சாந்தோக்கியத்திலே உத்தாலகர் தன் பிள்ளையான ஸ்வேத கேதுவுக்கு உலகத்தை சிருஷ்டி செய்கிற ஈசனைக்காட்டி தத் த்வமஸி என்கிறார்.
பையருக்கு புரியலை! நிறைய உபாயம், விளக்கங்கள் தரார். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
இங்கே நமக்கு வேண்டியது ஒண்ணுதான்.
ஒரு சீவனுக்கு ஈசனை காட்டி ¨அது நீயாக இருக்கிறாய்¨ ன்னா-
என்னடா இது ஈசனுக்கும் நமக்கும் எத்தனை வித்தியாசம்? ஆன்மீகத்திலே ரொம்ப முன்னேறினவங்களா சொல்கிறவங்களைக்கூட ஈசனுக்கு ஒப்பா சொல்ல முடியுமா? அவர்களே ஈசனோட சக்தியை அதிகம்ன்னு ஒப்புக்கிறாங்களே!
இப்படி சந்தேகம் வந்தா இலக்கண ஆராய்ச்சி செய்யணும். அதுதான் மகரிஷிகள் என்ன சொல்ல வந்தாங்க என்கிற சரியான அர்த்தத்தை காட்டும்.
இலட்சணா வாக்கியம் என்கிறதாலே பொருள் கொள்ளணும். அது மூணு வகை. விட்டது, விடவிலாது, விட்டு விடாது. (விடாது கருப்பு இல்லை!)
78.
கூடஸ்தனுக்கும் பிரமத்துக்கும் இலக்கணையால் ஐக்கியம் செய்ய சாஸ்திரங்களில் கூறும் 3 வித இலக்கணையை கூறுதல்:
வடநூல் வல்லவர்கள் சொல்லும் வாசகப்பொருள் சேராமல்
இடராகிற் பொருளாம் வண்ண மிலக்கணை யுரையாற் கொள்வார்
திடமான வதுவுமூன்றாச் செப்புவார் விட்டதென்றும்
விடவிலா தென்றும்விட்டு விடாதென் றும்பேராமே
வடநூல் வல்லவர்கள் சொல்லும் வாசகப்பொருள் (வாச்சியார்த்தம்) சேராமல் (பொருந்தாமல்) இடராகில் (விரோதமானால்) பொருளாம் வண்ணம் (பொருளாகும்படி) இலக்கணை உரையால் (இலட்சணா வாக்கியத்தால் [பொருள்]) கொள்வார். திடமான அதுவும் (அந்த இலட்சணையையும்) மூன்றாய் செப்புவார்; விட்டதென்றும், விடவிலாது என்றும் விட்டு விடாது என்றும் பேராமே.
எந்த சொல் தன் வாக்கிய அர்த்தத்தை (literal meaning) முழுவதும் விட்டு அதன் சம்பந்தமானதை உணர்த்துகிறதோ அது விட்ட லட்சணை.
உங்க வீடு எங்கேப்பா இருக்குன்னு கேட்டா ¨ஓ அதுவா, டாக்டர் நாயர் தெருலே இருக்கு¨ ன்னு பதில் சொல்கிறாங்கன்னு வெச்சுக்கலாம். அட! தெருவிலேயா வீடு இருக்கு? இல்லை. அதை ஒட்டித்தான் இருக்கு. இருந்தாலும் இன்ன தெருவிலே இருக்கிறதாதான் நாம எல்லாரும் சொல்லறோம். அதை யாரும் தப்பா எடுத்துக்கிறதில்லை. தெரு என்கிறது அதோட பொருளானா சாலை என்கிறதை முழுவதும் விட்டுவிட்டு அதன் வாச்சியார்த்த சம்பந்தமான தெரு ஓரத்தை குறிக்குது.
எந்த சொல் தன் வாக்கிய அர்த்தத்தை (literal meaning) விடாமல் அதன் கூட சம்பந்தமானதையும் உணர்த்துகிறதோ அது விடாத லட்சணை. “காக்கி அடிக்க கறுப்பு ஓடுது¨ ன்னா காக்கி கறுப்பு என்ற நிறங்களின் பதங்களுடன் அவற்றின் சம்பந்தமான காவல் துறையையும் வக்கீல்களையும் உணர்த்துவதாக பொருள் கொள்ள வேண்டும். அப்போது அதன் உண்மைப்பொருள் விளங்கும்.
எந்த சொல் தன் வாக்கிய அர்த்தத்தில் (literal meaning) ஒருபாகத்தை விட்டுவிட்டு ஒருபாகத்தை ஏற்கிறதோ அது விட்டு விடாத லட்சணை. கீதா அக்கா ரொம்ப நாள் கழிச்சு பரோடா போறாங்க. முன்னாலே அவங்க இருந்த பேட்டையிலே தள்ளுவண்டி வியாபாரம் செய்தவரை பாக்கிறாங்க. இப்ப பெரீஈஈஈஈய்ய கடை வெச்சுகிட்டு செயலா இருக்காரு. சாம்பு மாமாவுக்கோ அவரை அடையாளம் தெரியலை. கீதா அக்கா ¨இவனை யாருன்னு தெரியலியா? நல்லா இருக்கு! இவன்தான் அந்த க்ருஷ்ணன்¨ அப்படிங்கிறாங்க.
உண்மையில் அவரேதானா? இல்லை. அவருக்கு 20 வயது கூட ஆகிவிட்டது. முன் போல சுறுசுறுப்பாக இல்லை. ஆனால் இன்னும் புத்திசாலி ஆகிவிட்டார். பணக்காரர் ஆகிட்டார். இருந்தாலும் அவரே இவர் என்பதை ஏற்கிறோம். அதனால காலம் இடம் ஆகியவற்றை தள்ளிவிட்டு க்ருஷ்ணன் என்கிற குறிப்பிட்ட உடம்பை இந்த பதங்கள் உணர்த்தும்.
79
கங்கையில் கோஷமென்றுங் கறுப்புச்சேப் போடுதென்றும்
தங்கிய சோயந்தேவ தத்தனென்றுஞ் சொல்வார்கள்
இங்குதா ரணங்களாக்கி யிந்தமூன் றுரைகளாலே
துங்கநூல் விரோதமான சொல்லெல்லாம் பொருளாந்தானே
கங்கையில் கோஷம் (கிராமம்) [உள்ளது] என்றும், கறுப்பு தங்கிய சேப்பு ஓடுது என்றும் ஸஹ அயம் (அந்த இந்த) தேவதத்தன் என்றும் சொல்வார்கள். இங்கு (பொருள் விளங்காத இடத்தில்) [இந்த மூன்றையும்] உதாரணங்களாக்கி இந்த மூன்று உரைகளாலே (இலட்சணா வாக்கியங்களால்) துங்கநூல் (பெருமை பொருந்திய சாஸ்திரங்களில்) விரோதமான சொல் (வாக்கியங்கள்) எல்லாம் பொருளாந்தானே (தானே அர்த்தமாகும்).
எந்த பதம் தன் வாக்கிய அர்த்தத்தை (literal meaning) முழுவதும் விட்டு அதன் சம்பந்தமானதை உணர்த்துகிறதோ அது விட்ட லட்சணை. கங்கையில் கிராமம் உள்ளது என்பதன் நேரடிப்பொருள் கங்கையின் பிரவாகத்தில் கிராமம் உள்ளது என்பது. ஆனால் அது அல்ல நாம் சொல்ல நினைப்பது. அது நடக்கக்கூடியதும் இல்லை. இங்கு கங்கை என்பதன் பொருள் தன் பொருளாகிய நதி என்பதை முழுவதும் விட்டுவிட்டு அதன் வாச்சியார்த்த சம்பந்தமான நதி தீரத்தை குறிக்கிறது.
எந்த பதம் தன் வாக்கிய அர்த்தத்தை (literal meaning) விடாமல் அதன் கூட சம்பந்தமானதையும் உணர்த்துகிறதோ அது விடாத லட்சணை. “கறுப்பு தங்கிய சேப்பு ஓடுது” என்பதன் வாக்கிய அர்த்தம் (literal meaning) கறுப்பு நிறம் தங்கி இருக்க சிவப்பு நிறம் ஓடுகிறது என்பது. இது தகாது. கறுப்பு சிவப்பு என்ற நிறங்களின் பதங்களுடன் அவற்றின் சம்பந்தமான பசுவையும் குதிரையையும் உணர்த்துவதாக பொருள் கொள்ள வேண்டும். அப்போது அதன் உண்மைப்பொருள் விளங்கும்.
எந்த பதம் தன் வாக்கிய அர்த்தத்தில் (literal meaning) ஒருபாகத்தை விட்டுவிட்டு ஒருபாகத்தை ஏற்கிறதோ அது விட்டு விடாத லட்சணை. ஸஹ அயம் (அந்த இந்த) தேவதத்தன் என்பதில் முன் ஒரு முறை வேறு இடத்தில் வேறு காலத்தில் பார்த்த தேவ தத்தன் இப்போது இங்கு பார்க்கும் தேவதத்தன் என்பது பொருந்தாது. {நான்கு வருஷங்களுக்கு முன் கல்கத்தாவில் தேவத்தனை பார்த்தோம். இப்போது தேவதத்தனை சென்னையில் பார்க்கிறோம். அவரேதான் இவர் என்கிறோம். உண்மையில் அவரேதானா? இல்லை. அவருக்கு 4 வயது கூட ஆகிவிட்டது. முன் போல சுறுசுறுப்பாக இல்லை. ஆனால் இன்னும் புத்திசாலி ஆகிவிட்டார். இருந்தாலும் அவரே இவர் என்பதை ஏற்கிறோம்.} ஆகவே காலம் இடம் ஆகியவற்றை தள்ளிவிட்டு தேவதத்தன் என்னும் தேகத்தை இரண்டு பதங்களும் உணர்த்துகின்றன.
நமக்கு இங்கே முக்கியமா வேண்டியது சஹ அயம் தேவதத்தன்தான்.
அது எப்படி வாச்சியார்த்தமான வேற நாடு, காலம் எல்லாத்தையும் தாண்டி ஆனால் ஒரு பெயரை உடைய உடம்பை காட்டித்தோ அது போல...
7 comments:
//கீதா அக்கா ¨இவனை யாருன்னு தெரியலியா? நல்லா இருக்கு! இவன்தான் அந்த க்ருஷ்ணன்¨ அப்படிங்கிறாங்க.
உண்மையில் அவரேதானா? இல்லை. அவருக்கு 20 வயது கூட ஆகிவிட்டது. முன் போல சுறுசுறுப்பாக இல்லை. ஆனால் இன்னும் புத்திசாலி ஆகிவிட்டார். பணக்காரர் ஆகிட்டார். இருந்தாலும் அவரே இவர் என்பதை ஏற்கிறோம். அதனால காலம் இடம் ஆகியவற்றை தள்ளிவிட்டு க்ருஷ்ணன் என்கிற குறிப்பிட்ட உடம்பை இந்த பதங்கள் உணர்த்தும்.//
அப்பாடா, இது மட்டும் நல்லாப் புரியுது! :))))))))))
டாக்டர் நாயர் தெருவில் வீடு உதாரணமும் புரியறாப் போல் இருக்கு.
தேவதத்தன் தான் கொஞ்சம் குழப்பம். :((((((
க்ருஷ்ணன் உதாரணம் நான் எழுதினது. அதேதான் தேவதத்தன் சமாசாரம்.
;-)))))))))))))
நடைமுறை உதாரணங்கள் நன்றாக உள்ளன.
//“காக்கி அடிக்க கறுப்பு ஓடுது¨ ன்னா காக்கி கறுப்பு என்ற நிறங்களின் பதங்களுடன் அவற்றின் சம்பந்தமான காவல் துறையையும் வக்கீல்களையும் உணர்த்துவதாக பொருள் கொள்ள வேண்டும் //
அது பொருந்திய அளவுக்கு ”கறுப்புச்சேப் போடுதென்றும்...” உதாரணம் சரியாகவில்லை யென்றே தோன்றுகிறது. கறுப்பை மாடு ஆகவும் சிவப்பை கு்திரையாகவும் கொள்கிற வழக்கம் இலக்கியத்தில் உள்ளதா?
உமேஷ், கொஞ்சம் விசாரிச்சுகிட்டு இருக்கேன். அதனால் உடனடியா பதில் சொல்ல முடியலை. இது வரை அப்படி இருக்கிறதா தெரியலை.
நான் கூகிளில் கறுப்பு சிவப்பு போட்டு தேடியதில் இரண்டு உதாரணங்கள் கிடைத்தது.
1) பழுக்கக் காய்ச்சிய இரும்பு சிவப்பு,குளிர்ந்த இரும்பு கறுப்பு.
2) சனி கறுப்பு, சூரியன் சிவப்பு.
இரும்பு உதாரணம் பொருந்தி வரவில்லை. இரண்டாவதில் சிவப்பை சூரியனாகக் கொள்ளாமல் செவ்வாய் கிரகமாகக் கொண்டால் சனியும் செவ்வாயும் ஓடுகின்றன என்ற பொருள் ஏற்புடையதாக இருக்கும். செவ்வாய் சிவப்பு கிரகம்.
“கறுப்புச்சேப் போடுதென்றும் “
’சனியோ செவ்வாயோ குறிப்பிட்ட காலத்தில் அனுகூலமான நிலையில் இல்லாது கஷ்டங்கள் தருகின்ற நிலையில் சென்று கொண்டிருக்கின்றன என்பதை குறிப்பிட வந்தன’ என்பதானால் ஓரளவுக்கு பாடலின் மையக்கருத்துடன் ஒத்து வரும் என்று தோன்றுகிறது.
@கபீரன்பன், இருக்கலாம், இப்படி ஒரு கோணத்தில் யோசிக்கத் தெரியலை!
Post a Comment