Pages

Monday, November 24, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 22




ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா।
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச॥ 3.39 ॥


கொள்ள நிரம் பாத கொடுந்தழலாய் ஞானியர்க்குத்
தள்ளரிய வெம்பகையாய்ச் சார்ந்திடுமிவ் - எள்ளரிய
ஆசையினால் ஞானம் அறப்பொதியப் பட்டிடுமே
தேசழிய நீயிதனைத் தேர்

கொள்ள நிரம்பாத கொடுந்தழலாய், ஞானியர்க்குத் தள்ள அரிய வெம்பகையாய்ச் சார்ந்திடும். இவ் - எள்ளரிய ஆசையினால் ஞானம் அறப்பொதியப் பட்டிடுமே. தேசு அழிய, நீ இதனைத் தேர்.

(மேலும் அர்ஜூன! த்ருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும் காமம் என்ற வடிவத்தில் உள்ளதும் ஞானிகளுக்கு என்றுமே பகைவனுமாகிய இந்தக் காமத்தினால் மனிதனுடைய ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.)


அதனால் அது போன போக்குக்கு விடக்கூடாது. அக்னி எவ்வளவு போட்டாலும் எரிகிற மாதிரி காமம் நிறைவே அடையாது. மேலும் மேலும் கிளம்பும். அனுபவிக்க அனுபவிக்க தீர்க்கவே முடியாது.  "சீ இவ்வளவோதானா!" ன்னு தோணாது. அரிதாதான் அப்படி தோணும். இது அடுத்த ஜன்மாவிலேயும் தொடரும். கோடி ஜன்மத்திலேயும் போகாது. வளந்து கொண்டேதான் இருக்கும்.
ஞான வழியிலே கரை தேறிவிட்டவரை இங்கே சொல்லலை. அவர் காமத்தை ஜெயிச்சவர். ஞான வழில இருக்கிற நபருக்கு இந்த காமம்தான் என்னிக்குமே பகைவனா இருக்கு. அது ஆத்மா பத்திய அறிவை மறைக்குது. ஆனா உலக அறிவை மறைக்கலை. ஏன்னா அப்பதான் அவன் உலக விஷயத்திலே போய் சலனப்படுவான்? அததான் காமம் உத்தேசிக்கிறது.

இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே।
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தேஹிநம்॥ 3.40 ॥


 இந்தியங்களோடு மனம் புத்தி என்னுமிவை
சந்ததமும் காமம் தனக்கிடமாம் - முந்துமது
மற்றவற்றால் வாலறிவை மாய மறைத்துயிரை
முற்ற மயக்கிடுமே முன்

 இந்தியங்களோடு மனம் புத்தி என்னும் இவை சந்ததமும் காமம் தனக்கு இடமாம் - முந்தும் அது மற்றவற்றால் வாலறிவை மாய மறைத்து உயிரை முற்ற மயக்கிடுமே முன்.

(புலன்கள், மனம், புத்தி இவையெல்லாம் இந்தக் காமத்தின் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காமம்தான் மனம், புத்தி, புலன்களைக் கொண்டு ஞானத்தை மறைத்து ஜீவாத்மாவை மோகத்திற்கு உட்படுத்துகிறது.)

நம்மோட கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இதை எல்லாம் காமம் வசப்படுத்திக்கும். அதற்கு மேல் அது மனசை பிடிச்சுக்கும். சலனம் உள்ளது மனசு. சலனம் இல்லாதது புத்தி. மனசு ஏன் இவ்வளவு அலை பாயுதுன்னு கேக்கிறோம். சலனம்தான் அதோட முக்கிய குணம். புத்தி நல்லதாக இருக்கலாம். அல்லது கெட்டதாகவும் இருக்கலாம். “ஏண்டா புத்திகெட்டு அலையிற?” ன்னு கேட்கிறது உண்டு இல்லையா? அதே போல "அவனுக்கு ரொம்ப நல்ல புத்தி" ன்னு சொல்கிறோம். "அவனுக்கு ரொம்ப நல்ல மனசு" ன்னு சொல்கிறோம். இரண்டும் ஒண்ணு இல்லே. நல்ல புத்திசாலியா இருக்கிற ஆசாமியும் மனசு கொஞ்ச நேரம் கெட்டு போய் தப்பு செய்கிறது உண்டு. அடிக்கடி இப்படி ஆச்சுன்னா புத்தியே கெட்டு போயிடும். காமத்துக்கு நல்ல புத்தியை கெட்ட புத்தியாக்கிட சக்தி இருக்கு.
குறைந்த பட்சம் உடம்பைதான் நான் ன்னு நினைக்க வைக்குது. பல அனர்த்தங்களுக்கு அது போதாதா!

6 comments:

Geetha Sambasivam said...

மனசுக்கும் புத்திக்கும் உள்ள வேறுபாட்டைச் சொன்னது சரி, இரண்டும் ஒன்றாய் வேலை செய்யணும்னா என்ன பண்றது??????????

திவாண்ணா said...

ரெண்டாக சொன்னாலும் மனசோட இன்னொரு வடிவமே புத்தி. அதனால இரண்டும் ஒன்றாய் க்கு வேலையே இல்லை. புத்தி நிலையில்தான் செயல்படணும். எந்த ஒரு நேரத்திலேயும் மனசு இல்லாட்டா புத்தி நிலையில்தான் செயல் பட முடியும்.

Geetha Sambasivam said...

//ரெண்டாக சொன்னாலும் மனசோட இன்னொரு வடிவமே புத்தி. அதனால இரண்டும் ஒன்றாய் க்கு வேலையே இல்லை. புத்தி நிலையில்தான் செயல்படணும். எந்த ஒரு நேரத்திலேயும் மனசு இல்லாட்டா புத்தி நிலையில்தான் செயல் பட முடியும்.//

//இரண்டும் ஒண்ணு இல்லே.//

??????????????????????????????

திவாண்ணா said...

மன்னிக்கணும். கொஞ்சம் குழப்பி இருக்கேன்.
மனசும் புத்தியும் காபி டம்ளரும் டபராவும் வேற வேற போல இல்லை.
அது ரெண்டும் தண்ணீரும் ஐஸ் கட்டியும் போல வேற வேற. ஒரே பொருளோட இரண்டு நிலைகள்.
அதனால ஏதாவது ஒரு நிலைலதான் ஒரு நேரத்திலே இருக்க முடியும்.

மெளலி (மதுரையம்பதி) said...

நேற்றே வந்து படிச்சாலும். கீதாம்மாவோட பின்னூட்டம் பார்த்துட்டு குழப்பமாவே இருந்தது..

இப்போ ஐஸ்கட்டி-தண்ணீர் விளக்கம் ஒரு மாதிரி தெளியவச்சுடுத்து... :)

Geetha Sambasivam said...

//ஒரே பொருளோட இரண்டு நிலைகள்.//

இது!!! இதைத் தான் எதிர்பார்த்தேன்! நன்றி.