Pages

Friday, October 17, 2008

நெரூர்-2



நெரூர் அக்கிரஹாரம்- இன்றைய நிலைமை:

சிறிய, கொஞ்சம் பெரிய கிராமங்களை தாண்டி நெரூர் போய் சேர்ந்தோம். நேரடியாக பிரம்மேந்திராள் அதிஷ்டானத்துக்கு போனோம். நல்ல கடுமையான வெயில். புகளூர் போன நண்பர் அப்போதே வெயிலைப்பத்தி புகார் சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது அதிகமாக சொல்கிறாரோ என்று நினைத்தேன். இல்லை என்று தெரிந்தது.

சமீபத்தில் கட்டிய கட்டிடங்கள். நுழைவாயில் அருகில் பூந்தோட்டம். சற்று உள்ளே சென்று கோவிலின் வாசல். சற்றே முன் குருக்கள் வெளியே போய்விட்டார் என்றார்கள். நல்ல வேளையாக நடை சாத்தவில்லை. ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவர் அங்கே தொண்டு செய்து வருகிறார். அவர் எங்களை அழைத்துப்போய் சுற்றிக்காட்டினார். நேரடியாக உள்ளே நுழைய இருப்பது காசி விஸ்வநாதர் சன்னதி. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. பிரம்மேந்திராள் சித்தி ஆகும் முன் இந்த இடத்தில் ஒரு குகை அமையுங்கள். என்று சொல்லி அங்கு அமர்ந்துவிட்டார். "அங்கே ஒரு வில்வ மரம் ஒன்பதாம் நாள் முளைக்கும்: சித்தி ஆன 12 ஆம் நாள் காசியில் இருந்து ஒரு பிரம்மசாரி ஒரு சிவலிங்கத்துடன் வருவான். அந்த சிவலிங்கத்தை இந்த உடல் அமரும் இடத்திலிருந்து 12 அடி தூரத்தில் கிழக்கே பிரதிஷ்டை செய்யுங்கள்" என்று தெரிவித்ததாக சொல்கிறார்கள். அதே போல நடந்தது. புதுக்கோட்டை மகாராஜா சுற்று சுவர் எழுப்பினாராம்.

வலது பக்கம் அம்பாள் சன்னதி. 90 டிகிரி கோணத்தில். இவர்களை வணங்கி சுற்றிக்கொண்டு பின் பக்கம் போனால் அங்கே பிரம்மேந்திராள் சித்தி ஆன இடத்தை பார்க்கலாம்.

நாங்கள் முதல் முறை பார்த்தபோது துயரமே மேலிட்டது.

இந்த இடத்தை நிர்வகிப்பதில் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது. சாதாரணமாக இப்படி சிவலிங்க பிரதிஷ்டை செய்தால் அதற்குத்தான் அபிஷேக ஆராதனைகள். ஆனால் இங்கோ சமாதியான இடத்தில் சிவலிங்கத்தை வைக்கவில்லை. ஆகவே அது ஒரு கோவிலாக மாறி அரசின் கைக்கு போய்விட்டது. காசு இல்லாத இடத்தில் அரசு என்ன அக்கறை காட்டப்போகிறது?

குழம்பிய பக்தர்கள் வில்வ மரத்துக்கே பூஜை செய்ய ஆரம்பித்தனர் போலும். பக்கத்தில் சதாசிவானந்த சுவாமிகள் என்று ஒரு துறவி கைலாஸ ஆஸ்ரமம் என்று அமைத்து இந்த கோவிலையும் சுற்றி சுவர் எழுப்பி கணபதி, முருகன், பைரவர் என்று பிரதிஷ்டை செய்து கொஞ்சம் பெருக்கினார். பிறகு பக்தர்கள் உற்சாகத்தில் வில்வ மரத்தை சுற்றி தியானம் செய்ய வசதியாக மண்டபம் அமைத்து மரத்தை சுற்றி ஒரு அதீத உற்சாகத்தில் கல் தளமும் அமைக்கவும்; நாளாக ஆக வில்வ மரத்துக்கு 50 லிட்டர் 100 லிட்டர் ஆவின் பால் என்று அபிஷேகம் செய்யவும் மரம் பட்டுப்போய்விட்டது. எந்த ஒரு மரத்துக்கும் சுற்றி தாராளமாக மண் இருக்க வேண்டாமா? மண் பாலால் மேலே மூடி சீல் ஆகிவிட்டால், தண்ணீர் உள்ளே போக வேண்டாமா? வேர்களுக்கு காற்றும் அவசியமாச்சே? இயற்கையாக எதையும் இருக்கவிட மனிதன் ஏன் சம்மதிப்பதில்லை என்பது எனக்கு புரியாத புதிர்.

போதாக்குறைக்கு ஒரு கீத்துக்கொட்டாய் வேறு மரத்தின் அருகில் போட்டு வைத்து அங்கே விளக்கையும் ஏற்றி வைத்துவிட்டதால் ஒரு நாள் இரவு கொட்டகை தீப்பிடித்து அதுவும் எரிந்து கொட்டகையும் எரிந்து காவலுக்கு இருந்த ஒரு சிறுவன் முயன்ற வரை அதை அணைக்கப்பார்த்து... நாங்கள் போனபோது பட்டுப்போய் கருகிய மரமே காட்சி அளித்தது. ரொம்ப முன்னேறி பாலன்ஸ் ஆகிவிட்டவன் என்று நினைத்துக்கொண்டு இருந்த எனக்கு அப்படி ஒன்றும் இல்லை என்று நன்றாக புரிந்து போய்விட்டது. அவ்வளவு அப்செட் ஆகிவிட்டேன். ஏதும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி வக்கீலை பார்க்கபோய்விட்டோம்.

நெரூர் அக்கிரஹாரம் கொஞ்சம் வித்தியாசமான அமைப்பு உள்ளது. இரண்டு சாரி வீடுகள். நடுவில் வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. ஓரிரண்டு கிளைத்தெருக்களும் உண்டு. வீடு-வீதி- வாய்க்கால் -வீதி- வீடுகள் இப்படி இருக்கிறது. ஒரு பக்கம் கொஞ்சம் பேர் இன்னும் வசிக்கிறார்கள். எதிர் சாரியில் ஒரு போஸ்ட் ஆபீஸ். சமீபத்தில் வந்த ஒரு ஜ்யோதி நிலையம் -வள்ளலார் பக்தர் ஒருவர் ஒரு விசாலமான ஹால்; பின்னால் ஒரு ஓடு வேய்ந்த பிரமிட்; பக்கதில் அவர் வசிக்க வீடு இப்படி கட்டி இருக்கிறார்.தினசரி காலை கஞ்சி ஊற்றுகிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமியும் அன்னதானம். வருடா வருடம் 2-3 ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் (தைப்பூசம்?). அங்கே இருக்கக்கூடிய சுமார் 20 வீடுகளில் 7-8 தவிர எல்லாம் பராமரிப்பு இல்லாமல் இடிந்து போய்விட்டன. பிரம்மேந்திராளுக்கு பூஜை செய்யும் கன்னடத்து பட்டர், மடத்து பூஜை செய்யும் ஒருவர் தவிர யாரும் அங்கே குறிப்பிட்டு சொல்கிறபடியாக இல்லை.

நாங்கள் பார்க்கப்போன வக்கீல் அங்கே இருக்கும் ஸ்ரீமடத்து ஔஷதாலயத்துக்கு நிர்வாகியாக இருக்கிறார். சியவனப்பிராஷ் போல சில மருந்துகள் தயாரிக்கிறார்கள்.
பாடசாலைபற்றி பேச ஆரம்பித்தோம். “இங்கே பிராம்மணர்கள் வீடு 5-6 தான் இருக்கிறது. மற்றவர்கள் வீடுகளும் கொஞ்சம்தான். அதனால் இங்கே எந்தவிதமான ஆதரவும் எதிர்பார்க்கமுடியாது. என்னால் முடிந்ததை செய்கிறேன். ஆனால் அதிகமாக ஒன்றும் எதிர்பாராதீர்கள்" என்று தெளிவாகவே சொல்லிவிட்டார். ஸ்ரீ மடத்தில் பாடசாலைக்கு என்று 3 வீடுகளை வாங்கி வைத்து இருப்பதாயும் இன்னும் ஒன்று பாக்கி, அதையும் வாங்கிவிட்டால் அனேகமாக பாடசாலை துவக்கும் வேலை ஆரம்பித்துவிடும்; ஆனால் எப்போது என்று எல்லாம் ஒண்ணும் நிர்ணயம் இல்லை என்றார்.

