Pages

Thursday, December 17, 2015

நான் யார்? - 1


ஞான விசாரம்ன்னாலே பலரும் “ஓ அது நமக்கு ஒத்து வராது" ன்னு நினைப்பாங்க. “நமக்கு இது பத்தி எல்லாம் என்ன தெரியும்? ஞானம்ன்னா என்ன விசாரம்ன்னா என்ன? ஆள விடப்பா!”
இப்படித்தான் ஒருத்தர் ஆத்ம வித்தை மிகக்கடினம் ந்னு ஒரு பாட்டே எழுதினார்.
கோபாலகிருஷ்ணபாரதியார் ‘நந்தன் சரித்திரம்’ எழுதினார். அதில், "ஐயே மெத்தக்கடினம்” என்று ஒரு பாடல் தொடங்குகிறது. சிவபெருமானையே சதா நினைந்து உருகி, சிதம்பரத்தில் அவனது பொன்னம்பல தரிசனத்தைக் காண ஏங்கி நின்ற, நந்தன் பாடுவதாக அது அமைந்தது.
பகவான் ரமண மகரிஷி அதுக்கு பதிலா ”ஐயே அதி சுலபம்; ஆத்ம வித்தை ஐயே அதி சுலபம்’ ந்னு பாட்டு எழுதினார்! முருகனார் பல்லவி அனு பல்லவி எழுதின பின் பாட்டை தொடர முடியாமல் பகவானிடம் கொடுத்துவிட்டார். பகவான் சரணங்களை எழுதி பூர்த்தி செய்தார். பாடல் பின் குறிப்பாக வருகிறது.

பொதுவா ஒரு புத்தகத்தில என்ன எழுதி இருக்குன்னு தெரிஞ்சுக்க அதோட உள்ளடகத்தை படிக்கணும். ஆனா இந்த 'நான் யார்' புத்தகத்தில தலைப்பே அது என்னன்னு சொல்லிடுது. என்ன செய்ய வேணும் என்கிறதையும் உணர்த்திடுது. இன்னும் விளக்கமா தெரியணும்ன்னாத்தான் படிக்கணும்! ஆத்ம விசாரணை எப்படி செய்யணும்ன்னு கேட்ட பக்தர்களுக்கு அவ்வப்போது பகவான் ரமணர் எழுதிக்கொடுத்தவற்றின் தொகுப்புதான் இந்த புத்தகம். கையடக்க பதிப்பு வெறும் 14 பக்கங்கள்தான்!

இத படிச்சு புரிஞ்சுக்க ஆன்மீகவாதியா இருக்கணும்ன்னு ஒண்ணும் கட்டாயமில்லை. கடவுளை நம்பாத ஆசாமியாக்கூட இருக்கலாம். ஏன்னா சொல்லபடற விஷயம் கடவுள் கான்சப்டையும் தாண்டினது.
வழக்கம் போல நான் இதை எழுதக்காரணம் சப்ஜெக்டை புரிஞ்சுக்கத்தான். இதில் நான் வல்லுனனன் இல்லை! இது காப்பி பேஸ்ட் இல்லை - … ம்ம்ம் ஒண்ணு ரெண்டு தவிர, அந்த பாடல் மாதிரி- என்கிறதால புரிஞ்சாலே ஒழிய அதை எழுத முடியாது. எழுதும்போது சில விஷயங்கள் இன்னும் தெளிவா புரியுது. அவ்ளோதான். கூடவே பயணம் செய்ய ரெடியா நீங்க? ரைட் ஆரம்பிக்கலாம்!
சகல ஜீவர்களுக்கும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம ப்ரியம் இருப்பதாலும், ப்ரியத்துக்கு சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன் ஸ்வாபவமான அச்சுகத்தை அடைய தன்னைத் தான் அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.

அந்த காலத்தில் எழுத்து ஸ்டைல்! பயப்படாதீங்க. இதெல்லாம் என்னன்னு பாத்துண்டு போகலாம்!
----
பின் குறிப்பு:
பல்லவி:

ஐயே! அதி சுலபம் ஆன்ம வித்தை
ஐயே! அதி சுலபம்
அனுபல்லவி:

நொய்யார் தமக்கும் உளங்கை ஆமலகக் கனி
பொய்யாய் ஒழிய மிகு மெய்யாய் உளது ஆன்மா (ஐயே!)
சரணம் 1

மெய்யாய் நிரந்தரம்தான் ஐயாது இருந்திடவும்
பொய்யாம் உடம்பு உலகம் மெய்யா(ய்) முளைத்தெழும் பொய்-
மை ஆர் நினைவு அணுவும் உய்யாது ஒடுக்கிடவே
மெய் ஆர் இதயவெளி வெய்யோன் சுயம் ஆன்மா ---
விளங்குமே; இருள் அடங்குமே; இடர் ஒடுங்குமே;
இன்பம் பொங்குமே (ஐயே!)
சரணம் 2

ஊன் ஆர் உடல் இதுவே நான் ஆம் எனு(ம்) நினைவே
நானா நினைவுகள் சேர்ஓர் நார்எனும் அதனால்
நான் ஆர்?இடம் எது? என்று உள்போனால், நினைவுகள் போய்
நான், நான்” எனக் குகையுள் தானாய்த் திகழும் ஆன்ம --
ஞானமே; இதுவே மோனமே ஏக வானமே;
இன்பத் தானமே .......... (ஐயே)
சரணம் 3

தன்னை அறிதல் இன்றிப் பின்னை எது அறிகில் என்?
தன்னை அறிந்திடில் பின் என்னை உளது அறிய?
பின்ன உயிர்களில் அபின்ன விளக்கு எனும் அத்
தன்னை த(ன்)னில் உணர மின்னும் த(ன்)னுள் ஆன்ம --
ப்ரகாசமே; அருள் விலாசமே; அக விநாசமே;
இன்ப விகாசமே ...... (ஐயே)

சரணம் 4

கன்மாதி கட்டு அவிழ சென்மாதி நட்டம் எழ
வெம் மார்க்கம் அதனினும் இம்மார்க்கம் மிக்கு எளிது
சொல் மானத தனுவின் கன்மாதி சிறிது இன்றி
சும்மா அமர்ந்திருக்க அம்மா! அகத்தில் ஆன்ம ---
ஜோதியே; நிதஅனுபூதியே; இராது பீதியே;
இன்ப அம்போதியே ....... (ஐயே)
(வெம் மார்க்கம்= கடினமான பிற வழிகள்)
சரணம் 5

விண்ணாதிய விளக்கும் கண்ணாதிய பொறிக்கும்
கண்ணா(ம்) மனக்க(ண்)ணுக்கும் கண்ணாய் மன வி(ண்)ணுக்கும்
விண்ணாய் ஒரு பொருள் வேறு எண்ணாது இருந்தபடி
உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை என் ஆன்மா
காணுமே; அருளும் வேணுமே; அன்பு பூணுமே;
இன்பு தோணுமே .... (ஐயே)


No comments: