Pages

Tuesday, December 22, 2015

நான் யார்? - 3


என் குழந்தையை பிடிக்கும். ஏன்? ஏன்னா இது என் குழந்தை. என் மனைவியை பிடிக்கும். ஏன்னா இது என் மனைவி. என் மதத்தை பிடிக்கும்.; ஏன்னா இது நான் சார்ந்து இருக்கிற மதம். என் நாட்டை பிடிக்கும்; ஏன்னா இது என்னோட நாடு.
இது எல்லாத்துலேயும் ஒரு பொதுவான சமாசாரம் இருக்கு இல்லே? ’என்!’ அந்த என் இல்லைன்னா அவ்வளோ ருசிக்கிறதில்லை. என் குழந்தை என்கறதால் இந்த குழந்தையை எனக்கு பிடிக்கிறது. என் ஜாதி என்கிறதால என் ஜாதியை எனக்கு பிடிக்கிறது, என் நாடு என்கிறதால் என் நாட்டை எனக்குப்பிடிக்கிறது!
ஸ்வீட் எனக்கு பிடிக்காது. ஜிகிர்தண்டா எனக்குப் பிடிக்காது. இந்த ரீதியில பலது எனக்கு பிடிக்காது!
ஆனா என்னை எனக்கு பிடிக்கும்; ரொம்பவே பிடிக்கும்! எனக்கு சுகம் தருவது எதானாலும் எனக்குப்பிடிக்கும்.
ஆனா இதுவும் ஒரு எல்லைக்கு உட்பட்டு இருக்கு! பிடிச்ச ஸ்வீட்தான். ஆனா ஒரு அளவுக்கு மேல “போதும்ப்பா! திகட்டிடுத்து” என்கிறோம். என் குழந்ததான். எவ்வளவு நேரம் அதோட விளையாடுவேன்? ஒரு அளவுக்கு மேல இந்தா வெச்சுக்கோன்னு இன்னொருத்தர்கிட்ட கொடுத்துடறோம். கொஞ்சம் பெரிய குழந்தையானா “போய் சித்த விளையாடுட்டு வாயேன்!” ந்னு சொல்லி அனுப்பி வைக்கிறோம். மத்த எந்த பிடிச்ச விஷயங்களுக்கும் கூட ஏதோ ஒரு கால அளவு இருக்கு. அது ஒரு சில நிமிஷங்களோ அல்லது சில பல வருஷங்களோ; அதுக்கு மேல அதுல ஈர்ப்பு தங்கறதில்லை. ஏதாவது ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். போரடிக்கிறது என்கிறோம். ஏன்? நமக்கு நாமா கொஞ்ச நேரமாவது இருக்க உள்ளூர ஒரு உந்துதல் இருக்கு!
மத்த எல்லாத்தையும்விட நம்மைத்தான் நமக்கு பிடிக்கிறது. பிற விஷயங்கள் நமக்கு பிடிக்கிறதுல ஒரு சுயநலம் இருக்கு; அதனால பிடிக்கிறது!

என்னதான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கிற ஆசாமியானாலும் தூங்கிட்டா சந்தோஷத்தை அடையறார். ரொம்ப கவலை இருக்கறப்ப தூக்கம் வரலை என்கிறது வேற விஷயம்.
ஒருத்தர் விழிப்போட இருக்கறப்ப சந்தோஷம் துக்கம் எல்லாம் அனேகமா மாறி மாறி வரும். தூங்கறப்பவும் இனிமையான கனவுகள் பயங்கரமான கனவுகள் எல்லாம் வரக்கூடும்! இது இல்லாம ஆழ்ந்த உறக்கம்ன்னு ஒண்ணு இருக்கு. (அறிவியல் பூர்வமாகவே!) இதில கனவு இராது. விழித்து இருக்கறப்ப நமக்கு உடம்பு இருக்கு; மனசு இருக்கு. சுத்துப்பட்டுல என்ன நடக்கறது என்கிறதெல்லாம் தெரியறது. இத ஜாக்ரத் என்பாங்க.

கனவு காண்கிற போதும் உடம்பு இருக்கு. ஆனால் வித்தியாசமா இருக்கலாம். நாம இளமையோட இருக்கலாம். வேறு வித உடை உடுத்தி இருக்கலாம். பல வேரியேஷன்ஸ் இருக்கலாம். மனசும் இருக்கும். அது நாம ரியாலிடின்னு சொல்கிறதுக்கு அப்பால எதையாவது உணரலாம். (எனக்கு அப்பப்ப கனவில வர இந்த மாதிரி சமாசாரம் வானத்தில பறக்கறது!) லாஜிக் எல்லாம் இந்த கனவு நிலைல அப்ளை ஆகாது!

தூங்கி கனவு கண்டு எழுந்த ஒத்தரை கேளுங்க. அவர் கண்ட கனவு அப்ப திருப்பி நினைவுக்கு கொண்டு வந்தாதான் ஆச்சு. கொஞ்ச நேரம் போனா முழுக்க முழுக்க மறந்து போயிட வாய்ப்பே அதிகம். அவர் பயங்கர கனவு, ரொம்ப துக்கப்பட்டேன் ந்னு சொல்லலாம்! கனவுல துக்கம் சந்தோஷம் ரெண்டுமே வரலாம்!

ஆனா ஆழ் உறக்கத்தில் இந்த உடம்பு பத்தின உணர்வு இல்லை; மனசும் இல்லை. ஆனா சுகம் இருக்கும்!
நல்லா தூங்கி எழுந்த ஒத்தரை கேளுங்க. அவர் சொல்லுவார்: “அப்பாடா! படுத்ததுதான் தெரியும். நல்ல தூக்கம். சுகமா இருந்தேன்!“
கவனியுங்க; சுகமா இருந்ததுன்னு கூட சொல்லறது இல்லை. சுகமா இருந்தேன்! இது ஏதோ அடைஞ்ச விஷயமாக்கூட இல்லை. அதுவாவே இருக்கோம்!
இந்த சுகம் அந்த நேரத்தோடயே போயிடும். நாம விழிச்சு இருக்கறப்ப அது கிடைக்கறதில்லை. ஆனா தவறாம தூக்கத்தில இது கிடைக்கறது. விழிச்சு இருக்கும்போது கிடைச்சா எவ்வளோ நல்லா இருக்கும்?
அப்படி கிடைக்க நம்மை நாம யார்ன்னு தெரிஞ்சுக்கணும்!

யோவ்! என்னை எனக்கு தெரியாதா என்ன? என்ன உளரல் இது?

No comments: