Pages

Monday, April 20, 2009

கைம்மாறு


ம்ம்ம்....
என்ன கைம்மாறு செய்வேன்னு யாரானா கேட்க மாட்டங்களா? பதிலுக்கு ஒரு சின்ன 40 பக்க நோட்டிலே லிஸ்ட் போட்டு கொடுத்துடலாம்ன்னு நினைச்சு கொண்டு நிறைய பேர் நடமாடுற தேர்தல் காலம் இது!
ஆனா இவரைப்பாருங்க. ¨தடைகள் ஒண்ணும் இல்லாம ஞான நிட்டையிலேயே இருப்பா அதுவே போதும்¨ என்கிறார். பின்னே எல்லாமே தானாக தெரிகிறவங்களுக்கு வேற என்ன வேணும்? தானில்லாம ஒண்ணும் தெரிஞ்சாதானே கேட்க?

87.
குருவின் மறு மொழி:
சிட்டனிவ்வாறு கூறத் தேசிகர் மகிழ்ந்து நோக்கிக்
கிட்டவா வென விருத்திக் கிருபையோ டருளிச் செய்வார்
துட்டமாந்தடைகண்மூன்றுந் தொடராமற்சொரூபஞான
நிட்டனா யிருக்கினீதே நீசெய்யு முதவியாமே

சிட்டன் இவ்வாறு கூறத் தேசிகர் மகிழ்ந்து நோக்கி, கிட்ட வா என இருத்தி, கிருபையோடு அருளிச் செய்வார். துட்டமாம் (தீமையாம்) தடைகள் மூன்றும் (அபரோட்ச ஞானத்தையும் பேதிக்க வலிவுள்ள பிரதி பந்தங்கள் மூன்றும்) தொடராமல் (வந்து பொருந்தாமல்) சொரூப ஞான நிட்டனாய் இருக்கில் ஈதே நீ செய்யும் உதவியாமே.

தாத்பர்யம்: சமாதி அநுபவம் கிட்டிய சீடனை நோக்கி தான் என்ற அநுபவமான சுக போதத்தை தவிர அவன் வேறு ஏதும் கருதாமல் இருக்க “உன் அநுபவம் தடையில்லாது விளங்குமாயின் அதுவே கைம்மாறு” எனல்.

--பிரதிபந்தங்கள் எவை? பின்னால் வரும்.

சீடனுக்கு இப்ப கொஞ்சம் சந்தேகம் வருது. அட? இப்பதானே நான் மட்டுமே இருக்கேன்னு அனுபவிச்சோம்? அந்த அனுபவம் திருப்பி வராம போகுமா என்ன! (இங்கே ஞானம் நீங்குமோன்னு விசாரம் செய்கிறதுல அர்த்தம் வரலை, இல்லையா? ஞானம் நீங்கினதால்தானே இப்ப வெளிவந்து குருன்னு ஒத்தரை பாக்கிறதும் பேசுகிரதும்? அவனோட வாசனைகள்தான் வெளியே கொண்டு வந்தது!)

இப்ப குரு எதிரே இருக்கார். அவரோட உபதேசத்தால, உதவியால பிரம்ம ஞானம் வந்தது. இப்படி இதை சுவை காட்டறதுதான் அவரோட முக்கிய வழிமுறை. இதே போல குரு கிருபையால வேத சாஸ்திர விசாரத்தாலும் வர இயலும். ஆனா அது ஸ்திரப்படணும்னா இன்னும் ஏதோ நடக்கணும். முக்கியமா தடைகள் வரக்கூடாது. அப்படி தடைகள் கூட வருமா? என்ன அதெல்லாம்?

88.
அத்வைத சொரூபத்தை அறிந்த ஞானம் பிரதி பந்தத்தால் நீங்குமோ?

நீநானென் றிரண்டிலாம னிறைந்தபூ ரணமா யெங்கும்
நானாகத் தெளிந்த ஞான நழுவுமோ குருவே யென்றான்
தானாகும் பிரம ரூபஞ் சற்குரு நூலாற் றோன்றும்
ஆனாலுந் தடைக ளுண்டே லநுபவ முறைத்திடாதே

நீ [பிரமம்] நான் [கூடஸ்தன்] என்று இரண்டிலாமல் நிறைந்த பூரணமாய் எங்கும் நானாகத் தெளிந்த ஞானம் நழுவுமோ குருவே? என்றான். தானாகும் பிரம ரூபம் சற்குரு[வின் உபதேசத்தாலும்] நூலால் (வேத சாஸ்திர விசாரத்தாலும்) தோன்றும். ஆனாலும் (அப்படி பிரம அநுபவம் உண்டானாலும்) தடைகள் உண்டேல் (இருக்குமானால்) அநுபவம் உறைத்திடாதே (ஸ்திரப்படாது).




5 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

//“உன் அநுபவம் தடையில்லாது விளங்குமாயின் அதுவே கைம்மாறு” எனல்.//

ஒரு உத்தம குரு எப்படியிருப்பார்னு கொஞ்சம் புரியுது:-)

Geetha Sambasivam said...

இப்படி எல்லாம் குரு கிடைச்சால், நல்லா இருக்கும், நம்ம அதிர்ஷ்டம் எப்படியோ!

திவாண்ணா said...

@ கிருஷ்ணமூர்த்தி, கீதா அக்கா

:-))

எல்லா குருவும் நல்லவரே இவரைப்போல. இல்லையானால் அவர் குருவா இருக்க மாட்டார். வேற பெயர்கள் உண்டு ஆசிரியர், வழிகாட்டி...

கிருஷ்ண மூர்த்தி S said...

கொஞ்சம் அப்படி இப்படின்னு அலைஞ்சு திரிஞ்சு, ஓய்ஞ்சிருந்த நேரம். ஒரு இடத்துக்கு நண்பர் அழைச்சிட்டுப் போனார். இவர் தான் என் குரு, எளிய முறை குண்டலினி யோகம்லாம் சொல்லித் தருவார், மனத்தை எப்படி வளமா வச்சுக்கிறதுன்னு சொல்லித்தருவார்னுட்டு.

அவர் இது தான் பஞ்சுமிட்டாய், கலர் கலரா இருக்கும், சாப்பிட்டா தித்திப்பா இருக்கும்னு சொன்னாரே தவிர பஞ்சு மிட்டாயைக் கையிலேயே கொடுக்கலை. கண்ணிலே காட்டினதோட சரி. சிரிச்சிட்டே வெளியே வந்தாச்சு.

அப்புறம் வேறு வேறு அனுபவங்கள். இதெல்லாம், எதுக்குச் சொல்ல வந்தேன்னா,அவங்க அவங்க பக்குவத்துக்குத் தகுந்தாப்படி, ஒரு துணை, வழிகாட்டி கிடைச்சு கிட்டே இருக்கும்.

ஆனாலும், "ஸ்வரூப நிரூபேண ஹேதவே ஆத்மா குரவே நம: "அப்படின்னு சொல்றாங்களே, அப்படிநம்மையே நமக்குக் காட்டிக் கொடுக்கிற ஒருத்தர் வந்து சேர்கிற வரைக்கும், அங்கும் இங்கும் தாவிக் குதிச்சிட்டிருக்க வேண்டியது தான்:-)
:-) போடச் சொல்லிக் கொடுத்த குரு வாழ்க:-)

திவாண்ணா said...

//அவங்க அவங்க பக்குவத்துக்குத் தகுந்தாப்படி, ஒரு துணை, வழிகாட்டி கிடைச்சு கிட்டே இருக்கும்.
..... அப்படி நம்மையே நமக்குக் காட்டிக் கொடுக்கிற ஒருத்தர் வந்து சேர்கிற வரைக்கும், அங்கும் இங்கும் தாவிக் குதிச்சிட்டிருக்க வேண்டியது தான்:-)//

ரொம்பவே உண்மை!
ஒத்தருக்கு ஒத்தர் குரு ஆகிட்டதாலே அவரே இன்னொருத்தருக்கும் குரு ஆகிட முடியாது; வேற ஒத்தர் இருப்பார்.அவர் வரும் வரை கூத்துதான்!

//:-) போடச் சொல்லிக் கொடுத்த குரு வாழ்க:-)//

:-)))))))))
நிறையவே போடுங்க. அது எப்பவுமே நல்லது! எல்லாருக்கும்!