Pages

Thursday, April 30, 2009

வெறும் சாட்சியா....




நாம பல பேர் நடந்ததை நினைச்சுகிட்டே இருக்கோம் இல்லையா? அதனாலேயே துக்கம், கோபம் எல்லாமே வரும்! அட, அதான் நடந்து முடிந்த கதையாச்சே ன்னா யாரும் கேட்கிற மாதிரி இல்லே! சிலர் ஆமாம் சரிதான் ன்னு ஒத்துப்பாங்க. அப்புறம் திருப்பி அதே நினைவுகள் கோபதாபங்கள்...

இல்லை வரும் காலத்தைப்பத்தி கனவுகள், திட்டங்கள்... இப்படி செய்யணும், அப்படி செய்யணும், நான் இப்படி ஆவேன், அப்படி ஆவேன்... நினைத்த மாதிரி நடக்காட்டா கோப தாபங்கள்!

சீவன் முத்தர் இதுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். இப்படி நடந்ததேன்னு வருந்தவும் மாட்டார்; இப்படி நடக்கும்ன்னு குஷியாவும் இருக்கமாட்டார்! நிகழ்காலத்திலே இருப்பார். விதி வசத்தாலே கிடைச்சது எதுவோ அதை அனுபவிப்பார். அது நல்லதோ கெட்டதோ... சூடா கேசரி கிடைச்சாலும் சரிதான், சில்லுன்னு பழையது கிடைச்சாலும் சரிதான், ஒண்ணே போல இருக்கும் அவருக்கு!

நாம நல்ல வெயில்லே உஸ்உஸ்ன்னு "நாசமா போற வெயில்" ன்னு திட்டிக்கிட்டே தார்ரோட்டிலே போறோம். திடீர்ன்னு பாத்தா வெயில் சில்லுன்னு இருக்கு! இது என்ன அதிசயம்ன்னு இல்லே பாப்போம்! சீவன் முத்தர் இப்படி ஏதாவது நடந்தா அதை பாத்து எல்லாம் அசரமாட்டார்! இது ஏதோ வழக்கமா நடக்கற மாதிரி நடந்துப்பார்.

எதையும் இது நல்லதுன்னும் சொல்லமாட்டார். இது கெட்டதுன்னும் சொல்லமாட்டார்!
ஒத்தரை செத்து போயிடார்ன்னு சுடுகாட்டுக்கு எடுத்துப்போகும் போது திடுதிப்புன்னு செத்த பொணம் (அப்ப உயிருள்ள பொணம் உண்டா?!) எழுந்து உக்காந்தா நாம எவ்வளோ ஆச்சரியப்படுவோம்! சீவன் முத்தருக்கு அது ஒண்ணும் ஆச்சரியமாவே தோணாது!
ஒண்ணும் புரியலையே!
ஒண்ணுமில்லே, நமக்கு இதெல்லாம் நடக்க காரணம் மனசுதானே! அது அடங்கிப்போனா வேற எப்படி இருப்பாங்க!
நடக்கிற விஷயங்களுக்கு வெறும் சாட்சியா மட்டும் இருப்பாங்க.


98.
சென்றது கருதார்நாளைச் சேர்வதுநினையார் கண்முன்
நின்றதுபுசிப்பார் வெய்யி னிலவாய்விண் விழுதுவீழ்ந்து
பொன்றின சவம்வாழ்ந்தாலும் புதுமையா வொன்றும்பாரார்
நன்றுதீ தென்னார்சாட்சி நடுவான சீவன்முத்தர்.


சென்றது கருதார் (முன்பு நீங்கினதை நினைத்து வாடார்) நாளைச் சேர்வது நினையார் (நாளை வரக்கூடியதை நினைத்து மகிழ்ச்சி அடையார்). கண்முன் (நிகழ் காலத்தில்) நின்றது புசிப்பார் (விதி வசத்தால் கிடைத்ததை அனுபவிப்பர்) வெய்யில் நிலவாய் விண் விழுது வீழ்ந்து (வெப்பமான சூரிய கதிர்கள் சந்திரன் போல குளுமையாக ஆகாயத்திலிருந்து விழுதாக இறங்கினாலும்) பொன்றின (இறந்து போன) சவம் [உயிர் பெற்று] வாழ்ந்தாலும் புதுமையாய் ஒன்றும் பாரார். நன்று தீது என்னார் (ஒரு பொருளை நல்லது என்றும் ஒரு பொருளை தீயது என்றும் சொல்ல மாட்டார்) சாட்சி நடுவான (எல்லாவற்றையும் விலட்சணமாக இருந்து அறியும்) சீவன் முத்தர்.

தாத்பர்யம்: கோர மூட மனம் அடங்கி அநுபவமாக நிற்பதால் பிரமவித்து ஒன்றை கருதுவதும் வியப்புறுவதும் இல்லை.

Wednesday, April 29, 2009

பிரமவித்து-2



இப்படி மகிழ்ச்சியா இருக்கிற சீவன் முக்தர் எல்லாரையும் பிரம்மமாகவே பார்க்கிறதால அரசனும் ஆண்டியும் அவருக்கு ஒண்ணுதான். குபேரன் போல செல்வம் இருக்கிற ஆசாமியும் பரம ஏழையும் ஒண்ணுதான். கல்விக்கடலா மக்கள் போற்றுகிறவங்களும் ஒண்ணும் தெரியாத அறிவிலியும் ஒண்ணுதான். கடவுளையும் அவருக்கு சமதையான ஞான ஆசிரியர்களையும் தவிர யாரையும் துதிக்க மாட்டார், போற்ற மாட்டார்.
அதே நேரம் தான் யாரோ பெரிய ஆசாமின்னோ நினைக்கவோ நடந்துக்கவோ மாட்டார்.

ஞானம் வந்த ஆசாமி ஏன் இப்படி கிடந்து உழலணும்? பிரம்மத்தோட ஐக்கியம் ஆகி அப்படியே போக வேண்டியதுதானேன்னா...
காரணம் பிராரப்த கர்மா.
நினைவிருக்கா? இதைப்பத்தி முன்னேயே பேசினோம்!
பிறக்கும் போது மூட்டை கட்டி வந்த மொத்த கர்மா சஞ்சித கர்மா. அதிலே இனி வர இருக்கிறது ஆகாமி கர்மா. ஏற்கெனெவே பலன் கொடுக்க ஆரம்பிச்சு விட்டது பிராரப்த கர்மா.
ஞானம் வந்தா இந்த ஆகாமி போயிடும். ஆனா பிராரப்த கர்மாவை அனுபவிச்சு தீரணும்.

இந்த கர்மாக்கள்தான் சீவன் முத்தரை வேலை செய்ய தூண்டுகின்றன. விளைவுகளை அனுபவிக்க வைக்கின்றன. ஞானி அஞ்ஞானத்திலேயாவது அல்லது ஆசைகள் துவேஷங்களால் தூண்டப்பட்டாவது ஒரு காரியத்தை செய்கிறதில்லை. பிராரப்தம் பலவிதமாயும் இருக்கும். அதனால நடத்தையும் பல விதமா இருக்கும். பலரும் போற்றுகிற மாதிரி பெரிய தவம் செய்கிற ஆசாமியாவும் இருக்கலாம். ஏதோ ஒரு பெட்டிக்கடை வைச்சு கொண்டு வியாபாரம் செய்யலாம். தள்ளு வண்டிலே ஐஸ் க்ரீம் வித்துகிட்டு இருக்கலாம். ஒரு ஆசாமி அரசாளலாம். ஒத்தர் பிச்சை எடுத்து கிடைக்கறதை சாப்பிடலாம்;

யாக்ஞவல்கியர்ன்னு ஒத்தர். அவர் சபைகளிலே பிரசங்கம் செய்து ஜீவிச்சார்; ஜனகன் அரசாண்டார்; சுகர், வாமதேவர் என்கிறவங்க தவம் பண்ணாங்க; தாயுமானவர், மாணிக்கவாசகர் மந்திரியா இருந்தாங்க; பட்டினத்தடிகள் வியாபாரம்; இதே பட்டினத்தடிகள் பின்னாலே வெறுங்கையிலே பிச்சை வாங்கி சாப்பிட்டார். அதே போல பத்ரகிரியார்.
இப்படி எது வேண்டுமானாலும் செய்வார்கள் சீவன்முத்தர்.

97.
பிரம வித்துக்கள் இப்படி நான்கு விதமாக இருப்பானேன்?

பேதகர் மத்தால்வந்த பிராரத்த நாநாவாகும்
ஆதலால் விவகாரங்க ளவரவர்க் காவவாகும்
மாதவஞ் செயினுஞ்செய்வார் வாணிபஞ் செயினுஞ்செய்வார்
பூதலம் புரப்பாரையம் புகுந்துண்பார் சீவன்முத்தர்.

பேத கர்மத்தால் வந்த பிராரத்தம் நாநாவாகும். (அனேக விதமாக இருக்கும்) ஆதலால் விவகாரங்கள் அவரவர்க்காக (அவரவருக்கு தக்கனவாக) ஆகும். மாதவம் (பெரிய தவம்) செயினுஞ் செய்வார், வாணிபம் செயினும் செய்வார், பூதலம் புரப்பார் (உலகளவார்), ஐயம் புகுந்துண்பார் (பிச்சை எடுத்து உண்பார்) [இப்படி எது வேண்டுமானாலும் செய்வார்கள்] சீவன்முத்தர்.

தாத்பர்யம்: பிரம வித்துக்களுக்கும் ஞானம் உதிக்குமுன் சஞ்சித கர்மத்தால் உண்டான பிராரத்த கர்மம் பல விதமாகையால் அவர்களும் பல வகையாக இருப்பர்.


Tuesday, April 28, 2009

பிரம்ம வித்து



இது போன செவ்வாய்  கிழமை வெளியாகி இருக்கணும். ப்ளாகர் பூதம் செஞ்ச வேலைல வெளியாகலை. நானும் இது வரை கவனிக்கலை. இப்பவாவது சரி செய்யலாம்ன்னு....
மன்னிக்க.
-----------------------------

என்னங்க இது! இந்த உலகத்திலே நம்மளோட சேர்ந்து இருந்தா நம்மை மாதிரி வேலை எல்லாம் செய்யறப்ப கோபம் தாபம் எல்லாம் வராதா? அப்படி வந்தா செய்கிற வேலை மேலே ஒரு பற்றுதல் அது சரியா நடக்கணும் ன்னு ஆசை, நடக்கலேன்னா கோபம், நடந்ததுனா ஒரு பெரிமிதம்.... எதுக்குங்க இந்த வம்பெல்லாம்?

பிராரத்த கர்மாவால ஒருவேலையை செய்யறார். அப்ப கோபம் வருதுன்னு வெச்சுப்போம். அது ஒரு கணத்திலே மறைஞ்சுபோயிடும்.

எனக்கு தெரிஞ்ச ஒத்தர் பேசும்போது அவங்க உறவினர் ஒத்தரை பத்தி பேச ஆரம்பிச்சார். "என்னை இப்படி சொன்னார், அப்படி சொன்னார், இப்படி பண்ணார், அப்படி பண்ணார்ன்னு ஒரே புலம்பல். நிகழ்ச்சி நடந்து 30 வருஷம் ஆச்சு. பேசப்பட்ட நபர் ஊருக்கு போய் சேந்தும் 20 வருஷம் ஆச்சு! ஆனா இப்பவும் அதை நினைச்சு கோபம், வருத்தம் எல்லாம் வருது. நான் சொன்னேன் "அந்த நபர் ரொம்ப புத்திசாலி. ஊருக்கே போய் சேந்து கூட உன்னை இன்னும் வருத்தறார்!” என்ன சொல்ல வந்தேன்னா அப்ப கோப தாபங்களுக்கு காரணம் வெளியே இல்லே! நம்ம உள்ளேதான் இருக்கு! அதனால் பிரம்ம ஞானத்தை அடைஞ்சவர் கோப தாபங்களுக்கு ஆளாக மாட்டார்.

பிரம்மமா ஆன பிறகு எல்லாமே தெரியும்தானே? ஆனா இவர்கிட்டே பேசினா என்னமோ ஒண்ணுமே தெரியாதவர் போல இருப்பார். ஏதாவது சொன்னா ஒண்ணூமே தெரியாதவர் போல "ஓஹோ அப்படியா?" ம்பார்! இவர் பாண்டித்தியம் வெளியே வரவே வராது. ஏதேனும் தெரிஞ்சுக்கணும்ன்னா ரொம்ப கஷ்டப்பட்டுதான் வார்த்தையை வர வழைக்கணும்! உண்மையா தெரிஞ்சுக்க விரும்புறவங்களைதான் இவருக்கு அடையாளம் தெரியுமே! அவங்களுக்கு தேவையானது மட்டுமே சொல்லுவாங்க. எப்பவும் சந்தோஷமா இருப்பாங்க!

தாமரை இலை தண்ணீர்ன்னு அடிக்கடி கேள்வி படறோமே? அதுக்கு இலக்கணம் இவங்கதான்!

96.
அந்த பிரம வித்து கர்மம் செய்தால் காமம் முதலியன உண்டாகாதோ?

காமமாதிகள் வந்தாலுங் கணத்திற்போ மனத்திற்பற்றார்
தாமரை யிலைத்தண்ணீர் போற் சகத்தொடுங் கூடிவாழ்வார்
பாமர ரெனக்காண்பிப்பார் பண்டிதத் திறமைகாட்டார்
ஊமரு மாவாருள்ளத் துவகையாஞ் சீவன்முத்தர்.

காமமாதிகள் (காமம் முதலியன பிராரத்த வசத்தால்) வந்தாலும் கணத்தில் போம். மனத்தில் பற்றார். (அஞ்ஞானிகள் போல மனதில் அவற்றை வாசனையாக பற்ற மாட்டார்). தாமரை இலைத்தண்ணீர் போல் சகத்தொடும் (உலகத்துடன்) கூடி வாழ்வார். பாமரர் எனக்காண்பிப்பார்; பண்டிதத் திறமை காட்டார். ஊமரும் ஆவார். (மௌனமாகவும் இருப்பர்) உள்ளத்து உவகையாம் (என்றும் உள்ளத்தில் மகிழ்ச்சி கொண்டிருப்பார்கள்) சீவன்முத்தர்.
--
பிராரத்துவம் அனுபவித்து தீர இச்சை முதலியன ஒரு பொழுது ஏக தேசமாக உதித்தாலும் அவற்றின் அனாத்ம சுகத்தை உடனே நசித்தலாலும்; ஆகாயத்தில் தோன்றிய தூளியும் மேகமும் காற்றால் கலைவது போல, சத்துவ மனதில் காமாதி அசுத்த வாசனைகள் ஏகதேசமாய் தோன்றினாலும் முன் பழகிய வைராக்கியம் முதலான சுத்த வாசனைகளால் அக்கணமே நசித்தலாலும்; காற்று தனக்கு என்று துர்கந்தம் சுகந்தம் இல்லாது இருப்பினும் செல்லுமிடத்தில் அவற்றை பற்றி பின் விடுதல் போல ஞானிகள் காமாதிகள் சுபாவம் இல்லாது போனாலும் தொழில் செய்யுமிடத்தில் அவை உதிக்கில் அந்த அந்த கணத்தில் நீங்கிப்போகும்.