வில்வ மரம் பற்றி விசாரித்தோம். சுமார் 5 வருஷங்களாக அது பட்டுபோய்க்கொண்டு இருப்பதாயும் அப்போதிலிருந்து அந்த அக்ரஹாரத்தவர்களுக்கு துர்பிக்ஷம்தான் என்றும் சொன்னார். சமீபகாலம் வரை துளிர் கொஞ்சம் இருந்தது. இப்போது தான் முழுக்க எரிந்துபோய்விட்டது என்று அவர் சொன்னபின் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கனத்த மனசுடன் கிளம்பினோம்.

அடுத்த பதிவில் கொஞ்சம் பிரம்மேந்த்ராள் சரித்திரம்.

6 comments:

Geetha Sambasivam said...

mmmmmm :(((((((( already heard! even though!!!!! :((((((

கிருத்திகா ஸ்ரீதர் said...

கோவிந்த புரம் கூட இப்படித்தான் ஒரு காலத்தில் இருந்ததாகவும் பின் போதேந்திராளோட நாம ஜெபம் அவர் அதிஷ்டானத்துல இருந்து கேட்டதாகவும் அதற்கப்புறம் தான் இத்தனை சிறப்பாக வந்ததாகவும் கேள்விப்பட்டுள்ளேன். அதுபோல் எதற்கும் அந்த மாகான்களைத்தான் நாம் வேண்டிக்கொள்ள வேண்டும். அவர்கள் மனது வைத்தால்மட்டுமே நடக்கக்கூடிய விஷயங்கள் இது.

மெளலி (மதுரையம்பதி) said...

//பட்டுப்போய் கருகிய மரமே காட்சி அளித்தது. அவ்வளவு அப்செட் ஆகிவிட்டேன்.//

நானும் முதல் முறை போன சமயத்தில் சற்றே துளிர் இருந்ததை (ஒரே ஒரு கிளை)பார்த்திருக்கேன்...கடந்த 4-5வருடங்களில் பட்ட மரத்தை பார்த்து மிக வருந்தியதுண்டு.

அந்த மரம் குருவின் அதிஷ்டானத்தின் மேலேயே இருக்கிறது, அவர் சொன்னபடி வந்தது என்பதறிந்தும் மக்கள் அதனை கவனிக்காது விட்டது மிகக் கொடுமை...

ambi said...

ம்ம், போன பதிவையும் இப்ப தான் சேர்த்து படித்தேன். உங்க பையர் பத்தின எண்ணம் இன்னும் உயர்ந்து விட்டது.

திவாண்ணா said...

கீதாக்கா, வருத்தம் ரொம்ப வேண்டாம். அடுத்த பதிவுல ஒரு நல்ல சேதி சொல்றேன்.
! :-))
@கிருத்திகா அக்கா,
//கோவிந்த புரம் கூட இப்படித்தான்//
அப்படியா? தெரியாது. இது புதுசு.

//அந்த மாகான்களைத்தான் நாம் வேண்டிக்கொள்ள வேண்டும்//
உண்மைதான். அவர்களுக்கென்ன? ப்ரம்மம். ஆகவேண்டியதுன்னு ஒண்ணும் இல்லை. அஞ்ஞானத்திலே வருத்தப்படறது நாமதான்.

@மௌலி
//மக்கள் அதனை கவனிக்காது விட்டது //
வருத்தப்பட்டாங்களே தவிர அவர்களுக்கு என்ன பிரச்சினைன்னு தெரியலை. அடுத்த பதிவுகள்ள சொல்றேன்.

Kavinaya said...

//இப்போது தான் முழுக்க எரிந்துபோய்விட்டது என்று அவர் சொன்னபின் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கனத்த மனசுடன் கிளம்பினோம்.//

செடி கொடிகள் சுலபமாக பட்டுப் போகாது; எப்படியிருந்தாலும் துளிர்த்து வரதான் பார்க்கும். அப்படி இருந்தும் இவ்வளவு பெரிய மரம் பட்டுப் போச்சுன்னா... ஹும்...