Pages

Monday, April 27, 2009

சீவன் முத்தர்சீவன் முத்தர்: பிரபஞ்ச விவகாரம் செய்யும் போதும் நிரவயமாய் சூட்சுமமாய் வியாபகமாய் இருக்கின்ற சின்மாத்திரமே தான் என இருப்பவர்.

முன்னே சொன்னாங்க இல்லையா, எது வரைக்கும் இப்படி சாதனை வேணும்ன்னு? அது முடிஞ்சா சாதகர் கதி என்ன? உடனே இந்த உலகை விட்டு போயிடுவாங்களா?
இல்லை அப்படி இல்லை. ஏன் என்கிறதுக்கு விளக்கம் அப்புறமா பாக்கலாம்.

சாதகர் சீவன் முக்தரா இருப்பார். அதாவது இந்த உலக காரியங்கள் எல்லாம் செய்து கொண்டே அதே சமயம் பிரம்மநிலையிலும் இருப்பார். ஒரு சினிமா பார்க்கிற ஆசாமி சினிமா பார்க்கிறோம்ன்னு தெரிஞ்சுகொண்டே பார்க்கிற மாதிரி. ஒரு நடிகர் நாடகம்தான் நடிக்கிறோம்ன்னு தெரிஞ்சு கொண்டே நாடகமாடுகிற மாதிரி இவங்களும் அவங்களோட பங்கு இந்த உலகத்தில என்னவோ அதை செய்துகொண்டே இருப்பாங்க.

இந்த சீவன் முத்தர்களுக்குள்ளேயே நாலு வகை இருக்கு. அவங்களுக்கு பிரம வித்து; பிரம வரன்; பிரம வரியான்; பிரம வரிட்டன் ன்னு பெயர்.
அட பிரம்ம நிலையிலேயே வித்தியாசமா?! ஏன் அப்படின்னா பிரம்மஞானத்திலே வித்தியாசம் இல்லை. அவங்க எப்படி நடந்துக்கிறாங்க என்பதை பொருத்து வித்தியாசம் இருக்கு. சொல்லுங்க கேக்கலாம்ன்னா...

94.
சீவன் முத்தர் எத்தனை விதம்?
ஞானமார் சீவன் முத்தர் நால்வகை யாவர் கேளாய்
வானிகர் பிரம வித்து வரன்வரி யான்வ ரிட்டன்
ஆனவர் நாம மாகு மவர்களிற் பிரம வித்தின்
தானமு மற்றை மூவர் தாரதம்மியமுஞ் சொல்வேன்

ஞானமார் (பரி பூரண ஞானம் உள்ள) சீவன் முத்தர் நால்வகையாவர் கேளாய். வான் நிகர் (ஆகாசத்துக்கு ஒப்பான) பிரம வித்து; வரன்; வரியான்; வரிட்டன். ஆனவர் நாமம் ஆகும். அவர்களில் பிரம வித்தின் தானமும் (ஸ்திதியும்) மற்றை மூவர் தாரதம்மியமுஞ் சொல்வேன்.
--
இவர்களில் ஞானத்தில் வித்தியாசம் இல்லை, ஆனால் இவர்கள் நடத்தையில் வேறுபாடு உள்ளது.

முதலிலே பிரம்ம வித்து என்ன செய்வார்ன்னு பார்க்கலாம்.

அவரை ப்ரம்ம வித்துன்னு கண்டு பிடிக்கிறதே கஷ்டமா இருக்கும்!

ரொம்ப சாதாரணமான ஆசாமி போல அவர் பாட்டுக்கு மத்தவங்க போலவே இருப்பார். இந்த ஆசைகளையும் கோபங்களையும் உண்டாக்குகிற உலகத்திலேயே இருந்துகொண்டு அவற்றால பாதிக்கப்படாம இருப்பார். ஞானம் வரு முன்னே என்ன வேலை பாத்தாரோ அதையே அவர் பாட்டுக்கு பாத்துகொண்டு இருப்பார். அவரோட குல ஆசாரங்களை நேர்த்தியா கடைபிடிப்பார். விருந்து கிடைக்கிறதா ஜம்ன்னு சாப்பிடுவார். ஒண்ணுமே சாப்பிட கிடக்கலையா, அதுவும் சரிதான்...... அவரோட பிராரத்த கர்மாவால வருகிறது என்னவோ அதை அவர் பாட்டுக்கு அனுபவிப்பார்! என்ன வந்தாலும் போனாலும் ப்ரம்ம நிலையிலேயே உள்ளுக்குள்ள இருந்து கொண்டு இருப்பார்.


95.
பிரம வித்தின் இயல்பு:

தீரராய்ப் பிரம வித்தாய் தெளிந்தவர் தெளியு முன்னம்
வாரமாயிருந்த தங்கள் வருணமாச் சிரமஞ் சொன்ன
பாரகா ரியமானாலும் பலர்க்குப காரமாக
நேரதாச் செய்வார் தீர்ந்த நிலைவிடார் சீவன் முத்தர்.

தீரராய்ப் பிரம வித்தாய் தெளிந்தவர், தெளியும் முன்னம் வாரமாய் (உரிமையாக) இருந்த தங்கள் வருண ஆச்சிரமம் சொன்ன பார (துன்பத்தை கொடுக்கும் பெரிய) காரியமானாலும் பலர்க்கு உபகாரமாக நேரதா (நேர்த்தியாக மந்திர லோபம், கிரியா லோபம், தன லோபம் ஆகியன இல்லாது விதிப்படி) செய்வார். (அப்போதும்) தீர்ந்த நிலை (தான் பிரமம் என்ற முடிந்த நிச்சயம்) விடார் (நீங்காது இருப்பார்) சீவன் முத்தர்.
--
தீரர்: ஆற்றில் எதிர்த்து நீந்துவது போல காமாதி உண்டாக்கும் விவகாரத்தில் இருந்து கொண்டே மைத்ரி (சகோதரத்துவம்) முதலானதை சம்பாதிக்கும் வல்லமை உடையவராய் இருத்தல்; ஆற்று ஜலத்தை அடைத்து பயிர் செய்தல் போல் ஈஸ்வரனால் வெளி முகத்துக்கு சிருஷ்டிக்கப்பட்ட இந்திரியங்களை தன் வசப்படுத்தி ஆத்ம தரிசனம் செய்து ஆநந்தம் அனுபவிக்கும் வல்லவர்.

தெளிந்தவர்: மண் சேர்ந்து கலங்கிய ஜலம் தேற்றாம் கொட்டையால் தெளிந்தது போல தாமஸ இராஜஸ விருத்திகளால் தோன்றிய சீவேஸ்வர ஜகத்தை சத்துவ விருத்தியால் சிவாகாரமாய் காணல்.

தெளியு முன்னம்...செய்வார்: பிரம சொரூபமான தமக்கு கருமஞ் செய்ய தேவையில்லை ஆயினும் செய்தால் துன்பம் வரக்கூடும் எனினும், கருமம் செய்யாத அஞ்ஞானிகள் தம்மைப்பார்த்து கருமம் செய்து பரம்பரையாக முத்தி அடையும் பொருட்டு தங்கள் வர்ணம் முதலானவற்றுக்கு உரிய கர்மத்தை மந்திர லோபம் கிரியா லோபம் தனலோபம் இன்றி செய்வர்.

Post a Comment