Pages

Wednesday, April 29, 2009

பிரமவித்து-2



இப்படி மகிழ்ச்சியா இருக்கிற சீவன் முக்தர் எல்லாரையும் பிரம்மமாகவே பார்க்கிறதால அரசனும் ஆண்டியும் அவருக்கு ஒண்ணுதான். குபேரன் போல செல்வம் இருக்கிற ஆசாமியும் பரம ஏழையும் ஒண்ணுதான். கல்விக்கடலா மக்கள் போற்றுகிறவங்களும் ஒண்ணும் தெரியாத அறிவிலியும் ஒண்ணுதான். கடவுளையும் அவருக்கு சமதையான ஞான ஆசிரியர்களையும் தவிர யாரையும் துதிக்க மாட்டார், போற்ற மாட்டார்.
அதே நேரம் தான் யாரோ பெரிய ஆசாமின்னோ நினைக்கவோ நடந்துக்கவோ மாட்டார்.

ஞானம் வந்த ஆசாமி ஏன் இப்படி கிடந்து உழலணும்? பிரம்மத்தோட ஐக்கியம் ஆகி அப்படியே போக வேண்டியதுதானேன்னா...
காரணம் பிராரப்த கர்மா.
நினைவிருக்கா? இதைப்பத்தி முன்னேயே பேசினோம்!
பிறக்கும் போது மூட்டை கட்டி வந்த மொத்த கர்மா சஞ்சித கர்மா. அதிலே இனி வர இருக்கிறது ஆகாமி கர்மா. ஏற்கெனெவே பலன் கொடுக்க ஆரம்பிச்சு விட்டது பிராரப்த கர்மா.
ஞானம் வந்தா இந்த ஆகாமி போயிடும். ஆனா பிராரப்த கர்மாவை அனுபவிச்சு தீரணும்.

இந்த கர்மாக்கள்தான் சீவன் முத்தரை வேலை செய்ய தூண்டுகின்றன. விளைவுகளை அனுபவிக்க வைக்கின்றன. ஞானி அஞ்ஞானத்திலேயாவது அல்லது ஆசைகள் துவேஷங்களால் தூண்டப்பட்டாவது ஒரு காரியத்தை செய்கிறதில்லை. பிராரப்தம் பலவிதமாயும் இருக்கும். அதனால நடத்தையும் பல விதமா இருக்கும். பலரும் போற்றுகிற மாதிரி பெரிய தவம் செய்கிற ஆசாமியாவும் இருக்கலாம். ஏதோ ஒரு பெட்டிக்கடை வைச்சு கொண்டு வியாபாரம் செய்யலாம். தள்ளு வண்டிலே ஐஸ் க்ரீம் வித்துகிட்டு இருக்கலாம். ஒரு ஆசாமி அரசாளலாம். ஒத்தர் பிச்சை எடுத்து கிடைக்கறதை சாப்பிடலாம்;

யாக்ஞவல்கியர்ன்னு ஒத்தர். அவர் சபைகளிலே பிரசங்கம் செய்து ஜீவிச்சார்; ஜனகன் அரசாண்டார்; சுகர், வாமதேவர் என்கிறவங்க தவம் பண்ணாங்க; தாயுமானவர், மாணிக்கவாசகர் மந்திரியா இருந்தாங்க; பட்டினத்தடிகள் வியாபாரம்; இதே பட்டினத்தடிகள் பின்னாலே வெறுங்கையிலே பிச்சை வாங்கி சாப்பிட்டார். அதே போல பத்ரகிரியார்.
இப்படி எது வேண்டுமானாலும் செய்வார்கள் சீவன்முத்தர்.

97.
பிரம வித்துக்கள் இப்படி நான்கு விதமாக இருப்பானேன்?

பேதகர் மத்தால்வந்த பிராரத்த நாநாவாகும்
ஆதலால் விவகாரங்க ளவரவர்க் காவவாகும்
மாதவஞ் செயினுஞ்செய்வார் வாணிபஞ் செயினுஞ்செய்வார்
பூதலம் புரப்பாரையம் புகுந்துண்பார் சீவன்முத்தர்.

பேத கர்மத்தால் வந்த பிராரத்தம் நாநாவாகும். (அனேக விதமாக இருக்கும்) ஆதலால் விவகாரங்கள் அவரவர்க்காக (அவரவருக்கு தக்கனவாக) ஆகும். மாதவம் (பெரிய தவம்) செயினுஞ் செய்வார், வாணிபம் செயினும் செய்வார், பூதலம் புரப்பார் (உலகளவார்), ஐயம் புகுந்துண்பார் (பிச்சை எடுத்து உண்பார்) [இப்படி எது வேண்டுமானாலும் செய்வார்கள்] சீவன்முத்தர்.

தாத்பர்யம்: பிரம வித்துக்களுக்கும் ஞானம் உதிக்குமுன் சஞ்சித கர்மத்தால் உண்டான பிராரத்த கர்மம் பல விதமாகையால் அவர்களும் பல வகையாக இருப்பர்.


No comments: