Pages

Saturday, December 19, 2015

நான் யார்? - 2


சகல ஜீவர்களுக்கும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம ப்ரியம் இருப்பதாலும், ப்ரியத்துக்கு சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன் ஸ்வபாவமான அச்சுகத்தை அடைய தன்னைத் தான் அறிதல் வேண்டும். அதற்கு 'நான் யார்?' என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.

எல்லோருக்கும் சுகமாக இருப்பதிலேயே விருப்பம் இருக்கு. துக்கத்தை விரும்பறவங்க யாரும் இல்லை! யாரானா டாக்டர்கிட்ட போய் “எப்பவும் சந்தோஷமாவே இருக்கேன்; கொஞ்சம் துக்கமா இருந்தா பரவாயில்லை. ஏதாவது மருந்து உண்டா?” ன்னு கேட்கறாங்களா என்ன?
உனக்கு என்ன வேணும்ன்னு கேட்டா எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு சொல்வாங்க. வீடு வேணும் கார் வேணும், நல்ல வேலை வேணும். நிறைய பணம் வேணும் ….. இப்படி லிஸ்ட் முடிவில்லாம போகும். ஆனா மேலும் ’அது எதுக்கு உனக்கு வேணும்?’ ன்னு கேட்டுக்கொண்டே போனா ஏதோ ஒரு இடத்தில ’அப்படி இருந்தா நான் சந்தோஷமா இருப்பேன்!’ என்கிறதுல போய் முடியும்.

இதைத்தான் துக்கமில்லாம சுகமா இருக்கவே எல்லாரும் விரும்பறோம்ன்னு சொல்லறது. இது இல்லாஜிகல்தான். எல்லாருக்கும் உள்ளூர தெரியும். சுகம் வரதும் துக்கம் வரதும் மாறி மாறி இவை ரெண்டும் வரதும் இயற்கைதானே? ஆனாலும் துக்கமில்லாம சுகமாவே இருக்கவே எல்லாரும் உபாயம் தேடறாங்க!

உனக்கு என்ன வேணும்? நிறைய பணம் வேணும். எதுக்கு? கார் வீடு எல்லாம் வாங்குவேன். அது எதுக்கு? அதெல்லாம் இருந்தா சௌக்கியமா சந்தோஷமா இருப்பேன்.
கார் வீடு இருந்தா சந்தோஷமா இருப்போமா இல்லையா என்கிறது இப்ப இங்கே முக்கியமில்லை. அப்படி இருப்போம்ன்னு நம்பறோம். அதனால வேணும்ன்னு சொல்லறோம்.
இந்த சுகத்தை எது தருமோ அதில நமக்கு ஒரு ப்ரியம் வரதுல ஒரு ஆச்சரியமும் இல்லை. சுகத்தை தர விஷயம் நமக்கு பிடிக்குது!


கவனியுங்க; ’நான் சுகமா’ இருப்பேன். என் பிள்ளக்குட்டி சுகமா இருக்கும்னோ, இல்லை மனைவி சுகமா இருப்பான்னோ சொல்லுவது ரொம்பவே அரிதாத்தான் இருக்கும். அடிப்படையில நாம சுகமா இருக்கற வழியைத்தான் பார்க்கிறோம். அப்படியே மத்தவங்களுக்கு சந்தோஷம் இருக்கன்னு ஒண்ணை சொன்னாலும், அப்படி மத்தவங்க சந்தோஷத்துல இவங்களுக்கு ஒரு திருப்தி இருக்கும்! அப்படிப்பாத்தாலும் அது தன்னோட சந்தோஷம்தானே?
உனக்கு என்ன பிடிக்கும்? ’லட்டு பிடிக்கும்; ஜிகிர்தண்டா பிடிக்கும்’ ரீதியில விடை வரலாம். ஏன்? 'அதெல்லாம் சாப்பிட்டா எனக்கு சந்தோஷமா இருக்கும்!’

No comments: