Pages

Friday, April 24, 2009

எவ்வளோ நாள்தான் இப்படி சிரவணம் மனனம்ன்னு?...



இப்ப சீடனுக்கு ஒரு பலத்த சந்தேகம்! எவ்வளவு நாள் சாஸ்திரம் படிச்சு, உபதேசம் வாங்கி, ஞானம் ஒரு வழியா அடைஞ்சாலும் திருப்பி திருப்பி வெளியே வருவோம்னா எவ்வளோ நாள்தான் இப்படி சிரவணம் மனனம்ன்னு செஞ்சுகிட்டே இருக்கிறது? சந்தேகம்ன்னு வந்துகிட்டேதான் இருக்குமோ? இதுக்கு ஒரு முடிவு உண்டா இல்லையா?

குரு சொல்கிறார்: இல்லைப்பா! எப்பவுமே செஞ்சு கொண்டு இருக்கணும்ன்னு ஒண்ணும் இல்லை. எவ்வளோ நாளுக்கு பார்க்கிறவன் பார்க்கப்படுவதுன்னு ஒரு வித்தியாசம் உனக்கு தெரிகிறதோ அவ்வளவு நாள் செய்ய வேணும். அப்புறம் தேவை இல்லை.

அந்தக்கரணம் என்கிற மனசு இருக்கிற வரைதானே சந்தேகம்? அது போயாச்சுன்னா சந்தேகமும் இல்லை; கலக்கமும் இல்லை; விபரீதமும் இல்லை. மனம்ன்னு ஒண்ணு இருந்தாதானே வேறு ஒரு பொருள்ன்னு ஒண்ணை பாக்க முடியும். அது ஒழிஞ்சா அதுக்கு அப்புறமா ஒரு அப்பியாசமும் தேவை இல்லை. (அந்த அப்பியாசம் செய்கிற கருவியும் இல்லாம போச்சே!)

முன்னே ஆரம்ப பதிவுகள்லே செய்த கலாட்டா இப்ப வருது. ஆனா இப்ப நீங்க இதை பாத்து கலங்க மாட்டீங்க!
பார்க்கிறவன், பார்க்கப்படுவது, பார்க்கிறது (செயல்). இது போல..
அறிகிறவன், அறியப்படுவது, அறிவு.
ஞாதுரு, ஞானம், ஞேயம் ன்னும் சொல்லுவாங்க.
இது ஒரு ட்ரினிடி.
ஒரு விஷயம் அறியப்பட இது மூணும் வேணும். பார்க்கிறவன் வேணும். பார்க்க ஒரு பொருள் வேணும். இரண்டையும் இணைக்கிறா பார்த்தல் என்கிற ப்ராஸஸ் வேணும்.
இதுதான் த்ரிபுடி!
நான் என்கிறது தற்போதம். பிரம்மமா இருக்கிறேன் என்கிறது ஒரு நினைப்பு- வாசனை.
நான் அறிகிறேன் என்கிற உணர்வு இருக்கும் வரை எல்லாம் அன்னியமா இருக்கு. இந்த நான் போயாச்சுன்னா அறிகிற ஆள் இல்லாமல் ப்ராஸஸ் போயிடும். அறிவு மட்டுமே நிக்கும்.
இது, இதான் முடிவான நிலை!
அப்படி முடித்தவர் சீவன் முத்தராக இருந்து பின் விதேக முத்தராக என்றும் இருப்பாங்க!

கேட்டலுடன் சிந்தித்தல் கேடிலா மெய்த்தெளிவால்
வாட்டமறா வுற்பவநோய் மாறுமோ - நாட்டமுற்று
மெய்யான நிட்டையினை மேவினர்கட்கு அன்றோதான்
பொய்யா பிறப்பிறப்புப் போம்
-தாயுமானவர் உடல் பொய்யுறவு-8

தன்னை யிழந்திடத்தே தானே சுகவடிவாய்
இன்னபடி என்றுணரா வெங்கோனுட்- பின்னமற
நின்றநிலை தானுந் தெரியாதே நின்றவர்கட்கு
அன்றோ பிறப்பறுக்கலாம்.
-சுகபோக சாரம்

எல்லாம் சிவமேயென் றெண்ணினு நின்போத
மல்லாலஃ துண்மையன் றுந்தீபற
ஆங்கது நீங்கிடென்றுந்தீ பற
(எல்லாம் சிவமே என்று எண்ணினும் நின்போதம்
அல்லால் அஃது உண்மை என்று உந்தீ பற
ஆங்கு அது நீங்கிடு என்று உந்தீ பற)
-அவிரோத உந்தியார்

93.
இந்த கேட்டல் முதலான அப்பியாசம் எதுவரை? இப்படி செய்து முடித்த ஞானி அடையும் முத்தி யாது?

எத்தனை நாண் ஞாதாவு ஞானமு மிருக்கு முன்பால்
அத்தனை நாளும் வேண்டு மப்பாலோர் செயலும் வேண்டா
நித்தமும் வெளிபோற்பற்றா ஞேயமாத் திரமாய்ச் சீவன்
முத்தரா னவர்வி தேக முத்திபெற் றிருப்பா ரென்றும்.

எத்தனை நாள் ஞாதாவும் (அறிபவனும்) [என்ற விருத்தி] ஞானமும் உன்பால் இருக்கும், அத்தனை நாளும் [அப்பியாசம்] வேண்டும். அப்பால் ஓர் செயலும் வேண்டா. நித்தமும் (தினமும்) வெளி (ஆகாயம்) போல் பற்றா ஞேய மாத்திரமாய் (பந்தமிலாத ஞானமாய்) சீவன் முத்தரானவர் (சீவன் முத்தியடைந்தவர்கள்) [பிராரர்த்த உடல் வீழ்ந்தபின்] என்றும் (எல்லாக்காலங்களிலும்) விதேக முத்தி பெற்று இருப்பார்.

தாத்பர்யம்: மித்தை முதலான பார்வையை சத்தியமாக இது என சுட்டி அறியும் உணர்வும் அதை அபிமானிக்கிற சீவனும் உள்ள வரை கேட்டல் முதலான அப்பியாசங்களை செய்ய வேண்டும். அப்படி முடித்தவர் சீவன் முத்தராக இருந்து பின் விதேக முத்தராக என்றும் இருப்பார்கள்.
--
சீவன் முத்தர்: பிரபஞ்ச விவகாரம் செய்யும் போதும் நிரவயமாய் சூட்சுமமாய் வியாபகமாய் இருக்கின்ற சின்மாத்திரமே தான் என இருப்பவர்



2 comments:

Geetha Sambasivam said...

//அந்தக்கரணம் என்கிற மனசு இருக்கிற வரைதானே சந்தேகம்? அது போயாச்சுன்னா சந்தேகமும் இல்லை; கலக்கமும் இல்லை; விபரீதமும் இல்லை. மனம்ன்னு ஒண்ணு இருந்தாதானே வேறு ஒரு பொருள்ன்னு ஒண்ணை பாக்க முடியும்.//

இதை நாமே அறியணும் இல்லையா? அது புரியற வரைக்கும் கஷ்டம் தான்!

திவாண்ணா said...

//இதை நாமே அறியணும் இல்லையா? அது புரியற வரைக்கும் கஷ்டம் தான்!//

ஆமாம் அது ரொம்ப தூரத்திலேதான் இருக்கு.