Pages

Tuesday, December 28, 2010

சித்த விருத்திகள் மஹாபூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும் பொருந்தும்:



एतेन भूतेन्द्रियेषु धर्मलक्षणावस्थापरिणामा व्याख्याताः ।।13।।

ஏதேந பூ⁴தேந்த்³ரியேஷு த⁴ர்மலக்ஷணாவஸ்தா²பரிணாமா வ்யாக்²யாதா​: || 13||

ஏதேந = மனதின் பரிணாமத்தை உபதேசித்ததாலேயே; பூ⁴தேந்த்³ரியேஷு = (ப்ருத்வீ முதலான) மஹா பூதங்களிலும், (சக்ஷு முதலான) இந்திரியங்களிலும்; த⁴ர்ம லக்ஷணாவஸ்தா² = தர்மம், லக்ஷணம் அவஸ்தை ஆகிய; பரிணாமா: = மாறுதல்கள்; வ்யாக்²யாதா​: = விவரிக்கப்படுகின்றன.

மனதின் பரிணாமத்தை உபதேசித்ததாலேயே ப்ருத்வீ முதலான மஹா பூதங்களிலும், கண் முதலான இந்திரியங்களிலும் தர்மம், லக்ஷணம் அவஸ்தை ஆகிய மாறுதல்கள் விவரிக்கப்படுகின்றன.


பரிணாமம் என்பது மாறுதல் அடைந்த நிலை. அவை தர்ம பரிணாமம், லக்ஷண பரிணாமம், அவஸ்தா பரிமாணம் என மூன்று வகையாகும்.

ஒரு வஸ்து எப்படிப்பட்டது என்பதற்கு அதன் அணுக்கள் காரணமாகும். இது தர்ம பரிணாமம். மண் கட்டியாக இருக்கிறது. அது குடமாகும் போது குடமும் மண்தான் என்றாலும் கட்டி என்ற இயல்பு போய் குடம் ரூபம் என்ற இயல்பாக ஆகிவிடுகிறது. இதே போல சித்தத்தின் வெளிநாட்டம் என்ற தர்மம் போகும்போது அகமுக நாட்டம் (நிரோதம்) என்பது தர்மம் -இயல்பு- ஆகிவிடும். இது தர்ம பரிணாமம்.

மேலும் ஒரு பரிணாமம் காலத்தை ஒட்டி மூன்றாகும். இந்த முக்காலங்களும் லக்ஷணமாகும். அனாகதம் என்பது வரவிருக்கிறது; வர்த்தமானம் என்பது நிகழ் காலம்; அதீதம் என்பது கடந்த காலம். இப்போது மண்ணாக இருப்பது எதிர்காலத்தில் குடமாகும் என்றால் மண்ணாக 'இருப்பது' வர்த்தமான பரிணாமம். இப்போது குடமாக இருப்பது எதிர்காலங்களில் உடைந்து மண்ணாகிவிடும். அது அனாகத லக்ஷணம்.

அவஸ்தை என்பது இருப்பு என்று பொருள் படும். மண் குடமாவது இன்று எனில் அது வர்த்தமான அவஸ்தை; நாளை எனில் அது அனாகத அவஸ்தை; அடுத்த கல்பத்தில் உண்டாகும் என்பது அனாகததமமான அவஸ்தை. இது அவஸ்தா பரிமாணம்.

Friday, December 24, 2010

விக்ஷேப அழிவும் ஏக்காக்ரதையும் ஒரே நேரத்தில்:



 शान्तोदितौ तुल्यप्रत्ययौ चित्तस्यैकाग्रतापरिणामः ।।12।।

ஶாந்தோதி³தௌ துல்யப்ரத்யயௌ சித்தஸ்யைகாக்³ரதாபரிணாம​: || 12||

சித்தஸ்ய = சித்தத்தின்; ஶாந்த உதி³தௌ = விக்ஷேபம் போவதும் சாந்தம் உதிப்பதும்; துல்ய ப்ரத்யயௌ = இரு ஸமானமான விருத்திகளும்; ஏகாக்³ரதா பரிணாம​: = ஏகாக்ரதையின் பரிணாமங்களாகும்.

விக்ஷேபம் முற்றிலும் போவதற்கும் ஏகாக்ரதை வருவதற்கும் இடையில் எந்த நிலையும் இல்லை. (ஸூர்யன் உதிக்க இருட்டு அகலுவது போல.) நிரோத வழியில் பெருக்கு ஏற்படும்போது முன்னிருந்த நிலை போய் இன்னும் மேலான நிலை வர வர மேலும் மேலும் மேலான நிலைக்கு கொண்டு போகும் புதிய மாற்றம் (விருத்தி) ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இது இரண்டும் தனித்தனியே ஏற்படாமல் ஒன்றாகவே ஏற்படுகின்றன. இதுவே நிரோத பரிணாமம் ஆகும்.

Thursday, December 23, 2010

சித்த பரிணாமம், ஸமாதி பரிணாமம்:



  तस्य प्रशान्तवाहिता संस्कारात् ।।10।।

தஸ்ய ப்ரஶாந்தவாஹிதா ஸம்°ஸ்காராத் || 10||

தஸ்ய = நிரோதம் அடையும் சித்தத்திற்கு; ஸம்°ஸ்காராத் = நிரோத ஸம்ஸ்காரத்தில் இருந்து; ப்ரஶாந்த வாஹிதா = ப்ரசாந்தமான விக்ஷேப வாசனை இல்லாத ஸம்ஸ்கார பிரவாகம் (உண்டாகிறது)
ஸமாதி பரிணாமம்:
 

सर्वार्थतैकाग्रतयोः क्षयोदयौ चित्तस्य समाधिपरिणामः ।।11।।

ஸர்வார்த²தைகாக்³ரதயோ​: க்ஷயோத³யௌ சித்தஸ்ய ஸமாதி⁴பரிணாம​: || 11||

ஸர்வார்த²தா = விக்ஷிப்த தன்மை; ஏகாக்³ரதயோ​: = ஒருமுகப்பட்ட தன்மை; (இவற்றுக்கு முறையே) க்ஷய = தேய்வும்; உ த³யோ = உதிப்பதும்; சித்தஸ்ய =சித்தத்தின்; ஸமாதி⁴ பரிணாம​: = ஸமாதி பரிணாமம் ஆகும்.