ஞானிகள் மனம் சகலத்தையும் பூரண ஆநந்தமாக தெளிந்து இருத்தலால் ஆகாயத்தில் சூரியனின் சூடும் சந்திரனின் குளிர்ச்சியும் பற்றாது போல காமாதிகளின் இன்ப துன்பம் தங்காது. (மனதில் பற்றார்)

தாமரையில் ஜலம் பொருதியும் பொருந்தாமலும் உள்ளது போல ஞானிகள் வாக்கு காயத்தால் சேர்ந்து மனதால் சேராது அதனை சொரூபத்தில் வைத்திருப்பார்.
யானையை குருடர் ஒவ்வோர் அவயத்தையும் ஒன்று ஒன்றாக தடவி இதுவே யானை என கூறினாலும் கண்ணுடையோருக்கு அது யானையாக பூரணமாக தெரிவது போல, எவரெவர் எப்படி வஸ்து நிச்சயம் கூறினாலும் அவையனைத்தும் தன் பரமார்த்த சுபாவத்துக்கு ஒத்ததால் அந்நிச்சயங்களை மறுத்து கண்டிப்பதால் தன் அனுசந்தானத்துக்கு விரோதமகையால் அவற்றை மறுக்க தெரியாத பேதையர் போல காட்டுவார். (பாமரர் என...)

முமுட்சுத்துவம் இல்லாதவற்கு தம் அநுபவத்தை அறிவித்தால் அவர்கள் புத்தியில் ஏறாது, இளைப்பே மிஞ்சும். ஆகவே பண்டித திறமை காட்டார். ஆநந்த அநுபவத்து தடை வராது இருக்கும் பொருட்டு ஊமரும் ஆவர். செய்ய வேண்டியது அனைத்தும் செய்து அடைய வேண்டியது அனைத்தும் அடைந்ததால் நித்திய சந்தோஷம் அடைவர்(- உள்ளத்து உவகையாம் ...)


Monday, April 27, 2009

சீவன் முத்தர்



சீவன் முத்தர்: பிரபஞ்ச விவகாரம் செய்யும் போதும் நிரவயமாய் சூட்சுமமாய் வியாபகமாய் இருக்கின்ற சின்மாத்திரமே தான் என இருப்பவர்.

முன்னே சொன்னாங்க இல்லையா, எது வரைக்கும் இப்படி சாதனை வேணும்ன்னு? அது முடிஞ்சா சாதகர் கதி என்ன? உடனே இந்த உலகை விட்டு போயிடுவாங்களா?
இல்லை அப்படி இல்லை. ஏன் என்கிறதுக்கு விளக்கம் அப்புறமா பாக்கலாம்.

சாதகர் சீவன் முக்தரா இருப்பார். அதாவது இந்த உலக காரியங்கள் எல்லாம் செய்து கொண்டே அதே சமயம் பிரம்மநிலையிலும் இருப்பார். ஒரு சினிமா பார்க்கிற ஆசாமி சினிமா பார்க்கிறோம்ன்னு தெரிஞ்சுகொண்டே பார்க்கிற மாதிரி. ஒரு நடிகர் நாடகம்தான் நடிக்கிறோம்ன்னு தெரிஞ்சு கொண்டே நாடகமாடுகிற மாதிரி இவங்களும் அவங்களோட பங்கு இந்த உலகத்தில என்னவோ அதை செய்துகொண்டே இருப்பாங்க.

இந்த சீவன் முத்தர்களுக்குள்ளேயே நாலு வகை இருக்கு. அவங்களுக்கு பிரம வித்து; பிரம வரன்; பிரம வரியான்; பிரம வரிட்டன் ன்னு பெயர்.
அட பிரம்ம நிலையிலேயே வித்தியாசமா?! ஏன் அப்படின்னா பிரம்மஞானத்திலே வித்தியாசம் இல்லை. அவங்க எப்படி நடந்துக்கிறாங்க என்பதை பொருத்து வித்தியாசம் இருக்கு. சொல்லுங்க கேக்கலாம்ன்னா...

94.
சீவன் முத்தர் எத்தனை விதம்?
ஞானமார் சீவன் முத்தர் நால்வகை யாவர் கேளாய்
வானிகர் பிரம வித்து வரன்வரி யான்வ ரிட்டன்
ஆனவர் நாம மாகு மவர்களிற் பிரம வித்தின்
தானமு மற்றை மூவர் தாரதம்மியமுஞ் சொல்வேன்

ஞானமார் (பரி பூரண ஞானம் உள்ள) சீவன் முத்தர் நால்வகையாவர் கேளாய். வான் நிகர் (ஆகாசத்துக்கு ஒப்பான) பிரம வித்து; வரன்; வரியான்; வரிட்டன். ஆனவர் நாமம் ஆகும். அவர்களில் பிரம வித்தின் தானமும் (ஸ்திதியும்) மற்றை மூவர் தாரதம்மியமுஞ் சொல்வேன்.
--
இவர்களில் ஞானத்தில் வித்தியாசம் இல்லை, ஆனால் இவர்கள் நடத்தையில் வேறுபாடு உள்ளது.

முதலிலே பிரம்ம வித்து என்ன செய்வார்ன்னு பார்க்கலாம்.

அவரை ப்ரம்ம வித்துன்னு கண்டு பிடிக்கிறதே கஷ்டமா இருக்கும்!

ரொம்ப சாதாரணமான ஆசாமி போல அவர் பாட்டுக்கு மத்தவங்க போலவே இருப்பார். இந்த ஆசைகளையும் கோபங்களையும் உண்டாக்குகிற உலகத்திலேயே இருந்துகொண்டு அவற்றால பாதிக்கப்படாம இருப்பார். ஞானம் வரு முன்னே என்ன வேலை பாத்தாரோ அதையே அவர் பாட்டுக்கு பாத்துகொண்டு இருப்பார். அவரோட குல ஆசாரங்களை நேர்த்தியா கடைபிடிப்பார். விருந்து கிடைக்கிறதா ஜம்ன்னு சாப்பிடுவார். ஒண்ணுமே சாப்பிட கிடக்கலையா, அதுவும் சரிதான்...... அவரோட பிராரத்த கர்மாவால வருகிறது என்னவோ அதை அவர் பாட்டுக்கு அனுபவிப்பார்! என்ன வந்தாலும் போனாலும் ப்ரம்ம நிலையிலேயே உள்ளுக்குள்ள இருந்து கொண்டு இருப்பார்.


95.
பிரம வித்தின் இயல்பு:

தீரராய்ப் பிரம வித்தாய் தெளிந்தவர் தெளியு முன்னம்
வாரமாயிருந்த தங்கள் வருணமாச் சிரமஞ் சொன்ன
பாரகா ரியமானாலும் பலர்க்குப காரமாக
நேரதாச் செய்வார் தீர்ந்த நிலைவிடார் சீவன் முத்தர்.

தீரராய்ப் பிரம வித்தாய் தெளிந்தவர், தெளியும் முன்னம் வாரமாய் (உரிமையாக) இருந்த தங்கள் வருண ஆச்சிரமம் சொன்ன பார (துன்பத்தை கொடுக்கும் பெரிய) காரியமானாலும் பலர்க்கு உபகாரமாக நேரதா (நேர்த்தியாக மந்திர லோபம், கிரியா லோபம், தன லோபம் ஆகியன இல்லாது விதிப்படி) செய்வார். (அப்போதும்) தீர்ந்த நிலை (தான் பிரமம் என்ற முடிந்த நிச்சயம்) விடார் (நீங்காது இருப்பார்) சீவன் முத்தர்.
--
தீரர்: ஆற்றில் எதிர்த்து நீந்துவது போல காமாதி உண்டாக்கும் விவகாரத்தில் இருந்து கொண்டே மைத்ரி (சகோதரத்துவம்) முதலானதை சம்பாதிக்கும் வல்லமை உடையவராய் இருத்தல்; ஆற்று ஜலத்தை அடைத்து பயிர் செய்தல் போல் ஈஸ்வரனால் வெளி முகத்துக்கு சிருஷ்டிக்கப்பட்ட இந்திரியங்களை தன் வசப்படுத்தி ஆத்ம தரிசனம் செய்து ஆநந்தம் அனுபவிக்கும் வல்லவர்.

தெளிந்தவர்: மண் சேர்ந்து கலங்கிய ஜலம் தேற்றாம் கொட்டையால் தெளிந்தது போல தாமஸ இராஜஸ விருத்திகளால் தோன்றிய சீவேஸ்வர ஜகத்தை சத்துவ விருத்தியால் சிவாகாரமாய் காணல்.

தெளியு முன்னம்...செய்வார்: பிரம சொரூபமான தமக்கு கருமஞ் செய்ய தேவையில்லை ஆயினும் செய்தால் துன்பம் வரக்கூடும் எனினும், கருமம் செய்யாத அஞ்ஞானிகள் தம்மைப்பார்த்து கருமம் செய்து பரம்பரையாக முத்தி அடையும் பொருட்டு தங்கள் வர்ணம் முதலானவற்றுக்கு உரிய கர்மத்தை மந்திர லோபம் கிரியா லோபம் தனலோபம் இன்றி செய்வர்.

Friday, April 24, 2009

எவ்வளோ நாள்தான் இப்படி சிரவணம் மனனம்ன்னு?...



இப்ப சீடனுக்கு ஒரு பலத்த சந்தேகம்! எவ்வளவு நாள் சாஸ்திரம் படிச்சு, உபதேசம் வாங்கி, ஞானம் ஒரு வழியா அடைஞ்சாலும் திருப்பி திருப்பி வெளியே வருவோம்னா எவ்வளோ நாள்தான் இப்படி சிரவணம் மனனம்ன்னு செஞ்சுகிட்டே இருக்கிறது? சந்தேகம்ன்னு வந்துகிட்டேதான் இருக்குமோ? இதுக்கு ஒரு முடிவு உண்டா இல்லையா?

குரு சொல்கிறார்: இல்லைப்பா! எப்பவுமே செஞ்சு கொண்டு இருக்கணும்ன்னு ஒண்ணும் இல்லை. எவ்வளோ நாளுக்கு பார்க்கிறவன் பார்க்கப்படுவதுன்னு ஒரு வித்தியாசம் உனக்கு தெரிகிறதோ அவ்வளவு நாள் செய்ய வேணும். அப்புறம் தேவை இல்லை.

அந்தக்கரணம் என்கிற மனசு இருக்கிற வரைதானே சந்தேகம்? அது போயாச்சுன்னா சந்தேகமும் இல்லை; கலக்கமும் இல்லை; விபரீதமும் இல்லை. மனம்ன்னு ஒண்ணு இருந்தாதானே வேறு ஒரு பொருள்ன்னு ஒண்ணை பாக்க முடியும். அது ஒழிஞ்சா அதுக்கு அப்புறமா ஒரு அப்பியாசமும் தேவை இல்லை. (அந்த அப்பியாசம் செய்கிற கருவியும் இல்லாம போச்சே!)

முன்னே ஆரம்ப பதிவுகள்லே செய்த கலாட்டா இப்ப வருது. ஆனா இப்ப நீங்க இதை பாத்து கலங்க மாட்டீங்க!
பார்க்கிறவன், பார்க்கப்படுவது, பார்க்கிறது (செயல்). இது போல..
அறிகிறவன், அறியப்படுவது, அறிவு.
ஞாதுரு, ஞானம், ஞேயம் ன்னும் சொல்லுவாங்க.
இது ஒரு ட்ரினிடி.
ஒரு விஷயம் அறியப்பட இது மூணும் வேணும். பார்க்கிறவன் வேணும். பார்க்க ஒரு பொருள் வேணும். இரண்டையும் இணைக்கிறா பார்த்தல் என்கிற ப்ராஸஸ் வேணும்.
இதுதான் த்ரிபுடி!
நான் என்கிறது தற்போதம். பிரம்மமா இருக்கிறேன் என்கிறது ஒரு நினைப்பு- வாசனை.
நான் அறிகிறேன் என்கிற உணர்வு இருக்கும் வரை எல்லாம் அன்னியமா இருக்கு. இந்த நான் போயாச்சுன்னா அறிகிற ஆள் இல்லாமல் ப்ராஸஸ் போயிடும். அறிவு மட்டுமே நிக்கும்.
இது, இதான் முடிவான நிலை!
அப்படி முடித்தவர் சீவன் முத்தராக இருந்து பின் விதேக முத்தராக என்றும் இருப்பாங்க!

கேட்டலுடன் சிந்தித்தல் கேடிலா மெய்த்தெளிவால்
வாட்டமறா வுற்பவநோய் மாறுமோ - நாட்டமுற்று
மெய்யான நிட்டையினை மேவினர்கட்கு அன்றோதான்
பொய்யா பிறப்பிறப்புப் போம்
-தாயுமானவர் உடல் பொய்யுறவு-8

தன்னை யிழந்திடத்தே தானே சுகவடிவாய்
இன்னபடி என்றுணரா வெங்கோனுட்- பின்னமற
நின்றநிலை தானுந் தெரியாதே நின்றவர்கட்கு
அன்றோ பிறப்பறுக்கலாம்.
-சுகபோக சாரம்

எல்லாம் சிவமேயென் றெண்ணினு நின்போத
மல்லாலஃ துண்மையன் றுந்தீபற
ஆங்கது நீங்கிடென்றுந்தீ பற
(எல்லாம் சிவமே என்று எண்ணினும் நின்போதம்
அல்லால் அஃது உண்மை என்று உந்தீ பற
ஆங்கு அது நீங்கிடு என்று உந்தீ பற)
-அவிரோத உந்தியார்

93.
இந்த கேட்டல் முதலான அப்பியாசம் எதுவரை? இப்படி செய்து முடித்த ஞானி அடையும் முத்தி யாது?

எத்தனை நாண் ஞாதாவு ஞானமு மிருக்கு முன்பால்
அத்தனை நாளும் வேண்டு மப்பாலோர் செயலும் வேண்டா
நித்தமும் வெளிபோற்பற்றா ஞேயமாத் திரமாய்ச் சீவன்
முத்தரா னவர்வி தேக முத்திபெற் றிருப்பா ரென்றும்.

எத்தனை நாள் ஞாதாவும் (அறிபவனும்) [என்ற விருத்தி] ஞானமும் உன்பால் இருக்கும், அத்தனை நாளும் [அப்பியாசம்] வேண்டும். அப்பால் ஓர் செயலும் வேண்டா. நித்தமும் (தினமும்) வெளி (ஆகாயம்) போல் பற்றா ஞேய மாத்திரமாய் (பந்தமிலாத ஞானமாய்) சீவன் முத்தரானவர் (சீவன் முத்தியடைந்தவர்கள்) [பிராரர்த்த உடல் வீழ்ந்தபின்] என்றும் (எல்லாக்காலங்களிலும்) விதேக முத்தி பெற்று இருப்பார்.

தாத்பர்யம்: மித்தை முதலான பார்வையை சத்தியமாக இது என சுட்டி அறியும் உணர்வும் அதை அபிமானிக்கிற சீவனும் உள்ள வரை கேட்டல் முதலான அப்பியாசங்களை செய்ய வேண்டும். அப்படி முடித்தவர் சீவன் முத்தராக இருந்து பின் விதேக முத்தராக என்றும் இருப்பார்கள்.
--
சீவன் முத்தர்: பிரபஞ்ச விவகாரம் செய்யும் போதும் நிரவயமாய் சூட்சுமமாய் வியாபகமாய் இருக்கின்ற சின்மாத்திரமே தான் என இருப்பவர்



Thursday, April 23, 2009

சிரவண மனன நிதித்யாசனம்.



சிரவணம் என்கிறது ப்ரம்ம ஆன்ம ஐக்கியத்தை சொல்கிற வேத வாக்கியத்தோட தாத்பர்யத்தை குரு விளக்க விசாரித்து அறிஞ்சு கொள்கிறது.
மனனம் என்கிறது அப்படி அறிஞ்சு கொண்டதை - அந்த பொருளை திருப்பி திருப்பி புத்தியால சிந்திக்கிறது.
நிதித்யாசனம் என்கிறது மேலே சொன்னதை செய்து தெளிஞ்சு ஏகாந்தமான பிரம்ம அனுபவம் கிடைக்கும்போது அதிலேயே சித்தம் நிலைக்கும் படி செய்கிறது.
தினசரி இந்த மூணையும் வைராக்கியத்தோட செய்து வந்தா முத்தி கிடைச்சுடும் என்கிறார் குரு.

ஜன்ம ஜன்மமா இந்த உடம்பு வாசனைகளால் தோன்றிகிட்டே இருக்கு. அதனால தான் பிரம்மம் என்கிறது மறந்து போய் தான் உடம்பு ன்னு நினைக்குது. இது அஞ்ஞானம்.
அப்புறம் ஆன்மீகம் 4 டம்ப்மீஸ் படிக்கிறோம். அப்புறம் இன்னும் பல நல்ல (ஹிஹிஹி) வேதாந்த புத்தகங்கள் படிக்கிறோம். ஒத்தரை தேடிப்பிடிச்சு விளக்கங்கள் கேட்டுக்கிறோம். குருவை தேடிப்பிடிச்சு வேதாந்த உட்பொருளை அவர் சொல்ல கேட்டு தெரிஞ்சுக்கிறோம். இப்படி கேட்கிறது சிரவணம்.

¨குரு நான் 'சித்' ன்னு சொல்கிறார். எல்லாம் கேக்க நல்லா இருக்குதான்! ஆனா இப்பவும் என் உடம்பு எனக்கு தெரியுது; மத்த ஜடப்பொருள் எல்லாம் தெரியுது. அப்ப நான் சித்தோ இல்லையோ?¨ ன்னு கலவரம் வருது. இதுதான் ஐயம்.
ஒரு முறை கண்டு அறிஞ்சு கொண்டோமே அந்த சித்தும் நாமும் வேறு இல்லை ன்னு அடிக்கடி சிவோஹம் அல்லது அஹம் ப்ரம்ஹாஸ்மி ன்னு அடிக்கடி சிந்திக்க அது நீங்கும். இது மனனம்.

மனனம் செய்தபடி தான் சித்துதான் ஆனாலும் பிரபஞ்சம் இன்னும் என் முன்னாலே தோன்றுதே? நான் ஏகமான ப்ரம்மம்ன்னா ஏன் இப்படி தோணனும்? அப்ப நான் ப்ரம்மமில்லை; ஜீவன் ன்னு தோன்றுகிறது விபரீதம்.
¨நாம் சித்தான ப்ரம்மமே; இங்கே நாலா விதமாயும் தோன்றுகிறது எல்லாம் நாமேதான்; வேறு இல்லை¨ ன்னு அனுபவத்திலே கண்டு கொண்டு தெளிகிறதே நிதித்யாசனம்.

வீட்டு வாசலிலே சாயந்திரம் விளக்கு ஏத்தி வைக்கிறோம். அங்கே இருட்டு போயிடுது. பிரகாசமா இருக்கு.
ஆனா இந்த சித்திரையிலேயே அப்பப்ப நல்ல காத்து வீச ஆரம்பிச்சுடுத்து. அந்த காத்திலே தீபம் அலை கழியும். அணைஞ்சாலும் அணைஞ்சுடும்.

அது போல சாஸ்திர ஆராய்ச்சியாலும் விசாரணையாலும் ஞான தீபம் ஏத்தி வைத்தாலும் (ஹிஹி ஒரு சினிமா பாட்டு இப்படி இருக்கோ?) சந்தேக காத்து வீசினால் அது அதிகம் பிரயோசனப்படாது. பொருளை அந்த விளக்கு நல்லா பிரகாசமா காட்டாது.
எப்படி விளக்குக்கு ஒரு தடுப்பை பாதுகாப்பா வைச்சு காத்து நேரடியா தாக்காம செய்கிறோமோ அது போல மனனத்தால காப்பாத்தணும். தீபத் திரியை தூண்டிவிட்டு பலமா எரிய செய்வது போல நிதித்யாசனத்தால ஏகத்திலேயே நிலைச்சு நின்னு ஞான தீபத்தை தூண்டிவிட்டு பிரகாசப்படுத்தணும்.

பிரமம் அலன் நான் என்கை அஞ்ஞானம். நான்
அப்பிரமமோ அலனோ என்றிடல் ஐயம். சுருதி
வரும் இனிய யுத்திகளால் நான் பரமாயினும் உன்
வயர் ஜீவ உதவமுண்டு என்குதல் விபரீதந்தான்
தரு முறையும் அஞ்ஞானாதிகட்கு முரணாகும்
சிரவணமொடு மனன நிதித்தியாசனங்கள் அன்றே
-வேதாந்த சூடாமணி

[நாலாவது வரி சரியா பிரிச்சு இருக்கேனான்னு தெரியலை. உன் வயர்ஜீவ உதவமுண்டென்குதல் - அர்த்தம் கொஞ்சம் விசாரிக்கணும். நேரமில்லை :-( ]

92.
அத்தடைகளை கெடுக்கும் கேட்டல் முதலானவற்றின் தன்மை:

தத்துவ வநுபோகந் தான் சாதித்தல் கேட்ட லென்பார்
ஒத்துள பொருளூ கத்தாலுசாவல்சிந் தித்த லென்பார்
சித்தமே காந்த மான தெரிசனந் தெளித லென்பார்
நித்தமிப்படிச்செய்தக்கா னிர்வாணம் பெறுவாய் நீயே

தத்துவ அநு போகந்தான் (தன் அந்தக்கரணத்தில் உள்ள நான் பிரமம் என்ற ஞானம்தான்) சாதித்தல் (வேதாந்த சாஸ்திரங்களை அடிக்கடி சிரத்தையுடன் அப்பியாசம் செய்தல்) கேட்டல் என்பார். ஒத்துள பொருள் (கேட்டலால் மனதுக்கு சம்மதமான அர்த்தத்தை) ஊகத்தால் உசாவல் (விசாரித்தல்) சிந்தித்தல் என்பார். சித்தம் ஏகாந்தமான தெரிசனம் (சித்தம் பிரமாகாரமாக இருத்தலே) தெளிதல் என்பார். நித்தம் (தினசரி) இப்படி செய்தக்கால் (செய்வாயானால்) நிர்வாணம் (பர மோட்சத்தை) பெறுவாய் நீயே.
--
குரு முகமாக ஆறு லிங்கத்தாலும் கூடஸ்த பிரம ஐக்கிய ஞானத்தை சொல்கிற வேதாந்த சாஸ்திரத்தை அடிக்கடி அவதி வரை அப்பியாசம் செய்தலே விசார ரூபமான சிரவணம்.
சிரவணத்தால் மனதுக்கு சம்மதமான அர்த்தத்தை சூட்சும புத்தியால் சாக்கிரதை முதலான அவத்தைகளும் சடமாயும் பலவாயும் ஒன்றினில் ஒன்று தோன்றி அழிகிறது எனவும் அவற்றை அறிகின்ற ஆதமா சச்சிதானந்தமாய், ஏகமாய், பூரணமாய், நித்தியமாய் உள்ளது எனவும் இது முதலாக நானா பிரகாரமான சையுத்தியினால் விசாரிப்பது மனனம்.
சுத்த சத்துவ விருத்தியால் அகண்ட பரிபூரண சச்சிதானந்த பிரமமே நான், நானே அந்த பிரமம் என விச்சின்னமில்லாது எப்போதும் த்யானித்து வாகியாந்தரத்தில் சப்தம் முதலான விடயம் தோற்றாது த்யானமும், த்யானம் செய்பவனும் இறந்து; பாலில் கலந்த நீர் போல அவ் வஸ்துவில் அவ் விருத்தி அடங்கி அவ்வாகாரமாக இருத்தலே நிதித்தியாசனம். (தெளிதல்)



Wednesday, April 22, 2009

அஞ்ஞானம், சந்தேகம், விபரீதங்கள்




சிரவணம் அஞ்ஞானத்தை ஒழிக்கும்.
மனனம் சந்தேகத்தை ஒழிக்கும்.
நிதித்தியாசனம் என்கிற சிந்தித்து தெளிதல் விபரீதத்தை நீக்கும்.
அஞ்ஞானம் என்கிறது ¨நாம் கூடஸ்தன்; பிரம்மத்தின் அம்சம். அதனால நாம் எப்பவும் பிரம்மமே என்ற நினைப்பு விட்டு நாம் பிரம்மமல்ல என்று நினைக்கிறது.
சந்தேகம் என்கிறது தத்வமஸி ன்னு குரு சொல்லி இருந்தாலும் பிரம்ம நிலையை அனுபவிச்சு இருந்தாலும் அதில திட நம்பிக்கை இல்லாமல் இது ஏதும் மாயையோ? கண்கட்டு வித்தையோ? நாம் பிரம்மம் இல்லையோ? என்று நினைக்கிறது.
விபரீதம் என்பது ¨ஜகம் பொய், பிரம்மம் மட்டுமே சத்தியம்; நாம் அந்த பிரம்மம்¨ என்று திடமா நினைக்காமல் ¨ஜகம் உண்மை. நாம் திருப்பி திருப்பி பிறக்கிற ஜீவன்¨ ன்னு நம்புகிறது.

எத்தனையோ ஜன்மங்களா இந்த ஆத்மா ¨நான் சீவன். பாவ புண்ணியங்கள் நிரம்பிய கர்மங்களை செய்து கொண்டே இருக்கோம். அதனால் அவற்றோட பலனை அனுபவிக்க திருப்பி திருப்பி பிறந்து உழல்கிறோம்.¨ ன்னு நினைக்கிறது. தான் பிரம்மத்தோட அம்சம்ன்னு நினைவே இல்லை. கடவுள்ன்னு ஒண்ணு நமக்கு அன்னியமா நம்மை அல்லாமல் இருக்கு என்று நினைக்கிறது. இப்படிப்பட்ட பிரிவினை மயக்கம் எவ்வளோ தூரம் அழுந்தி இருக்குன்னா கடவுள்ன்னு ஒத்தர் இருக்காரா என்கிற சந்தேகமும்; கடவுள் கூட இல்லவே இல்லை ன்னு தீர்மானிக்கறதா இருக்கு. {இது நானே பிரம்மம், அதனால கடவுள்ன்னு தனியா இல்லை என்ற அறிவால ஏற்பட்டது இல்லை.}

அதனால திடுதிப்புன்னு இது நாம் பிரம்மம்ன்னு நம்பிடாது. ¨நான் சீவன் இல்லை. சீவ சாக்ஷி. பிரம்மத்தோட ஒரு பகுதி. பிரம்மத்தை தவிர வேறாக நான் என்பது இல்லை; எங்கும் எப்போதும் பிரம்மம் மட்டுமே நிறைஞ்சு இருக்கு. அதுவே சத்தியம். அதிலேயே இருக்கிறதே முக்தி¨ ன்னு உடனடியா அனுபவத்துக்கு வராது. நான் என்பது இல்லை என்கிற ஒரு கான்செப்ட் கேட்டே நடுங்கற பேர்களை பாத்து இருக்கேன்! சுய அபிமானம் அவ்வளோ இருக்கு!

ஏன் பிரம்ம நிலையிலேந்து மீண்டு வருகிறாங்க?

பூர்வ ஜன்ம வாசனை அப்படி பிடிச்சு இழுத்து வருது. இதே வாசனைகள்தான் நாம திடமா இருக்க தடையாவும் இருக்கும். வாசனைகள் கிளைத்து திருப்பி புலப்பட்டு நிலைக்காம இருக்க நாம் ஜாக்கிரதை படுத்தணும். அதுதான் சிரவண மனன நிதித்யாசங்கள். இவற்றில சிரத்தை காட்டி பழகினா எப்படி நாம் சீவன்; பிரம்மம் இல்லைன்னு எப்பவும் தோணித்தோ அதே போல நாம் பிரம்மம்: சீவன் இல்லைன்னு தோணிடும். அதுவே நிலைத்திடும்.

91.
ஆத்ம ஞானத்துக்கு தடையான அசம்பாவனையாதிகளின் தன்மை:

பிரம பாவனையைமூடிப் பேதங்காட் டுவதஞ்ஞானம்
குரவன் வாக்கியநம்பாமற் குழம்புவதாஞ் சந்தேகம்
திரமறு சகமெய்யென்றுந் தேகநானென்று முள்ளே
விரவிய மோகந்தானே விபரீதமென்பர் மேலோர்.

பிரம பாவனையை மூடி (மாற்றி) பேதம் காட்டுவது அஞ்ஞானம் (அசம்பாவனை எனப்படுவது); குரவன் வாக்கியம் நம்பாமல் (சிரத்தை இல்லாது) குழம்புவதாம் சந்தேகம்; திரமறு (இல்லாத) சகம் மெய் என்றும், தேகம் நான் என்றும், உள்ளே விரவிய (பொருந்திய) மோகந்தானே விபரீதம் என்பர் மேலோர்.

மேல் விளக்கம்:
அசம்பாவனை: தான் பிரமம் என்ற சிந்தனையை மாற்றி சீவேஸ்வர சகத்து சிந்தனையை தோற்றுவிப்பது.

குழம்புதல்: ஆச்சாரியர் வாக்கியத்தில் (தத் த்வமஸி) நம்பிக்கை இல்லாது நான் கர்த்தாவோ சாட்சியோ, சாட்சி என்றாலும் கர்த்துவத்துவாதி உண்டோ, அப்படி கர்த்துவத்துவாதி இல்லாவிடினும் தனக்கு பூரணத்துவம் உண்டோ, உண்டானாலும் தன்னை அப்படி அறியலாமோ கூடாதோ என இது முதலாக வரும் சிந்தனைகளே குழப்பம்.

விபரீதம்: பழுதையிடம் தோன்றின பாம்பு இல்லாதது போல தன்னிடத்தில் விவர்த்தமாக தோன்றின சீவேஸ்வர சகத்து இல்லாது இருக்கவும் அதை சத்தியம் எனவும் நான் மனுடன், நான் இந்த சாதி, நான் இந்த ஆசிரமத்தை உடையவன், நான் உழவு யாகம் முதலானவற்றை செய்பவன், நான் அன்னம் முதலானவற்றை புசிப்பவன், நான் குடம் முதலானவற்றை அறிபவன் என இது முதல் வரும் சித்த விருத்திகளே விபரீதம்.

தாத்பர்யம்: ஆத்ம சிந்தனையை மறைப்பது அசம்பாவனை. தான் ஆத்மாவோ அனாத்மாவோ என மனம் கலங்குதல் சந்தேகம். தான் அனாத்மா பிரபஞ்சம் சத்தியம் என தோற்றுவது விபரீதம்.


Tuesday, April 21, 2009

தடைகள்



சீடனுக்கு இப்ப ரொம்பவே வியப்பா போச்சு. கொஞ்சம் பயமும் வந்து இருக்கலாம். பிரம்ம அனுபவம் நிலைக்காம போயிடுமா? ஏன்? எவ்வளவு முயற்சிக்கு அப்புறமா இந்த கூடஸ்தன் பிரம்மம் என்கிற வேறுபாடு கூட போய் அத்வைதமா, எங்கும் ஒண்ணேயாய், பரிபூரணமாய் நம்மை அறிந்து கொண்டோம்! அந்த அனுபவம் போயிடுமா? அப்படி செய்யக்கூடிய தடை எதெல்லாம்? அதை எப்படி நீக்கறது? வேற யாரை கேக்கணும்? அதான் எதிரே குரு இருக்காரே!

¨ஐயா! தடைகள் எவை, எப்படி அவற்றை ஒழிக்கறது?¨ன்னு கேட்கிறான்.

குரு சொல்கிறார். ¨அப்பா, இந்த உசந்த ஞானத்துக்கு மூணு தடைகள் - அஞ்ஞானம், சந்தேகம், விபரீதம்ன்னு இருக்கு. இது மூணும் துன்பத்தை தரும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்கிற மூணு உபாயத்தாலே இதையெல்லாம் ஒழிக்கலாம்.¨

89.
பிரதி பந்தங்கள் யாவை? அவற்றை நீக்குதல் எப்படி?

தடைகளே தெனிலஞ்ஞான சந்தேக விபரீ தங்கள்
படர்செயுமிந்த மூன்றும் பலசன்மப் பழக்கத் தாலே
உடனுடன் வரும்வந் தக்கா லுயர்ஞானங் கெடுமி வற்றைத்
திடமுடன்கெடுப்பாய் கேட்டல் சிந்தித்தறெளிதலாலே

தடைகள் ஏது எனில் அஞ்ஞானம், சந்தேகம், விபரீதங்கள். படர் செயும் (துன்பம் தரும்) இந்த மூன்றும் பல சன்ம பழக்கத்தாலே (வாசனையால்) உடனுடன் (அடிக்கடி) வரும். வந்தக்கால் உயர் ஞானம் கெடும் (நஷ்டமாகும்). [ஆதலால்] இவற்றை திடமுடன் (தைரியத்துடன் முழுதும் நீங்கும் வரை நின்று) கெடுப்பாய் (நீக்குவாய்) [முறையே] கேட்டல், சிந்தித்தல், தெளிதலாலே. (சிரவண மனன நிதித்தியாசங்களாலே)

சில மந்திர சக்திகள் கைவந்தவர்களாலே அக்கினியைக்கூட கட்டுப்படுத்திடலாம். அப்படிப்பட்டவங்க கொழுந்துவிட்டு எரிகிற தீயிலே புகுந்து வெளியே வருவாங்க. கர்நாடகாலே அப்படி ஒத்தர் இருக்கிறதா கேள்வி பட்டு இருக்கேன். அதை அவர் தன்னை சுத்தப்படுத்திக்கிற ஒரு வழியா வைச்சு இருக்காராம். மணி, மந்திரம், மருந்து இவற்றால அக்னியை தாங்கற சக்தி பெற்றவங்களை அக்னி எப்படி கொஞ்சமும் சுடாம இருக்குமோ அப்படி ஞானம் மக்கினதா இருந்தா - அதாவது அஞ்ஞானம், சந்ந்தேகம், விபரீதம் ஆகியவற்றால தடை செய்யப்பட்ட ஞான அக்னியா இருந்தா - சம்சாரம் பந்தம் கொஞ்சம் கூட நாசமாகாது. நெடுங்காலம் உறுதியோட கேட்டல், சிந்தித்தல், தெளிதல் இதையெல்லாம் பயிற்சி பண்ணி இடையூறுகளான மடம், சந்தேகம், விபரீதம் இவற்றை போக்கணும்.

90.
பிரதி பந்தத்தை நீக்காவிடினும் அந்த ஞானத்தால் பவம் நீங்காதோ? அந்த அசம்பாவனை முதலியவற்றை நீக்க கேட்டல் முதலானவற்றை கொஞ்சம் அப்பியாசித்தால் போதாதோ?

அக்கினி கட்டுப்பட்டா லற்பமுஞ் சுடமா ட்டாது
மக்கின ஞானத்தாலே வந்தபந்த மும்வேவாது
சிக்கெனப் பழகிக்கேட்டல் சிந்தித்த றெளிதலாலே
விக்கின மடஞ்சந்தேகம் விபரீதம் போக்குவாயே

அக்கினி கட்டுப்பட்டால் (மணி மந்திர ஔஷதங்களால் அடக்கப்பட்டால்) அற்பமும் (கொஞ்சம் கூட) சுட மாட்டாது. [அது போல்] மக்கின ஞானத்தாலே (பிரதி பந்தங்களுடன் கூடிய ஞானத்தாலே) {theoretical knowledge} வந்த (ஆரோபமாய் தோன்றிய) பந்தமும் (சம்சாரமும்) வேவாது (நாசமாகாது). சிக்கெனப் பழகி (நெடுங்காலம் உறுதியாக நேசத்துடன் பழகி) கேட்டல், சிந்தித்தல், தெளிதலாலே விக்கின (இடையூரான) மடம், சந்தேகம், விபரீதம் போக்குவாயே.



Monday, April 20, 2009

கைம்மாறு


ம்ம்ம்....
என்ன கைம்மாறு செய்வேன்னு யாரானா கேட்க மாட்டங்களா? பதிலுக்கு ஒரு சின்ன 40 பக்க நோட்டிலே லிஸ்ட் போட்டு கொடுத்துடலாம்ன்னு நினைச்சு கொண்டு நிறைய பேர் நடமாடுற தேர்தல் காலம் இது!
ஆனா இவரைப்பாருங்க. ¨தடைகள் ஒண்ணும் இல்லாம ஞான நிட்டையிலேயே இருப்பா அதுவே போதும்¨ என்கிறார். பின்னே எல்லாமே தானாக தெரிகிறவங்களுக்கு வேற என்ன வேணும்? தானில்லாம ஒண்ணும் தெரிஞ்சாதானே கேட்க?

87.
குருவின் மறு மொழி:
சிட்டனிவ்வாறு கூறத் தேசிகர் மகிழ்ந்து நோக்கிக்
கிட்டவா வென விருத்திக் கிருபையோ டருளிச் செய்வார்
துட்டமாந்தடைகண்மூன்றுந் தொடராமற்சொரூபஞான
நிட்டனா யிருக்கினீதே நீசெய்யு முதவியாமே

சிட்டன் இவ்வாறு கூறத் தேசிகர் மகிழ்ந்து நோக்கி, கிட்ட வா என இருத்தி, கிருபையோடு அருளிச் செய்வார். துட்டமாம் (தீமையாம்) தடைகள் மூன்றும் (அபரோட்ச ஞானத்தையும் பேதிக்க வலிவுள்ள பிரதி பந்தங்கள் மூன்றும்) தொடராமல் (வந்து பொருந்தாமல்) சொரூப ஞான நிட்டனாய் இருக்கில் ஈதே நீ செய்யும் உதவியாமே.

தாத்பர்யம்: சமாதி அநுபவம் கிட்டிய சீடனை நோக்கி தான் என்ற அநுபவமான சுக போதத்தை தவிர அவன் வேறு ஏதும் கருதாமல் இருக்க “உன் அநுபவம் தடையில்லாது விளங்குமாயின் அதுவே கைம்மாறு” எனல்.

--பிரதிபந்தங்கள் எவை? பின்னால் வரும்.

சீடனுக்கு இப்ப கொஞ்சம் சந்தேகம் வருது. அட? இப்பதானே நான் மட்டுமே இருக்கேன்னு அனுபவிச்சோம்? அந்த அனுபவம் திருப்பி வராம போகுமா என்ன! (இங்கே ஞானம் நீங்குமோன்னு விசாரம் செய்கிறதுல அர்த்தம் வரலை, இல்லையா? ஞானம் நீங்கினதால்தானே இப்ப வெளிவந்து குருன்னு ஒத்தரை பாக்கிறதும் பேசுகிரதும்? அவனோட வாசனைகள்தான் வெளியே கொண்டு வந்தது!)

இப்ப குரு எதிரே இருக்கார். அவரோட உபதேசத்தால, உதவியால பிரம்ம ஞானம் வந்தது. இப்படி இதை சுவை காட்டறதுதான் அவரோட முக்கிய வழிமுறை. இதே போல குரு கிருபையால வேத சாஸ்திர விசாரத்தாலும் வர இயலும். ஆனா அது ஸ்திரப்படணும்னா இன்னும் ஏதோ நடக்கணும். முக்கியமா தடைகள் வரக்கூடாது. அப்படி தடைகள் கூட வருமா? என்ன அதெல்லாம்?

88.
அத்வைத சொரூபத்தை அறிந்த ஞானம் பிரதி பந்தத்தால் நீங்குமோ?

நீநானென் றிரண்டிலாம னிறைந்தபூ ரணமா யெங்கும்
நானாகத் தெளிந்த ஞான நழுவுமோ குருவே யென்றான்
தானாகும் பிரம ரூபஞ் சற்குரு நூலாற் றோன்றும்
ஆனாலுந் தடைக ளுண்டே லநுபவ முறைத்திடாதே

நீ [பிரமம்] நான் [கூடஸ்தன்] என்று இரண்டிலாமல் நிறைந்த பூரணமாய் எங்கும் நானாகத் தெளிந்த ஞானம் நழுவுமோ குருவே? என்றான். தானாகும் பிரம ரூபம் சற்குரு[வின் உபதேசத்தாலும்] நூலால் (வேத சாஸ்திர விசாரத்தாலும்) தோன்றும். ஆனாலும் (அப்படி பிரம அநுபவம் உண்டானாலும்) தடைகள் உண்டேல் (இருக்குமானால்) அநுபவம் உறைத்திடாதே (ஸ்திரப்படாது).




Friday, April 17, 2009

நெரூர்- அப்டேட்



கடந்த இரு நாட்கள் நெரூர் சென்று இருந்ததால் பதிவு இன்று போட முடியவில்லை.
அதற்குப்பதில் இதோ ஒரு போனஸ்!
 





நெரூர் கிராம மக்கள் சார்பில் அரசுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. சதாசிவர் உறையும் இடத்தில் முளைத்த வில்வ மரத்தின் வரலாற்றை குறிப்பிட்டு; பால், சந்தனம், தயிர் போன்றவை கொண்டு அபிஷேகம் செய்யப்படுவதாலும் அதனால் மண் மூடப்பட்டு தண்ணீர் காற்று உள்ளே போக வழியில்லாமல் போனதாயும், மேலும் சுற்றி போடப்பட்ட தளமும் காற்று, நீர் உள்ளே போவதை தடுப்பதாயும் இவற்றுக்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பித்து இருந்தனர்.

பிறகு ஒரு பத்திரிகையாளர் வந்து பார்த்துபோய் அவர் எம்பியிடம் பேச மக்கள் சார்பாக ஒருவர் எம்பி யையும் சந்தித்து சில விளக்கங்கள் சொல்லப்பட்டன.

அதைத் தொடர்ந்து காவிரி நீர் தவிர வேறு எதையும் அபிஷேகம் செய்யக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இப்போது பிரச்சினையான தளமும் அகற்றப்பட்டுவிட்டது. மண்டபத்தையும் அகற்றிவிட்டார்கள். (தவிர்த்து இருக்கலாம் போல் இருக்கிறது.) கோவில் திருப்பணி நடக்கிறது.

இத்தனைக்கும் நடுவில் துளிர் விட்ட வில்வம் வளர்ந்து வருகிறது!

கேட்டுக்கொண்ட படி வில்வ மரத்தை சுற்றி வெறும் புல் தரை அமைத்தால் நல்லது.
சதாசிவர் என்ன செய்வாரோ பார்க்கலாம்!

Posted by Picasa

Thursday, April 16, 2009

வெளியே வந்ததும்....




இப்படியே பிரம்ம அனுபவத்திலேயே இருக்க முடியுமா?
அதுக்கு நேரம் வந்தாச்சுன்னா இருக்கலாம்.

ஆனா ஒத்தரோட வாசனைகள் அவ்வளோ சீக்கிரமா அதுக்கு விடாது. அதனால் வெளியே வருவாங்க. மனம் திருப்பி துளிர் விடும். வெளியே வந்ததும் அனுபவிச்சது ஒரு மாதிரி நினைவில் இருக்கும். அதே போல மீண்டும் அனுபவிக்க தவிப்பா இருக்கும்.
இந்த அனுபவம் கொடுத்தவர்கிட்டே அவனுக்கு என்ன மாதிரி உணர்வு இருக்கும்?
பூரண சரணாகதியா கால்லே விழ வேண்டியதுதான்.

85.
சுபாவ நிலை பெற்ற சீடன் பின்பு யாது செய்தான்?

அளிமக னெடும்போ திவ்வா றானபின் மனது மெள்ள
வெளியில்வந் திடவுணர்ந்தான் விமலதேசி கனைக்கண்டான்
துளிவிழி சொரியப்பா தந்தொழுது வீழ்ந்தெழுந்து சூழ்ந்தான்
குளிர்முகச் சுவாமிகேட்கக் கும்பிட்டு நின்றுசொல்வான்


அளிமகன் (பிரமாநந்தம் பெற்ற சீடன்) நெடும்போது (நெடு நேரம்) இவ்வாறான பின் (இப்படி சமாதியில் இருந்த பின்), மனது மெள்ள வெளியில் வந்திட, உணர்ந்தான்; விமல (அவித்தை, மாய ஆகிய அழுக்குகள் இல்லாத) தேசிகனை (ஆசிரியனை) கண்டான். [ஆநந்த கண்ணீர்] துளி விழி சொரிய, பாதம் தொழுது, வீழ்ந்து எழுந்து சூழ்ந்தான் (வலம் வந்தான்). குளிர் முக சுவாமி கேட்க, கும்பிட்டு நின்று சொல்வான்.

தாத்பர்யம்: சகசாநுபவம் வரும் பொருட்டு சமாதி அநுபவ ஸம்ஸ்காரத்துடன் (பண்புடன்) வெளியாகி சற்குருவை தரிசித்து வணங்கினான்.

86.
சீடன் தனக்கு அநுபவம் வரும்படி அநுக்கிரகம் செய்த ஆச்சாரியனை தோத்திரம் செய்தல்.
ஐயனே யெனதுள் ளேநின் றனந்தசன் மங்க ளாண்ட
மெய்யனே யுபதேசிக்கவெளிவந்த குருவே போற்றி
உய்யவே முத்திநல்குமுதவிக்கோ ருதவி நாயேன்
செய்யுமா றொன்றுங் காணேன்றிருவடி போற்றி போற்றி

ஐயனே, எனதுள்ளே நின்று அனந்த சன்மங்கள் ஆண்ட மெய்யனே, உபதேசிக்க வெளி வந்த குருவே போற்றி; உய்யவே (சனன துன்பத்திலிருந்து ஈடேற) முத்தி நல்கும் உதவிக்கு ஓர் உதவி நாயேன் செய்யுமாறு ஒன்றும் காணேன். திருவடி போற்றி போற்றி.

தாத்பர்யம்: தர்மார்த்த காமங்களை கொடாது கருணையால் பர மோட்சத்தை கொடுத்ததற்கு கைம்மாறு காணேன் என துதித்ததாம்.


Wednesday, April 15, 2009

சீடன் என்னத்தை அனுபவிக்கிறானாம்?



சீடன் என்னத்தை அனுபவிக்கிறானாம்?

ஆனந்தம். ஆனந்த வெள்ளம். தன்னைத்தவிர இரண்டாவதா ஒண்ணுமே இல்லை. இந்த உடம்பு கரணங்கள் ன்னு ஆரம்பிச்சு பட்டியல் போடுகிற 35 தத்துவங்களும் அவனைப்பொறுத்த வரை இல்லை.

இதை நனவில் சுழுத்தி என்கிறாங்க. பிரம்ம நிலையே அப்படின்னு இல்லை. சுழுத்தியிலே எல்லா கரணங்களும் போயிடும். இங்கே அப்படி இல்லை. இது ஒரு டிடாச்மெண்ட். தற்காலிகமா பற்று போயிடுது. கரணங்கள் செயலிலே இருந்தாலும் அவற்றோட விஷய அனுபவம் உள்ளே வரலை. கண் திறந்து இருந்தாலும் எதையும் பார்க்கலை. கிட்டே போய் பட்டாசு வெடிச்சாலும் காது கேட்கலை. வாயிலே கற்கண்டு போட்டாலும் உமிழ்நீர் கூட சுரக்கலை!

இந்த அனுபவத்தை அவனுக்கு தருவது சற்குருவே! அவர் வேற யாருமில்லை பிரம்மமே. நாம சட்டை போடுவது போல அவர் ஒரு காரணத்துக்காக உடம்பை போட்டுகிட்டு இருக்கார்.
நம்ம ஆன்மீக பாதையிலே பலரும் நமக்கு உதவ வருவாங்க. சிலர் உதவுகிறோம்ன்னு தெரிஞ்சே உதவுவாங்க. சிலர் அப்படி தெரியாமலே உதவுவாங்க. மோசமா சமையல் செய்கிறவங்க நாக்கு ருசியை அடிச்சு போடுகிறோம்ன்னு தெரியாமலே அந்த உதவியை செஞ்சுகிட்டு இருப்பாங்க. :-))
சிலர் ஏதோ சொல்லிகிட்டே போகும்போது நமக்கு திடீர்ன்னு ஏதோ ஒரு விஷயம் பட்டுன்னு புலப்படும்.

இறைவன் சித்தத்தாலே சிலர் நமக்கு தேவையான சமயத்திலே தேவையான வழியை காட்டிட்டு போயிடுவாங்க. இவங்க வழி காட்டிகள். மார்க தரிசி.
இந்த பிரம்ம அனுபவத்தை ருசி காட்டுகிறவங்களே உண்மையிலே சற்குரு. அப்படி சற்குருவை அடையும் பாக்கியம் செஞ்சவங்களுக்கு அப்புறம் வேற ஒண்ணுமே வேணாம்.

84.
சீடன் அநுபவ ஸ்திதியை கூறல்:

அனுபவா நந்த வெள்ளத் தழுந்தியே யகண்ட மாகித்
தனுகர ணங்க ளாதி சகலமு மிறந்து சித்தாய்
மனதுபூ ரணமாய்த் தேக மானசற் குருவுங் காண
நனவினிற் சுழுத்தி யாகி நன்மகன் சுபாவ மானான்.

அனுபவ ஆநந்த வெள்ளத்து அழுந்தியே அகண்டமாகி தனு கரணங்கள் ஆதி (முதலான 35 தத்துவங்கள்) சகலமும் (அனைத்தும்) இறந்து (நீங்கி) சித்தாய் மனது பூரணமாய், [பரி பூரண சொரூபமே] தேகமான (தேகத்தை சட்டை போல ஏற்ற) சற்குருவும் காண (பார்த்தருள) நனவினில் சுழுத்தியாகி (சுழுத்தி உடையவனாய்) நன்மகன் (நல்ல சீடன்) [அகண்ட சொரூப] சுபாவமானான்.
தாத்பர்யம்: பிரமானந்தத்தில் அழுந்தி பிரபஞ்சத்தை நீக்கி பெரிதுக்கெல்லாம் பெரிதான சுபாவ நிலை பெற்று இருந்தான்.
--
நனவினில் சுழுத்தி: இந்திரியங்கள் தம் காரணமான அஞ்ஞானத்தில் சுழுத்தி போல லீனமாகாது, தம்தம் கொள்கையில் இருக்க அவற்றின் வியாபாரமான விஷயானுபவம் அற்று இருப்பவன் என்றவாறு..


Tuesday, April 14, 2009

சுய அநுபவம்



சுருதியாலும் உத்தியினாலும் ஆத்மாவை அறிந்தாலும் அசம்பாவனை (நிகழாது என்ற நினைப்பு) நீங்காது. எனவே துணிவாக நான் பிரமம் என்பதை சுய அநுபவத்தால் அறிய வேண்டும்.

ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டு பண்ணும் ஞானமாகும் - தாயுமானவர்.

மெய்ஞ்ஞான அனுபவம் த்வைத - இரட்டை- நிலையிலேதான் துவங்குது.
தேகம் முதல் அந்தக்கரணம் வரை ஒவ்வொரு தத்துவமா ஜாக்ரத், சொப்பன, சுழுத்தி அவஸ்தைகள் ரூபமாகவோ; அன்ன மயம் முதலான உறைகள் ரூபமாகவோ;

நமக்கு முன்னாலே தோன்றுவனவாகவும், நம்மால அறியப்படுவதாகவும், ஒரு காலத்திலே இருந்து ஒரு காலத்தில் அழிகிறது என்றும், அதனால நித்தியமல்லாததா இருக்கிற இதுவெல்லாம் நாம் இல்லைன்னும் தள்ளிக்கழிக்கணும்.

அப்ப சூன்யம் மிஞ்சும். இதுவரை த்வைத பாவம் இருக்கு. இதுக்கு த்வைத விருத்தி என்றும் பெயர்.

இதுக்கு மேலே இருக்கிற கூடஸ்தன் என்கிற சாக்ஷி ரூபம். அது அணு ரூபமானது; அவ்வளவு சூக்குமமானது ன்னு சொல்கிறாங்க.
இந்த சாக்ஷி விருத்தியும் தள்ள வேண்டியதுதான்.
த்வைத விருத்திதான் அஞ்ஞானம்; பாசத்திலே பந்தப்படுத்தும். சாக்ஷியா இருக்கிறதுல அப்படி அஞ்ஞானம் இல்லையே, உண்மைதானே; ஏன் ஒழிக்கணும்ன்னா...
சாக்ஷி என்கிறப்ப கொஞ்சமாவது அகங்காரம் இருந்தே ஆகணுமே? அப்பதானே அதை நான் இதுக்கு எல்லாம் சாக்ஷி மட்டுமேன்னு சொல்லிக்கலாம்! அதனால இதுவும் கொஞ்சம் குறைபாடு உள்ளதே. அதனால்தான் அதையும் தள்ளணும்.

இங்கே அஹம் பிரம்மாஸ்மி அல்லது சிவோஹம் பாவனை வந்தால் இதுதான் அகண்டாகார விருத்தி. அதாவது இரண்டற்ற தன்மைக்கான எண்ணத்திவலை.
[கண்ட துண்டமா வெட்டிப்போடுவேன் என்கிறாங்க. அதாவது பீஸ் பீஸ் ஆ ஆக்குவாங்களாம்! இதுதான் கண்டம் = துண்டு, வெட்டுப்பட்டது. துண்டாகாமல் ஒண்ணாவே இருக்கிறது அகண்டம். பிரம்மத்தைத்தவிர வேறு ஒண்ணுமே இல்லாததால் அது மட்டுமே அகண்டம்.]
இங்கேயும் நான் பிரம்மம், நான் சிவம் ன்னு நினைப்பு கொஞ்சம் இருந்தாலும் போகப்போக இது மறைஞ்சுடும்.
--
இதை எல்லாம் கேட்ட சீடன் குரு சொன்னபடி விசாரம் பண்ணி பஞ்ச கோசங்களையும் தான் இல்லைன்னு தள்ளறான். அப்புறம் முன்னே பார்த்த பாழையும் தள்ளறான். அது வரை காட்சியை பார்க்கிற நான் என்னையே பாக்கணும் - அப்படித்தானே குரு சொன்னார்?- அதையும் கவனிக்கபோய் அதுக்கு ஏதுவா இருந்த கொஞ்ச நஞ்ச அகங்காரமும் நழுவிப்போய் கூடஸ்தன் பிரம்மம்ன்னு ஒரு வேறுபாடும் இல்லாம போயிடுது.

குழந்தை தூங்குவதற்கு அழுகிறப்ப சமாதானம் செய்ய ஏதோ ஒரு பொருளை கையிலே கொடுக்கிறோம். அதை கெட்டியா பிடிச்சுகிட்டு இருக்கும். மெல்ல தூங்கினதும் பொருள் எப்ப கையை விட்டு போச்சு என்கிற விஷயம் அதோட கன்ட்ரோல்ல இல்லை என்பது போல இந்த கூடஸ்தன் பிரம்மம் என்கிற வேறுபாடும் போயிடுதாம். அப்புறம் அங்கே இருக்கிறது என்ன?
பூரணம்.
இதுவே அகன்ட அத்வைத சாக்ஷாத்கார அனுபவம்.
தற்போதம் ஒழிந்த பேரின்ப நிலைன்னும் சொல்லுவாங்க. மேலும் ¨கண்டவர் விண்டதில்லை¨, ¨அதீத நிலை¨ , காணாமல் காணும் காட்சி¨, ¨ தூங்காத தூக்கம் தூக்கமது தூக்கும் பராபரமே¨ ன்னு எல்லாம் சொல்லப்பட்டது.

நினைத்துணை யன்றியே யில்லைநா னற்றபின்
பினைத்துணை காணேனென்றுந்தீ பற
பெரிய மௌனமீதுந்தீ பற – சொரூப உந்தியார்.

83.
குரு உபதேசப்படி சீடன் அத்வைத சொரூபத்தை தரிசித்ததை கூறல்:

தஞ்சமாங் குருவுஞ் சொன்ன தத்துவ வழிதப் பாமல்
பஞ்சகோ சமுங்க டந்து பாழையுந் தள்ளி யுள்ளில்
கொஞ்சமா மிருப்பும் விட்டுக் கூடஸ்தன் பிரம மென்னும்
நெஞ்சமூ நழுவியொன்றாய் நின்றபூ ரணத்தைக் கண்டான்

தஞ்சமாம் (பெருந்துணையாகிய) குருவும் சொன்ன தத்துவ வழி தப்பாமல் [அன்னமய கோசம் முதலான] பஞ்ச (ஐந்து) கோசமும் கடந்து, ([பந்தமாதலால்] தானல்ல என தள்ளி) பாழையும் (அவற்றுக்கு அன்னியமாக கண்ட சூன்யமாகிய அவித்தையையும்) தள்ளி உள்ளில் (அந்தக்கரணத்தில்) கொஞ்சமாம் இருப்பும் விட்டு (இந்த த்வைதங்களை காணும் சாட்சியே நான் என்ற அற்ப சாட்சி விருத்தியான ஸ்திதியையும் [பந்தமில்லாவிடினும் புருஷார்த்த சாதனமான ஞானமாக இல்லாததால்] விட்டு) கூடஸ்தன் பிரமம் என்னும் நெஞ்சமும் நழுவி (கூடஸ்தனாகிய தானே பிரமம் என்ற அகண்டாகார விருத்தியும் நிதித்தியாசன பரிபாகத்தால் உறங்கினவன் கையில் உள்ள பொருள் போல நீங்கி) ஒன்றாய் நின்ற பூரணத்தைக் கண்டான்.


Monday, April 13, 2009

சிவோஹம்!



குடத்திலே ஒரு ஆகாசத்தைப்பார்க்கிறோம். அது வெறும் பிரதிபலிப்புதான் உண்மையில்லைன்னு நிச்சயமா நமக்குத்தெரியும். கொஞ்சம் அறிவியல் தெரிஞ்சவங்களுக்கும் பகல்லே பாக்கிற ஆகாசம் என்கிற வானம் பொய்தான்ன்னு தெரியும்.

கொஞ்சம் யோசிச்சுப்பாத்தா குடத்திலே இருக்கிற வெளியும் எங்கும் பரந்து இருக்கிற வெளியும் ஒண்ணேன்னு புரியும். அதாவது எங்கும் பரந்து இருக்கிற வெளியிலேந்து குடம் ன்னு ஒரு பொருள் செயற்கையா ஒரு வெளியை பிரிச்சுகாட்டுது. குடம் இல்லைனா அந்த வெளியும் தனியா இல்லை.
அது போல கூடஸ்தனும் பிரம்மமும் வேறு வேறு இல்லை. ஒண்ணே!
சிவோஹம் ன்னு சொல்கிறவங்க இதைத்தான் சொல்கிறாங்க.
சிவமே நான் நானே சிவம் ன்னு எல்லா காலத்திலேயும் பாவனை செய்யணும். இதுவே பிரம்ம அனுபூதியில் இருக்கிறது ஆகும்.

அகண்ட அறிவான பரசிவமே நானென்று
அனவரதம் இடையறவே செய்யுந் தியானம்
புகன்ற உபாசனையாகும் அதனால் உண்மை
பொருந்தியநல் புந்தியினால் பர சிவத்தை
நிகழ்ந்திடவே அறிந்திடலாம் மற்று ஒன்றாலும்
நிருமலமாய் அறியவொணாது ஆதலாலே
பகர்ந்த குரு வசனத்தால் பரசிவத்தை
பக்தியுடன் என்றும் உபாசிக்க வேண்டும்.
சின்மயமாம் சிவத்தினிடை சித்தம் வைத்து
சிவமதுவே நாம் என்று இங்கறியாதோர்க்கு
சன்மயமாம் பரப்பிரமந் தானே ஆகி
சலியாமல் இருப்பதுவாம் விதேக முத்தத்
தன்மை ஒரு காலத்தும் சித்தியாது
தத்துவமாய் நவில்கின்றேன் இனிதாகவென்றே
நின்மலமாய் ரிபு முனிவன் விதேக முத்தன்
நிலை பெற்ற இவ்விலக்கணமே நிகழ்த்தினானால். -ரிபு கீதை

இதை திடமா அறியனும்னா எத்தனை வேதங்களை படிச்சு ஆராய்ஞ்சாலும் உதாரணங்களை சொன்னாலும் புத்தி விசாரத்தாலும் இயலாது. அவை ஒரு மட்டத்துக்குத்தான் கொண்டு விடும். அதுக்கு மேலே போக முடியாது.

திடமான அனுபவம்தான் இதை நிச்சயமா அறிய ஒரே வழி!

82.
அத்வைத சொரூபத்தை அநுபவத்தில் அறிதல்:

கடநீரின் மேக நீரிற் கண்டவா னிரண்டும் பொய்யே
குடவானும் பெரிய வானுங் கூடியொன்றா மெப்போதும்
இடமான பிரமஞ்சாட்சி யிரண்டுமெப் போது மேகம்
திடமாகச் சுவாநு பூதி சிவோகமென் றிருந்தி டாயே

கடநீரில் (குடத்தில் உள்ள நீர்) மேக நீரில் கண்ட வான் இரண்டும் பொய்யே. குடவானும் (குடத்தில் உள்ள வானும்) பெரிய வானும் கூடி ஒன்றாம் எப்போதும். [அது போல] இடமான (வியாபகமான) பிரமம் சாட்சி (கூடஸ்தன்) இரண்டும் எப்போதும் ஏகம் (ஒன்று). திடமாக (துணிவாக) சுவாநு பூதி (உன்னநுபவத்தில்) சிவோகம் (சிவனே நான், நானே சிவன்) என்று இருந்திடாயே.



Friday, April 10, 2009

தத்வமஸி - ஐக்கியம் எதில்?



நமக்கு இங்கே முக்கியமா வேண்டியது சஹ அயம் தேவதத்தன்தான்.
அது எப்படி வாச்சியார்த்தமான வேற நாடு, காலம் எல்லாத்தையும் தாண்டி ஆனால் ஒரு பெயரை உடைய உடம்பை காட்டித்தோ அது போல...

80.
மூவித இலக்கணையில் இங்கு தேவையான விட்டுவிட்டாத இலக்கணைபடி திருஷ்டாந்தத்துக்கு பொருள் கொள்வதை கூறல்:

பன்னிய சோயமென்னும் பதங்களின் வாச்சியார்த்தம்
அன்னிய தேசங்கால மவனிவ னென்ப வெல்லாம்
சொன்னவிவ் விரோதம்விட்டுத் தொடரிலக் கியம்விடாமல்
உன்னிடிற் றேவதத்த னொருவனை வெளியாக் காட்டும்.

பன்னிய (முன் கூறிய) சோ அயம் என்னும் பதங்களின் வாச்சியார்த்தம் அன்னிய தேசம் காலம் (தூர தேசம், சமீப தேசம், கடந்த காலம், நிகழ்காலம் ஆகிய) அவன் இவன் என்பன எல்லாம் (அந்த தேவதத்தன் இந்த தேவதத்தன் என்பன எல்லாம்) சொன்ன இவ்விரோதம் (விரோதமான வாச்சியார்த்தத்தை) விட்டுத் தொடர் இலக்கியம் (அவற்றை அநுசரித்த இலட்சிய அர்த்தமான தேகம் என்பதை) விடாமல், உன்னிடில் (ஆலோசிக்கில்) தேவதத்தன் ஒருவனை (என்ற புருஷனை) வெளியாக் காட்டும். (தெளிவாக காட்டும்).

81.
தத்துவ மெனும் பதங்கள் பிரமமாய்ச் சாட்சியான
வத்துவை விடாமற் பேத வாச்சியார்த் தத்தை விட்டு
நித்தமு மதுநீ யாகு நீயது வாகு மென்னும்
அர்த்தமும கண்டமென்றேயசி பதவைக்கியங் காட்டும்.

தத், துவம் எனும் (ஸாம வேத மகா வாக்கியத்தில் உள்ள அது, நீ) பதங்கள் பிரமமாய் சாட்சியான வத்துவை விடாமல் பேத வாச்சியார்த்தத்தை (பேத தர்மங்களை உடைய வாச்சிய பாகங்களை) விட்டு நித்தமும் (எக்காலமும்) அது நீ ஆகும் (பிரமமே நீயாம்), நீ அதுவாகும் (நீயே பிரமமாம்) என்னும் (என்று சொல்லும்). அசி பத அர்த்தமும் அகண்டம் (கண்டம்= துண்டு அகண்டம் துண்டாகாதது, ஒன்று) என்றே ஐக்கியங்காட்டும். (ஐக்கியத்தைப் போதிக்கும்).

மாயை, மாயையில் பிரதிபலித்த ஆபாசம், மாயைக்கு இயங்குதளம் ஆகிய மூணும் கூடி ஈஸ்வரன் ஆச்சு. ஈஸ்வரனோட சர்வ சக்தி முதலிய குணங்கள் மாயா காரியமாகும். இந்த ஈஸ்வரனையே தத் பதத்தின் வாச்சியார்த்தமாய் கொள்ளணும்.

வியட்டி அவஸ்தை, அதில பிரதிபலித்த ஆபாசம், அதன் இயங்குதளம் மூன்றும் சேர்ந்து சீவனாகும். இதற்குள்ள அற்ப சக்தி முதலிய குணங்கள் அவித்யா காரியம். இந்த சீவனை த்வம் பதத்தின் பொருளாய் கொள்ளணும்.

ஆனால் இந்த இருவருக்கும் ஏகத்துவம் -ஒண்ணாக ஆகுதல் நடக்காது. ஆகவே ஆபாசத்தோட கூடின மாயை, மாயா காரிய அனைத்தும் அறியும் அறிவு முதலான குணம் ஆகிய இவ்வளவு தத்பத வாச்சிய பாகங்களை விடுத்து இயங்கு சக்தியா இருக்கிற பாகத்தில மாத்திரம்;

அப்படியே ஆபாசத்தோட கூடின அவித்தை, அவித்தையால் செய்யப்பட்ட அற்பஞ்ஞத்துவாதி (சிறிதே அறியும் அறிவு முதலான) குணம் ஆகிய இவ்வளவும் -
த்வம் பத வாச்சிய பாகங்களை விடுத்து இயங்கு சக்தி பாகத்தை மட்டும் விட்டுவிடாத இலட்சணையால எடுத்துக்கிட்டு, கேட்டல் முதலிய ஞான வழிக்கான செயல்களுக்கு முன்னும் அவை முடிந்த பின்னும் ஏகம் என ஸாம வேத மகா வாக்கியம் தெரிவிக்கிறது.

ரொம்ப சுருக்கமா சொல்லனும்னா இயங்கு சக்தி எல்லாத்திலேயும் ஒண்ணேதான். வெளிப்பாடு வேற வேற இருக்கலாம். அந்த இயங்கு சக்தி பிரம்மம்தான்.

தாத்பர்யம்: ஆசாரியார் தானுபதேசித்தப்படி ஆவரண நிச்சயம் இருப்பது தோன்ற, அதன் முடிவான மகா வாக்கியத்தின் இலக்கியார்த்தமான கூடஸ்த பிரமத்தின் ஒருமையை உணர்த்தியதாம். மேலும் அது நீ ஆகும், நீ அதுவாகும் என்று ஓதப்புரோத (துணியில் ஊடும் பாவுமான) பாவமாய் அபேதம் சொன்னது முறையே பரோட்ச (மறைந்த) பிராந்தியும் பரிச்சின்ன (வரையறுக்கப்பட்ட) பிராந்தியும் நிவர்த்தியாகும் பொருட்டுக் கூறியதாம்.



Thursday, April 9, 2009

இலக்கண ஆராய்ச்சி



சாந்தோக்கியத்திலே உத்தாலகர் தன் பிள்ளையான ஸ்வேத கேதுவுக்கு உலகத்தை சிருஷ்டி செய்கிற ஈசனைக்காட்டி தத் த்வமஸி என்கிறார்.

பையருக்கு புரியலை! நிறைய உபாயம், விளக்கங்கள் தரார். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
இங்கே நமக்கு வேண்டியது ஒண்ணுதான்.

ஒரு சீவனுக்கு ஈசனை காட்டி ¨அது நீயாக இருக்கிறாய்¨ ன்னா-
என்னடா இது ஈசனுக்கும் நமக்கும் எத்தனை வித்தியாசம்? ஆன்மீகத்திலே ரொம்ப முன்னேறினவங்களா சொல்கிறவங்களைக்கூட ஈசனுக்கு ஒப்பா சொல்ல முடியுமா? அவர்களே ஈசனோட சக்தியை அதிகம்ன்னு ஒப்புக்கிறாங்களே!

இப்படி சந்தேகம் வந்தா இலக்கண ஆராய்ச்சி செய்யணும். அதுதான் மகரிஷிகள் என்ன சொல்ல வந்தாங்க என்கிற சரியான அர்த்தத்தை காட்டும்.
இலட்சணா வாக்கியம் என்கிறதாலே பொருள் கொள்ளணும். அது மூணு வகை. விட்டது, விடவிலாது, விட்டு விடாது. (விடாது கருப்பு இல்லை!)

78.
கூடஸ்தனுக்கும் பிரமத்துக்கும் இலக்கணையால் ஐக்கியம் செய்ய சாஸ்திரங்களில் கூறும் 3 வித இலக்கணையை கூறுதல்:

வடநூல் வல்லவர்கள் சொல்லும் வாசகப்பொருள் சேராமல்
இடராகிற் பொருளாம் வண்ண மிலக்கணை யுரையாற் கொள்வார்
திடமான வதுவுமூன்றாச் செப்புவார் விட்டதென்றும்
விடவிலா தென்றும்விட்டு விடாதென் றும்பேராமே

வடநூல் வல்லவர்கள் சொல்லும் வாசகப்பொருள் (வாச்சியார்த்தம்) சேராமல் (பொருந்தாமல்) இடராகில் (விரோதமானால்) பொருளாம் வண்ணம் (பொருளாகும்படி) இலக்கணை உரையால் (இலட்சணா வாக்கியத்தால் [பொருள்]) கொள்வார். திடமான அதுவும் (அந்த இலட்சணையையும்) மூன்றாய் செப்புவார்; விட்டதென்றும், விடவிலாது என்றும் விட்டு விடாது என்றும் பேராமே.

எந்த சொல் தன் வாக்கிய அர்த்தத்தை (literal meaning) முழுவதும் விட்டு அதன் சம்பந்தமானதை உணர்த்துகிறதோ அது விட்ட லட்சணை.

உங்க வீடு எங்கேப்பா இருக்குன்னு கேட்டா ¨ஓ அதுவா, டாக்டர் நாயர் தெருலே இருக்கு¨ ன்னு பதில் சொல்கிறாங்கன்னு வெச்சுக்கலாம். அட! தெருவிலேயா வீடு இருக்கு? இல்லை. அதை ஒட்டித்தான் இருக்கு. இருந்தாலும் இன்ன தெருவிலே இருக்கிறதாதான் நாம எல்லாரும் சொல்லறோம். அதை யாரும் தப்பா எடுத்துக்கிறதில்லை. தெரு என்கிறது அதோட பொருளானா சாலை என்கிறதை முழுவதும் விட்டுவிட்டு அதன் வாச்சியார்த்த சம்பந்தமான தெரு ஓரத்தை குறிக்குது.

எந்த சொல் தன் வாக்கிய அர்த்தத்தை (literal meaning) விடாமல் அதன் கூட சம்பந்தமானதையும் உணர்த்துகிறதோ அது விடாத லட்சணை. “காக்கி அடிக்க கறுப்பு ஓடுது¨ ன்னா காக்கி கறுப்பு என்ற நிறங்களின் பதங்களுடன் அவற்றின் சம்பந்தமான காவல் துறையையும் வக்கீல்களையும் உணர்த்துவதாக பொருள் கொள்ள வேண்டும். அப்போது அதன் உண்மைப்பொருள் விளங்கும்.

எந்த சொல் தன் வாக்கிய அர்த்தத்தில் (literal meaning) ஒருபாகத்தை விட்டுவிட்டு ஒருபாகத்தை ஏற்கிறதோ அது விட்டு விடாத லட்சணை. கீதா அக்கா ரொம்ப நாள் கழிச்சு பரோடா போறாங்க. முன்னாலே அவங்க இருந்த பேட்டையிலே தள்ளுவண்டி வியாபாரம் செய்தவரை பாக்கிறாங்க. இப்ப பெரீஈஈஈஈய்ய கடை வெச்சுகிட்டு செயலா இருக்காரு. சாம்பு மாமாவுக்கோ அவரை அடையாளம் தெரியலை. கீதா அக்கா ¨இவனை யாருன்னு தெரியலியா? நல்லா இருக்கு! இவன்தான் அந்த க்ருஷ்ணன்¨ அப்படிங்கிறாங்க.
உண்மையில் அவரேதானா? இல்லை. அவருக்கு 20 வயது கூட ஆகிவிட்டது. முன் போல சுறுசுறுப்பாக இல்லை. ஆனால் இன்னும் புத்திசாலி ஆகிவிட்டார். பணக்காரர் ஆகிட்டார். இருந்தாலும் அவரே இவர் என்பதை ஏற்கிறோம். அதனால காலம் இடம் ஆகியவற்றை தள்ளிவிட்டு க்ருஷ்ணன் என்கிற குறிப்பிட்ட உடம்பை இந்த பதங்கள் உணர்த்தும்.

79
கங்கையில் கோஷமென்றுங் கறுப்புச்சேப் போடுதென்றும்
தங்கிய சோயந்தேவ தத்தனென்றுஞ் சொல்வார்கள்
இங்குதா ரணங்களாக்கி யிந்தமூன் றுரைகளாலே
துங்கநூல் விரோதமான சொல்லெல்லாம் பொருளாந்தானே

கங்கையில் கோஷம் (கிராமம்) [உள்ளது] என்றும், கறுப்பு தங்கிய சேப்பு ஓடுது என்றும் ஸஹ அயம் (அந்த இந்த) தேவதத்தன் என்றும் சொல்வார்கள். இங்கு (பொருள் விளங்காத இடத்தில்) [இந்த மூன்றையும்] உதாரணங்களாக்கி இந்த மூன்று உரைகளாலே (இலட்சணா வாக்கியங்களால்) துங்கநூல் (பெருமை பொருந்திய சாஸ்திரங்களில்) விரோதமான சொல் (வாக்கியங்கள்) எல்லாம் பொருளாந்தானே (தானே அர்த்தமாகும்).

எந்த பதம் தன் வாக்கிய அர்த்தத்தை (literal meaning) முழுவதும் விட்டு அதன் சம்பந்தமானதை உணர்த்துகிறதோ அது விட்ட லட்சணை. கங்கையில் கிராமம் உள்ளது என்பதன் நேரடிப்பொருள் கங்கையின் பிரவாகத்தில் கிராமம் உள்ளது என்பது. ஆனால் அது அல்ல நாம் சொல்ல நினைப்பது. அது நடக்கக்கூடியதும் இல்லை. இங்கு கங்கை என்பதன் பொருள் தன் பொருளாகிய நதி என்பதை முழுவதும் விட்டுவிட்டு அதன் வாச்சியார்த்த சம்பந்தமான நதி தீரத்தை குறிக்கிறது.

எந்த பதம் தன் வாக்கிய அர்த்தத்தை (literal meaning) விடாமல் அதன் கூட சம்பந்தமானதையும் உணர்த்துகிறதோ அது விடாத லட்சணை. “கறுப்பு தங்கிய சேப்பு ஓடுது” என்பதன் வாக்கிய அர்த்தம் (literal meaning) கறுப்பு நிறம் தங்கி இருக்க சிவப்பு நிறம் ஓடுகிறது என்பது. இது தகாது. கறுப்பு சிவப்பு என்ற நிறங்களின் பதங்களுடன் அவற்றின் சம்பந்தமான பசுவையும் குதிரையையும் உணர்த்துவதாக பொருள் கொள்ள வேண்டும். அப்போது அதன் உண்மைப்பொருள் விளங்கும்.

எந்த பதம் தன் வாக்கிய அர்த்தத்தில் (literal meaning) ஒருபாகத்தை விட்டுவிட்டு ஒருபாகத்தை ஏற்கிறதோ அது விட்டு விடாத லட்சணை. ஸஹ அயம் (அந்த இந்த) தேவதத்தன் என்பதில் முன் ஒரு முறை வேறு இடத்தில் வேறு காலத்தில் பார்த்த தேவ தத்தன் இப்போது இங்கு பார்க்கும் தேவதத்தன் என்பது பொருந்தாது. {நான்கு வருஷங்களுக்கு முன் கல்கத்தாவில் தேவத்தனை பார்த்தோம். இப்போது தேவதத்தனை சென்னையில் பார்க்கிறோம். அவரேதான் இவர் என்கிறோம். உண்மையில் அவரேதானா? இல்லை. அவருக்கு 4 வயது கூட ஆகிவிட்டது. முன் போல சுறுசுறுப்பாக இல்லை. ஆனால் இன்னும் புத்திசாலி ஆகிவிட்டார். இருந்தாலும் அவரே இவர் என்பதை ஏற்கிறோம்.} ஆகவே காலம் இடம் ஆகியவற்றை தள்ளிவிட்டு தேவதத்தன் என்னும் தேகத்தை இரண்டு பதங்களும் உணர்த்துகின்றன.

நமக்கு இங்கே முக்கியமா வேண்டியது சஹ அயம் தேவதத்தன்தான்.
அது எப்படி வாச்சியார்த்தமான வேற நாடு, காலம் எல்லாத்தையும் தாண்டி ஆனால் ஒரு பெயரை உடைய உடம்பை காட்டித்தோ அது போல...



மகா வாக்கியங்கள்



மகா வாக்கியங்கள்:
இதுக்கு சித்தார்த்த போதக வாக்கியங்கள் என்பாங்க.
அதாவது பிரம்ம ஆன்ம ஐக்கியத்தை மட்டும் போதிக்கிற வாக்கியங்கள்.
ஒவ்வொரு வேத பிரிவிலும் ஒண்ணு இருக்கு. அதனால நாலு இருக்கு.
1. ப்ரக்ஞானம் ப்ரம்ஹா
2. அஹம் ப்ரம்ஹாஸ்மி.
3. தத்வமஸி
4. அயமான்மா ப்ரம்ஹா

ரிக் வேத ஐத்ரேய உபநிஷத்திலே இருக்கிறது ப்ரக்ஞானம் ப்ரம்ஹா. ஞான வடிவாக இருப்பதே பிரம்மம் என்பது பொருள். இது மனனம், தியானம், அப்பியாசம் செய்ய தகுந்த வாக்கியமாக சொல்கிறங்க.

யஜுர் வேத ப்ருகதாரண்ய உபநிஷத்திலே இருப்பது அஹம் ப்ரம்ஹாஸ்மி. உள்ளமே பிரம்மமாக இருக்கிறது. இது அனுபூதி அதாவது சமாதி அனுபவ வாக்கியம்.

சாம வேத வாக்கியம் சாந்தோக்கிய உபநிஷத்திலே இருக்கு. அதே இதுவரை பாத்த தத்வமஸி. அது நீயாக இருக்கிறாய். இது உபதேச வாக்கியம்.

அதர்வண மாண்டூக்கிய உபநிஷத்திலே இருக்கிறது அயம் ஆன்மா பிரம்ஹா. இந்த ஆன்மா பிரம்மம். இது நிதித்தியாசன வாக்கியம்.

சுயமதுவாம் தத்வமசி என்னும் வாக்கியம்
சொல்லும் உபதேச மகா வாக்யமாகும்
இயலும் அகம்பிரம்மாஸ்மி என்னும் வாக்யம்
இலகு அநுபூதி மகா வாக்யமாகும்
மயன் மருவாப் பிரஞ்ஞானம் பிரம் வாக்யம்
மனனத்தின் அப்பியாச வாக்யமாகும்
அய்மான்மாப் பிரமமென அறையும் வாக்யம்
அதற்கெல்லாம் சம்மதமாம் வாக்கியந்தானே - ரிபு கீதை

இந்த நாலிலே தத்வமஸி என்கிறதிலே இருக்கிற ஆன்ம பரமான்ம ஐக்கியமே மத்ததில் இருப்பதாலும், இது குருவோட உபதேசமா இருக்கிறதாலும் இதையே சிறந்ததாக கொண்டாடுகிறாங்க.


Wednesday, April 8, 2009

ஜீவ ஈஸ்வர பேதம்.



சீடன் அதெப்படின்னு கேக்கிறான்.
முன்னேயே பாத்ததுதான்:
முதல்ல பேரே வேறே!
சீவனும் ஈசனும் மாய சம்பந்தமுடையவர்கள்.
ஈசன் சத்வ குண மாயை.
ஜீவன் ரஜோ குண மாயை. அதாவது அசுத்த மாயை.
ஈசன் மாயையை தன் வசப்படுத்தினவன். ஜீவன் மாயை வசப்பட்டவன். இரண்டு பேரும் மாயா சம்பந்தம் உடையவர்களே!ஈசனுக்கும் ஜீவனுக்கும் என்ன ஏணி வெச்சாலும் எட்ட முடியாது! அதாவது என்ன ஆன்ம முன்னேற்றம் கண்டாலும் ஈசனுக்கு ஜீவன் சமமா ஆக முடியாது. ஒப்பிடவே முடியாது! ஈசனுடைய சர்வத்துவம் கிட்ட அணுகக்கூட ஜீவனால் முடியாது!
ஜீவன் பிண்டத்திலே இருக்கன். ஈசன் அண்டத்திலே!
ஜீவன் காரிய உபாதி ஈசன் காரண உபாதி! (அதாவது ஈசன்தான் பிறப்பிக்கிறான்; உண்டாக்குபவன். சீவன் பிறக்கிறான்; உண்டாகிறவன்.)
ஜீவன் வியக்தி தேகம் உள்ளவன். ஈசன் சமஷ்டி தேகம் உள்ளவன்.
ஜீவன் அற்ப ஞானம் உள்ளவன். ஈசன் சர்வஞ்ஞன். எல்லாம் தெரியும்!

அதனால பாதாலத்துக்கும் விண்ணுக்கும் இருக்கிற வேறுபாடு போல இந்த சீவனுக்கு ஈசனுக்கும் எப்பவுமே ஐக்கியம் சித்திக்காது.

ஜீவ ஈஸ்வர பேதத்தை கூறல்:
77.
பேதமா னதுவுங் கேளாய் பெயராலு மிடங்க ளாலும்
ஓதரு முபாதி யாலு முடலாலு முணர்வி னாலும்
பாதலம் விசும்பு போலப் பலதூர மகன்று நிற்பர்
ஆதலாலிவர்க் கெந்நாளு மைக்கிய மென்பது கூடாதே

[சீவ ஈஸ்வரர்கள்] பேதமானதுவும் (வித்தியாசமானதுவும்) கேளாய். பெயராலும் (சீவன் ஈசன்) இடங்களாலும் (பிண்டம், அண்டம்), ஓதரும் உபாதியாலும் ([ஒன்பது விதங்களாலும் நிச்சயித்து சொல்ல முடியாத] அவித்தை மாயை என்னும் உபாதிகளாலும்) உடலாலும் (வியஷ்டி, சமஷ்டி), உணர்வினாலும் (சிற்றறிவு பேரறிவு) பாதலம் விசும்பு (விண்ணுலகம்) போலப் பலதூரம் அகன்று (வேறுபட்டு) நிற்பர். ஆதலால் இவர்க்கு எந்நாளும் ஐக்கியம் என்பது கூடாதே (அபேதம் சித்திக்காது).
தாத்பர்யம்: வாச்சியார்த்த ஜீவ ஈஸ்வரர்களுக்கு பெயர் முதலான பேதம் உள்ளதால் அபேதம் சித்தியாது.



Tuesday, April 7, 2009

சீவனும் ஈஸ்வரனும் எப்பவுமே தனித்தனி.



ஸ்ரீ ராம நவமி வந்தது. பானகம் செஞ்சாங்க. மத்த இனிப்புகளும் செஞ்சாங்க. அதுக்கு வெல்லம் பயன்படுத்தினாங்க. எல்லாமே இனிப்பா இருந்தது. அதை எல்லாத்தையும் இனிப்பா செஞ்சது வெல்லம்தான். இந்த வெல்லத்தை எப்படி இனிப்பாக்கிறதுன்னு கேட்டா நம்மை மேலே கீழே பாப்பாங்க இல்லையா? ¨என்ன பைத்தியம் பிடிச்சு இருக்கா? வெல்லமே இனிப்புதான் அதை ஏன் இனிப்பாக்க வேற என்ன வேணும்?" என்பாங்க.

அதுபோல ஆன்மாதானே எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது? அறிகிறது? அப்படி இருக்கிறப்ப தன்னைத்தானே அறிய அதுக்கு வேற ஏஜென்சி தேவை இல்லை.
இப்படிப்பட்ட ஆன்மாதான் த்வம் அல்லது அஹம் என்ற சொல்லுக்கு இலட்சிய அர்த்தமாகும்.

இந்திரியங்களால ஜடப்பொருளை யாரும் பார்க்கலாம். இப்படி பாக்கிற உடம்பையே நான் இல்லைனு அறிய கொஞ்சமாவது சூக்ஷ்ம அறிவு வேணும்.

அதுக்கும் மேலே இந்திரியங்கள் முதலா மத்ததையும் நான் இல்லைன்னு உணர நல்ல சூக்ஷ்ம அறிவே வேணும். அப்படிப்பட்ட அறிவாளி ஒரு வழியா அந்த முயற்சியில வெற்றி அடைஞ்சா - அதாவது மனசை ஒடுக்கியாச்சுன்னா எதிரே அவித்தை, காரண சரீரம் ஆவரணம் என்ற சூன்யத்தைதான் பார்க்கிறான். அதாவது ஒண்ணுமேயில்லை. தான் இருக்கிறபடியால் தன்னைத்தவிர வேறு ஒண்ணுமில்லைன்னு பாக்கிற தான்தான் ஆன்மா.

ஆனை தன்னைத்தானே தொட்டுகிறப்ப தொடுகிறதும், தொடப்படுறதும் ஒண்ணே என்கிறது போல, ஆன்மாவால அறியப்படுகிறது ஆன்மாவே அல்லாமல் வேறு இல்லை. முன்னாலே எதையும் அன்னியமா உணராமல் தன் நிஜ ரூபத்தை மட்டும் உணரணும். இந்த நிலையே தான். இதுவே ¨த்வம்¨ ன்னு சொல்லப்பட்டது. முன்னாலே ஒன்றை அறியும்வரை தன்னை அறிய முடியாது.

முன்னிலைச்சுட்டு ஒழிதி எனப் பலகாலும் நெஞ்சே நான் மொழிந்தேனே நின்
தன்னிலையைக் காட்டாதே என்னை ஒன்றாச் சூட்டாதே சரண் நான் போந்த
அந்நிலையே நிலை அந்த நிலையிலே சித்தி முத்தி அனைத்துந் தோன்றும்
நன்னிலை ஈதன்றி இலை சுகமென்றே சுகர் முதலோர் நாடினாரே. 8.
-தாயுமானவர்- 24. ஆசையெனும்
75.
ஆத்மாவாகிய தான் ஞான சொரூபம் என்பதெப்படி:

மதுரமாங் கட்டி சுட்ட மாப்பணி யாரமெல்லாம்
மதுரமாக் கியவ தற்கு மதுரந்தான் சுபாவ மன்றோ
அதுவிது வெனுஞ் சடங்க ளறிவாக வறிவைத் தந்தே
அதுவிது விரண்டுமாகா வகம் பொருளறிவாய் நீயே.

மதுரமாம் (இனிப்பான) [வெல்ல] கட்டி [சேர்த்து] சுட்ட மாப் பணியாரம் (பலகாரம்) எல்லாம் மதுரம் ஆக்கியவதற்கு (தன் சுபாவமான இனிப்பாக ஆக்கிய வெல்லத்துக்கு) மதுரந்தான் சுபாவம் அன்றோ? அதுவிது எனும் சடங்கள் (தேகம் இந்திரியம் முதலானவை) அறிவாக (அறிவையுடையனவாக) அறிவை தந்தே (ஞானத்தை கொடுத்து) அதுவிது இரண்டுமாகா (தேகம் இந்திரியம் முதலானவற்றின் விகாரத்தை அடையாத [பிரத்யேக ஆத்மாவையே]) அகம் பொருள் (அகம் என்பதற்கு பொருளாக) அறிவாய் நீயே.

த்வம் என்கிறது என்னன்னு சொல்லிட்டார், இப்ப ´தத்´ உம் ´த்வம்´ உம் ஒண்ணா ஆகிறதை சொல்கிறார்.
சீடனே, மேலே சொன்னது போல ஸ்தூல, சூக்கும், காரண தேகங்களுக்கு அன்னியமாகவும்;
சாக்கிரத், சொப்பன, சுழுத்தி என்கிற 3 அவஸ்தைகளுக்கு சாக்ஷி மாத்திரமாகவும்;
அஞ்சு உறைகளில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிற கூடஸ்தனே ´த்வம்´ என்கிறதுக்கு இலட்சியார்த்தம்.

எப்பவும் பந்தமே இல்லாத பிரம்மமே ´தத்´ என்கிற சொல்லுக்கு இலட்சியார்த்தம்.
கூடஸ்தனும் பிரம்மமும் ஒரே மாதிரி. அதனால இவர்களுக்குள்ளே ஐக்கியம் ஏற்படும்.

சீவனும் ஈஸ்வரனுமே த்வம் தத் க்கு வாச்சியார்த்தம். (literal meaning) இவங்களுக்கு இடையே எக்கச்சக்க வேறுபாடு இருக்கிறதால அவர்களுக்குள்ளே அபேதம் என்கிற ஐக்கியம் ஏற்பட முடியாது. அவங்க எப்பவுமே தனித்தனிதான்.

76.
ஆரோபமான வாச்சியார்த்தங்களுக்கு ஐக்கியமின்றெனக்கூறல்.

இந்தநீ த்வம் பதத்தி னிலட்சியப் பொருளா மென்றும்
பந்தமில் பிரம மேதத் பதந்தனி லிலட்சியார்த்தம்
அந்தமாஞ் சீவ னீசனவர்களே வாச்சியார்த்தம்
சந்ததம் பேத மாவார் தமக்கயிக் கியங்கூடாதே

இந்த (ஞானமே சுபாவமான சொரூபமாக உள்ள) நீ த்வம் பதத்தின் இலட்சியப் பொருளாம். (இலட்சியார்த்தம் ஆகும்). என்றும் பந்தமில்[லாத] பிரமமே தத் பதந்தனில் இலட்சியார்த்தம். அந்தமாம் (தள்ளப்படுவதாகிய) சீவன் ஈசன் அவர்களே வாச்சியார்த்தம். சந்ததம் (எப்போதும்) பேதமாவார்தமக்கு (பேதமுடையவாராக உள்ள சீவ ஈஸ்வரர்களுக்கு) ஐக்கியம் (அபேதம்) கூடாதே (சித்திக்காது).

தாத்பர்யம்: மகா வாக்கியத்தின் இலட்சியார்த்தமான கூடஸ்த பிரமம் அபேதம். ஆதலால் அவர்கட்கு ஐக்கியம் கூடும்.



Monday, April 6, 2009

எல்லாம் அறிந்த தன்னை எதால் அறிவது?



குரு சொல்கிறார். ¨எல்லாத்தையும் பார்க்கிற நான் என்னை எதால பார்ப்பேன்? அப்படின்னு கேட்காதேப்பா! சடமா இருக்கிற வேற வஸ்துவைதான் நீ விளக்கை வெச்சு பாக்கணும். விளக்கை பாக்க வேற வெளிச்சம் வேணுமா என்ன? அதை அப்படியே பாக்கலாமே! தன்னைத்தானே பார்கிறதுல பிரச்சினை இல்லை. பத்தாவது ஆசாமி எதை வெச்சு தன்னைப்பாத்தான்? தன்னாலேயேதானே!

