Pages

Monday, August 24, 2009

குண விருத்திக்கு தகுந்தபடியே சத் சித் ஆனந்த அனுபவமும் ...




109.
தாமதமி ராசதஞ் சாத்துவித முக்குணத் தால்வரும்வி ருத்திமூன்றாம்
ஆமவைகண் மூடமுங் கோரமுஞ் சாந்தமு மபிதான மாகுமகனே
ஏமுறவி ருக்கின்ற சச்சிதா னந்தங்க ளென்றென்று மொன்றாகிலும்
நாமுரைக் கும்விருத் திப்பிரிவி னாற்சொரூப ஞானாதி பிரிவாகுமே

தாமஸம் இராசதம் சாத்துவிகம்[ஆகிய] முக்குணத்தால் வரும் விருத்தி மூன்றாம். ஆம் அவைகள் மூடமும் கோரமும் சாந்தமும் (என) அபிதானமாகும் (பெயர் பெறும்) மகனே. ஏமுறவிருக்கின்ற (இன்புறவிருக்கின்ற) சச்சிதானந்தங்கள் என்றென்றும் ஒன்றாகிலும், நாம் உரைக்கும் விருத்திப் பிரிவினால் சொரூப ஞானாதி (சித் முதலிய சதானந்த ஸ்வரூபங்கள்) பிரிவாகுமே (பேதமாகுமே)
--
சத்துவம், ராஜசம், தாமசம் என குணங்கள் மூன்று ஆகும். இந்த 3 குணங்களால் உண்டாகும் விருத்திகளும் மூன்று. அவை முறையே சாந்த, கோர, மூட விருத்திகள். இந்த வேறுபாட்டால் ஆத்ம குணங்கள் வேறு வேறாக தோன்றுகின்றன.

110.
சடமான மூடத்த ருக்கல்லு மண்களிற் சத்தொன்று மேதோன்றுமால்
விடமான காமாதி கோரத்தி லானந்தம் விளையாதுமற் றவைகளாம்
திடமான வொழிவாதி சாந்தத்தி லேசச்சி தானந்த மூன்றும் வெளியாம்
மடமான மூடங்கள் கோரங்கள் விடுசாந்த மனமாகி லானந்தமே

சடமான மூட தரு (மரம்), கல், மண்களில் சத்து ஒன்றுமே தோன்றுமால். விடமான காமாதி கோரத்தில் ஆனந்தம் விளையாது. மற்றவைகளாம் (சத் சித் ஆகிய மற்றவை தோன்றும்.) திடமான ஒழிவாதி (வைராக்யம் முதலான) சாந்தத்திலே சச்சிதானந்தம் மூன்றும் வெளியாம். மடமான (அறிவின்மையான) மூடங்கள் கோரங்கள் விடு[த்து] சாந்த மனமாகில் ஆனந்தமே.
--
ஜடமான மரம் கல், மண் ஆகியவற்றால சத் (இருப்பு) மட்டுமே வெளியாகும். அதாவது அதெல்லாம் இருக்குன்னு தெரியுமே ஒழிய அதுக்கு அறிவோ (சித்தும்) உணர்ச்சியோ (ஆனந்தமும்) வெளியாகா.
காம, குரோதம் முதலான குணங்களின் கோர விருத்தியிலும், மயக்கம் பயம் ஆகிய மூட விருத்திகளிலும் சத்தும் சித்தும் மட்டுமே வெளியாகும். ஆனந்தம் வெளியாகாது.

பொறுமை, கருணை முதலான சாந்த விருத்தியில் மூன்று குணங்களும் வெளியாகும்.

காமம், குரோதம், மோகம், பயம் ஆகிய கோர மூட விருத்திகளை விட்டு ஒழித்து வைராக்கியம் சாந்தம் பொருந்திய மனதுடன் உள்பார்வை கிட்டுமானால் ஆனந்தம் உண்டாகும்.
ஆக நம்மோட குண விருத்தி எப்படி இருக்கோ அதுக்கு தகுந்தபடியே நமக்கு சத் சித் ஆனந்த அனுபவமும் ஏற்படும்.

3 comments:

Geetha Sambasivam said...

//பொறுமை, கருணை முதலான சாந்த விருத்தியில் மூன்று குணங்களும் வெளியாகும்.//

அப்பா, கடைசியிலே புரிஞ்சாப்பல ஒரு விஷயம் கிடைச்சது. நன்றி.

திவாண்ணா said...

நன்றிக்கு நன்னி!

R.DEVARAJAN said...

தாமஸம் இராசதம் சாத்துவிகம் [ஆகிய] முக்குணத்தால் வரும் விருத்தி மூன்றாம். ஆம் அவைகள் மூடமும் கோரமும் சாந்தமும் (என) அபிதானமாகும் //

வ்ருத்திகளை சாந்தம், கோரம், மூடம் என வகுத்து ஆத்ம தத்வத்தை உள்ளபடி கூறும் பாகவதத்தின் கஜேந்த்ர ஸ்துதி -

நம: சாந்தாய கோராய மூடாய குணதர்மிணே !
நிர்விசேஷாய ஸாம்யாய நமோ ஜ்ஞாநகநாய ச !!

தேவ்