தன்னிலையில் இருந்து வெளி வரும் சித்தம் க்ஷிப்தம், விக்ஷிப்தம், மூடம் ஆகிய மூன்று நிலைகளை அடையக்கூடும்.
க்ஷிப்தம் என்பது: ரஜோ குண மேலீட்டால் வெளிப்பட்ட சித்தம் அருகாமையிலோ தூரத்திலோ உள்ள சுக துக்க விஷயங்களை சென்று அடைதலாகும்.
மூடம் என்பது: தமோ குண மேலீட்டால் இது செய்யத்தகுந்தது இது செய்யத்தகாதது என்ற பகுத்தறிவின்றி கோபம் முதலான உணர்ச்சிகளுடன் சம்பத்தப்பட்டு காரியம், தூக்கம், சோம்பல் ஆகியவறில் நிலை பெறுதலாகும்.
சத்வ குணம் மேலிட்டு சுகமாக இருக்கும் நிலை விக்ஷிப்தம் ஆகும். இந்த விக்ஷிப்தம் யோகம் இல்லை. ஏனென்றால் தமோ ரஜோ குண மூலமுண்டாகும் நிலையற்ற தன்மைக்கு செல்லவும் கூடும்; அல்லது அது மாறி சத் வஸ்துவில் நிலை அடையவும் கூடும். மேல் சொன்ன மூன்றும் ஸர்வார்த்ததை எனப்படும்.
சத் வஸ்துவில் நிலை அடைந்து த்யானிக்கத்தகுந்த வஸ்து தவிர வேறு எதிலும் நாட்டம் செல்லாது இருப்பதே ஏகாக்ரம் ஆகும். இதுவே மோக்ஷத்துக்கு சாதனம்; இதுவே சமாதி பரிணாமம்.

Wednesday, December 22, 2010

நிரோத மாறுதல் (பரிணாமம்):



  व्युत्थाननिरोधसंस्कारयोरभिभवप्रादुर्भावौ निरोधक्षणचित्तान्वयो निरोधपरिणामः ।।9।।

வ்யுத்தா²நநிரோத⁴ஸம்°ஸ்காரயோரபி⁴ப⁴வப்ராது³ர்பா⁴வௌ நிரோத⁴க்ஷணசித்தாந்வயோ நிரோத⁴பரிணாம​: || 9||

(யதா= எப்போது) வ்யுத்தா²ந நிரோத⁴ ஸம்°ஸ்காரயோ: = (க்ஷிப்தம், விக்ஷிப்தம், மூடம் ஆகிய மூன்று அவஸ்தைகளில் எந்த மாறுதலும் இல்லாமல்) சுத்த ஸத்வமாக ஆக உரிய நிரோத நிலையினுடைய; அபி⁴ ப⁴வ ப்ராது³ர் பா⁴வௌ = வ்யுத்தானத்தின் குறைவும், நிரோதத்தின் விருத்தியும் ஏற்படுமோ; நிரோத⁴ க்ஷண சித்தாந்வயோ = நிரோதம் ஏற்படும் கணத்தில் சித்தத்துக்கு ஏற்படும் சேர்க்கையே: நிரோத⁴பரிணாம​: =நிரோத பரிணாமம் ஆகும்.
சித்தத்தின் தர்மம் வளர்ச்சி அல்லது ஒடுங்குதல். சித்தம் வளர்ச்சிமுகமாக (வ்யுத்தானத்துடன்) இருக்கும்; அல்லது தேய் முகமாக (நிரோதத்தில்) இருக்கும். ஒன்று வளர ஒன்று குறையும். சித்தத்திற்கு வெகு காலமாக வெளிக்கிளம்பியே பழக்கம். பயிற்சியால் சித்தம் நிரோதம் அடைய, ஒடுங்குதல் என்ற தர்மம் அதிகமாகி மேலும் மேலும் அது வலுப்பட்டு தேய்முகமாகும். இதுவே நிரோத பரிணாமம்.

Monday, December 20, 2010

ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அந்தரங்க சாதனங்கள்:



त्रयमन्तरङ्गं पूर्वेभ्यः ।।7।।

த்ரயமந்தரங்க³ம்° பூர்வேப்⁴ய​: || 7||

த்ரயம் = (தாரணை, த்யானம், ஸமாதி இந்த) மூன்றும்; அந்தரங்க³ம்° = (ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அவசியமான) அந்தரங்க சாதனங்களாகும். = பூர்வேப்⁴ய​: = முன் சொன்னவற்றைக் காட்டிலும் (யமம் முதலானவை)
முன் சொன்ன யமம் முதலானவற்றைக் காட்டிலும் ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு தாரணை, த்யானம், ஸமாதி இந்த மூன்றும் அவசியமான அந்தரங்க சாதனங்களாகும்.

அஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு பகிரங்க சாதனங்கள்:

 तदपि बहिरंङ्गं निर्बीजस्य ।।8।।

தத³பி ப³ஹிரம்°ங்க³ம்° நிர்பீ³ஜஸ்ய || 8||

தத³பி = (தாரணை முதலான) அவையே; ப³ஹிரம்°ங்க³ம்° = பகிரங்கமானவை; நிர்பீ³ஜஸ்ய = நிர்பீஜ ஸமாதிக்கு.

தாரணை, த்யானம், ஸமாதி ஆகியன ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அந்தரங்க சாதனங்கள் ஆனாலும் அவை அஸம்ப்ரக்ஞாத பிரக்ஞாத நிர்பீஜ ஸமாதிக்கு பகிரங்க சாதனங்கள் ஆகும்.


ப்ரக்ஞை இருக்கும் போது உண்டாவது ஸம்ப்ரக்ஞாத ஸமாதி. அதனால் அப்போது சித்தத்தின் பரிணாமம் என்ன என்று தெரிகிறது. அஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் ப்ரக்ஞை இல்லை. அதனால் சித்தத்தின் பரிணாமம் அப்போது என்ன என்று தெரிவதில்லை; தெரிவதில்லை என்பதால் பரிணாமம் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. தாரணை, த்யானம், ஸமாதி ஆகியன சித்தத்தின் நிலை என்பதால் அவை அஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் உள்ளே இருப்பதாக – அந்தரங்கமானதாக – சொல்ல முடியாது.

Friday, December 17, 2010

எதில் ஸம்யமம் செய்வது?:



 तस्य भूमिषु विनियोगः ।।6।।
தஸ்ய பூ⁴மிஷு விநியோக³​: || 6||

தஸ்ய = அதன் (ஸம்யமத்தின்); பூ⁴மிஷு = மேலுள்ள நிலைகளில்; விநியோக³​: = பயன் உண்டாகிறது.
ஒரு மட்ட ஸம்யமம் கைவரப்பெற்றால் அடுத்த கட்டம் எதுவோ அதில் ஸம்யமம் செய்ய வேண்டும். கீழ் மட்ட ஸம்யமம் கைவராமல் அடுத்த மட்ட ஸம்யமம் முயற்சி செய்தல் வீணாகும்.
ஸ்தூலமான விஷயமுள்ள ஸவிதர்க ஸமாதியை சாதித்துவிட்டதும் சாதகன் அதற்கு மேலுள்ள ஸூக்ஷ்ம விஷயமான நிர் விதர்க்க ஸமாதியை விரும்புகிறான். அதில் ஸம்யமம் செய்து அதில் ஸித்தி பெறுகிறான். இதே போல சவிசார வெற்றியை அடைந்த சாதகன் நிர்விசார வெற்றியை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஈஸ்வர பிரசாதத்தால் மேல் நிலை அடைந்தவன் கீழ் நிலையில் ஸம்யமம் செய்தல் அவசியமில்லை. ஆனால் அவரவர் யோக அனுபவத்தால் மேல், கீழ் நிலைகளை உணர வேண்டுமே அல்லாது எந்த சாஸ்திரமும் அதை சொல்ல இயலாது.

Thursday, December 16, 2010

ஸம்யமம்




  त्रयमेकत्र संयमः ।।4।।
த்ரயமேகத்ர ஸம்°யம​: || 4||

த்ரயம் = [தாரணை, த்யானம், ஸமாதி - இம்] மூன்றும்; ஏகத்ர = ஒரே விஷயத்தில் செய்யப்படும் போது; ஸம்°யம​: = ஸம்யமம் எனப்படும்.


ஸம்யம பயிற்சியின் பலன்:

  तज्जयात्प्रज्ञालोकः ।।5।।
தஜ்ஜயாத்ப்ரஜ்ஞாலோக​: || 5||

தஜ்ஜயாத் =அதை வெற்றி கொள்வதால்; ப்ரஜ்ஞாலோக​: = ஸமாதி பிரக்ஞையின் பிரகாசம் உண்டாகிறது.

ஸம்யமம் ஆனது எவ்வளுக்கெவ்வளவு நிலை பெறுகிறதோ அவ்வளக்கவ்வளவு ஸமாதியின் அறிவும் தெளிவாக உண்டாகிறது.

Wednesday, December 15, 2010

ஸமாதியின் சொரூபம்:




  तदेवार्थमात्रनिर्भासं स्वरूपशून्यमेव समाधिः ।।3।।
ததே³வார்த²மாத்ரநிர்பா⁴ஸம்° ஸ்வரூபஶூந்யமேவ ஸமாதி⁴​: || 3||

ததே³வ = அதுவே (முன் சொன்ன த்யானமே); அர்த²மாத்ர நிர்பா⁴ஸம்°=த்யானிக்கப்பட்ட வஸ்துவின் வடிவுடன் கூடிய; ஸ்வரூப ஶூந்யம் ஏவ = (சித்த விருத்தியின்) ஸ்வரூபம் இல்லாத சூன்யம் போன்றதே; ஸமாதி⁴​: = ஸமாதியாகும்.

த்யானிக்கப்படும் பொருளிலேயே (வஸ்துவிலேயே) சாதகனால் சித்தத்தை நிலை நிறுத்த முடியும்; ஆனாலும் சித்த விருத்தி கொஞ்சம் ஏற்பட்டாலும் பொருளின் (வஸ்துவின்) முழு சொரூபம் கிடைக்காமல் போய்விடும். ஸமாதி நிலையில் த்யானம் பொருளின் (வஸ்துவின்) சொரூபத்தில் முழுமையாக கலந்து விடுவதால் அதன் சொரூபம் மட்டுமே கிடைக்கும்; சித்த விருத்தியின் சொரூபம் கொஞ்சம் கூட இல்லாமல் போகும்.

வஸ்து, செயல், சாதகன் இவற்றில் ...
வஸ்துவும் செயலும் மட்டும் இருப்பது த்யானம்.
வஸ்து மட்டும் இருப்பது ஸமாதி.

Tuesday, December 14, 2010

தாரணைக்கும் த்யானத்துக்கும் வித்தியாசம்....



