Pages

Thursday, April 23, 2009

சிரவண மனன நிதித்யாசனம்.சிரவணம் என்கிறது ப்ரம்ம ஆன்ம ஐக்கியத்தை சொல்கிற வேத வாக்கியத்தோட தாத்பர்யத்தை குரு விளக்க விசாரித்து அறிஞ்சு கொள்கிறது.
மனனம் என்கிறது அப்படி அறிஞ்சு கொண்டதை - அந்த பொருளை திருப்பி திருப்பி புத்தியால சிந்திக்கிறது.
நிதித்யாசனம் என்கிறது மேலே சொன்னதை செய்து தெளிஞ்சு ஏகாந்தமான பிரம்ம அனுபவம் கிடைக்கும்போது அதிலேயே சித்தம் நிலைக்கும் படி செய்கிறது.
தினசரி இந்த மூணையும் வைராக்கியத்தோட செய்து வந்தா முத்தி கிடைச்சுடும் என்கிறார் குரு.

ஜன்ம ஜன்மமா இந்த உடம்பு வாசனைகளால் தோன்றிகிட்டே இருக்கு. அதனால தான் பிரம்மம் என்கிறது மறந்து போய் தான் உடம்பு ன்னு நினைக்குது. இது அஞ்ஞானம்.
அப்புறம் ஆன்மீகம் 4 டம்ப்மீஸ் படிக்கிறோம். அப்புறம் இன்னும் பல நல்ல (ஹிஹிஹி) வேதாந்த புத்தகங்கள் படிக்கிறோம். ஒத்தரை தேடிப்பிடிச்சு விளக்கங்கள் கேட்டுக்கிறோம். குருவை தேடிப்பிடிச்சு வேதாந்த உட்பொருளை அவர் சொல்ல கேட்டு தெரிஞ்சுக்கிறோம். இப்படி கேட்கிறது சிரவணம்.

¨குரு நான் சித் ன்னு சொல்கிறார். எல்லாம் கேக்க நல்லா இருக்குதான்! ஆனா இப்பவும் என் உடம்பு எனக்கு தெரியுது; மத்த ஜடப்பொருள் எல்லாம் தெரியுது. அப்ப நான் சித்தோ இல்லையோ?¨ ன்னு கலவரம் வருது. இதுதான் ஐயம்.
ஒரு முறை கண்டு ஆறிஞ்சு கொண்டோமே அந்த சித்து நாம் வேறு இல்லை ன்னு அடிக்கடி சிவோஹம் அல்லது அஹம் ப்ரம்ஹாஸ்மி ன்னு அடிக்கடி சிந்திக்க அது நீங்கும். இது மனனம்.

மனனம் செய்த படி தான் சித்துதான் ஆனாலும் பிரபஞ்சம் இன்னும் என் முன்னாலே தோன்றுதே? நான் ஏகமான ப்ரம்மம்ன்னா ஏன் இப்படி தோணனும்? அப்ப நான் ப்ரம்மமில்லை; ஜீவன் ன்னு தோன்றுகிறது விபரீதம்.
¨நாம் சித்தான ப்ரம்மமே; இங்கே நாலா விதமாயும் தோன்றுகிறது எல்லாம் நாமேதான்; வேறு இல்லை¨ ன்னு அனுபவத்திலே கண்டு கொண்டு தெளிகிறதே நிதித்யாசனம்.

வீட்டு வாசலிலே சாயந்திரம் விளக்கு ஏத்தி வைக்கிறோம். அங்கே இருட்டு போயிடுது. பிரகாசமா இருக்கு.
ஆனா இந்த சித்திரையிலேயே அப்பப்ப நல்ல காத்து வீச ஆரம்பிச்சுடுத்து. அந்த காத்திலே தீபம் அலை கழியும். அணைஞ்சாலும் அணைஞ்சுடும்.

