Pages

Thursday, April 2, 2009

சீடன் பாக்கிறது இருட்டைதான்!



சீடனும் ஆசாரியர் சொன்னபடி யோசிச்சு ஒவ்வொண்ணா ஒவ்வொரு உறையும் விலக்குகிறான். (நமக்கு இதுக்கு எல்லாம் எவ்வளோ ஜன்மா ஆகுமோ தெரியாது. இருந்தாலும் இறைவன் விளையாட்டு யாருக்கு தெரியும்? பட்டுன்னு யாருக்கான நடந்தாலும் நடக்கலாம்! யார் கண்டாங்க!)

இப்படி விலக்கிய சீடன் பாக்கிறது இருட்டைதான்!
என்னடா இது! குரு எங்கேயான நம்பளை வஞ்சிப்பாரா? மாட்டாரேன்னு திட சிரத்தை இருக்கு சீடன்கிட்டே! அதனால ¨வஞ்சனை பண்ணாத குருவே, எனக்கு இப்ப தெரியறது வெறும் இருட்டுதான். இதையா நான் ன்னு அனுபவிக்கிறது?¨ என்கிறான்.

70.
ஆசாரியர் உபதேசித்தப்படி அநுஷ்டித்து அதற்கு பின் சீடன் வினாதலைக்கூறல்:

பஞ்ச கோசமும் விட்டப்பாற் பார்க்கின்ற பொழுது பாழே
விஞ்சியத துவல்லாமல் வேறொன்றும் தெரியக் காணேன்
அஞ்சன விருளையோ நானகமென வநுபவிப்பேன்
வஞ்சமில் குருவேயென்ற மகன் மதிதெளியச் சொல்வார்.

பஞ்ச கோசமும் விட்டு அப்பாற் பார்க்கின்ற பொழுது பாழே (சூன்யமே) விஞ்சியது. (மீதியாக இருந்தது). அது அல்லாமல் வேறொன்றும் தெரியக் காணேன். அஞ்சன (மை போல கருத்த) இருளையோ நான் அகமென (நானென) அநுபவிப்பேன்? வஞ்சமில்[லாத] குருவே என்ற மகன் மதி தெளியச் சொல்வார்.

குரு சொல்கிறார். ¨குழந்தாய்! முன்ன உனக்கு கதை சொன்னேனே நினைவு இருக்கா? பத்து பேர் ஆத்தை கடந்தாங்கன்னு? தன்னையே எண்ணிப்பாக்காத அந்த ஆசாமி மாதிரிதான் நீ இருக்கே! பருப்பொருளா வெளியே தெரிஞ்ச எல்லாம் இப்ப இல்லைன்னு ஆகிவிட்ட பிறகு மீதி இருக்கிறது என்னன்னு பாக்கிறது யாரோ - அந்த உன்னையே பாத்துக்க¨ என்கிறார்.

71.
முன்புகறசமன் புத்திமோகத்தா லெண்ணியெண்ணி
ஒன்பது பேரைக்கண்ட வொருவனாந் தனைகாணாத
பின்பவ னிடையிற்கண்ட பெரியபாழவனோ பாராய்
அன்புள மகனேகாண்ப தடங்கலுங் காண்பானீயே

முன்புகல் தசமன் புத்தி மோகத்தால் (அஞ்ஞானத்தால்) எண்ணி எண்ணி ஒன்பது பேரைக் கண்ட ஒருவனாம் (பத்தாவதாக) தனைக் காணாத பின்பு, அவனிடையில் (அவனிடத்து) கண்ட பெரிய பாழ் அவனோ பாராய். அன்புள மகனே காண்பது அடங்கலும் (உன்னால் கண்ட ஸ்தூலமும் அவை நீங்கியபின் கண்ட சூன்யமும்) காண்பான் (காண்பவன்) நீயே.

பஞ்ச கோசங்களையும் நீக்கின பின்னாலே தெரிகிறது மனசை நீக்கின பிறகு எது தெரியுமோ அதேதான்! மனம் ஒடுங்கின பின்னாலே மனதை அன்னியமாக கண்டு ஒடுக்கிய தன்னையே பார்க்காம, அணுத்துவமாக அந்த நிலையிலேந்து எதிரிட்டு தோன்றுவதே இந்த பாழ் ஆகும்.
இங்கே மிகவும் நுண்ணிய அறிவால சாட்சியா நிக்கிற தன்னை பார்க்கணும். கொஞ்சம் மறந்து போய் முன்னாலே பார்த்தாலும் ஒன்னு எல்லாமே தெரியும் அல்லது பாழ் தெரியும். இந்த பாழ் தான் அவித்தை, காரண உடம்பு. இதை தாண்டினாதான் எமனை ஜெயிக்கலாம். இந்த அந்தகாரம்தான் எமன். கரிய நீல வண்ணமா இதை சொல்கிறாங்க. இந்த இடத்தை கடக்கணும்னா ஈஸ்வரனோட அருள் அவசியம் என்கிறாங்க. இதற்கே பக்தி வேணும் என்கிறது. ¨மாயை எனும் திரையை நீக்கி¨ ன்னு சொல்வதும் இதையே!