तत्र प्रत्ययैकातानता ध्यानम् ।।2।।
தத்ர ப்ரத்யயைகாதாநதா த்⁴யாநம் || 2||

தத்ர = அங்கு; ப்ரத்யய = த்யானிக்கப்படும் வஸ்துவைப்பற்றி உண்டாகும் சித்த விருத்தியின்; ஏகதாநதா = ஒன்றேயான (வேறு விஷய கலப்பில்லாத தொடர்ச்சியான பிரவாஹமே) த்⁴யாநம் [ஆகும்]

இந்த தாரணைக்கும் த்யானத்துக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுமே சித்த விருத்திதான். தாரணையில் மற்ற விஷயங்களிடத்தில் உண்டாகும் சித்த விருத்திகள் குறுக்கிடலாம். அதை கஷ்டப்பட்டு அடக்க வேண்டும். த்யானத்தில் அப்படி இராது. மற்ற சித்த விருத்திகள் எந்த முயற்சியும் இல்லாமல் விலகிப்போம்.
எப்படி தாரணை செய்வது? விஷ்ணு புராணம் சொல்லுகிறது: ப்ராணாயாமத்தால் வாயுவை வசப்படுத்த வேண்டும்; ப்ரத்யாஹாரத்தால் இந்திரியங்களை வசப்படுத்த வேண்டும்; பிறகு சுபாஶ்ரயத்தால் மனதை பந்தம் வராது காக்க வேண்டும். அம்மனதை பகவானின் சொரூபத்தில் நிலைப்படுத்துதல் ஆந்தர தாரணை. த்யானம் பெறும் வரை இதை பயிற்சி செய்து வர வேண்டும். த்யானத்தை அதற்கு முன் உள்ள யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை ஆகிய யோகத்தின் அங்கங்கள் ஏற்படுத்துகின்றன.

Saturday, December 11, 2010

தாரணை வகைகள்




  देशबन्धश्चित्तस्य धारणा ।।1।।
தே³ஶப³ந்த⁴ஶ்சித்தஸ்ய தா⁴ரணா || 1||

தே³ஶ ப³ந்த⁴ = சரீரத்தின் (உள்ளும் வெளியுமான இடத்தில்) கட்டுப்பட்டு (அசைவற்று) நிற்பது; சித்தஸ்ய = சித்தத்தின்; தா⁴ரணா = தாரணை ஆகும்.

மனதுக்கு பந்தம் தராதவை சுப ஆஶ்ரயம் எனப்படும். இது உள்ளே இருக்கலாம்: வெளியே இருக்கலாம் (ஆந்தரம், பாஹ்யம்). சாஸ்திரப்படி தயாரித்த பஞ்ச லோகத்தாலான பகவானின் மூர்த்திகளில் குரு சொல்லிக்கொடுத்தப்படி மந்திரத்தால் தேவதையை ஆவாஹனம் செய்து அதில் மனதை செலுத்துவது வெளி (பாஹ்ய) தாரணை.

இப்படி பயிற்சி செய்வதுடன் சரீரத்திலுள்ள நாபி- சக்கரம், ஹ்ருதய -புண்டரீகம், ஸஹஸ்ராரம், நாசிகையின் (மூக்கின்) நுனி, நாக்கின் நுனி ஆகிய இடங்களில் மனசுக்கு சம்பந்தம் ஏற்படுத்துவது ஆந்தர தாரணை.

Friday, December 10, 2010

மூன்றாம் பாதம்



तृतीयो विभूतिपादः  த்ரு«தீயோ விபூ⁴திபாத³​:
மூன்றாம் பாதம்:

விபூதி என்பதற்கு இங்கே திருநீறு என பொருள் இல்லை; சித்தி என்பது பொருள். சாதனா மார்க்கத்தில் கொஞ்சம் ஈடுபாடும் சிரத்தையும் உண்டாகும் பொருட்டு இவை சொல்லப்படுகின்றன. தாரணை, த்யானம், ஸமாதி ஆகியவை மொத்தமாக ஸம்யமம் எனப்படுகின்றன. இந்த ஸம்யமத்தாலேயே சித்திகள் உண்டாக வேண்டும். தாரணை, த்யானம், ஸமாதி ஆகியவை இதே வரிசையில் நிகழ வேண்டும்.
(இந்த ஸம்யமத்தை நன்றாக உள்ளே வாங்கிக்கொள்ளுங்கள். இனி அடிக்கடி வரும்!)

"மனஶ்சஞ்சலம் அஸ்திரம்" என்பது மனதை விளக்குகிறது. மனதானது நிலையற்றது; அலைபாய்வது. அதுதான் அதற்கு இயல்பே. ஆகவே அது எதையாவது பற்றிக்கொண்டால்தான் நிலையாக இருக்கும். நியமம் முதலான பகிரங்க சாதனங்கள் அதை பந்தத்தில் ஆழ்த்தும் எதிலும் பற்றாமல் விரட்டின. மனதுக்கு மாறாமல், பந்தத்தை உண்டு பண்ணாத, நிர்விகல்ப ஸமாதி வரை உள்ள உத்தம பலனை அடைய எந்த வஸ்துவின் சம்பந்தம் இன்றியமையாததோ அதன் சம்பந்தம் ஏற்படுத்தும் முறையான தாரணையை இப்போது உபதேசிக்கிறது.

Thursday, December 9, 2010

இரண்டாம் பாதம் நிறைவு



  ततः परमा वश्यतेन्द्रियाणाम् ।।55।।
தத​: பரமா வஶ்யதேந்த்³ரியாணாம் || 55||

தத​: = அதனால்; பரமா =மேலான; வஶ்யதா = வசப்பட்டு இருக்கும் தன்மை; இந்த்³ரியாணாம் = இந்திரியங்களுக்கு உண்டாகின்றது.