அது போல சாஸ்திர ஆராய்ச்சியாலும் விசாரணையாலும் ஞான தீபம் ஏத்தி வைத்தாலும் (ஹிஹி ஒரு சினிமா பாட்டு இப்படி இருக்கோ?) சந்தேக காத்து வீசினால் அது அதிகம் பிரயோசனப்படாது. பொருளை அந்த விளக்கு நல்லா பிரகாசமா காட்டாது.
எப்படி விளக்குக்கு ஒரு தடுப்பை பாதுகாப்பா வைச்சு காத்து நேரடியா தாக்காம செய்கிறோமோ அது போல மனனத்தால காப்பாத்தணும். தீப திரியை தூண்டிவிட்டு பலமா எரிய செய்வது போல நிதித்யாசனத்தால ஏகத்திலேயே நிலைச்சு நின்னு ஞான தீபத்தை தூண்டிவிட்டு பிரகாசப்படுத்தணும்.

பிரமம் அலன் நான் என்கை அஞ்ஞானம். நான்
அப்பிரமமோ அலனோ என்றிடல் ஐயம். சுருதி
வரும் இனிய யுத்திகளால் நான் பரமாயினும் உன்
வயர் ஜீவ உதவமுண்டு என்குதல் விபரீதந்தான்
தரு முறையும் அஞ்ஞானாதிகட்கு முரணாகும்
சிரவணமொடு மனன நிதித்தியாசனங்கள் அன்றே
-வேதாந்த சூடாமணி

[நாலாவது வரி சரியா பிரிச்சு இருக்கேனான்னு தெரியலை. உன் வயர்ஜீவ உதவமுண்டென்குதல் - அர்த்தம் கொஞ்சம் விசாரிக்கணும். நேரமில்லை :-( ]

92.
அத்தடைகளை கெடுக்கும் கேட்டல் முதலானவற்றின் தன்மை:

தத்துவ வநுபோகந் தான் சாதித்தல் கேட்ட லென்பார்
ஒத்துள பொருளூ கத்தாலுசாவல்சிந் தித்த லென்பார்
சித்தமே காந்த மான தெரிசனந் தெளித லென்பார்
நித்தமிப்படிச்செய்தக்கா னிர்வாணம் பெறுவாய் நீயே

தத்துவ அநு போகந்தான் (தன் அந்தக்கரணத்தில் உள்ள நான் பிரமம் என்ற ஞானம்தான்) சாதித்தல் (வேதாந்த சாஸ்திரங்களை அடிக்கடி சிரத்தையுடன் அப்பியாசம் செய்தல்) கேட்டல் என்பார். ஒத்துள பொருள் (கேட்டலால் மனதுக்கு சம்மதமான அர்த்தத்தை) ஊகத்தால் உசாவல் (விசாரித்தல்) சிந்தித்தல் என்பார். சித்தம் ஏகாந்தமான தெரிசனம் (சித்தம் பிரமாகாரமாக இருத்தலே) தெளிதல் என்பார். நித்தம் (தினசரி) இப்படி செய்தக்கால் (செய்வாயானால்) நிர்வாணம் (பர மோட்சத்தை) பெறுவாய் நீயே.
--
குரு முகமாக ஆறு லிங்கத்தாலும் கூடஸ்த பிரம ஐக்கிய ஞானத்தை சொல்கிற வேதாந்த சாஸ்திரத்தை அடிக்கடி அவதி வரை அப்பியாசம் செய்தலே விசார ரூபமான சிரவணம்.
சிரவணத்தால் மனதுக்கு சம்மதமான அர்த்தத்தை சூட்சும புத்தியால் சாக்கிரதை முதலான அவத்தைகளும் சடமாயும் பலவாயும் ஒன்றினில் ஒன்று தோன்றி அழிகிறது எனவும் அவற்றை அறிகின்ற ஆதமா சச்சிதானந்தமாய், ஏகமாய், பூரணமாய், நித்தியமாய் உள்ளது எனவும் இது முதலாக நானா பிரகாரமான சையுத்தியினால் விசாரிப்பது மனனம்.
சுத்த சத்துவ விருத்தியால் அகண்ட பரிபூரண சச்சிதானந்த பிரமமே நான், நானே அந்த பிரமம் என விச்சின்னமில்லாது எப்போதும் த்யானித்து வாகியாந்தரத்தில் சப்தம் முதலான விடயம் தோற்றாது த்யானமும், த்யானம் செய்பவனும் இறந்து; பாலில் கலந்த நீர் போல அவ் வஸ்துவில் அவ் விருத்தி அடங்கி அவ்வாகாரமாக இருத்தலே நிதித்தியாசனம். (தெளிதல்)Post a Comment