73.
எல்லாம் அறிந்த தன்னை எதால் அறிவது?

எல்லாங்கண்டறியுமென்னை யேதுகொண்டறிவேனென்று
சொல்லாதே சுயமாஞ்சோதிச் சுடருக்கு சுடர்வே றுண்டோ
பல்லார்முன் றசமன்றன்னைப் பார்ப்பதுந் தனைகொண்டேதான்
அல்லாமற் பதினொன்றானு மவனிடத்துண்டோ பாராய்

[சூன்யம் முதலாக] எல்லாம் [சாட்சியாக] கண்டறியும் என்னை ஏது (எதை) கொண்டு அறிவேன் என்று சொல்லாதே. சுயமாம் சோதி சுடருக்கு சுடர் வேறுண்டோ? பல்லார் (பலர் =9 பேருக்கு) முன் தசமன் (பத்தாமவன்) தன்னைப் பார்ப்பதும் தனை கொண்டேதான். அல்லாமல் (அன்னியமாக) பதினொன்றானும் (பதினொன்றாவது நபரும்) அவனிடத்து (பத்தாமவனிடத்து) உண்டோ பாராய்.

தாத்பர்யம்: சடமான அனைத்தையும் அறிய வேறு அறிவு தேவையானாலும் சித் ரூபமான தன்னை அறிய ஒரு சித் தேவையில்லை. தன்னைத் தானே அறிய வேண்டும்.

ஞான சொரூபியா இருக்கிற நீ எதால பார்க்கன்னா கேட்கிறது? அதுக்கு இன்னொரு ஞானம் வேணும்னா அந்த ஞானத்தை எதால பாக்கிறது? அதுக்கு இன்னொரு ஞானம் வேணும்னு இப்படியே முடிவில்லாம போய்கிட்டே இருக்கும். நீ வேற எதாலேயும் அறியப்படுகிறவன் இல்லை.

எரிகிற விளக்கை பார்க்க இன்னுமொரு விளக்கு தேவையில்லை என்கிறது போல ஆன்மா ஸ்வயம் ஜோதியானதால அதை பாக்க இன்னொரு சக்தி தேவையில்லை.

74.
அறிவுக்கு மறிவு செய்யு மறிவுவே றுண்டென்றெண்ணும்
அறிவற்ற குதர்க்க மூடர்க் கனவஸ்தை பலமாய்த் தீரும்
அறிபடும் பொருணீ யல்லை யறிபடாப் பொருணீ யல்லை
அறிபொரு ளாகு முன்னை யநுபவித் தறிவாய் நீயே

அறிவுக்கும் அறிவு செய்யும் அறிவு வேறுண்டு என்று எண்ணும் அறிவற்ற குதர்க்க மூடர்க்கு (ஆத்மா சுயம் பிரகாசமுடையது எனும் அறிவில்லாத மூடர்களுக்கு) அனவஸ்தை (வரையரை அற்ற தன்மையே) பலமாய்த் தீரும். (நிலைக்கும்). அறிபடும் பொருள் நீ அல்லை; அறிபடாப் பொருள் நீ அல்லை. அறிபொருளாகும் உன்னை அநுபவித்து அறிவாய் நீயே.



Friday, April 3, 2009

கடலோரத்திலே ஒரு அலை...



கடலோரத்திலே நிக்கிற போது ஒரு அலை வருது ... சுவாரசியமா பாக்கிறோம். அது மெதுவா ஒரு சின்ன அலைப்பா ஆரம்பிச்சு, பெரிசாகி, சீறிப்பாஞ்சு விழுந்து எழுந்து ஆர்பரிச்சு கரையை தொட்டு அடங்கிடும். பின் இன்னொரு அலை ஏற்கெனவே உண்டாகி வந்துகிட்டு இருக்கும். அது மேலே நம் கவனம். அதுவும் கடைசியிலே அடங்கும். ஆனா கடல் அலைகள் வந்துகிட்டேதான் இருக்கும்!

அது போல நாமும் பிறந்து ஆரவாரத்தோட வாழ்ந்து சர்வ நிச்சயமா அடங்கிப்போறோம்! இப்படி போகிற ஜன்மங்கள் எத்தனை எத்தனை!

அது போல ஸ்தூலம். சூக்ஷ்மம், காரணம் என்று மூன்று உடல்களும், சாக்கிரத், சொப்னம், சுசுப்தி ன்னு மூன்று அவஸ்தைகளும், இறந்த/நிகழ்/எதிர் ன்னு மூன்று காலங்களும் கடல் அலை போல வந்து வந்து போய்கொண்டே இருக்கும் அதுக்கு முடிவே கிடையாது.
அனுபவம் பெற்ற சீடனே, இத்தனையும் சாட்சியா இருந்து பாருப்பா!

72.
தூலசூக்கும வஞ்ஞானந் தோன்றுமூன்ற வத்தைதாமும்
காலமோர் மூன்றுஞ் சன்மக் கடலெழுங் கல்லோலங்கள்
போலவே வந்துவந்து போனவெத்தனை யென்பேனான்
ஆலமர் கடவுளாணை யவைக்கெலாஞ் சாட்சி நீயே

தூல சூக்கும அஞ்ஞானம் (ஸ்தூல சூஷ்ம காரண தேகங்களென மூன்று தேகங்களும்) தோன்றும் (தோன்றுகின்ற) [ஜாக்ரத், ஸ்வப்னம், சுசுப்தி ஆகிய] மூன்று அவத்தை தாமும், காலம் ஓர் மூன்றும் (இறந்த, நிகழ், எதிர் காலங்கள் ஆகிய மூன்றும்) சன்மக் கடல் (ஜன்மமாகிய கடலில்) எழுங் கல்லோலங்கள் (எழுகின்ற அலைகள்) போலவே வந்து வந்து போன நான் எத்தனை என்பேன். ஆல் அமர் கடவுள் (தக்ஷிணாமூர்த்தி) ஆணை, அவைக்கு எல்லாம் சாட்சி நீயே.
PG
செடி கொடி போன்ற தாவரங்களுக்கு ஸ்பரிச அறிவு மட்டுமே உண்டு. வேற ஏதும் அவற்றுக்கு புலனாகலை. இவைகளுக்கு சுழுத்தி ஒண்ணு மட்டுமே உண்டு.

நத்தை போன்ற சிலதுக்கு ஸ்பரிசம், ரசம் (ருசி) அறிவு ரெண்டும் உண்டு.
எறும்பு போல சிலதுக்கு ஸ்பரிசம், ரசம், கந்தம் (வாசனை) அறிவு மூணும் உண்டு.
வண்டு போல சிலதுக்கு ஸ்பரிசம், ரசம், கந்தம், ரூபம் (உருவம்) அறிவு நாலும் உண்டு.
ஏனைய மிருகங்கள் பட்சிகள் போலவற்றுக்கு ஸ்பரிசம், ரசம், கந்தம், ரூபம், சப்தம் அறிவு ஐந்தும் உண்டு.
இவைகளுக்கு எல்லாம் கனவு போலவே எல்லாம் நடக்கிறதாம். ஜாக்ரத் இல்லை. அதனால ஸ்வப்ன, சுசுப்தி ரெண்டு அவஸ்தைகளே உண்டு.
மனுஷர்களான நமக்கு ஜாக்ரத் சொப்ன சுசுப்தி மூணும் உண்டு.

தேவர்களுக்கு தூக்கம் இல்லை. நினைப்பே உண்டு. மறப்பு இல்லை.
மனிதர்கள் தவிர்த்து மேலே பாத்த மற்ற உயிரினங்களுக்கோ மறப்பே உண்டு. நினைப்பு இல்லை.
மனிதர்களுக்கு மட்டுமே மறப்பு நினைப்பு இரண்டும் கொடுத்து அவற்றை நீக்க உபாயமும் கொடுத்து இருக்கிறான் இறைவன். இப்படி நீக்கினாதான் முக்தி.

அப்ப மனிதர்கள் மட்டுமே முக்தி அடைய முடியும்.
தேவர்களும் முக்தி அடையனும்ன்னா செய்த புண்ணியம் போய் திருப்பி மனித ஜன்மம் எடுக்கணும்.
மற்ற சீவ ராசிகள் பரிணாம வளர்ச்சி அடைஞ்சு மனிதனாகணும்.

ஜாக்ரத் லேயும் சொப்பனத்திலேயும் நாம் வியவகாரம் செய்கிறோம். அது நமக்கே தெரியும்.
சுசுப்தியிலே அப்படி தெரியலையே? அதே போல தெரியலைதான். ஆனா கனவில்லாம தூங்கி எழுந்து அப்பாடா அருமையான ஆனந்தமான தூக்கம் ன்னு சொல்கிறோமே! அதை அனுபவிச்சு இருந்தாத்தானே அது தெரியும்?

ஒரு தங்க சங்கிலியை காணோம். வீடு முழுக்க தேடியாச்சு. கிணத்திலே விழுந்துடுத்தோன்னு சந்தேகம்.
ஒத்தரை கூப்பிட்டு கொஞ்சம் முழுகி தங்க சங்கிலி கிணதுல இருக்கான்னு பாருங்க என்கிறோம்.
அவரும் முழுகறார். கிணத்தில் தண்ணிக்குள்ளே இருக்கும் போது தங்க சங்கிலி இருக்கு இல்லைன்னு அவரால சொல்ல முடியலை. மேலே வந்த பிறகே சொல்கிறார். தங்க சங்கிலி கிடைச்சுடுத்துண்ணு. ¨ஏன்யா! இவ்வளோ பதட்டத்திலே இருந்தேனே! கிடைச்ச உடனே சொல்லையே?¨ன்னு கேட்கவா முடியும்? தண்ணிக்குள்ளேந்து பேச முடியாதுன்னு நமக்கே தெரியும். அப்படி சொல்ல கருவி இல்லை. மூச்சு எடுக்கவும் முடியாது பேச்சா அதை வெளியே விடவும் முடியாது.

அதே போல சுசுப்திலே இருக்கிறப்ப அதை சொல்ல முடியாது. அப்ப ஆன்மாவுக்கு கரணங்களோட உதவி இல்லை.


Thursday, April 2, 2009

சீடன் பாக்கிறது இருட்டைதான்!



சீடனும் ஆசாரியர் சொன்னபடி யோசிச்சு ஒவ்வொண்ணா ஒவ்வொரு உறையும் விலக்குகிறான். (நமக்கு இதுக்கு எல்லாம் எவ்வளோ ஜன்மா ஆகுமோ தெரியாது. இருந்தாலும் இறைவன் விளையாட்டு யாருக்கு தெரியும்? பட்டுன்னு யாருக்கான நடந்தாலும் நடக்கலாம்! யார் கண்டாங்க!)

இப்படி விலக்கிய சீடன் பாக்கிறது இருட்டைதான்!
என்னடா இது! குரு எங்கேயான நம்பளை வஞ்சிப்பாரா? மாட்டாரேன்னு திட சிரத்தை இருக்கு சீடன்கிட்டே! அதனால ¨வஞ்சனை பண்ணாத குருவே, எனக்கு இப்ப தெரியறது வெறும் இருட்டுதான். இதையா நான் ன்னு அனுபவிக்கிறது?¨ என்கிறான்.

70.
ஆசாரியர் உபதேசித்தப்படி அநுஷ்டித்து அதற்கு பின் சீடன் வினாதலைக்கூறல்:

பஞ்ச கோசமும் விட்டப்பாற் பார்க்கின்ற பொழுது பாழே
விஞ்சியத துவல்லாமல் வேறொன்றும் தெரியக் காணேன்
அஞ்சன விருளையோ நானகமென வநுபவிப்பேன்
வஞ்சமில் குருவேயென்ற மகன் மதிதெளியச் சொல்வார்.

பஞ்ச கோசமும் விட்டு அப்பாற் பார்க்கின்ற பொழுது பாழே (சூன்யமே) விஞ்சியது. (மீதியாக இருந்தது). அது அல்லாமல் வேறொன்றும் தெரியக் காணேன். அஞ்சன (மை போல கருத்த) இருளையோ நான் அகமென (நானென) அநுபவிப்பேன்? வஞ்சமில்[லாத] குருவே என்ற மகன் மதி தெளியச் சொல்வார்.

குரு சொல்கிறார். ¨குழந்தாய்! முன்ன உனக்கு கதை சொன்னேனே நினைவு இருக்கா? பத்து பேர் ஆத்தை கடந்தாங்கன்னு? தன்னையே எண்ணிப்பாக்காத அந்த ஆசாமி மாதிரிதான் நீ இருக்கே! பருப்பொருளா வெளியே தெரிஞ்ச எல்லாம் இப்ப இல்லைன்னு ஆகிவிட்ட பிறகு மீதி இருக்கிறது என்னன்னு பாக்கிறது யாரோ - அந்த உன்னையே பாத்துக்க¨ என்கிறார்.

71.
முன்புகறசமன் புத்திமோகத்தா லெண்ணியெண்ணி
ஒன்பது பேரைக்கண்ட வொருவனாந் தனைகாணாத
பின்பவ னிடையிற்கண்ட பெரியபாழவனோ பாராய்
அன்புள மகனேகாண்ப தடங்கலுங் காண்பானீயே

முன்புகல் தசமன் புத்தி மோகத்தால் (அஞ்ஞானத்தால்) எண்ணி எண்ணி ஒன்பது பேரைக் கண்ட ஒருவனாம் (பத்தாவதாக) தனைக் காணாத பின்பு, அவனிடையில் (அவனிடத்து) கண்ட பெரிய பாழ் அவனோ பாராய். அன்புள மகனே காண்பது அடங்கலும் (உன்னால் கண்ட ஸ்தூலமும் அவை நீங்கியபின் கண்ட சூன்யமும்) காண்பான் (காண்பவன்) நீயே.

பஞ்ச கோசங்களையும் நீக்கின பின்னாலே தெரிகிறது மனசை நீக்கின பிறகு எது தெரியுமோ அதேதான்! மனம் ஒடுங்கின பின்னாலே மனதை அன்னியமாக கண்டு ஒடுக்கிய தன்னையே பார்க்காம, அணுத்துவமாக அந்த நிலையிலேந்து எதிரிட்டு தோன்றுவதே இந்த பாழ் ஆகும்.
இங்கே மிகவும் நுண்ணிய அறிவால சாட்சியா நிக்கிற தன்னை பார்க்கணும். கொஞ்சம் மறந்து போய் முன்னாலே பார்த்தாலும் ஒன்னு எல்லாமே தெரியும் அல்லது பாழ் தெரியும். இந்த பாழ் தான் அவித்தை, காரண உடம்பு. இதை தாண்டினாதான் எமனை ஜெயிக்கலாம். இந்த அந்தகாரம்தான் எமன். கரிய நீல வண்ணமா இதை சொல்கிறாங்க. இந்த இடத்தை கடக்கணும்னா ஈஸ்வரனோட அருள் அவசியம் என்கிறாங்க. இதற்கே பக்தி வேணும் என்கிறது. ¨மாயை எனும் திரையை நீக்கி¨ ன்னு சொல்வதும் இதையே!

விரிவு அகங்காரம் ஆதி விகாரம் அற்றதன் அபாவம்
இருமையாம் இவற்றை எல்லாம் இங்கு யாது உணரும் இதை
ஒரு பொருள் உணராது அந்த உணர்வு உருவான சாட்சிப்
பொருளினை மிகவு நுண்மை புந்தியால் உணர்தி மைந்தா - விவேக சூடாமணி.