Pages

Tuesday, April 14, 2009

சுய அநுபவம்



சுருதியாலும் உத்தியினாலும் ஆத்மாவை அறிந்தாலும் அசம்பாவனை (நிகழாது என்ற நினைப்பு) நீங்காது. எனவே துணிவாக நான் பிரமம் என்பதை சுய அநுபவத்தால் அறிய வேண்டும்.

ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டு பண்ணும் ஞானமாகும் - தாயுமானவர்.

மெய்ஞ்ஞான அனுபவம் த்வைத - இரட்டை- நிலையிலேதான் துவங்குது.
தேகம் முதல் அந்தக்கரணம் வரை ஒவ்வொரு தத்துவமா ஜாக்ரத், சொப்பன, சுழுத்தி அவஸ்தைகள் ரூபமாகவோ; அன்ன மயம் முதலான உறைகள் ரூபமாகவோ;

நமக்கு முன்னாலே தோன்றுவனவாகவும், நம்மால அறியப்படுவதாகவும், ஒரு காலத்திலே இருந்து ஒரு காலத்தில் அழிகிறது என்றும், அதனால நித்தியமல்லாததா இருக்கிற இதுவெல்லாம் நாம் இல்லைன்னும் தள்ளிக்கழிக்கணும்.

அப்ப சூன்யம் மிஞ்சும். இதுவரை த்வைத பாவம் இருக்கு. இதுக்கு த்வைத விருத்தி என்றும் பெயர்.

இதுக்கு மேலே இருக்கிற கூடஸ்தன் என்கிற சாக்ஷி ரூபம். அது அணு ரூபமானது; அவ்வளவு சூக்குமமானது ன்னு சொல்கிறாங்க.
இந்த சாக்ஷி விருத்தியும் தள்ள வேண்டியதுதான்.
த்வைத விருத்திதான் அஞ்ஞானம்; பாசத்திலே பந்தப்படுத்தும். சாக்ஷியா இருக்கிறதுல அப்படி அஞ்ஞானம் இல்லையே, உண்மைதானே; ஏன் ஒழிக்கணும்ன்னா...
சாக்ஷி என்கிறப்ப கொஞ்சமாவது அகங்காரம் இருந்தே ஆகணுமே? அப்பதானே அதை நான் இதுக்கு எல்லாம் சாக்ஷி மட்டுமேன்னு சொல்லிக்கலாம்! அதனால இதுவும் கொஞ்சம் குறைபாடு உள்ளதே. அதனால்தான் அதையும் தள்ளணும்.

இங்கே அஹம் பிரம்மாஸ்மி அல்லது சிவோஹம் பாவனை வந்தால் இதுதான் அகண்டாகார விருத்தி. அதாவது இரண்டற்ற தன்மைக்கான எண்ணத்திவலை.
[கண்ட துண்டமா வெட்டிப்போடுவேன் என்கிறாங்க. அதாவது பீஸ் பீஸ் ஆ ஆக்குவாங்களாம்! இதுதான் கண்டம் = துண்டு, வெட்டுப்பட்டது. துண்டாகாமல் ஒண்ணாவே இருக்கிறது அகண்டம். பிரம்மத்தைத்தவிர வேறு ஒண்ணுமே இல்லாததால் அது மட்டுமே அகண்டம்.]
இங்கேயும் நான் பிரம்மம், நான் சிவம் ன்னு நினைப்பு கொஞ்சம் இருந்தாலும் போகப்போக இது மறைஞ்சுடும்.
--
இதை எல்லாம் கேட்ட சீடன் குரு சொன்னபடி விசாரம் பண்ணி பஞ்ச கோசங்களையும் தான் இல்லைன்னு தள்ளறான். அப்புறம் முன்னே பார்த்த பாழையும் தள்ளறான். அது வரை காட்சியை பார்க்கிற நான் என்னையே பாக்கணும் - அப்படித்தானே குரு சொன்னார்?- அதையும் கவனிக்கபோய் அதுக்கு ஏதுவா இருந்த கொஞ்ச நஞ்ச அகங்காரமும் நழுவிப்போய் கூடஸ்தன் பிரம்மம்ன்னு ஒரு வேறுபாடும் இல்லாம போயிடுது.

குழந்தை தூங்குவதற்கு அழுகிறப்ப சமாதானம் செய்ய ஏதோ ஒரு பொருளை கையிலே கொடுக்கிறோம். அதை கெட்டியா பிடிச்சுகிட்டு இருக்கும். மெல்ல தூங்கினதும் பொருள் எப்ப கையை விட்டு போச்சு என்கிற விஷயம் அதோட கன்ட்ரோல்ல இல்லை என்பது போல இந்த கூடஸ்தன் பிரம்மம் என்கிற வேறுபாடும் போயிடுதாம். அப்புறம் அங்கே இருக்கிறது என்ன?
பூரணம்.
இதுவே அகன்ட அத்வைத சாக்ஷாத்கார அனுபவம்.
தற்போதம் ஒழிந்த பேரின்ப நிலைன்னும் சொல்லுவாங்க. மேலும் ¨கண்டவர் விண்டதில்லை¨, ¨அதீத நிலை¨ , காணாமல் காணும் காட்சி¨, ¨ தூங்காத தூக்கம் தூக்கமது தூக்கும் பராபரமே¨ ன்னு எல்லாம் சொல்லப்பட்டது.

நினைத்துணை யன்றியே யில்லைநா னற்றபின்
பினைத்துணை காணேனென்றுந்தீ பற
பெரிய மௌனமீதுந்தீ பற – சொரூப உந்தியார்.

83.
குரு உபதேசப்படி சீடன் அத்வைத சொரூபத்தை தரிசித்ததை கூறல்:

தஞ்சமாங் குருவுஞ் சொன்ன தத்துவ வழிதப் பாமல்
பஞ்சகோ சமுங்க டந்து பாழையுந் தள்ளி யுள்ளில்
கொஞ்சமா மிருப்பும் விட்டுக் கூடஸ்தன் பிரம மென்னும்
நெஞ்சமூ நழுவியொன்றாய் நின்றபூ ரணத்தைக் கண்டான்

தஞ்சமாம் (பெருந்துணையாகிய) குருவும் சொன்ன தத்துவ வழி தப்பாமல் [அன்னமய கோசம் முதலான] பஞ்ச (ஐந்து) கோசமும் கடந்து, ([பந்தமாதலால்] தானல்ல என தள்ளி) பாழையும் (அவற்றுக்கு அன்னியமாக கண்ட சூன்யமாகிய அவித்தையையும்) தள்ளி உள்ளில் (அந்தக்கரணத்தில்) கொஞ்சமாம் இருப்பும் விட்டு (இந்த த்வைதங்களை காணும் சாட்சியே நான் என்ற அற்ப சாட்சி விருத்தியான ஸ்திதியையும் [பந்தமில்லாவிடினும் புருஷார்த்த சாதனமான ஞானமாக இல்லாததால்] விட்டு) கூடஸ்தன் பிரமம் என்னும் நெஞ்சமும் நழுவி (கூடஸ்தனாகிய தானே பிரமம் என்ற அகண்டாகார விருத்தியும் நிதித்தியாசன பரிபாகத்தால் உறங்கினவன் கையில் உள்ள பொருள் போல நீங்கி) ஒன்றாய் நின்ற பூரணத்தைக் கண்டான்.


2 comments:

Geetha Sambasivam said...

//குழந்தை தூங்குவதற்கு அழுகிறப்ப சமாதானம் செய்ய ஏதோ ஒரு பொருளை கையிலே கொடுக்கிறோம். அதை கெட்டியா பிடிச்சுகிட்டு இருக்கும். மெல்ல தூங்கினதும் பொருள் எப்ப கையை விட்டு போச்சு என்கிற விஷயம் அதோட கன்ட்ரோல்ல இல்லை என்பது போல இந்த கூடஸ்தன் பிரம்மம் என்கிற வேறுபாடும் போயிடுதாம்.//

இந்த உதாரணம் சொல்லலைனாக் கொஞ்சம் கஷ்டமாய் இருந்திருக்கும். நன்றி.

திவாண்ணா said...

விடாமல் படித்துகொண்டு வருவதற்கு நன்னி!