Pages

Monday, August 17, 2009

பிரமம் ஒன்றே எப்போதும் இருப்பது...



103.
மேவு மண்ணிலவ் வியத்தமே வியத்தமாம் விவகரித் திடவேண்டில்
நாவி னான்மண்ணைக் குடமென்ப ரக்குட நசிப்பது நாவாலே
பாவு நாமரூ பங்களை மறந்துமண் பார்ப்பதே பரமார்த்தம்
சீவ பேதகற் பிதங்களை மறந்துநீ சின்மய மாவாயே

மேவு மண்ணில் அவ்வியத்தமே (மறைந்திருந்த கட சக்தியே) வியத்தமாம். (குயவனின் செய்கைக்கு பின் கடமென வெளிப்படும்.) விவகரித்திட வேண்டில், நாவினால் மண்ணைக் குடமென்பர். அக் குடம் நசிப்பது (மண்ணாவது) நாவாலே. பாவும் (பாவனையான) நாம ரூபங்களை மறந்து மண் பார்ப்பதே பரமார்த்தம். [அது போல] சீவ பேத கற்பிதங்களை மறந்து நீ சின்மயமாவாயே.
--
சாதாரணமான மண்னை குயவன் எடுத்து சக்கரத்தில சுத்தி ஒரு குடம் செய்கிறான். அங்க இருப்பது மண்தான் ஆனாலும் அதற்கு ஒரு குறிப்பிட்ட உருவம் இருக்கு. அதனால அதை குடம் என்கிறோம். குயவனின் செயலுக்கு முன்னே மண்ணில் மறைந்து இருந்த சக்தியே கிரியைக்குப்பின் காரியமாக குடம் ன்னு வெளியானது. மண்ணை தவிர குடம் இல்லை. அந்த குடம் உடைந்து போனால் அதையே மீண்டும் மண் என்போம். ஆக குடம் என்பது வாய்சொல் மட்டுமே.

குடம் உண்டாகும் முன் மண் இருந்தது. உண்டான போது குடமாக தோன்றுவதும் மண்ணே. உடைந்த பின் இருப்பதும் மண்ணே. ஆக மூன்று காலத்திலும் இருப்பது மண்ணே. காரியம் ஆன குடம் என்பது நம் வாயால சொல்லப்பட்டு பின்னே அழிஞ்சு போச்சு. அதனால மண்ணே சத்தியம். குடம் என்கிறது நடுவில வந்து போன பொய்யே. நிலை இல்லாதது.

அது போல பிரமம் ஒன்றே எப்போதும் இருப்பது. இடையில் வந்து போகும் தோற்றங்களான நாம ரூப உலகம் பொய்யாகும்.

நாம ரூப நாட்டம் விடின் நமது சொரூபம் தோன்றிவிடும். -குமார தேவர்.

வெளிச்சமும் இருட்டும் முரணா இருக்கு. எங்க இருட்டு இருக்கோ அங்க வெளிச்சம் இல்லை. எங்க வெளிச்சம் இருக்கோ அங்க இருட்டு இல்லை.

அதப்போல எங்க பிரம்ம சொரூபம் தோணுதோ, அங்க நாம ரூபமா வஸ்துக்கள் தோணாது. அந்த நிலையிலேயே நின்னா நாம ரூப தோற்றங்கள் ஒழிஞ்சே போகும்.


5 comments:

Geetha Sambasivam said...

புரியுது க்ளிக்கியாச்சு, வழக்கம்போல் அப்டேட் ஆகலை! இங்கே வந்துதான் பார்த்தேன். :))))))

கிருஷ்ண மூர்த்தி S said...

/குயவனின் செயலுக்கு முன்னே மண்ணில் மறைந்து இருந்த சக்தியே கிரியைக்குப்பின் காரியமாக குடம் ன்னு வெளியானது./

அப்பக் குயவன்னு தனியா எதுக்கு?


சேஷாத்ரி சுவாமிகள் ஒருதரம் ஒரு எருமையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு நிர்விகல்ப சாமாதியில் இருந்தாராம்! அன்பர் ஒருத்தர் போய், "சுவாமி! என்ன இது எருமை கழுத்தைஎல்லாம் கட்டிக் கொண்டு...?"ன்னு கேட்டப்ப
சுவாமிகள் துணுக்குற்ற மாதிரி பதில் சொன்னாராம், "என்ன சொன்னே? எருமையா..பிரம்மம்னு சொல்லு"
இப்படிச் சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்து எங்கோ போய் விட்டாராம்.

இதெல்லாம் படிக்கும்போது, கண்ல ஜலம் வரது! கூடவே நிறையக் கேள்வியும் வருது!

குடம் மண்ணாலே ஆனது சரி, அது மண் தான்றதெல்லாம் சரி. குடமா இருப்பது ஒரு காரியத்துக்காகத் தான்.குடத்தைப் பண்ணதும் ஒரு காரணமாத்தான்!

அதைத் தான் பசு, பதி, பாசம்னு மூன்றைச் சொல்லியிருக்காங்க, சொன்னவுங்க இந்த மூணுமே அனாதின்னும் சொல்லியிருக்காங்க. அந்தப்படி பாத்தாக் குழப்பம் வரதில்லை.

நீங்க சொல்றதுல எங்கோ குழப்புதே..!

திவாண்ணா said...

மாயையான குயவனை விடுங்க சார். மண்ணை மட்டும் பாருங்க. முன்னே, பின்னே, நடுவே எப்பவும் இருக்கிறது அதுதான். நடுவில கொஞ்ச நேரம் பெயர் கிடைச்சது, உருவம் கிடைச்சது; அப்புறம் இயல்பு நிலைக்கு திரும்பிட்டது. அதனால குடம் நித்தியம் இல்லை மண்ணுதான் நித்தியம். இதான் சொல்ல வந்தது.

சினிமா பார்க்கிறோம். உண்மையிலே இருக்கிறது வெள்ளைத்திரைதான். அது மேலே மாயையான படம் காட்டுறாங்க. படம் முடிஞ்சா இருக்கிறது வெள்ளைத்திரைதான். நடுவிலே பாத்தது தற்காலிகம்தான். அப்பவும் அதுக்கு ஆதாரமா இருந்தது அதே வெள்ளைத்திரைதான்.

நிகழ்காலத்தில்... said...

கட்டுரை என்ன சொல்ல வருகிறது என சரியா புரிந்து கொள்வதானால் திவாவின் கருத்தே என் கருத்தும்

இறைக்கு உதாரணம் சொல்லும்போது இந்த அளவில்தான் சொல்லமுடியும்.

வாழ்த்துக்கள்

திவாண்ணா said...

நிகழ்காலத்தில்... வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!