Pages

Monday, November 10, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 12


இந்த பதிவை ஆரம்பிச்சபோது தமிழ்லேந்து ஏதாவது கோட் பண்ணனும்னு தோணி பகவத் கீதை வெண்பான்னு சமீபத்திலே பாத்து போட்டோ எடுத்ததை போட ஆரம்பிச்சேன். அப்புறம் பாத்த அது கடின தமிழ்லே இருந்தது மட்டும் இல்லாம வார்த்தைகளை முன்பின் மாத்தினாதான் அர்த்தம் புரியும்ன்னு இருக்கிறது தெரியவந்தது. முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மாதிரி எல்லத்தையும் தட்டச்சி பிரிச்சு - அப்பவும் திருப்தி ஏற்படாம ஒரு குழு அறிஞர்கிட்டே கொடுத்து திருத்தி வாங்கி...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா!

உதவி செய்தவர் ரொம்ப சுலபமா ஒரு வாக்கியம் சொன்னார். "அப்பா, பகவத் கீதை பத்தி எழுதறதானா என் இப்படி கடும் தமிழ் வெண்பாவை எழுதறாய்? எல்லாருக்கும் புரியறமாதிரி மொழில எழுதேன்?”

சரிதானே! அனேகமா எல்லாரும் (ஜீவாவை தவிர) அதை விட்டுட்டு அடுத்த பாரவை படிச்சு இருப்பீங்கன்னு தோணுது! அதனால ஸ்ரீ அழகிய மணவாள ஜீயருக்கு ஒரு நமஸ்காரம் பண்ணி அனுப்பிட்டு,
வாங்க முத்து ஐயர், கொஞ்சம் புரியற மாதிரி வெண்பா சொல்லுங்க.
அட எனக்கே புரியுதே!
ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத
குர்யாத்வித்வாம்ஸ்ததா அஸக்தஷ்சிகீர்ஷுர்லோகஸம்க்ரஹம்॥ 3.25 ॥

ஆசையினாற் பாமரர்கள் ஆற்றுதல்போல ஆர்பயனில்
ஆசைதனை கைவிட் டறிவுடையோர்- ஆசகலும்
கன்மங்க ளைப்புவியின் நன்மை கருதினராய்த்
தின்மையறச் செய்தல்கடன் தேர்.


ஆசையினாற் பாமரர்கள் ஆற்றுதல் போல ஆர்பயனில் ஆசைதனை கைவிட்டு அறிவுடையோர்- ஆசகலும் கன்மங்களைப் புவியின் நன்மை கருதினராய்த் தின்மையறச் செய்தல் கடன் தேர்.

(பரதகுலத் தோன்றலே! கர்மங்களில் பற்றுக் கொண்ட அஞ்ஞானிகள் எவ்விதம் கர்மங்களைச் செய்கிறார்களோ பற்றில்லாத தத்வஞானியும் உலகத்திற்கு வழிகாட்டுதலைச் செய்ய விரும்பி அவ்விதமே கர்மங்கள் செய்யவேண்டும்.)

கிராமங்கள்லே நெல் உலர்த்துவது வழக்கம். ஒரு கிராமத்திலே ஒத்தர் அந்த மாதிரி உலர்த்தி இருந்தார். அப்ப ஒரு அதிதி வந்தார். அவரை சந்தோஷமா வரவேத்து உபசாரம் பண்ணி கொஞ்ச நேரத்திலே உணவு தயாராயிடும் சாப்பிட்டு போகலாம். நான் போய் வாழை இலை வாங்கி வரேன்னு சொல்லிட்டு போகிறார். அப்ப நெல்லை ஒரு மாடு வந்து மேயறது. அதிதி அதை பாத்துட்டு விரட்டறார். இதுல அப்படி செய்யறது ஒரு பற்று இல்லாம அது நம்ம கடமை ன்னு நினைக்கறாதாலதான். கிருஹஸ்தர் விரட்டினா நம்ம நெல்லுன்னு ஒரு அபிமானம். காரியம் என்னவோ நடந்தது. ஆனா ரெண்டு பேர் மனப்பான்மையும் வித்தியாசம். ஒத்தருக்கு அது கடமை. ஒத்தருக்கு அது அபிமானம். இப்படியே ஞானியா இருந்தாலும் பற்று இல்லாம கடமை என்கிறதுக்காக செய்யணும்.

புத்திபேதம் ஜநயேதஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வாந்யுக்த: ஸமாசரந்॥ 3.26 ॥

ஆசையினாற் கன்மஞ்செய் அஞ்ஞானி யர்க்குளத்திற்
பேசுமொரு பேதம் பிறப்பித்தல்- மாசதனால்
நல்லறிஞன் செய்கருமம் நாள்தோறும் தான் செய்து
மல்லலுறச் செய்வித்தல் மாண்பு.


ஆசையினால் கன்மஞ் செய் அஞ்ஞானியர்க்கு உளத்தில் பேசும் ஒரு பேதம் பிறப்பித்தல் மாசதனால் நல் அறிஞன் செய் கருமம் நாள் தோறும் தான் செய்தும் அல்லலுறச் செய்வித்தல் மாண்பு.

(பரமாத்ம ஸ்வரூபத்தில் நிலைத்து நிற்கின்ற ஞானி சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைப் பற்றோடு செய்யும் அஞ்ஞானிகளின் புத்தியில் குழப்பத்தை அதாவது கர்மங்களையாற்றுவதில் ச்ரத்தையின்மையை உண்டாக்கக் கூடாது. மாறாகத் தானும் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செவ்வனே ஆற்றி அவர்களையும் செய்யச் செய்யவேண்டும்.)

தத்வ ஞானிக்கு ஒரு வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனாலும் அவன் காட்டிலே தனியா இல்லாம சமுதாயத்திலேயே இருந்தா தகுந்த கர்மாவை செய்யணும். தீபாவளி வரதா? தன் பங்கா மக்களை வாழ்த்தி சில நல்ல விஷயங்களை சொல்லி கடை பிடிக்க சொல்ல வேண்டும்.

ரமணர்கிட்டே ஒத்தர் வந்து "நான் தினசரி ஜபம் செய்யறேன்" என்பார். அவரும் "ஆஹா! ரொம்ப நல்லது. அப்படியே செய்" என்பார். இன்னொருத்தர் வந்து "நான் தினசரி சிவ பூஜை செய்யறேன்" என்பார். ரமணரும் "ஆகா, ரொம்ப நல்ல காரியம். அப்படியே செய்" என்பார். இப்படி மகா பெரியா ஞானியா இருந்தவர் கூட சாதாரண ஜனங்களை போலவே அவங்களோட பழகி அவரவர் அவங்களோட வழில முன்னேற தூண்டினார்.

எப்பேர்பட்ட ஞானியானாலும் நல்லது கெட்டது என்பதை எல்லாம் வேறுபடுத்தி பார்த்து ஜனங்களை நல்ல சமாசாரத்திலே தூண்டணும். அப்படி இல்லாம "நல்லதா? கெட்டதா? அதெல்லாம் மாயை!” ன்னு சொல்லக்கூடாது.

இது மற்றவர்களுக்காக. தான் தன் ஆத்ம முன்னேற்றத்துக்கு என்ன செய்யணுமோ அதை செய்து கொண்டேதான் இருக்கணும். அப்ப ரெண்டு வேலையாச்சேன்னா, ஆமாம், அதனாலதான் இப்படி செய்ய முடியாதுன்னா சமுதாயத்திலேந்து விலகியே தன் ஆத்ம முன்னேற்றத்தை கவனிக்கணும்.

முழுக்க ஞானம் வராம அந்த பாதையிலே பயணிக்கிறவங்களுக்கும் கர்மா முழுக்க விடாது. ஆகையால் அதை செஞ்சு கொண்டேதான் ஞானத்தை தேடணும்.

கர்மாவை செய்து முன்னேறிடலாம்ன்னு நினைக்கிற சாதாரண மக்களை "இல்லை, ஞானம் இல்லாமல் ஆத்ம தரிசனம் கிடைக்காதுன்னு ஏதாவது சொல்லி குழப்பக்கூடாது.” மாறாக ஞானிகள் கொஞ்சம் கூட குறையாத உற்சாகத்தோட வேலை செய்து காண்பிப்பாங்க. எப்படி?

