Pages

Monday, April 6, 2009

எல்லாம் அறிந்த தன்னை எதால் அறிவது?



குரு சொல்கிறார். ¨எல்லாத்தையும் பார்க்கிற நான் என்னை எதால பார்ப்பேன்? அப்படின்னு கேட்காதேப்பா! சடமா இருக்கிற வேற வஸ்துவைதான் நீ விளக்கை வெச்சு பாக்கணும். விளக்கை பாக்க வேற வெளிச்சம் வேணுமா என்ன? அதை அப்படியே பாக்கலாமே! தன்னைத்தானே பார்கிறதுல பிரச்சினை இல்லை. பத்தாவது ஆசாமி எதை வெச்சு தன்னைப்பாத்தான்? தன்னாலேயேதானே!

73.
எல்லாம் அறிந்த தன்னை எதால் அறிவது?

எல்லாங்கண்டறியுமென்னை யேதுகொண்டறிவேனென்று
சொல்லாதே சுயமாஞ்சோதிச் சுடருக்கு சுடர்வே றுண்டோ
பல்லார்முன் றசமன்றன்னைப் பார்ப்பதுந் தனைகொண்டேதான்
அல்லாமற் பதினொன்றானு மவனிடத்துண்டோ பாராய்

[சூன்யம் முதலாக] எல்லாம் [சாட்சியாக] கண்டறியும் என்னை ஏது (எதை) கொண்டு அறிவேன் என்று சொல்லாதே. சுயமாம் சோதி சுடருக்கு சுடர் வேறுண்டோ? பல்லார் (பலர் =9 பேருக்கு) முன் தசமன் (பத்தாமவன்) தன்னைப் பார்ப்பதும் தனை கொண்டேதான். அல்லாமல் (அன்னியமாக) பதினொன்றானும் (பதினொன்றாவது நபரும்) அவனிடத்து (பத்தாமவனிடத்து) உண்டோ பாராய்.

தாத்பர்யம்: சடமான அனைத்தையும் அறிய வேறு அறிவு தேவையானாலும் சித் ரூபமான தன்னை அறிய ஒரு சித் தேவையில்லை. தன்னைத் தானே அறிய வேண்டும்.

ஞான சொரூபியா இருக்கிற நீ எதால பார்க்கன்னா கேட்கிறது? அதுக்கு இன்னொரு ஞானம் வேணும்னா அந்த ஞானத்தை எதால பாக்கிறது? அதுக்கு இன்னொரு ஞானம் வேணும்னு இப்படியே முடிவில்லாம போய்கிட்டே இருக்கும். நீ வேற எதாலேயும் அறியப்படுகிறவன் இல்லை.

எரிகிற விளக்கை பார்க்க இன்னுமொரு விளக்கு தேவையில்லை என்கிறது போல ஆன்மா ஸ்வயம் ஜோதியானதால அதை பாக்க இன்னொரு சக்தி தேவையில்லை.

74.
அறிவுக்கு மறிவு செய்யு மறிவுவே றுண்டென்றெண்ணும்
அறிவற்ற குதர்க்க மூடர்க் கனவஸ்தை பலமாய்த் தீரும்
அறிபடும் பொருணீ யல்லை யறிபடாப் பொருணீ யல்லை
அறிபொரு ளாகு முன்னை யநுபவித் தறிவாய் நீயே

அறிவுக்கும் அறிவு செய்யும் அறிவு வேறுண்டு என்று எண்ணும் அறிவற்ற குதர்க்க மூடர்க்கு (ஆத்மா சுயம் பிரகாசமுடையது எனும் அறிவில்லாத மூடர்களுக்கு) அனவஸ்தை (வரையரை அற்ற தன்மையே) பலமாய்த் தீரும். (நிலைக்கும்). அறிபடும் பொருள் நீ அல்லை; அறிபடாப் பொருள் நீ அல்லை. அறிபொருளாகும் உன்னை அநுபவித்து அறிவாய் நீயே.



2 comments:

Geetha Sambasivam said...

//எரிகிற விளக்கை பார்க்க இன்னுமொரு விளக்கு தேவையில்லை என்கிறது போல ஆன்மா ஸ்வயம் ஜோதியானதால அதை பாக்க இன்னொரு சக்தி தேவையில்லை.//

இப்போப் பரவாயில்லை, என்னனு புரிய ஆரம்பிச்சிருக்கு. :)))))))))) விளக்கு உதாரணம் நல்லா இருக்கு.

திவாண்ணா said...

ஆஹா! இனிமே உங்களுக்கு ப்லெய்ன் செய்லிங்க்தான் பிரச்சினையே இராது!