விரிவு அகங்காரம் ஆதி விகாரம் அற்றதன் அபாவம்
இருமையாம் இவற்றை எல்லாம் இங்கு யாது உணரும் இதை
ஒரு பொருள் உணராது அந்த உணர்வு உருவான சாட்சிப்
பொருளினை மிகவு நுண்மை புந்தியால் உணர்தி மைந்தா - விவேக சூடாமணி.



7 comments:

KABEER ANBAN said...

//பஞ்ச கோசமும் விட்டப்பாற் பார்க்கின்ற பொழுது பாழே
விஞ்சியத துவல்லாமல் வேறொன்றும் தெரியக் காணேன் //

”ஓஹோ ஓஹோ மனிதர்களே” என்று துவங்கும் திரைப்படப் பாடலில் வரும் வரிகளை நினைவூட்டுகிறது

”உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது “

நம் பெருங்காயமும் வெ(று)ங்காயம் தானே
:))

நல்ல விளக்கங்கங்களுக்கு நன்றி

கிருஷ்ண மூர்த்தி S said...

பாழ்' அல்லது 'சூன்யம்' என்பது அவித்யை!

இதை பெரியவங்க வேற மாதிரி சொன்ன மாதிரி இருக்கே!

திவாண்ணா said...

நன்றி கபீரன்பரே!

@கிருஷ்ணமூர்த்தி
//இதை பெரியவங்க வேற மாதிரி சொன்ன மாதிரி இருக்கே!//

பகிர்ந்துகொள்ளலாமே அண்ணா! ஒரு பிரச்சினையும் இல்லை. அத்வைத கிரந்தங்களிலேயே 68 க்கு மேல் இருக்கு. கொஞ்சம் பார்வை மாறுவதில் ஆச்சரியமில்லை.

Geetha Sambasivam said...

//(நமக்கு இதுக்கு எல்லாம் எவ்வளோ ஜன்மா ஆகுமோ தெரியாது. இருந்தாலும் இறைவன் விளையாட்டு யாருக்கு தெரியும்? பட்டுன்னு யாருக்கான நடந்தாலும் நடக்கலாம்! யார் கண்டாங்க!)//

ம்ம்ம் அதிர்ஷ்டம் செஞ்சவங்க, அவங்க.

கபீரன்பர் சொல்லி இருப்பது போலத் தான். ஓடுவது எங்கே சொல்லுங்கள்னு கேட்கத் தோணுது. விளக்கம் இப்போக் கொஞ்சம் புரியறாப் போல் எளிமையா கொடுப்பதற்க்கு நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது....புரிந்த மாதிரி தான் இருக்கு..ஆனா....அனுபவிப்பதெக்காலம்...என்று ஒரு அயற்சி வருவதைத் தவிர்க்க முடியல்ல...

விட்டதை எல்லம் படித்துவிட்டு வருகிறேன் திவாண்ணா.

திவாண்ணா said...

//ம்ம்ம் அதிர்ஷ்டம் செஞ்சவங்க, அவங்க.//
அப்படி luck ன்னு இல்லை அக்கா! இந்த ஒரு விஷயம் நம்மை ஜன்மம் ஜன்மமா தொடர்ந்து வருகிறது. முந்தைய ஜன்மங்களிலே விட்ட இடத்திலேந்து ஆன்மீக முன்னேற்றம் தொடரும். அதனால சிலருக்கு பட்டுன்னு ஆகிடும்! நாம் எங்கே விட்டோம்ன்னு தெரியாதில்லையா?

திவாண்ணா said...

//ஆனா....அனுபவிப்பதெக்காலம்...என்று ஒரு அயற்சி வருவதைத் தவிர்க்க முடியல்ல...//
முதல் பாராவை திருப்பி படிங்க!

// விட்டதை எல்லம் படித்துவிட்டு வருகிறேன் திவாண்ணா.//

படிங்க படிங்க! ரொம்ப அலைச்சல்ன்னு கேள்விப்பட்டேன்!