான். குழந்தையும் சந்தோஷமா எடுத்துகிட்டு போனான்.

பள்ளிக்கூடத்தில பசங்க வித விதமா பொருட்கள் கொண்டு வந்து குவிச்சாங்க. இவன் வெண்ணை சட்டியை கொடுத்தப்ப சிரிச்சாங்க. குரு அவர்களை அதட்டி சும்மாயிருக்க சொல்லி "குழந்தே! உன் நிலமை எனக்கு தெரியுமே! உனக்கு ஏது இது?"ன்னு கேட்டார் பையன் "என் அண்ணா கொடுக்கச்சொல்லி கொடுத்தான்" னு சொன்னான். "யாரடா இவனுக்கு அண்ணா? யாரும் கிடையாதே!” ன்னு நினச்சுக்கொண்டே குரு சட்டியை வாங்கி தன் மனைவிகிட்ட கொடுத்தார். அவர் மனைவியும் அதை வாங்கி அங்க வந்த தன் குழந்தைக்கு வெண்ணையை கொடுத்தாள். மத்த குழந்தைகள் கைநீட்ட அவளும் கொடுத்துக்கொண்டே இருந்தாள். எல்லா குழந்தைகளுக்கும் தந்த பிறகு எப்படி இன்னும் வெண்ணை இருக்குன்னு சிந்தனை வந்தது. இருந்தது இரண்டு குழந்தைகளுக்கு கூட காணாதே! அவள் ஆச்சரியப்பட்டுகொண்டு இருக்கும்போது பசங்களோ ரொம்ப நல்லா இருக்குன்னு கை நீட்டிக்கிட்டே இருக்காங்க. குரு மனைவிக்கு கொடுத்து மாளலை. வெண்ணையோ குறையலை. இத கேள்விபட்டு வந்த ஜனங்களுக்கும் கொடுத்து இன்னும் யாருமே இல்லைங்கிறப்பதான் அது காலி ஆச்சு. எல்லாருக்கும் இப்ப இது எப்படி நடந்ததுன்னு புரியலை.

பையனை அழச்சுகிட்டு அவன் அம்மாகிட்ட போனாங்க. அவளோ தனக்கு ஒண்ணுமே தெரியாதுங்கிறாங்க. யாரடா அந்த அண்ணன்னு பையனை கேட்டா அம்மா நீதானே காட்டுல மாடு மேச்சிகிட்டு ஒரு அண்ணன் இருக்கிறதா சொன்ன என்கிறான். எல்லாரும் காட்டு வழிக்கு போய் "எங்கே உன் அண்ணனை காட்டு?" ன்னாங்க. பையன் கூப்பிட கூப்பிட யாருமே வரலை. பையன் அழ ஆரம்பிச்சுட்டான். "நான் பொய் சொன்னதா எல்லாரும் சொல்லறாங்களே அதை சரி பண்ண நீ வந்துதான் ஆகனும்" ன்னு அழுதான். அப்ப புல்லாங்குழல் சத்தம் கேட்க குழந்தையும் குதிக்கிறான் "வா! வா! நீ நிச்சயம் வருவாய்ன்னு தெரியும். இதோ இவங்ககிட்டே நீ யாருன்னு சொல்லு" ங்கிறான். ஜனங்களுக்கோ புல்லாங்குழல் ஓசை கேட்டது தவிர ஒன்னும் தெரியலை. "இவன்தான் என் அண்ணன்" ன்னு பையன் கூத்தாட எல்லாருக்கும் அது யார்ன்னு சீக்கிரமே புரிஞ்சு போச்சு.

Post a Comment