ஞானியா ஆனதால பலன்ல ஆசை இருக்காது என்பதால குறையாத உற்சாகத்தோட செய்து காண்பிக்க முடியும்.

சிலர் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிறப்ப திடீர்ன்னு ஆன்மிகத்திலே நாட்டம் வந்து அதிலே சன்னியாச ஈர்ப்பு வந்து "குடும்பம் எப்படியோ போகட்டும். சம்பாதிச்சு போட்டுட்டா அதோட என் கடன் முடிஞ்சது. ஆள விடுங்க, நான் ஜபம், தவம்ன்னு செய்யணும்" என்று பொறுப்ப விட்டுடக்கூடாது.

குடும்பம் இரட்டை மாட்டு வண்டியானதாலே தானும் இழுக்கிற வேலையை செய்தே ஆகணும். வேலையை செய்து கொண்டேதான் ஞானத்தையும் தேடணும். சன்னியாசம் மனசிலேதான் முக்கியமா இருக்கு. குடும்ப பாரத்தை இழுத்துக்கொண்டே மனசில சன்னியாசத்தோட இருக்கிறதுல முரண்பாடு இல்லை.

7 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

//சன்னியாசம் மனசிலேதான் முக்கியமா இருக்கு//

ரொம்பச் சரி... :-)

Kavinaya said...

//அனேகமா எல்லாரும் (ஜீவாவை தவிர) அதை விட்டுட்டு அடுத்த பாரவை படிச்சு இருப்பீங்கன்னு தோணுது!//

no comments :)

நெல் உதாரணம் நல்லாருக்கு.

////சன்னியாசம் மனசிலேதான் முக்கியமா இருக்கு//

ரொம்பச் சரி... :-)////

அதேதான்! :)

jeevagv said...

நல்லா இருக்குங்க!
நானும் நேரமின்மையால், வெண்பா இடற, நேரடியாய் விளக்கத்துக்கு போயிருக்கேன்.:-(
ஆனால் வெண்பா படிப்பதில் சுகம் இருக்கு, விட்டுட வேண்டாம். வெண்பாவில் இருந்து ஒரு புதிய சொல் கற்றேன்; தின்மை - தீயசெயல்.
"தின்மையறச் செய்தல் கடன் தேர்" - தீமையற்று கன்மங்களைச் செய்வது கடன் ஆமே!
அந்த நெல் உதாரணம் அருமை - இதுபோல சின்ன சின்ன கதைகளால் எளிதாகப் புரியும்.

திவாண்ணா said...

ஜீவா உங்களை நினைச்சுகிட்டேதான் வெண்பாக்களை போட்டேன். இப்ப போடுகிறது எளிதா இருக்கும்ன்னு நினைக்கிறேன். நல்ல புரியற பாடல்களை படிக்கும்போது ஒரு சந்தோஷம் இருக்குத்தான். :-))

திவாண்ணா said...

கவி அக்கா, நன்னி!

குமரன் (Kumaran) said...

எல்லாத்தையும் சொல்லிவச்சுட்டா பிரச்சனையில்லைன்னு எல்லாத்தையும் சொல்லிவச்சுட்டாங்கன்னு ஆதிசங்கரர் போன்ற ஆசாரியர்களையும் தவறாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் தங்களைத் தாங்களே அறிவாளி என்று கூறிக் கொள்ளும் சிலர். அவர்களுக்கு இந்த 'லோக சங்கிரஹம்' என்பதெல்லாம் புரியாது என்று எண்ணுகிறேன்.

நல்ல விளக்கங்கள் ஐயா.

இனி மேல் வர்ற வெண்பாக்களையும் பார்க்கிறேன். இந்த வெண்பா பழைய வெண்பாக்கள் அளவிற்குக் கடினமாகத் தான் எனக்கு தோன்றுகிறது. :-)

திவாண்ணா said...

வாங்க குமரன்!
:-))
தமிழ் தெரிஞ்சதால உங்களுக்கு வித்தியாசம் இல்லை போல இருக்கு.
எனக்கு என்னமோ இது கொஞ்சம் புரிஞ்சது!