இந்திரியங்கள் சித்தத்துக்கு வசப்பட்டபின் அதை விட்டு விலகாமல் இருப்பதே மேலான தன்மை ஆகும். இது ப்ரயாஹாரத்தினால் அடையப்படுகிறது.

இது வரை யோகத்துக்கு பகிரங்க சாதனங்களான யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமங்களைப் பற்றி சொல்லப்பட்டது. வரும் மூன்றாம் பாதத்தில் யோகத்துக்கு அந்தரங்க சாதனங்களான தாரணை, த்யானம், ஸமாதி ஆகியன சொல்லப்படும்.

இரண்டாம் பாதம் நிறைவுற்றது.

Wednesday, December 8, 2010

ப்ரத்யாஹார​ம்



स्वविषयासंप्रयोगे चित्तस्वरूपानुकार इवेन्द्रियाणां प्रत्याहारः ।।54।।
ஸ்வவிஷயாஸம்°ப்ரயோகே³ சித்தஸ்வரூபாநுகார இவேந்த்³ரியாணாம்° ப்ரத்யாஹார​: || 54||

ஸ்வவிஷயா = தமது விஷயங்களில்; ஸம்°ப்ரயோகே³ = (சப்தம் முதலானவற்றுடன்) சம்பந்தம் விலகியபோது; சித்த ஸ்வரூபாநுகார இவ =சித்தத்தின் சொரூபத்தை அனுசரிப்பது போல; இந்த்³ரியாணாம்° = இந்திரியங்களின்; ப்ரத்யாஹார​: = ப்ரத்யாஹாரமாகும்.

சப்தம் முதலானவை மோகம், ராகம் முதலானவைகளை உண்டு பண்ணக்கூடியவை. இவற்றில் இந்திரியங்கள் செல்லும்போது அது யோகத்துக்கு இடையூறாகும். முன் சொன்ன யமம், நியம, ஆஸன, ப்ராணாயாமங்களை சரியாக செய்து வருபவருக்கு சித்தம் தன் இயல்பான சத்வ தன்மையை அடையும். இப்படி தெளிவதால் வெளி விஷயங்களிடத்தில் பற்று குறைந்து விடும். இந்திரியங்களும் சித்தத்தைப்போலவே சத்வமாகிவிடும். இந்த்ரியங்கள் விஷயங்களை நாடாததால் மனதும் தூய்மையாக இருக்கும். மனம் தத்துவத்தை நாடி நிற்குமானால் இந்திரியங்கள் தம் பால் அதை இழுக்கா. இதுவே ப்ரத்யாஹாரம் எனப்படும்.

Tuesday, December 7, 2010

தாரணைகளில் யோக்யதை ...



धारणासु च योग्यता मनसः ।।53।।
தா⁴ரணாஸு ச யோக்³யதா மநஸ​: || 53||

தா⁴ரணாஸு = (ஸூக்ஷ்ம லக்ஷ்ய) தாரணைகளில்; ச யோக்³யதா =கூட யோக்யதையும்; மநஸ​: = மனதுக்கு (உண்டாகிறது)
பிராணாயாமத்தினால் தாரணைக்கு மனது தயாராகிறது.
இது வரை கூறிய யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமங்களால் சுத்தம் செய்யப்பட்ட மனதை உடையவனுக்கு ப்ரத்யாஹார பலன் உண்டாகிறது. ப்ரத்யாஹாரம் எனில்...


Monday, December 6, 2010

பிராணாயாமத்தின் நடுவாந்திரப்பலன்:



ततः क्षीयते प्रकाशावरणम् ।।52।।

தத​: க்ஷீயதே ப்ரகாஶாவரணம் || 52||

தத​: = அதனால்; (பிராணாயாமத்தை பயிற்சி செய்வதால்) க்ஷீயதே = தேய்கின்றன (அழிகின்றன); ப்ரகாஶாவரணம் = பிரகாச ஆவரணம் = பிரகாசத்தை மூடி இருப்பது (சுத்த சத்வ மயமான சித்தத்தில் உள்ள பாபங்களும் அவித்தை முதலான தோஷங்களும்);
பிராணாயாமத்தின் உத்தம பலன் கிடைக்கு முன்னே நடுவாந்திர பலனான சித்த தோஷங்களும் சித்த காரியமான பாபங்களும் அழிதல் கிடைக்கிறது.

Friday, December 3, 2010

துரீய பிராணாயாமம்:




துரீய பிராணாயாமம்:
बाह्याभ्यान्तरविषयाक्षेपी चतुर्थः ।।51।।
பா³ஹ்யாப்⁴யாந்தரவிஷயாக்ஷேபீ சதுர்த²​: || 51||

பா³ஹ்யாப்⁴யாந்தர = வெளியிலும் உள்ளேயும் போயிருக்கிற; விஷய = [தேசமாகிய] விஷயத்தின்; ஆக்ஷேபீ = அறிந்து செய்யும் ப்ராண நிரோதம்; சதுர்த²​: = [துரீயம் என்னும்] நான்காவதாகும்.
வெளியே வாயு நிற்குமிடம் வெளி தேசம்; உள்ளே நிற்கும் நாபிச்சக்ரம் முதலான இடங்கள் உள் தேசம். இன்ன தேசத்தில் வாயு நிற்கிறது என்ற அறிவுடன் செய்வது துரீய பிராணாயாமம் ஆகும்.
இது கும்பக பிராணாயாமம் போலவே இருக்கிறதே என்றால்:
இப்படி செய்ய வேண்டும் என அறிந்து கும்பக பிராணாயாமத்தை உடனே செய்ய முடியும். இதில் மூச்சை இழுக்கிறோம், வெளி விடுகிறோமே தவிர வேறு விஷய நிச்சயம் இல்லை. இந்த உள்ளே வெளியே என்பது என்ன என்று சரிவர தெரிந்த பின்னரே துரீய பிராணாயாமத்தை செய்ய இயலும். இதற்கு பலத்த முயற்சி தேவை.


Thursday, December 2, 2010

பிராணாயாமத்தின் விசேஷ லக்ஷணம்:



பிராணாயாமத்தின் விசேஷ லக்ஷணம்:

स तु बाह्याभ्यन्तरस्तम्भवृत्तिर्देशकालसंख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः ।।50।।
ஸ து பா³ஹ்யாப்⁴யந்தரஸ்தம்ப⁴வ்ரு«த்திர்தே³ஶகாலஸம்°க்²யாபி⁴​: பரித்³ரு«ஷ்டோ தீ³ர்க⁴ஸூக்ஷ்ம​: || 50||

ஸ = அந்த ப்ராணாயாமத்தின்; து பா³ஹ்யாப்⁴யந்தர = உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் விருத்தி உடையதாகவும்; ஸ்தம்ப⁴ வ்ரு«த்திர் = வெளியே அனுப்பாமலும் உள்ளே இழுக்காமலும் அப்படியே நிறுத்துவதாகவும் {ஆகும்.} தே³ஶ கால ஸம்°க்²யாபி⁴​: = (அந்த மூன்று வித ப்ராணாயாமங்கள்) நிற்கின்ற தேச, கால, மாத்திரை (duration) ஆகியவற்றால்; பரித்³ரு«ஷ்டோ = பார்க்கப்பட்டதாக; தீ³ர்க⁴ = நீளமாகவும்; ஸூக்ஷ்ம​: =ஸூக்ஷ்மமாகவும் (ஆகின்றது.)

பிராணாயாமத்தில் மூச்சை உள்ளிழுப்பது பூரகம். இது உள்முக வளர்ச்சி (ஆப்யந்தர விருத்தி). வெளிச்செலுத்துவது ரேசகம். இது வெளிமுக வளர்ச்சி (பாஹ்ய விருத்தி). இந்த இரண்டுக்கும் நடுவில் மூச்சை உடலில் அப்படியே நிறுத்துவது கும்பகம். ஸ்தம்பித்து நின்றேன் என்கிறோமல்லவா? தூண் போல நிற்பது. உடலில் காற்று அப்படி நிற்பதால் இது ஸ்தம்ப விருத்தி. இவை மூன்றும், இவற்றின் தேசம் காலம், கால அளவு இவற்றைப் பொறுத்து நெடியதாகவும், நுட்பமானதாயும் ஆகின்றன. பிராணாயாமத்தில் வழக்கமாக மூச்சை விடுவதை, இழுப்பதை விட அதிக காலமும் தூரமும் விட, இழுக்க பழக வேண்டும். அதே போல மூச்சு நிற்கும் காலத்தையும் அதிகமாக்க வேண்டும். [குரு இல்லாமல் இதை பயிற்சி செய்ய வேண்டாம். வேண்டுமென்றே மேல் தகவல்கள் தரவில்லை.] பயிலப்பயில வாயு அதிக நேரம் நிற்பது தீர்க்க நிரோதம் எனப்படும். இது பின்னர் சூக்ஷ்மமாகிவிடும். மூச்சு ஓடுகிறதா இல்லையா என்று அறிவதே கடினமாகும் படி மெலிதாக ஆகும்.

Wednesday, December 1, 2010

ப்ராணாயாமத்தின் லக்ஷணம்:





तस्मिन्सति श्वासप्रश्वासयोर्गतिविच्छेदः प्राणायामः ।।49।।
தஸ்மிந்ஸதி ஶ்வாஸப்ரஶ்வாஸயோர்க³திவிச்சே²த³​: ப்ராணாயாம​: || 49||

தஸ்மிந்ஸதி = அப்படி ஆசன ஜயம் ஏற்பட்டபின்; ஶ்வாஸ = வெளிக்காற்றை உள்ளிழுத்தலான சுவாசம்; ப்ரஶ்வாஸயோர் = உள்ளிருக்கும் வாயுவை வெளிவிடுதல் ஆகியவற்றின்; க³தி = கதியை விச்சே²த³​: தடை செய்யும்; ப்ராணாயாம​: =பிராணாயாமத்தை (செய்ய வேண்டியதாகும்).

மூச்சை உள்ளிழுப்பது, வெளிச்செலுத்துவது, இந்த இரண்டுக்கும் நடுவில் மூச்சை உடலில் அப்படியே நிறுத்துவது. இந்த மூன்றும் இயற்கையாக நிகழ்வன. இப்படி இயற்கையாக நிகழ்வதை நிறுத்துவது பிராணாயாமம்.
இங்கேயும் நமக்கு கொஞ்சம் வித்தியாசமாக தோன்றலாம். யோகா குரு மூச்சை இழு, பிடி, விடு என்று கற்று கொடுத்து இருக்கலாம். ஆனால் பாதஞ்சல சாஸ்திரத்தில் மேலும் பல வகைகள் உண்டு. மூச்சை இயல்பாக எடுக்கும் நேரத்தில் எடுக்காமல் இருப்பதும், வெளிவிடும் நேரத்தில் வெளிவிடாமல் இருப்பதும் கூட ப்ராணாயாமமே! (சோதனை செய்து பார்க்காதீங்க. குரு முகமாகவே பயில வேண்டும்.)


Tuesday, November 30, 2010

ஆசன ஜயம் ஏற்பட்டதற்கு அறிகுறி:



ततो द्वन्द्वानभिघातः ।।48।।
ததோ த்³வந்த்³வாநபி⁴கா⁴த​: || 48||

தத: = அதனால் (ஆசன ஜயத்தால்); த்³வந்த்³வ = (குளிர் சூடு போன்ற) இரட்டைகளால்; அநபி⁴கா⁴த​: = பீடை உண்டாவதில்லை.
சாதாரணமாக நம் வாழ்க்கையில் இந்த இரட்டைகளை நிறையவே பார்க்கலாம். துக்கம் சுகம்; சூடு குளிர் , இது போல. அதாவது ஒரு விஷயத்தின் இரு முனைகள். சில விஷயங்கள் - சூடு போல- ஒரு நீண்ட அளவில் எங்கே வேண்டுமானலும் இருக்கலாம் இல்லையா? நமக்கோ ஒரு குறிப்பிட்ட அளவே பிடிக்கும். காப்பியில் சர்க்கரை இவ்வளவுதான் இருக்கணும், அப்போதுதான் நமக்கு பிடிக்கும் என்று இருக்கலாம். அப்படி இல்லாமல், கூடுதலோ குறைவோ எவ்வளவு இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் இருப்பதையே இரட்டைகளால் பீடை என்றது. குளிர் காலமானாலும் வெயில் காலமானாலும் ஒரே மாதிரி பாவிக்கிறதும் இதேதான்.

இப்படி ஒரு சித்தி ஏற்பட்டபின் செய்யக்கூடியது ப்ராணாயாமம்.


Monday, November 29, 2010

ஆசனத்துக்கான ஸாதனம்:




  प्रयत्नशैथिल्यानन्त्यसमापत्तिभ्याम् ।।47।।
ப்ரயத்நஶைதி²ல்யாநந்த்யஸமாபத்திப்⁴யாம் || 47||

ப்ரயத்ந ஶைதி²ல்ய= சரீரத்தை ஒரு நிலைக்கு கொண்டுவர எடுத்துக்கொள்ளும் முயற்சியை குறைத்துக்கொள்வதும்; அநந்த்ய = ஆதிசேஷனிடத்தில்; ஸமாபத்திப்⁴யாம் = மனதைச் செலுத்துவதும்; (ஆசன ஜயத்துக்கான சாதனங்கள்.)

கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு இல்லே?! ஏதேனும் செய்ய முடியலைன்னு சொன்னா இன்னும் முயற்சி செய்ன்னு சொல்வதே சாதாரணமாக பார்ப்பது. இங்கே மாறாக சொல்கிறார். ஆசனம் சரியா வரல்லியா, ரொம்ப முயற்சி செய்யாதே! மஹா விஷ்ணுவோட ஆசனமா இருக்கிற ஆதி சேஷனை வேண்டிக்கொள் என்கிறார்.


Saturday, November 27, 2010

ஆஸநம்




  स्थिरसुखमासनम् ।।46।।

ஸ்தி²ரஸுக²மாஸநம் || 46||

ஸ்தி²ர = ஸ்திரமான, அசைவையுண்டாக்காத; ஸுக²ம் =சுகத்தை தருவதுமானது; ஆஸநம் =ஆசனமாகும்.
இவை பலவிதமாக சொல்லப்படுகின்றன. இவற்றில் (வாசஸ்பதி மிஸ்ரர் வ்யாக்கியானத்தை ஒட்டி) சிலதை பார்க்கலாம்:
1.பத்மாஸனம். 2.பத்ராஸனம்.3.ஸவஸ்திகம். 4.தண்டகாஸனம். 5. ஸோபாஸ்ரயம். 6. பர்யங்காஸனம்.7.க்ரௌஞ்ச நிஷதனம். 8.ஹஸ்தி நிஷதனம். 9.உஷ்ட்ர நிஷதனம். 10. ஸமஸம்ஸ்தானம். 11. ஸ்திர ஸுகம்.
பத்மாஸனம் என்பது இரண்டு பாதங்களையும் இரு துடைகள் மீது வைத்து உட்காருதல்.
இரண்டு குதி கால்களையும் வ்ருஷணத்தின் சமீபத்தில் சேர்த்து வைத்து அதன் மீது இரண்டு கைகளையும் வைத்துக்கொள்ளுதல் பத்ராஸனம்.
இடது காலை மடக்கி வலது துடை, முழங்கால் இவற்றின் இடையிலும் அதேபோல வலது காலை மடக்கி இடது துடை, முழங்கால் இவற்றின் இடையிலும் வைத்துக்கொள்ளுதல் ஸ்வஸ்திகம்.
பூமியில் உட்கார்ந்து கால்களை நீட்டி இரண்டு குதி கால்களையும் காலில் உள்ள விரல்களையும் ஒன்று சேர்த்து செய்வது தண்டாஸனம்.
பூமியில் உட்கார்ந்து இரண்டு முழங்கால்களையும் சேர்த்து இடுப்பை சுற்றி ஒரு வஸ்திரம் அல்லது பட்டு முதலியவற்றால் சுற்றிக்கட்டிக்கொள்வது ஸோபாச்ரயம். முழங்காலில் கையை வைத்துப் படுத்துக் கொள்ளுதல் பர்யங்காஸனம். க்ரௌஞ்சம் என்ற பட்சி பூமியில் உட்கார்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி தானுமிருப்பது க்ரௌஞ்ச நிஷ்தனம். யானை பூமியில் படுத்தால் போல் தான் இருப்பது ஹஸ்தி நிஷதனம். பூமியில் படுத்த ஒட்டகத்தைபோல இருப்பது உஷ்ட்ர நிஷதனம் பூமியில் உட்கார்ந்து இரண்டு முழங்கால்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைத்துக்கொள்வது ஸம்ஸம்தானம். எப்படி இருந்தால் உடலுக்கு நிலையான சுகம் ஏற்படுமோ அப்படி இருப்பது ஸ்திரசுகம்.


Friday, November 26, 2010

ஈச்வர பிரணிதானம்:




  समाधिसिद्धिरीश्वरप्रणिधानात् ।।45।।

ஸமாதி⁴ஸித்³தி⁴ரீஶ்வரப்ரணிதா⁴நாத் || 45||

ஈஶ்வர ப்ரணிதா⁴நாத் = எல்லாவற்றையும் ஈச்வரனிடம் அர்ப்பணிப்பதால்; ஸமாதி⁴ ஸித்³தி⁴ =ஸமாதியானது சித்திக்கிறது.
இறைவனிடம் எல்லா கர்மங்களையும் அர்ப்பணித்து அவரிடம் பக்தி செலுத்தி விட்டால் அது ஈஶ்வர ப்ரணிதா⁴நம். இதனால் வேறு தேசத்தில் உள்ளதையும், வேறு எந்த காலத்தில் உள்ளதையும் தடையில்லாமல் அறிந்து கொள்கிற திறமை உண்டாகும்.

இது வரை யமம் நியமம் ஆகியவற்றால் உண்டாகும் பலன்களைப் பார்த்தோம். இனி ஆசனம் முதலிய யோகாங்களின் பலன்களைப் பார்க்கலாம்.

Thursday, November 25, 2010

ஸ்வாத்யாயம்:




  स्वाध्यायादिष्टदेवतासंप्रयोगः ।।44।।

ஸ்வாத்⁴யாயாதி³ஷ்டதே³வதாஸம்°ப்ரயோக³​: || 44||

ஸ்வாத்⁴யாயாத்³ = சுய அத்யாயத்தினால்; இஷ்ட தே³வதா =இஷ்டர்களின், தேவதைகளின்; ஸம்°ப்ரயோக³​:= தரிசனமும் கிடைக்கிறது.
ஸ்வாத்⁴யாயம் என்பது தன் வேத பாகத்தையோ, ப்ரணவம் அல்லது தனக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரங்களையோ அல்லது மோக்ஷ சாதனமான நூல்களையோ தினசரி பயின்று வருதல். இதை திடமாக செய்ய இஷ்டர்கள் எனப்படும் மகரிஷிகளுடைய தரிசனமும் தேவதைகளின் தரிசனமும் கிடைக்கிறது. அவர்கள் இவனுக்கான காரியங்களையும் செய்கின்றனர் என்று பாஷ்யங்கள் சொல்கின்றன.

Wednesday, November 24, 2010

தபஸில் நிலை நிற்பதால் உண்டாகும் பலன் :




  कायेन्द्रियसिद्धिरशुद्धिक्षयात्तपसः ।।43।।

காயேந்த்³ரியஸித்³தி⁴ரஶுத்³தி⁴க்ஷயாத்தபஸ​: || 43||

காய -உடலின்; இந்த்³ரிய = இந்திரியங்களின்; ஸித்³தி⁴ = சித்தியானது; அஶுத்³தி⁴ = அசுத்தியின்; க்ஷயாத் = தேய்தலால்; தபஸ​: தபஸால் (உண்டாகிறது)

தபஸால் தமோகுணத்தின் காரியமான ஆவரணம் முதலியன தேய்ந்ததும் சரீர சித்திகளான அணிமா முதலியவைகளும் இந்திரிய சித்திகளான தொலை தூரத்தில் ஒலிப்பதை கேட்டல் (தூர ச்ரவணம்) முதலானதும் உண்டாகின்றன.

Tuesday, November 23, 2010

ஸந்தோஷப் ப்ரதிஷ்டை:




संतोषादनुत्तमः सुखलाभः ।।42।।

ஸம்°தோஷாத³நுத்தம​: ஸுக²லாப⁴​: || 42||

ஸம்°தோஷாத்³= கிடைத்தது போதுமென்ற எண்ணத்தில் இருந்து; அநுத்தம​: =நிகரற்ற; ஸுக²லாப⁴​: = சுகம் கிடைக்கிறது.
தெய்வாதீனமாக கிடைத்ததில் திருப்தி அடைந்து அதைவிட உயர்ந்தவற்றில் ஏற்படக்கூடிய ஆசையை கொள்ளாதிருத்தல் சந்தோஷம் எனப்படும். அப்படிப்பட்ட சந்தோஷத்தில் நிலைபெற்றவனுக்கு ஈடு இணையில்லா சுக லாபம் உண்டாகிறது.
ஆசையை ஒழிப்பதால் உண்டாகும் சுகத்தின் பதினாறில் ஒரு பங்குக்கு கூட "உலகில் விஷய அனுபவத்தால் உண்டாகும் சுகமும், தேவ லோகத்தில் கிடைக்கும் சுக2மும் ஈடு ஆக மாட்டா"
யச்ச காமம் சுக2ம் லோகே யச்ச திவ்யம் மஹத்சுக2ம்| த்ருஷ்ணாக்ஷய ஸுக2ஸ்யைதே நார்ஹத: ஷோடஷீம் கலாம் ||
தன் யௌவனத்தை தானம் செய்த புரூவிடம் தந்தை யயாதி சொல்கிறார்:
யா துஸ்த்யஜா து3ர்மதிபி: யா ந ஜீர்யதி ஜீர்யத:| தாம் த்ருஷ்ணாம் ஸம்த்யஜத் ப்ராக்ஞா ஸுகே2நைவ அபி4பூர்யதே ||
கெட்ட புத்தி உள்ளவர்களுக்குத்தான் ஆசையை விட முடியாது. கிழவனானவனுக்கு இந்திரியங்கள் கிழத்தனத்தை அடைவது போல ஆசையும் கிழத்தனத்தை அடைய வேண்டும். புத்திமானான புருஷன் ஆசையை விலக்கினால் அவனுக்கு சுக நிறைவு ஏற்படும்.