Pages

Monday, August 10, 2009

மித்தையான சகம் தோன்றுதலால் மித்தையான மாயா சக்தி உள்ளது .....



96.
அருவ மாகுமா யாவிவித் தைகள்விளை யாடுமுன் றெறியாவே
உருவ மாம்பல கந்தர்ப்ப சேனையா யுதித்தபின் வெளியாகும்
பிரம சத்திக ளநந்தமா மதைக்கண்டு பிடித்திடல் கூடாதே
பரவு பூதங்கள் கண்டநு மானத்தாற் பலருக்கும் வெளியாமே

அருவமாகும் மாயாவி வித்தைகள் விளையாடு முன் (யாருக்கும்) தெரியாவே. உருவமாம் பல கந்தர்ப்ப சேனையாய் உதித்த பின் வெளியாகும். (தெரியும்) பிரம சத்திகள் அநந்தமாம் அதைக்கண்டு பிடித்திடல் கூடாதே. பரவு பூதங்கள் கண்டு அநுமானத்தால் பலருக்கும் வெளியாமே (தெரிய வரும்)

97.
மித்தையான சகம் தோன்றுதலால் மித்தையான மாயா சக்தி உள்ளது என அறிக.
காரி யங்களுஞ் சத்தியா தாரமுங் காணுமற் றதுமாயம்
பாரி னின்றமா யாவியுஞ் சேனையும் பார்ப்பவர் கண்காணும்
வீரி யந்திகழ் வித்தையா யினசத்தி வெளிப்படாதது போலே
பேரி யற்பிர மத்துக்கு முலகுக்கும் பிறிதுசத் திகளுண்டே

[ஜீவேஸ்வர ஜகங்களான சக்தியின்] காரியங்களும் (மாயா) சத்தி ஆதாரமும் (ஆன பிரமமும்) காணும்.(காணப்படும்.) (ஆனால் அச் சக்தியான) மற்றது மாயம். பாரின் (பூமியில்) நின்ற மாயாவியும் சேனையும் பார்ப்பவர் கண் காணும். [ஆனால்] வீரியந் திகழ் (பராக்கிரமான இந்திர ஜால) வித்தையாயின சத்தி வெளிப்படாது. அது போலே, பேர் இயல் (மகத்துவமுள்ள) பிரமத்துக்கும் உலகுக்கும் பிறிது சத்திகள் உண்டே.
--
இந்த மாயை தோற்றம் இல்லாதது. ஒரு இந்திர ஜாலக்காரனுடைய மணிமந்திர ரூபமான சக்திக்கு உருவமில்லை. அதனால அது தோற்றுவிக்கப்படுவது இல்லை. ஆனால் அவன் விளையாடியபின் அதன் காரியமாக மாயா நகரங்கள், மக்கள், மிருகங்கள் ஆகியன எல்லாம் தோன்றுகின்றன. இந்த மாயா தோற்றத்தைக்கண்டு "ஓஹோ! ஒரு மாய சக்தி வேலை செய்கிறது" என்று உணர்கிறோம். இது போலவே பிரம்மத்தோட எண்ணிக்கை இல்லாத சக்திகள் இருக்கு. அவற்றை யாராலும் கண்டு அறிய இயலாது. அந்த சக்திகளோட விளைவாக இருக்கிற எங்கும் பரவி நிற்கும் இந்த மாய பிரபஞ்சத்தை பார்ப்பதாலேயே நாம் ஊகத்தால் அந்த சக்திகளை உணர்ந்து கொள்கிறோம்.


2 comments:

R.DEVARAJAN said...

//பிரம சத்திக ளநந்தமா மதைக்கண்டு பிடித்திடல் கூடாதே//

ப்ரம்மம் நிஷ்க்ரியம் எனில் சக்திகள் எதற்கு ? அங்கே த்வைதம் எழுகிறதே ?

தேவ்

திவாண்ணா said...

அப்படி சக்திகளை பார்ப்பது மாயா லோகத்தில் இருக்கிற நாம்தான். பிரம்மத்தின் மானிஃபெஸ்டேஷன்கள் மாயா லோகத்தில் பலவாகவும் இருக்கிறது. எவ்வளவு இருக்கிறது என்று நம்மால் கற்பனை கூட செய்ய முடியாது. அதைத்தான் இங்கே சொல்ல வருகிறார்.